பொது சிவில் சட்டம் சாத்தியமா?
கேள்வி – 1
இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போது முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சிவில் சட்டம் இருப்பது நியாயமா என்று அறிவுஜீவிகளும், வழக்கறிஞர்களும் கேட்பது நியாயமாகத்தானே உள்ளது?
தமிழ்ச் செல்வன், திருச்சி
கேள்வி – 2
அரசியல் சாசனத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருமாறு சொல்லப்பட்டுள்ளதால், அதை நிறைவேற்றுவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அரசியல் சாசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளதா?
சலீம் கான், தாம்பரம்
கேள்வி – 3
முஸ்லிம்களுக்குத் தனிசிவில் சட்டம் கேட்கும் முஸ்லிம்கள் தனி கிரிமினல் சட்டத்தையும் கேட்கத் தயாரா? இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கடுமையாக உள்ளதால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்லாமியக் கிரிமினல் சட்டத்தை முஸ்லிம்கள் கோருவதில்லை என்று எங்கள் பகுதியைச் சேர்ந்த தி.க.வைச் சேர்ந்த பெரியவர் கேட்கிறார். இதற்கு நாம் எவ்வாறு பதில் சொல்வது?
டிஎன்டிஜே கிளை, தர்மபுரி
கேள்வி – 4
ஒரு வேளை பாஜக ஆட்சிக்கு வந்து பொதுசிவில் சட்டம் கொண்டு வந்தால் நாம் என்ன செய்வது? அதை எப்படி எதிர்கொள்வது?
அஸ்மா மைந்தன், திருவாரூர்
கேள்வி – 5
பொது சிவில் சட்டம் சாத்தியமா?
இப்ராஹீம், கல்லிடைக் குறிச்சி
பதில்:
நமது நாட்டில் எல்லா மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம்தான் உள்ளது. இதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிவில் எனும் உரிமை சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முஸ்லிம்கள் நீதிமன்றத்தை அணுகினால் அல்லது முஸ்லிமுக்கு எதிராக மற்றவர் நீதிமன்றத்தை அணுகினால் அப்போது இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்கப்படும்.
உதாரணமாக ஒரு 15 வயது சிறுவன் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் விரும்பும் மதத்தைத் தழுவுவது சிவில் – உரிமை சம்மந்தப்பட்ட விஷயமாகும்.
இது குறித்து யாராவது நீதிமன்றத்தை அணுகினால் இஸ்லாமியச் சட்டப்படி 15 வயதில் ஒருவன் மேஜர் ஆகிறான் என்பதால் அந்தச் சட்டப்படி நீதிமன்றம் தீர்ப்பளிக்காது. பொதுவான சிவில் சட்டப்படி 18 வயதில்தான் மேஜர் ஆக முடியும் என்பதால் சிறுவன் இஸ்லாத்தை ஏற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அத்துடன் அந்தச் சிறுவனை இஸ்லாத்தில் இணைக்க துணை நின்றவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும்.
இஸ்லாத்தில் இதற்கு சிவில் சட்டம் இருந்தும் அதற்கு மாற்றமான பொதுசிவில் சட்டத்தின்படிதான் நமது நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படும்.
ஒருவர் தனது இடத்தை வாடகைக்கு விடுகிறார்; இன்னொருவர் வாடகைக்குப் பெறுகிறார்; இது சிவில் பிரச்சனை.
இதற்கு இஸ்லாத்தில் தனிச் சட்டம் உள்ளது. இந்தியாவில் வேறு சட்டம் உள்ளது. வீட்டின் உரிமையாளருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இந்தியச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கப்படுமே தவிர, இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படாது.
இரண்டு முஸ்லிம்கள் மத்தியில் இப்பிரச்சனை ஏற்பட்டாலும் இஸ்லாமியச் சட்டப்படி தீர்ப்பு அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும் பொதுவான சட்டப்படி தான் இதில் தீர்ப்பளிக்கப்படும்.
ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறார். அல்லது விற்கிறார். இது சிவில் (உரிமை) சம்மந்தப்பட்ட விஷயம். இஸ்லாத்தில் வியாபாரத்துக்கு தனியாக சிவில் சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டப்படி தீர்ப்பு அளிக்காமல் இந்தியச் சட்டப்படிதான் முஸ்லிமுக்கும் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
கடன் வாங்குதல், கொடுத்தல் ஆகியன சிவில் பிரச்சனையாகும். எந்தக் கடனுக்கும் வட்டி இல்லை என்பது இஸ்லாமியச் சிவில் சட்டம். ஆனால் முஸ்லிம்கள் சம்மந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் வழக்கு, நீதிமன்றத்துக்குப் போனால் இஸ்லாத்துக்கு எதிரான இந்தியச் சட்டப்படிதான் தீர்ப்பு அளிக்க முடியும். அப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
இப்படி ஆயிரமாயிரம் சிவில் (உரிமை) சம்மந்தப்பட வழக்குகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான சட்டம்தான் உள்ளது.
ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எல்லா விஷயத்திலும் தனியாகச் சட்டம் உள்ளதாக சங்பரிவாரத்தினர் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருமணம், ஆண்களின் விவாகரத்து, பெண்களின் விவாகரத்து, இறந்தவரின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பிரித்துக் கொள்ளுதல், வஃக்பு சொத்துக்களை நிர்வகித்தல் ஆகிய விஷயங்கள் தவிர மற்ற அனைத்திலும் பொதுவான சட்டம்தான் முஸ்லிம்களுக்கும் உள்ளது.
மேற்கண்ட விஷயங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் நடக்கக் கூடியதாகும். இதில் முஸ்லிம்கள் தமது மதச் சட்டப்படி நடந்து கொண்டால், பிற சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
ஒரு முஸ்லிம் தனது அக்காவின் மகளைத் திருமணம் செய்தால் அது செல்லாது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நீதிமன்றமும் இப்படித்தான் கூறும்.
இதுபோல் திருமண விஷயத்தில் எல்லா மதத்துக்கும் தனியான சட்டங்கள் உள்ளன.
ஒரு இந்து, உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்தால் அதை இந்து மதம் திருமணமாக ஏற்காது என்பதால் நீதிமன்றமும் ஏற்காது.
ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்தை அவரது உறவினர்கள் எந்த விகிதாச்சாரத்தில் பிரித்துக் கொள்வது என்பதிலும் மற்ற சமுதாயத்துக்குச் சம்மந்தம் இல்லை. இது முஸ்லிம்களுக்கு இடையில் மட்டும் உள்ள சட்டமாகும். வஃக்பு சொத்தை இஸ்லாம் கூறும் முறைப்படிதான் செலவிட வேண்டும் என்பதிலும் மற்ற மதத்துக்கோ, சமுதாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை.
இந்த நான்கு விஷயங்களில் மட்டும் முஸ்லிம்கள் தமக்கிடையே தமது மதச் சட்டப்படி நடக்க அனுமதிக்கப்பட்டதைத் தான் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டம் உள்ளது போல் சித்தரிக்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு தனியாக சில சிவில் சட்டங்கள் இருப்பது போல் இந்துக்களுக்கும் தனியாக சில சிவில் சட்டங்கள் இந்தியாவில் உள்ளன.
இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவர்களுக்கு வருமான விலக்கு உண்டு. இது முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிமுக்கு அதிக வரியும், இந்துக்களுக்கு குறைந்த வரியும் என்ற நிலை இருந்தும் இது போல் இந்துக்களுக்கு மட்டும் சலுகை உள்ளது.
தத்தெடுக்கும் குழந்தை சொந்தப் பிள்ளையாகக் கருதப்படுவான் என்று இந்துக்களுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளது.
நிர்வாணமாகக் காட்சி தருவது சட்டப்படி குற்றம். ஆனாலும் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு அனுமதியிருப்பதால் நிர்வாணச் சாமியார்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடி வருகின்றனர்.
