புதுமனை புகுவிழா கொண்டாடலாமா?
கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா?
விருந்தும் வைக்க வேண்டுமா?
பதில்:
புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் மவ்லிது, பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்ச வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
முதன் முதலில் பால் காய்ச்சினால் பால் பொங்குவது போல் செல்வம் பொங்கும் என்ற நம்பிக்கை, தாயத்துகள் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஒப்ப இருப்பதால் இது ஷிர்க் எனும் இணைவைத்தலில் சேர்ந்து விடும்.
சில இடங்களில் சுப்ஹ் தொழுகையைப் புது வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றும் வழக்கமும் உள்ளது. இதுவும் பித்அத்தாகும். இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆனால் ஒருவர் புது வீடு கட்டி, அதில் குடிபுகும் போது விருந்தளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
7281ـ حدَّثَنا محمدُ بن عُبادةَ أخبرنا يزيدُ حدَّثَنا سليمُ بن حَيّان ـ وأثنى عليه ـ حدَّثَنا سعيدُ بن ميناءَ حدَّثَنا ـ أو سمعتُ ـ جابرَ بن عبد اللَّه يقول: جاءت ملائكة إلى النبيِّ صلى الله عليه وسلّم وهو نائم فقال بعضهم: إنه نائم، وقال بعضهم: إن العينَ نائمةٌ والقلبَ يقظانُ، فقالوا: إِن لِصاحبكم هذا مثلاً، قال: فاضربوا له مثلاً. فقال بعضهم: إِنه نائمٌ، وقال بعضهم: إن العينَ نائمةٌ والقلبَ يقظان، فقالوا: مثلهُ كمثل رجلُ بَنى داراً وجَعَلَ فيها مأدُبةً وبَعثَ داعياً، فمن أجاب الداعيَ دخلَ الدارَ وأكلَ من المأدبة، ومن لم يجبِ الداعيَ لم يدخل الدار ولم يأكل منَ المأدبة. فقالوا: أولوها له يَفقهها، فقال بعضهم: إنه نائم، وقال بعضهم إنَّ العينَ نائمةٌ والقلبَ يقظانٌ، فقالوا: فالدارُ الجنة والداعي محمدٌ صلى الله عليه وسلّم، فمن أطاعَ محمداً فقد أطاعَ اللَّه، ومن عصى محمداً صلى الله عليه وسلّم فقد عصى اللَّه، ومحمدٌ فرق بينَ الناس تابعَهُ قُتيبة عن ليث عن خالد عن سعيد بن أبي هِلال
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம் விழித்திருக்கிறது' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்' என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை' என்று கூறினர்.
பின்னர் அவர்கள் 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!' என்று சொல்ல மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது உள்ளம் விழித்திருக்கிறது' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடு தான் சொர்க்கம். அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்' என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7281
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு வானவர்கள் இங்கே ஒரு உவமையைக் கூறுகிறார்கள். புது வீடு கட்டி அதற்காக விருந்து ஏற்பாடு செய்து அவ்விருந்துக்கு மக்களை அழைப்பவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி அமைந்துள்ளதாக இவ்வுதாரணத்தில் கூறப்படுகிறது.
புது வீடு கட்டி விருந்தளிப்பது நல்ல செயல் அல்ல என்றால் அந்தச் செயலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்புப் பணிக்கு வானவர்கள் உதாரணமாகக் காட்ட மாட்டார்கள்.
எனினும் இது அனுமதிக்கப்பட்ட செயல் தானே தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒருவர் புது வீடு புகும் போது விருந்தளிக்கவில்லை என்றால் அவர் இறைவனிடம் குற்றவாளி ஆகி விட மாட்டார்.
கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் அவர் கடனை அடைப்பதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற விருந்துகளை அளிக்கக் கூடாது.
(823) ـ حدّثنا أبو اليمانِ قال: أخبرَنا شُعيبٌ عنِ الزُّهريِّ قال: أَخبرَنا عُروة بنُ الزُّبيرِ عن عائشةَ زوجِ النبيِّ صلى الله عليه وسلّم أخبرَتْه أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلّم كان يَدْعو في الصلاةِ: اللّهمَّ إني أعوذُ بكَ من عذاب القبرِ، وَأَعوذ بكَ من فِتنةِ المسيحِ الدَجّالِ، وَأَعوذُ بكَ من فتنةِ المحيا وفتنةِ المَماتِ. اللّهمَّ إني أعوذُ بكَ مِنَ المأْثَمِ وَالمَغْرَمِ. فقال له قائلٌ: ما أكثرَ ما تَستعيذُ منَ المغرَمِ ؟ فقال: إِنَّ الرجلَ إِذا غَرِمَ حَدَّثَ فكذَب، ووَعدَ فأَخْلَفَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்யும் போது 'யா அல்லாஹ்! பாவத்தை விட்டும், கடனை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என்று தொழுகையில் கூறுவார்கள். (இதையறிந்த) ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதன் கடன்படும் போது பொய் பேசுகின்றான், வாக்குறுதி அளித்து அதற்கு மாறு செய்கின்றான்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 823
(4839) ـ حدّثنا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ. حَدَّثَنَا الْمُفَضَّلُ يَعْنِي ابْنَ فَضَالَةَ عَنْ عَيَّاشٍ وَهُوَ ابْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ عَنْ عَبْدِ اللّهِ بْنِ يَزِيدَ أَبِي عَبْدِ الرَّحْمَـنِ الْحُبُلِيِّ عَنْ عَبْدِاللّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللّهِ قَالَ: يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ، إلاَّ الدَّيْنَ.
'அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனைத் தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4839
இந்த ஹதீஸ்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்களிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கை செய்துள்ளார்கள். கடன் வாங்கியோ, அல்லது கடன் இருக்கும் நிலையிலோ விருந்து வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வதாகும்.