பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்
பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் உள்ளன என்பதை சிறிதளவு சிந்தனை உள்ளவர்கள் கூட அறிய முடியும்.
ஹிஜ்ரா கமிட்டி என்ற பெயரில் பித்தலாட்டம் செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இது குறித்து வரிசை எண் போட்டு முப்பது கேள்விகளைக் கேட்டுள்ளனர். இத்துடன் நாளின் ஆரம்பம் எது என்பது குறித்தும் வரிசை எண் போட்டு கேள்விகள் கேட்டுள்ளனர்.
இவர்களின் வரட்டு வாதங்களுக்கு சகோதரர் நாஷித் அஹ்மத் என்ற நேயர் பதில் தயாரித்து அனுப்பி உள்ளார். சிறந்த பதிலாக அது இருந்ததால் இது போன்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவரது பதில்களை வெளியிடுகிறோம்.
வரட்டுக் கேள்வி –1
பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ ஹதீஸோ இருக்கிறதா
நேயர் பதில் – 1
1 . பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நேரடியாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று கேட்கிறார்கள். எதற்கு நேரடியாக ஆதாரம் உள்ளதோ,அதுகுறித்து கேள்வி கேட்கும் இவர்களை என்னவென்று சொல்ல?
புறக்கண்ணால் பார்த்துத் தான் பிறையை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு,பிறை குறித்து வரும் அனைத்து ஹதீஸ்களுமே ஆதாரம் தான்.
வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்து சொல்கின்றனர். "நேற்று பிறை பார்த்தோம்", என்பது புறக்கண்ணால் பார்த்ததைத் தான் குறிக்கும்.
நீங்கள் பிறையைப் பார்ப்பது வரை அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டித்தருவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளதும் புறக்கண்ணால் பார்க்கப்படுவதைத் தான் குறிக்கிறது.
இன்னும் சொல்லப் போனால், பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள்,பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள், என்பதற்கும் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வது தான் பொருள்!
எதற்கு நேரடியாக ஆதாரம் இருக்கிறதோ, அதில் கேள்வி கேட்கும் இவர்களை நோக்கி நாம் ஒரு கேள்வி வைக்கிறோம்.
முன்கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே ,அதற்குரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் என்ன?
ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.
சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.
ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்று தான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.
அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?
இவர்கள் சுட்டிக் காட்டும் 3:13 வசனத்தில் பார்த்தல் என்பதுடன் ஐன் அதாவது கண் என்ற சொல் ஏன் சேர்த்துச் சொல்லப்ட்டது என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. கண் பார்வைக்கு இரு மடங்காகத் தெரிந்தது ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்ற கருத்தைக் கூறுவதற்காக இவ்வாறு கூறப்பட்டது. இதை அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் மூளையுள்ள யாரும் அறிந்து கொள்ளலாம்.
வரட்டுக் கேள்வி -2
ஹதீதில் மேக மூட்டம் என்று இருக்கிறதா? மறைக்கப்படும் போது என்று இருக்கிறதா? பார்க்க 10:71 கும்ம, குப்பிய, கும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ்ப் பதங்கள் என்ன?
நேயர் பதில் – 2
ஹிஜ்ரா காலண்டர் என்று மார்க்க ஆதாரமில்லாத ஒன்றை நிலைநாட்டும் இந்தக் கூட்டத்தினர் வெறும் கேள்விகளாகத் தான் கேட்பார்கள். இதற்கு இது தான் அர்த்தம் என்று ஆதாரத்துடன் வாதத்தை எடுத்து வைக்க மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
10:71 வசனத்தைக் காட்டி மேற்கண்ட சொல்லுக்கு மறைத்தல் என்றுதான் பொருள் என வாதிடுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு அறிவும் இல்லை. மொழி அறிவும் இல்லை. தனித்துச் சொல்லப்பட்டாலும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லப்பட்டாலும் ஒரே அர்த்தம் தரக் கூடிய சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. தனித்துச் சொல்லப்படும் போது ஒரு அர்த்தமும் இன்னொரு சொல்லுடன் சேர்த்துச் சொல்லும் போது வேறு அர்த்தம் தரக் கூடிய சொற்களும் உள்ளன.
உதாரணமாக இந்த ஆணியின் மறை கழன்று விட்டது அல்லது லூசாகி விட்டது என்றால் நேரடி அர்த்தம் தான் இதற்குச் செய்ய வேண்டும். ஆனால் இந்த மனிதனுக்கு மறை கழன்று விட்டது என்று கூறினால் அல்லது லூஸ் என்று கூறினால் அதற்கு நேரடி அர்த்தம் செய்ய முடியாது. கிறுக்கன் என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும்.
கிறுக்கன் என்று நேரடி அர்த்தத்தில் உள்ளதா என்று கேட்பது போல் இவர்களின் கேள்வி அமைந்துள்ளது.
பிறையை வானத்துடன் தொடர்புபடுத்தி சொல்லப்படும் போது கண்ணுக்குத் தெரியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் மறைத்து பார்க்க முடியாமல் செய்தல் என்ற பொருளைத் தரும்.
இதனால் தான் மேகத்துக்கு கும்ம என்ற சொல்லில் இருந்து பிறந்த கமாம் என்ற சொல் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பார்க்க 2:57, 2:210, 7:160, 25:25
பொதுவாக கும்மவுக்கு மறைத்தல் என்று பொருள் சொல்லும் அகராதி நூல்கள் பிறையுடன் அதைச் சேர்த்து சொல்லும் போது கண்ணுக்குப் புலப்படாமல் கண்ணால் பார்க்க முடியாமல் மேகம் அல்லது பனி மூட்டம் பிறையை மறைப்பது என்று கூறுகின்றன.
