பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?
நியாஜுத்தீன்
பதில்:
பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழவைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியான தடை மார்க்கத்தில் சொல்லப்படாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும், நபிமொழியும் இது கூடாது என்ற கருத்தைக் கொடுக்கின்றன.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
صحيح البخاري
4425 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الهَيْثَمِ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: لَقَدْ نَفَعَنِي اللَّهُ بِكَلِمَةٍ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الجَمَلِ، بَعْدَ مَا كِدْتُ أَنْ أَلْحَقَ بِأَصْحَابِ الجَمَلِ فَأُقَاتِلَ مَعَهُمْ، قَالَ: لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ، قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى، قَالَ: «لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً»
பாரசீகர்கள், கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கி விட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, "தம் காரியங்களுக்கு பெண்ணைப் பொறுப்பாளராக ஆக்கிக்கொண்ட சமுதாயம் ஒரு போதும் வெற்றிபெறாது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
நூல் : புகாரி 4425
மேலுள்ள வசனமும், நபிமொழியும் ஆண்களுக்கு பெண்கள் தலைமை ஏற்கக் கூடாது என்று கூறுகின்றன. ஆண்களுக்கு இமாமத் செய்வது ஒரு வகையான தலைமைப் பொறுப்பு என்பதால் இந்தப் பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் ஆண்களுக்குப் பெண்கள் இமாமத் செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
பெண்கள் தமது குடும்பத்தினருக்கு இமாமத் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாகக் கருதப்படுகின்றது.
– حدَّثنا عثمان بن أبي شَيبةَ، حدَّثنا وكيع بن الجرَّاح، حدَّثنا الوليد ابن عبد الله بن جُمَيعِ، حدثتني جدتي وعبدُ الرحمن بن خلاد الأنصاريُّ عن أمِّ ورقة بنت نَوفَل: أن النبيَّ – صلى الله عليه وسلم – لمَّا غزا بدراً قالت: قلت له: يا رسول الله، ائذَن لي في الغَزْوِ معك، أُمَرِّضُ مَرضاكم، لعلَّ الله يرزُقُني شهادةً، قال: "قِرِّي في بَيتِكِ، فإنَّ الله عز وجل يرزُقُكِ الشَّهادة"، قال: فكانت تُسمَّى الشَّهيدة. قال: وكانت قد قرأتِ القُرآنَ، فاستأذَنَتِ النبي – صلى الله عليه وسلم – أن تتَّخِذَ في دارها مُؤَذناً، فأذِنَ لها.قال: وكانت قد دَبَّرَت غلاماً لها وجاريةً، فقاما إليها بالليل فغمَّاها بقَطِيفةٍ لها حتَّى ماتت وذهبا، فأصبَحَ عمرُ فقام في الناس، فقال: مَن عندَه من هذين عِلمٌ، أو مَن رآهما فليَجِيءُ بهما، فأمر بهما فصُلِبا، فكانا أوَّلَ مَصلوبٍ بالمدينة
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், "உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை அல்லாஹ் தருவான்'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்'' எனக் கூறினார்கள். இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார். வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று அவர் எழுதிக் கொடுத்திருந்தார். அவ்விருவரும் உமர் (ரலி) காலத்தில் அவரைக் கொன்றனர். (இதன் மூலம் வீர மரணம் அடைவார் என்ற முன்னறிவிப்பு நிறைவேறியது.) கொலையாளிகள் சிலுவையில் அறையப்பட்டனர்.
நூல்: அபூதாவூத் 591, 592
இந்தச் செய்தியை உம்மு வரகா (ரலி) அவர்களிடமிருந்து லைலா பின்த் மாலிக் என்ற பெண்ணும், அப்துர் ரஹ்மான் பின் கல்லாத் என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் உறுதி செய்யப்படவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.
பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்வதைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தடை செய்கின்றன. பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்வதைத் தடை செய்யவில்லை. பெண்களுக்கு பெண்கள் இமாமத் செய்யக் கூடாது என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.
صحيح مسلم
1564 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ كِلاَهُمَا عَنْ أَبِى خَالِدٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ – عَنِ الأَعْمَشِ عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ عَنْ أَبِى مَسْعُودٍ الأَنْصَارِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ فَإِنْ كَانُوا فِى الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ فَإِنْ كَانُوا فِى السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِى الْهِجْرَةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ سِلْمًا وَلاَ يَؤُمَّنَّ الرَّجُلُ الرَّجُلَ فِى سُلْطَانِهِ وَلاَ يَقْعُدْ فِى بَيْتِهِ عَلَى تَكْرِمَتِهِ إِلاَّ بِإِذْنِهِ ». قَالَ الأَشَجُّ فِى رِوَايَتِهِ مَكَانَ سِلْمًا سِنًّا
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தொழுவிப்பார். அனைவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் ஹிஜ்ரத் செய்தவர் (தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களின் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அனுமதியின்றி அமர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்ஸாரீ (ரலி)
நூல் : முஸ்லிம்
எனவே இந்தப் பொதுவான ஆதாரத்தின் அடிப்படையில் பெண்கள் பெண்களுக்கு இமாமத் செய்வது தவறல்ல.