பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா?பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா?

பெண்கள் மார்க்கக் கடமைகளில் குறையுள்ளவர்களா?

கேள்வி

? பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டு தொழுகை, நோன்பை விடுவதால் அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது என்று அல்லாஹ் தானே கூறுகின்றான். பின்னர் எப்படி அவர்கள் மார்க்கக் கடமையில் குறைவுள்ளவர்களாக ஆவார்கள்?

ஷிபானா பேகம்,  தஞ்சாவூர்.

பதில்

மாதவிடாய்க் காலத்தில் நோன்பு, தொழுகைகளை விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ்வே கூறியிருக்கும் போது அதை மார்க்கக் கடமையில் குறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது முரண்பாடாகத் தெரிவதால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

صحيح البخاري

304 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي زَيْدٌ هُوَ ابْنُ أَسْلَمَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: وَبِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ العَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ»، قُلْنَ: وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَلَيْسَ شَهَادَةُ المَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ» قُلْنَ: بَلَى، قَالَ: «فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا»

ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ, நோன்புப் பெருநாள் அன்றோ தொழும் திடலிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்ற போது, பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள்! காரணம் நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தாம் என எனக்குக் காட்டப்பட்டது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மனஉறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பெண்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன? என்று பெண்கள் கேட்டனர். ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம் என அப்பெண்கள் பதில் கூறினார்கள். அது தான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகின்றது. ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும் விட்டு விடுவதில்லையா? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆம் என பெண்கள் பதில் கூறினார்கள். அது தான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 304

இந்த ஹதீஸில் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் நோன்பு, தொழுகைகளை விடுவதற்காக அல்லாஹ் குற்றம் பிடிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்துள்ள வித்தியாசத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகின்றார்கள்.

இரண்டு பெண்களின் சாட்சி ஓர் ஆணின் சாட்சிக்குச் சமம் என்பதையும் சேர்த்துக் கூறுவதிலிருந்து இதை அறியலாம்.

பொதுவாக ஒரு கடமையான தொழுகையை விடுவது பாவம் என்ற நிலையில் மாதவிடாய் சமயத்தில் தொழுகையை விடுவதால் அத்தகைய பாவம் ஏற்படாது. ஏனென்றால் அல்லாஹ் தான் அந்தச் சமயத்தில் தொழக்கூடாது என்று கூறியுள்ளான்.

ஆனால் அதே சமயம் ஆண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இருவருடைய வணக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை யாரும் மறுக்க முடியாது. இதைத் தான் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது என்று விளங்கிக் கொண்டால் முரண்பாடில்லை.

10.01.2015. 20:22

Leave a Reply