ولَيْلَةُ الغُمى: هي اللَّيلةُ التي لا يُرى فيها الهلالُ، وكذلك الغُمَيَّةُ إذا غُمَّ الهِلالُ على الناس
[المحيط في اللغة 1/ 391، بترقيم الشاملة آليا]
ويقال أيضاً: غُمَّ الهلال على الناس، إذا ستره عنهم غيمٌ أو غيره فلم يُرَ
[الصحاح في اللغة 2/ 26، بترقيم الشاملة آليا]
وَفِي حَدِيثٍ { فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ } أَيْ فَإِنْ سُتِرَتْ رُؤْيَتُهُ بِغَيْمٍ أَوْ ضَبَابٍ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ لِيَكُونَ الدُّخُولُ فِي صَوْمِ رَمَضَانَ بِيَقِينٍ .
وَفِي حَدِيثٍ { فَاقْدُرُوا لَهُ } قَالَ بَعْضُهُمْ أَيْ قَدِّرُوا مَنَازِلَ الْقَمَرِ وَمَجْرَاهُ فِيهَا قَالَ أَبُو زَيْدٍ غُمَّ الْهِلَالُ غَمًّا فَهُوَ مَغْمُومٌ وَيُقَالُ كَانَ عَلَى السَّمَاءِ غَمٌّ وَغَمْيٌ فَحَالَ دُونَ الْهِلَالِ وَهُوَ غَيْمٌ رَقِيقٌ أَوْ ضَبَابَةٌ
[المصباح المنير في غريب الشرح الكبير 7/ 84]
وصُمْنا للغُمَّى وللغَمَّى بالفتح والضم إذ غُمَّ عليهم الهلال في الليلة التي يرون أن فيها استهلاله وصُمْنا للغَمَّاء بالفتح والمد وصُمْنا للغُمِّيَّة وللغُمَّة كل ذلك إذا صاموا على غير رؤية وفي الحديث أنه قال صوموا لرؤيته وأَفطروا لرؤيته فإن غُمَّ عليكم فأَكملوا العدة قال شمر يقال غُمَّ علينا الهلال غَمّاً فهو مَغْموم إذا حال دون رؤية الهلال غَيْمٌ رَقِيق من غَمَمْت الشيء إذا غَطَّيته
[لسان العرب 12/ 441]
ويقال أيضا غُمَّ الهلال على الناس إذا ستره عنهم غيم أو غيره فلم يُر
[مختار الصحاح ص: 488]
மேற்கண்ட அரபு மூலம் கட்டுரையாளருடயது அல்ல. நாம் சேர்த்துள்ளதாகும்
(கும்ம) மறைக்கப்படும், என்ற வார்த்தை ஒரு பொதுவான சொல். எந்த பொருளோடு அது இணைத்து பேசப்படுகிறதோ, அதை பொறுத்து அந்த சொல்லுக்கு அர்த்தம் வேறுபடும். பொதுவாக, ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னால், "குழப்பமடைந்தவர்" என்று பொருள்.
வானத்தோடு இணைத்துச் சொல்லப்படுமானால், வானத்தில் எது மறைக்கும்? என்று சிந்தித்து, அதை இந்தச் சொல்லுக்கு பொருளாக கொடுப்பது தான் முறையான செயல். அவ்வகையில் பார்த்தால், க்ம்மு – என்ற மறைக்கப்படுதல் என்பதற்கு இந்த இடத்தில் "மேகம் மறைத்தல் " என்ற பொருள் தான் கொடுக்க முடியும்.
எந்தப் பொருளையும் முதலில் நம் நிலையில் இருந்து மட்டும் சிந்திப்பதால் ஏற்படும் கோளாறு தான் இத்தகைய கேள்விகள். இந்த ஹதீஸ் சொல்லப்பட்ட நபியின் காலத்தில், இதற்குரிய பொருள் என்ன? இதை நபி கூறிய பொழுது,சஹாபாக்கள் எவ்வாறு இதைப் புரிந்திருப்பார்கள்? என்பதைச் சிந்தித்தால் இது போன்ற அறிவார்ந்த(?) கேள்விகள் எழாது.
வரட்டுக் கேள்வி – 3
நபி (ஸல்) பிறை 29 மாலை பிறை பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?
நேயர் பதில் – 3
இந்தக் கேள்வியின் மூலம் பிறையைக் கணிக்க வேண்டும் என்ற நச்சுக் கருத்தை எப்படி நிறுவுகிறார்கள் என்பதை இவர்கள் விளக்கவில்லை. இத்தகைய அறிவுப்பூர்வமான வழிமுறை இவர்களிடம் கடுகளவும் இல்லை. மாற்றுக் கருத்து உடையவர்களை நோக்கி கேள்விகள் கேட்டால் அந்தக் கேள்வி மூலம் என்ன கருத்தை எப்படி நிலை நாட்டப்போகிறார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இவர்களின் கேள்விப்பட்டியலில் இந்த அறிவுப்பூர்வமான அம்சம் இல்லவே இல்லை.
இவர்கள் கேட்டுள்ள மூன்றாவது கேள்வி கூட முரண்பாட்டின் வடிவமாக உள்ளது
29 அன்று பிறை பார்க்கச் சொல்வது தினசரி பார்க்க வேண்டும் என்பதற்கு முரணானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்ததாகும்.
வாகனக் கூட்டத்தினர் நேற்று பிறை பார்த்ததாகச் சொல்லியுள்ள அறிவிப்பில், "நேற்று" என்பது 29 ஐ தான் குறிக்கும். மாதம் என்பது 29 நாட்கள் தான். பிறை தெரிந்தால் அந்த மாதம் அதோடு முடியும். பிறை தெரியவில்லை என்றால் முப்பதாக பூர்த்தி ஆகும்.
