நோன்பு துறக்கும் துஆ

நோன்பு  துறக்கும் துஆ – மறு ஆய்வு

ல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது.

இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும், முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் இது குறித்த ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

முதல் அறிவிப்பு

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கிறார்.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

அபூதாவூத் (2011)

இது கீழ்க்காணும் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா,

பைஹகீ,

ஷுஅபுல் ஈமான்-பைஹகீ,

அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ

அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் – இப்னுல் முபாரக்

அஸ்ஸுனனுஸ் ஸகீர் – பைஹகீ

பழாயிலுல் அவ்காத் – பைஹகீ

அல்மராஸில் – அபூதாவூத்

இந்த அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். ஆனால் இவர் நபித்தோழர் அல்லர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து, அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழாத ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்தியை அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.

இந்தக் காரணத்தால் பலவீனமாக இருப்பதுடன் மற்றொரு பலவீனமும் இதில் உள்ளது.

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்களின் வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை.

எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது.

இரண்டாம் அறிவிப்பு

அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

مصنف ابن أبي شيبة – كتاب الصيام

حدثنا محمد بن فضيل ، عن حصين ، عن أبي هريرة ، قال : كان النبي صلى الله عليه وسلم إذا صام ثم أفطر ، قال : اللهم لك صمت ، وعلى رزقك أفطرت

இந்த ஹதீஸில் முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும், இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன் என்பாரும், மூன்றாவது அறிவிப்பாளராக அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முதல் அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் என்பார், இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது.

முஹம்மத் பின் புலைல் என்பார் யார் வழியாக அறிவிக்கிறாரோ அந்த ஹுஸைனிடம் இதைக் கேட்டிருக்க சாத்தியமில்லை என்பதால் இதுவும் பலவீனமானதாகும்.

மூன்றாவது அறிவிப்பு

லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்

المعجم الكبير للطبراني – من اسمه عبد الله

حدثنا محمد بن عبد الله الحضرمي ، ثنا يوسف بن قيس البغدادي ، ثنا عبد الملك بن هارون بن عنترة ، عن أبيه ، عن جده ، عن ابن عباس قال : كان النبي صلى الله عليه وسلم : إذا أفطر قال : لك صمت ، وعلى رزقك أفطرت فتقبل مني إنك أنت السميع العليم *

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீரில் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

நான்காவது அறிவிப்பு

المعجم الأوسط للطبراني – باب العين

حدثنا محمد بن إبراهيم ، ثنا إسماعيل بن عمرو البجلي ، نا داود بن الزبرقان ، نا شعبة ، عن ثابت البناني ، عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه وسلم إذا أفطر قال : بسم الله ، اللهم لك صمت ، وعلى رزقك أفطرت لم يرو هذا الحديث عن شعبة إلا داود بن الزبرقان ، تفرد به : إسماعيل بن عمرو *

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

அனஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத், அல்முஃஜமுஸ் ஸகீர், கிதாபுத் துஆ, அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒரு பொய்யர் என்று ஜவ்ஸஜானீ  அவர்களும்,  ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ ஆகியோரும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ அவர்களும், பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

ஐந்தாவது அறிவிப்பு

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

المطالب العالية للحافظ ابن حجر العسقلاني – كتاب السحور

وقال الحارث ، حدثنا عبد الرحيم بن واقد ، ثنا حماد بن عمرو ، عن السري بن خالد بن شداد ، عن جعفر بن محمد ، عن أبيه ، عن جده ، عن علي ، قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا علي ، إذا كنت صائما في شهر رمضان فقل بعد إفطارك : اللهم لك صمت ، وعليك توكلت ، وعلى رزقك أفطرت ، يكتب لك مثل من كان صائما من غير أن ينقص من أجورهم شيئا

அலீ (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஒச்செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா, முஸ்னதுல் ஹாரிஸ் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று புகாரீ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று நஸாயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்றும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்)

மேலும் ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று தஹபீ அவர்கள் தமது மீஸானுல் இஃதிதால்என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இது இரண்டாவது பலவீனமாகும்.

ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து … எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு… என்று ஆரம்பிக்கும் துஆவை ஓதியதாக அபூதாவூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் கூரி வந்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.

புகாரி அவர்கள் ஒருவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும், முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள்.

புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, தஹபீ அவர்கள் மட்டும் இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

ஹாகிம் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.

வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.

சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.

ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லி விட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும், பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.

நமது கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம்.