இதனடிப்படையில் பார்க்கும் போது, ஒரு மாதம் முடிவடைந்து விட்டதா இல்லையாஎன்பதைத் தீர்மானிக்க அந்த மாதத்தின் 29 நாட்கள் கழித்த பிறகு தான் பிறை பார்க்க வேண்டும். இது அந்த அறிவிப்பிலேயே புரிகிறது ; மட்டுமல்லாமல், வாகனக் கூட்டம் ஹதீசும் தெளிவுப்படுத்துகிறது.
29 இல் மட்டும் பார்க்க வேண்டுமா? அல்லது ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். மாதத்திற்கு எத்தனை நாட்கள் ஆகியுள்ளது? 29 நாட்களுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுவதற்கு ஒவ்வொரு நாட்களையும் நாம் கணக்கிட்டாக (எண்ணியாக) வேண்டும்.
இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் உளறியுள்ளனர்.
வரட்டுக் கேள்வி – 4, 5, 6
மாத ஆரம்ப நாட்களில் பார்க்கப்படும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?
மறையும் பிறையைப் பார்த்து விட்டுத் தான் ஆரம்பிப்பதாக நபி (ஸல்) கூறியிருப்பார்களா
நபி (ஸல்) அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா
நேயர் பதில் – 4, 5, 6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொன்னால் அந்தச் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளனர்.
இவர்கள் அறிவும், சிந்தனையும் உள்ளவர்களாக இருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இது குறித்த தங்கள் வாதத்தை முன் வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறையும் பிறையைக் கூறவில்லை. அதற்கு இதோ ஆதாரம் என்று வாதிட வேண்டும். தனது தரப்பு வாதமாக எதையும் வைக்காமல் கேள்வி கேட்பதில் இருந்து இவர்களின் மடமை தெளிவாகின்றது.
மறையும் பிறையைப் பார்த்து விட்டு ஆரம்பிக்கச் சொல்லி இருப்பார்களா? என்று கேட்பதன் மூலம் தங்களுக்கு கடுகளவும் சிந்திக்கும் திறன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டனர்.
நாம் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதற்கு சூரியன் மறைவதைத் தான் காரணமாகக் கொண்டுள்ளோம். மறையும் சூரியனைப் பார்த்து விட்டுத் தான் மக்ரிப் தொழுகையை ஆரம்பிப்பதாக நபிகள் சொல்லி இருப்பார்களா? அந்த அளவுக்கு நபிகளுக்கு விளக்கக் குறைவு உள்ளது என்று கருதுகிறீர்களா என்று ஒருவன் கேட்டால் அவனை நாம் என்னவென்போம்?
இனி மேல் மக்ரிப் தொழுகையை சூரியன் உதிக்கும் போது தான் ஆரம்பிக்க வேண்டும் என்று அடுத்த கண்டுபிடிப்பை இந்தக் கூறு கெட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம். மறையும் நேரத்தில் சில காரியங்களைத் துவங்கலாம். உதிக்கும் நேரத்திலும் துவங்கலாம். எதற்கு எப்படி ஆதாரம் கிடைத்துள்ளதோ அப்படிப் புரிந்து கொள்வது தான் மூளை உள்ளவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.
ஆதாரம் எப்படி உள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.
முந்தைய கேள்விக்கான நமது பதில் மேலே தரப்பட்டுள்ள நிலையில், அந்த பதில்குறித்த இவர்கள் நிலையை இவர்களே விளக்கினால் இதற்கு பதில் கிடைத்து விடும்.
மறையும் பிறையா உதிக்கும் பிறையா என்பதைக் கேள்வியாக கேட்பதற்கு முன்னர்,பிறையை எப்போது, எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்குநாம் விடை வைத்திருக்க வேண்டும்.
வாகனக் கூட்டம் அறிவிக்கிற ஹதீஸில், மாலையில் பிறை பார்த்ததாக வருகிறது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்தும் இருக்கிறார்கள் எனும் போது,பிறையை மாலை தான் பார்க்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
இப்போது நமது கடமை, மாலையில் பிறை பார்ப்பது தானே தவிர, அது உதிக்கும் பிறையா மறையும் பிறையா என்று ஆராய்ச்சியில் இறங்குவது அல்ல!
மறையும் பிறையைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது உறுதியாக தெரிந்த பிறகும் இப்படி சொல்லியிருப்பார்களா? என்று கேட்கப்படும் கேள்வி, நம்மை நோக்கிய கேள்வி அல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி.
விபரம் கெட்டவர்களாக இவர்கள் இருந்து கொண்டு நபிகள் நாயகத்தை அப்படி சித்தரிக்கப் பார்ப்பதில் இருந்து இவர்கள் ஷைத்தானின் வலையில் விழுந்து கிடப்பவர்கள் என்பது தெளிவாகிறது.
வரட்டுக்கேள்வி – 7
2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியமளிக்கிறாரோ (ஃபமன்ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா? அல்லது எவர் தலைப்பிறையை புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றானா?
நேயர் பதில் – 7
7. "ஃபமன் ஷஹித மின்குமுஷ்ஷஹ்ர" என்பதற்கு "யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ", என்று பொருள் செய்வது முற்றிலும் தவறான ஒன்றாகும்.
ஷஹித என்பதற்கு சில இடங்களில் சாட்சி கூறுதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அதற்கு அடைவது என்ற பொருளும் உள்ளது. யார் சாட்சியாக இருக்கிறாரோ என்று இவர்கள் செய்வது போல் பொருள் கொண்டால் அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாகாது. யார் பிறையைக் கண்ணால் பார்த்து அதற்கு சாட்சி கூறுகிறாரோ அவர் மீது மட்டும் தான் கடமையாகும்.
ஒரு ஊரில் பத்து பேர் பிறை பார்த்தார்கள் என்றால் அவர்கள் மட்டுமே பிறைக்கு சாட்சிகளாக உள்ளனர். அந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்கள் அதற்கு சாட்சிகளாக இல்லாததால் அவர்கள் மீது நோன்பு கடமையாகாது என்று இவர்கள் கூற வேண்டும். அவ்வாறு கூற இவர்கள் தயங்கினால் யார் சாட்சி கூறுகிறாரோ என்ற அர்த்தத்தை இவர்களே மறுத்துக் கொள்கின்றனர்.
மாதத்தை அடைந்தவர் என்று பொருள் கொண்டால் சிலர் பிறை பார்த்து சாட்சி சொன்னாலும் அவர்களின் சாட்சியம் மூலம் மற்றவர்களும் மாதத்தை அடைந்து விடுகின்றனர் என்று பொருத்தமாக அமைந்துள்ளது. இதை விளங்காமல் உளறியுள்ளனர்.
புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதா என்று கேட்பதன் மூலம் தங்களுக்கும் சிந்தனைக்கும் அறவே தொடர்பு இல்லை என்று நிரூபித்துக் கொள்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது ஒரு ஹதீஸின் வாசகம் நான் விரும்புகின்ற முறையில் இருந்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்பதும், அனைத்து விஷயங்களும் ஒரு ஹதீஸில் அல்லது ஒரு வசனத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதும் மார்க்க அறிவு அற்றவர்களின் நடவடிக்கையாகும்.
இது குறித்து வந்துள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தையும் பார்த்து அதற்கு ஏற்ப புரிந்து கொள்வது தான் அறிவுடையோரின் செயலாகும்.
யார் ரமளானை அடைகிறாரோ என்றால் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்ற கருத்து அதனுள் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நேரங்களின் அடைவார்கள் என்பது பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் தான் சாத்தியமாகும். பிறையைக் கணித்தால் அனைவரும் ஒரு நேரத்தில் மாதத்தை அடையும் நிலை ஏற்பட்டு மேற்கண்ட வசனத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படும்.
புறக்கண்ணால் பார்த்துத் தான் மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் துணையுடன் நாம் நிரூபித்துள்ளோம். அவை இந்த வசனத்தின் விளக்கமாக அமைந்துள்ளது என்பதையும் இவர்களுக்கு அறிந்து கொள்ளும் திறன் இல்லை.
ஒரே நாளில் பெருநாளை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தும் கூட, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்யாமல் இரண்டு நாளட்களில் பெரு நாள் ஏற்படுவதை அங்கீகரித்து நமக்கு முன்மாதிரியாக விட்டுச் சென்றார்கள் என்பதற்கு சிரியா – மதினா பிறை வேறுபாடு சம்மந்தமான ஹதீஸ், வாகனக்கூட்டம் அறிவிப்பு கொண்ட ஹதீஸ் போன்றவை நமக்கு தெளிவான ஆதாரமாக உள்ளன.
வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது எதைக் காட்டுகிறது? ஒரே நாளில் உலகம் முழுவதும் முதல் நாள் வராது என்ற குர்ஆன் வசனத்தை நடைமுறையில் உணர்த்தும் முகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.
வரட்டுக் கேள்வி – 8, 9, 10
8-எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்துக்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?
9-உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை வெள்ளிக் கிழமை 24 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன் வெள்ளி என 48 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா? வியாழன் வெள்ளிம்சனி என 72 மணி நேரத்துக்குள் தொழுகிறார்களா?
10-சூரியக் கணக்கின்படி 1 தேதி 1 நாள் என்பது 24 மணி நேரம். திங்கள் செவ்வாய் போன்ற கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப்பிறையான முதல் நாள் 24 மணி நேரத்துக்குள் வர வேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடிப்பிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின் படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேசப் பிறை என்ற அடிப்படிய்ல் இரண்டா, நாள் தலைப்பிறை பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படியில் மூன்றாம் நாள் தலைப்பிறை என 24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள் 48 மணி நேரம் மூன்று நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா
நேயர் பதில் – 8, 9, 10
8 , 9 , 10 : ஒரு நாள் என்பது 24 மணி நேரமா 48 மணி நேரமா என்று கேட்கின்றனர். ஒரு நாள் 24 மணி நேரம் தான். பிறை அடிப்படையில் இஸ்லாமிய நாட்களை முடிவு செய்யும் பொழுது ஒரு சாராருக்கு மாதத்தின் முதல் நாள் ஒரு தினத்திலும், இன்னொரு சாராருக்கு இரண்டாம் தினத்திலும் துவங்குவதை வைத்து, மாதத்தின் முதல் நாளே இரண்டு நாட்களாகி விட்டதைப் போன்று கேட்கின்றனர்.
ஒவ்வொரு சாராருக்கும் நாள் என்பது 24 மணி நேரம் தான் ஆகிறது. யாருடைய நாளும் 48 மணி நேரம் கொண்டதாக ஆகவில்லை.. கேள்வி கேட்பவர்கள் விளங்காமல் கேள்வி எழுப்புகின்றனர் என்றால் அதைப் படிப்பவர்களும் எதையும் விளங்க மாட்டார்கள் என்று எண்ணுவது வடி கட்டிய முட்டாள்தனமே தவிர வேறில்லை.
மாதம் எந்த தினத்தில் துவங்குகிறது என்பதில் இரு நாள் வேறுபாடு வருவதால் மாதத்தின் முதல் நாளே இரண்டு நாள் ஆகி விட்டதாக அர்த்தம் இல்லை.
நாளின் துவக்கம் வேறுபடுவதால் யாருக்கும் 48 மணி நேரம் கொண்ட நாள் அல்லது 72 மணி நேரம் கொண்ட நாள் வரவே வராது. இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து தங்களின் மடமையை தாங்களே அம்பலமாக்கிக் கொள்கின்றனர்.
ஒருவர் காலை என்று சொல்லும் நேரத்தை இன்னொரு பகுதியில் உள்ளவர் மாலை என்று சொல்வார். காலையை எப்படி மாலை என்று சொல்லலாம். இதோ சூரியன் உதிப்பதை நான் பார்க்கும் போது நீ எப்படி மாலை என்று சொல்லலாம் என்று கேட்க முடியாது. ஏனெனில் நாம் உதிப்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் சூரியன் மறைவதை இன்னொரு பகுதியினர் பார்த்து விட்டுத் தான் மாலை என்கின்றனர்.
ஒரு பொருளை அடையக் கூடியதில் கால வித்தியாசம் இருக்கிறது என்பதால், அந்த பொருளே இரண்டாகி விடாது. மக்ரிபை அடைவதில் நமக்கும் சவுதிக்கும் இடையே இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்து , இரண்டு மக்ரிப் என்று யாரும் சொல்ல மாட்டோம். மக்ரிபை அடைவதில் இரண்டு நேரங்கள்! என்று தான் எந்தஅறிவார்ந்தவரும் புரிவோம். இதை யாரேனும் பிதற்றல் என்று சொன்னால் அவர்கள் தான் பிதற்றுகின்றனர்.
அதே போன்று, மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியைப் பின்பற்றி புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி, ஒரு பகுதிக்கு புறக்கண்களில் தென்படும் தலைப்பிறையானது உலகின் இன்னொரு பகுதியில் தென்படாது.
தென்பட்டவர்கள் முதல் நாளை அனுபவிப்பார்கள், தென்படாதவர்கள் மறுநாளை முதல் நாள் என கொள்வார்கள்.
எல்லோரும் வெள்ளிகிழமை தான் ஜும்மா தொழுகிறோம். யாரும் வியாழக்கிழமையோ, சனிக்கிழமையோ ஜும்மா தொழுவதில்லை ர்ன்பதும் உண்மை தான். ஆனால் ஒருவர் வெள்ளிக் கிழமை என்று சொல்வது இன்னொருவருக்கு வியாழக்கிழமையாக இருக்குமா இருக்காதா? இது தான் கேள்வி.
உதாரணமாக தேதிக் கோட்டுக்கு (டேட்லைன்) இந்தப் பக்கம் இருப்பவர்கள் பகல் ஒரு மணியானதும் ஜும்மா தொழுவார்கள். ஆனால் தேதிக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவர்கள் அதை வியாழக்கிழமையாகக் கருதுவதால் அவர்கள் அந்த நேரத்தில் ஜும்மா தொழ மாட்டார்கள். மறு நாள் அதாவது இந்தப்பக்கம் உள்ளவர்கள் சனிக்கிழமைக்குச் சென்ற பின் அவர்கள் வெள்ளிக்கிழமையை அடைந்து ஜும்மா தொழுகிறார்கள். அதாவது ஒரே நேரம் – பகல் ஒரு மணி- அருகருகே உள்ள இரண்டு இடங்களுக்கு வெள்ளிக்கிழமையாகவும் வியாழக்கிழமையாகவும் இருக்கிறதே? இது பிதற்றலா? ஒரே நாள் எப்படி வெள்ளிக்கிழமையாகவும், வியாழக்கிழமையாகவும் இருக்கும் என்று கேட்பது தான் பகுத்தறிவா?
இதை விட முக்கியமான ஒரு விஷயம் இவர்களின் மேற்கண்ட கேள்விகள் மூலம் தெளிவாகின்றது. அதாவது இவர்கள் குர்ஆன் ஹதீஸ் கூறுவதை நம்ப மாட்டார்கள் மாறாக இவர்களின் குறைமதிக்கு ஏற்ப அமைந்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் அந்தச் விஷயம்.
ஒருவனுக்கு காற்றுப் பிரிந்து விட்டால் உளூ செய்ய வேண்டும் என மார்க்கம் சொல்கிறது. பின் துவாரத்தில் காற்றுப்பிரிவதற்கும் கைகால்களைக் கழுவுவதற்கும் என்ன சம்மந்தம்? என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.
தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்ய வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. மண்ணைத் தடவிக் கொண்டால் தூய்மையாகுமா? அழுக்காகுமா எனக் கூறி இதையும் மறுத்தாலும் மறுப்பார்கள் போலும். பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா என்று கேட்டாலும் கேட்பார்கள்.
வரட்டுக் கேள்வி 11,12,13
11-பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது துல்லிய கணிணி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால். அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29ல் முடிகிறது என்று ஒரு சாராரும், இல்லை 30ல் முடிகிறது என்று பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவுபட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (29:92, 23:52) காக்கவா அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?
12- அன்று நபிகள் நாயகம் (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால் மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால் தான் அது தனது சுற்றுப்பாதையில் செல்லும். மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரிமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாகப் பொருள்படுகிறதே? நபி (ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?
13- அப்படி என்றால் சூரியன் சந்திரன் மற்றும் இதர கோள்கள் அனைத்தும் அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன்பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராக சுழன்று வருகின்றன என அல்குர்ஆனின் 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 போன்ற எண்ணற்ற கட்டளைகளை நபி (ஸல்) நிராகரித்து விட்டு (நவூது பில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்களில் பட்டால் தான் சுழலும். பார்வையில் படும் வரை பிரை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான் ஒரு கட்டளையைப் பிறப்பித்திருக்க முடியுமா
நேயர் பதில் 11, 12, 13
பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவே இல்லை என்று உளறி வந்த இவர்கள் இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்க்கச் சொன்னார்கள் என்று கூறி அந்தர் பல்டி அடித்து விட்டனர். அந்தக் காலத்தை கவனத்தில் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களாம்!
மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமை பெற்று விட்டது. அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தின் எந்தச் சட்டமும் பிற்காலத்தில் மாற்றப்படாது என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
பயணிகள் ஜம்மு கஸர் செய்ய சலுகை மார்க்கத்தில் உள்ளது. அந்தக் காலத்தில் பயணம் என்பது மிகவும் சிரமமானதாகவும், அதிக நேரத்தை விழுங்கக் கூடியதாகவும் இருந்ததால் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இன்று விமானப் பயணம் மிக எளிதாகவும் எவ்விதக் களைப்பும் சிரமமும் அற்றதாகவும் ஆகி விட்டதால் இப்போது ஜம்மு கஸர் கூடாது என்று இந்த மேதாவிகள் கூறுவார்களா?
பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியது எதற்காக தெரியுமா என்ற அற்புதமான விளக்கத்தையும் இவர்கள் கொடுக்கின்றனர். அதாவது 29ஆ 30ஆ என்று கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை நீக்குவதற்காகத் தான் பிறை பார்க்கச் சொல்லி அனைவரையும் ஒரு கருத்துக்குக் கொண்டு வந்தார்களாம்!
இவர்கள் சொல்வதில் கடுகளவாவது லாஜிக் இருக்கிறதா? மதீனாவில் மட்டும் இஸ்லாம் இருந்தால் இவர்கள் கூறுவது போன்ற நிலை ஏற்படலாம். உலகின் பல பகுதி மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை பார்த்து நோன்பு நோற்கச் சொன்னார்கள். இதனால் ஏற்படும் விளைவு என்ன? மதீனாவில் பிறை பார்க்கும் நாளில் மற்ற பகுதிகளில் வாழ்பவர்கள் பிறை பார்க்க முடியாது. வெவ்வேறு நாட்களில் தான் பிறை பார்க்க முடியும். இதனால் வெவ்வேறு நாட்களில் தான் பெருநாள் ஏற்படும் என்ற சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
சம்மந்தமில்லாத வசனங்களைப் பொருத்தமில்லாமல் இணைத்து வாதம் செய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை. 21:92 வசனத்தில் அல்லாஹ் நம்மை நோக்கி "நீங்கள் ஒரே சமுதாயம்", என்கிறான். ஆகவே நாம் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டுமாம்!
ஒரே சமுதாயம் என்று பெருநாள் கொண்டாடுவதற்கா அல்லாஹ் சொல்கிறான்? இறைவனை வணங்குவதைக் குறித்து விளக்குவதற்காகச் சொல்லும் வசனம் அது. அதை பெருநாளோடு தொடர்பு படுத்தி தங்களைச் சிந்தனையற்றவர்கள் என்று தாங்களே நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்..
ஒரு வாதத்திற்கு, நாம் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சொல்லி விட்டதால் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றால், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் எத்தனை சமுதாயம்? 22 சமுதாயமா? அவர்களுக்கு மேற்கூறப்பட்ட வசனம் பொருந்தாதா?அவர்கள் காலத்தில் ஏன் ஒரே நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடவில்லை?
அடிப்படையற்று வாதம் வைத்தால் இவ்வாறு தான் உளறலான வாதமாக சென்று சேரும்!
அடுத்து இவர்கள் வைக்கும் இன்னொரு வாதம், சந்திரனின் இயக்கம் மிக துல்லியமாக இருக்கும் பட்சத்தில், நம் கண்களில் பட்டால் தான் மாதம் துவங்கும், இல்லையெனில் துவங்காது என்று சொல்வது சந்திரனின் துல்லியத்தில் சந்தேகம் கொள்வது போல் உள்ளதே? என்று கேட்கின்றனர்.
பிறை தெரிந்தால் மாதம் பிறக்கிறது, என்று முடிவு செய்வதற்கும், பிறை தெரிந்தால் தான் பிறை துல்லியமாக இயங்குகிறது என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.
பிறை தென்பட்டாலும் தென்படாவிட்டாலும், பிறையின் ஓட்டத்தில் யாரும் சந்தேகம் கொள்வதில்லை. பிறை தென்படாவிட்டால், துல்லியமாக ஓடிக் கொண்டிருக்கும் பிறையை நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை, அவ்வளவு தான்!
நம் கண்களுக்கு அல்லாஹ் காட்டித் தரவில்லை என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் வழி சொல்லித் தருகிறார்கள்.
முதல் பிறையை நீங்கள் பார்ப்பது வரை முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டித் தருகிறான் என்ற நபிமொழி இதற்கு பொருத்தமான வழியாக இருக்கிறது.
கேள்வியையும் முன்வைத்து, அதற்குரிய வழியையும் அல்லாஹ்வே சொல்லி தந்து விட்ட பிறகு, இவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவது நம்மிடமா அல்லது அல்லாஹ்விடமா?
வரட்டுக் கேள்வி 14
அல்குர்ஆன் 3:13ல் காணப்படுவது போல் எதிரிகள் தம் புறக்கண்ணால் பார்த்தார்கள்(ரஃயல் ஐன்) என்றிருப்பது போல் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்றுஒரேயொரு ஹதீஸும் நேரடியாகக் கூறாத நிலையில்பிறையைப் புறக்கண்ணால்பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நீங்கள் அல்குர்ஆன் 22:27ல் ஹஜ்ஜுக்கு நடந்தும் தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களிலும்வருவார்கள் என அல்லாஹ்நேரடியாகச் சொல்லி இருந்தும் அல்லாஹ்வின்இக்கட்டளையைப் புறக்கணித்து விட்டு இன்று ஹஜ்ஜுக்கு விமானத்தில் செல்வதைஎந்த அடிப்படையில் சரி காண்கிறீர்கள்?
நேயர் பதில் 14
புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரு ஹதீஸ் கூட கூறவில்லை என்பது எந்த அளவுக்கு அபத்தமானது என்பதை முதலாவது கேள்விக்கான பதிலில் நாம் தெளிவுபடுத்தி விட்டோம். அதுவே இந்த உளறலுக்கும் உள்ள பதிலாகும். மேலும் அந்தக் காலத்தில் சொன்னது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்ற ஷைத்தானின் சிந்தனை இவர்களின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போய் விட்டதால் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பதை உதாரணமாகக் காட்டி தங்கள் மடமைக்கு சாட்சி சொல்கிறார்கள்.
14 . மேற்கண்ட வாதத்தை அறிவார்ந்த கேள்வி என்று நினைத்து முன் வைக்கிறார்கள். அதாவது, அல்குர்ஆன் 22:27ல் அல்லாஹ் ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொல்வதால் நீங்களும் இன்று ஒட்டகத்தில் செல்ல வேண்டியது தானே? ஏன்விமானத்தில் செல்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.
குர்ஆன் குறித்த ஞானம் இல்லாத காரணத்தாலும், நுனிப்புல் மேய்வதாலும் ஏற்படும் பாதிப்பு தான் இது போன்ற கேள்விகள்..
அந்த வசனத்தையும், அது அல்லாத இன்ன பிற இறை வசனங்களையும், தெரிந்துகொண்டு வாதம் செய்தால் இது போன்ற கிறுக்குத்தனங்கள் கேள்வியாக எழுந்திருக்காது.
கியாம நாள் வரை ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று கூறப்படிருந்தால் தான்இவர்களின் கேள்வியில் கடுகளவாவது நியாயமிருக்கும். ஆனால் இந்த வசனம்இவர்கள் கற்பனை செய்து கூறும் அர்த்தத்தைத் தரவில்லை. இந்த வசனத்தில்பயன்படுத்தப்பட்ட உன்னிடம் என்ற சொல்லை இவர்கள் இருட்ட்டிப்பு செய்து விட்டுகுழப்பப் பார்க்கின்றனர்.
இந்த வசனத்தில், "உம்மிடம்" வருவார்கள் என்று அல்லாஹ், இப்ராஹீம் நபியை நோக்கிச் சொல்கிறான்.
இப்ராஹீம் நபியை நோக்கி உம்மிடம் ஒட்டகத்தில் வருவார்கள் என்று சொன்னால்உலகம் அழியும் வரை அனைவரும் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்ற கருத்து எப்படிவரும்?
இவ்வாறு கிறுக்குத்தனங்கள் எழும் என்பதால் தான், "அது அந்தக் காலத்திற்கு மட்டும் உரியது, மற்ற மற்ற காலங்களில் அவரவர் வசதிக்கேற்ப பயணம் செய்யலாம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு, "உம்மிடம்", வருவார்கள் என்று சேர்த்துச் சொல்கிறான்அல்லாஹ்.
இன்று நாம் ஒட்டகத்தில் செல்ல வேண்டும் என்றால் இன்றும் இப்ராஹீம் நபி மக்காவில் இருக்க வேண்டும். அப்போது தான் இவர்களது வாதம் செல்லுபடியாகும்.
இன்னும் சொல்வதாக இருந்தால், வருவார்கள், என்பதற்கும் வர வேண்டும்என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்தாலும் இவ்வாறான கேள்விகள்எழுந்திருக்காது.
ஒரு பெண் தனியாக ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்காக பயணம் செய்வாள் என்றஹதீஸை வைத்து, எந்தப் பெண்ணும் ஹஜ் செல்வதாக இருந்தால் ஒட்டகத்தில் தான்பயணம் செய்ய வேண்டும் என்று யாரும் வாதம் செய்ய மாட்டோம். அல்லது,தனியாகத் தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் கூற மாட்டோம். தனியாக பயணம்செய்வதோ,, ஒட்டகத்தில் பயணம் செய்வதோ அனுமதி தானேதவிர, கட்டாயமல்ல என்றே புரிந்து கொள்வோம். இதே போன்று எளிதாகப் புரிகிற ஒன்றை தங்கள் அபார(?)அறிவின் மூலம் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதற்கு இந்த கேள்வியே சான்றாகும்!
எனவே இப்ராஹீம் நபியிடம் அல்லாஹ் சொன்னது ஒரு முன்னறிவிப்பாகும்.. யாருமே குடியிருக்காத வனாந்தரத்தில் கஅபாவைக் கட்டியதாக நினைத்து நீ கவலைப்படாதே!காபாவைக் கட்டிய பின் உலகின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் ஒட்டகங்களில் உம்மிடம் வருவார்கள். இதை நீயே காணப்போகிறாய் என்று அல்லாஹ் சொன்னான்.உம்மிடம் என்ற சொல்லுக்குள் இந்த அர்த்தம் அடங்கியுள்ளதை உணரும் அளவுக்கு இவர்களின் அறிவு வேலை செய்யவில்லை.
வரட்டுக் கேள்வி 15
நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தங்கள் மனைவிமார்களிடம் செல்வதில்லை எனக் கூறிவிட்டு அந்த மாதம் 29லேயே பிறயைப் பார்க்காமலேயே மாதம் முடிந்து விட்டது என்பதை ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து சொன்னதன் பேரில் முடித்துக் கொண்டார்களே பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல்லுக்கே முரணாக நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஜிப்ரீல் சொன்னதன் பேரில் அறிந்து கொண்டார்கள். இங்கு பிறைபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது உங்கள் பதில் என்றால் அதே போல் கோள்கள் சம்மந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அடிப்படையில் கணிணி கணக்கீட்டின் படி (கணிப்புப்படி அல்ல) மாதம் பிறப்பதை துல்லியமாக அறிந்த பின்பும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும்என்று அடம் பிடிப்பது சரியா?
நேயர் பதில் 15
15 . ஒரே கேள்வி என்றாலும் வேறு வேறு வார்த்தைகளில் கேட்பதன் மூலம் பல கேள்விகளைக் கேட்ட தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணுவது இவர்களின் தகுதியைக் காட்டுகிறது.
நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம், மாதம் பிறந்து விட்டது என்பதைத் தெளிவாகச் சொன்ன பிறகும் கூட, புறக்கண்ணால் பார்த்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் என்றால், புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதால் தான்.
நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்று நீங்கள் சொல்வதில் இருந்தே என்ன புலனாகிறது என்றால், இன்றைய காலகட்டத்தில் தான் விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். நிரூபிக்கப்பட்டது தான் இன்றே தவிர, விஞ்ஞானம் என்றைக்கும் உள்ளது தான்!
என்றைக்கும் இருக்கும் விஞ்ஞானத்தை, அது நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதற்காக மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதாக இருந்தால், நிரூபிக்கப்படாத காலத்திலும் விஞ்ஞானம் என்பதும், பிறை என்பதும், அதன் துல்லியமான ஓட்டம் என்பதும் இருந்து தான் வந்துள்ளது!
அந்தக் காலகட்டத்தில் எந்த வழியைச் செய்வது சரி? நிரூபிக்கப்பட்டு விட்டதால் இன்றுநீங்கள் செய்வது தான் சரி என்றால், நிரூபிக்கப்படாத காலத்தில் செய்தவைகள் குறித்த உங்கள் நிலை என்ன?
சரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், அந்தக் காலத்துக்கு ஏற்ப நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் இருந்து வந்ததே! பயணம் செய்து வந்து பிறை தகவலைச் சொல்வது அன்றைய காலத்தில் உள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!
ஒரு நபரை மற்றொரு இடத்திற்கு அனுப்பி பிறை தகவல் சேகரிப்பதும் அன்று இருந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் தானே!
உலகில் ஒரு பகுதியில் பிறை பார்த்த தகவலை இன்னொரு பகுதிக்கு எடுத்துச் செல்லும் விஞ்ஞானத்தைப் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை முழுமையாக ஏன் பயன்படுத்தவில்லை என்ற நமது கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லாத வரை,இன்றைய நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தைப் பற்றி பேசி எந்த தகுதியும் இல்லை.
இந்த இடத்தில் குர்ஆன் கூறும் விஞ்ஞானத்தை நாம் மறுக்கிறோமா என்ற கேள்விஎழலாம்.
குர்ஆன் ஒன்றைக் கூறினால் அதை எந்த முஸ்லிமும் மறுக்கக் கூடாது. ஆனால், பிறைகுறித்தும்விஞ்ஞானம் குறித்தும் குர்ஆன் கூறுவது என்ன என்பதைச் சிந்தித்தால்உண்மை விளங்கி விடும்.இறைவனின் வல்லமையையும், ஆற்றலையும் பறை சாற்றுவதற்காக, சூரியன் குறித்தும் சந்திரன் குறித்தும், அதன் துல்லியமான அமைப்பைக் குறித்தும் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான். அதன் மூலம் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகின்றன என்றும் சொல்கிறான்.
இதை நாம் எந்த நிலையிலும் மறுக்கவில்லை. சூரியனும், சந்திரனும் காலம் காட்டுகின்றன என்பதை மறுக்கவே இயலாது.
ஆனால், விஷயம் என்னவென்றால், சந்திரன் காலம் காட்டும் என்பது விஞ்ஞானத்தின்படி முன்கூட்டியே கணித்து முடிவு செய்வதால் மட்டும் தான் காலம் காட்டுமா?புறக்கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்வதால் காலம் காட்டாதா?
காட்டும்..!
நாம் செய்து வரும் வழியை தொடர்ந்து செய்து வந்தாலும் பிறை நமக்கு காலம் காட்டத் தான் செய்யும்.
பிறையைப் பார்த்து அது இரண்டாம் பிறையாக இருக்குமோ, மூன்றாம் பிறையாக இருக்குமோ என்றெல்லாம் சந்தேகம் கொண்ட சஹாபாக்களிடம் இப்னு அப்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸை எடுத்துச் சொல்கிறார்கள்.
"நீங்கள் எப்போது பார்க்கிறீர்களோ, அப்போது தான் உங்களுக்கு முதல் பிறை. ஏதேனும் காரணங்களால் முதல் பிறை (நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி உள்ள முதல் பிறை) உங்களுக்குத் தென்படாமல் போனாலும், உங்கள் கண்களுக்குத் தென்படும் நாள் வரை,முந்தைய மாதத்தை அல்லாஹ்வே நீட்டித் தந்து விட்டான்!""
அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான்.
அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும்.. ஒரு வேளை பிறை (மேகமூட்டம்காரணமாக) தெரியாமல் இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமேநீடிக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம்.
ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்துகொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகஉணர்த்துகிறது.