குருவாள் என்ற பெயரில் கத்தியை எப்போதும் வைத்துக் கொள்ள சீக்கியர்களுக்கு நம் நாட்டுச் சட்டம் அனுமதி வழங்குகிறது. இதை மற்றவர்கள் செய்தால் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
இப்படி எல்லா மதத்தவர்களுக்கும் ஐந்தாறு விஷயங்களில் அவரவர் மதப்படி நடக்க அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் முஸ்லிம்களுக்கு தனி சிவில் சட்டம் இருப்பதாகக் கூறுவது உண்மைக்கு மாறானதாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்து முறைப்படி எல்லோரும் தாலி கட்டி திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால், வஃக்பு சொத்தை ஆடல் பாடலுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் செலவிட வேண்டும் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? அது நியாயமாகுமா?
இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் சிவில் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளன. ஆனால் கிரிமினல் சட்டங்கள்தான் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றன. அனைவருக்கும் ஒரே மாதிரியான கிரிமினல் சட்டம் வேண்டும் என்று கூறுவதுதான் நியாயமாகும். அதுதான் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.
ஒரு மாநிலத்தில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசாங்கமே மதுக் கடைகளை நடத்தும். இதனால் கட்டுக்கோப்பு குலைந்து விடாதா? மதுவைத் தடை செய்த மாநிலத்திலும் பெர்மிட் உள்ளவர்கள் மது குடிக்கத் தடை இல்லை. இது பாரபட்சம் இல்லையா?
விபச்சாரமும், சூதாட்டமும், நைட் கிளப்புகளும், ஆடை அவிழ்ப்பு நடனங்களும் ஒரு மாநிலத்தில் தண்டனைக்குரிய குற்றம். இன்னொரு மாநிலத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள். தடை செய்யப்பட்ட மாநிலங்களில் கூட, நட்சத்திர ஹோட்டல்களில் இவற்றுக்கு அனுமதியும், பிற இடங்களில் தடையும் உள்ளன.
சைக்கிளில் இருவர் செல்வது, இரு சக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுதல் போன்ற சிறிய விஷயங்களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான சட்டங்கள்; வித்தியாசமான நடைமுறைகள் உள்ளன.
ஒரே செயலை இருவர் செய்கின்றனர். ஆனால் ஒருவன் செய்தது குற்றம். மற்றவன் செய்தது குற்றம் இல்லை. இப்படி மாறுபட்ட கிரிமினல் சட்டம் இருப்பதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு நாட்டு மக்களைப் பாரபட்சமாக நடத்துவத மாற்றியமைப்பது பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.
மாநிலத்துக்கு மாநிலம் வரி விதிப்பில் வித்தியாசங்கள் உள்ளதா இல்லையா?
தமிழ்நாட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் அவன் அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுகிறான். ஆனால் அருகில் உள்ள பாண்டிச்சேரிக்காரன் அதே காரை வாங்கினால் அவன் பத்தாயிரம்தான் வரி கட்டுகிறான். ஒரே பொருளுக்கு குடிமக்களிடம் பாரபட்சமாக வரி விதிப்பதற்குத்தான் வெட்கப்பட வேண்டும். இதை மாற்றுவதற்குத்தான் துடிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் வாங்கும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக வரி போடப்படுகிறதே, இது நாட்டு மக்கள் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்பதற்கு ஆதாரமாக இல்லையா?
ஒரு மாநிலத்தின் உணவுப் பொருட்களை இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் தடை!
நாட்டில் ஓடும் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தகராறு!
இவற்றால் எல்லாம் கட்டுக்கோப்பு குலையாதாம். இப்படி வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அறிவுக்குப் பொருத்தமாக உள்ளதாம். நான்கே நான்கு விஷயங்களில் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் கட்டளைப்படி நடந்தால் மட்டும் கட்டுக்கோப்பு குலைந்து விடுமாம். இப்படிக் கூறக் கூடியவர்கள்தான் அறிவுஜீவிகளாம்.
முஸ்லிம்கள் நான்கே நான்கு விஷயங்களில் தமது மார்க்கப்படி நடந்து கொண்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் எத்தனை? இதன் காரணமாகப் பிரிந்து போன மாநிலங்கள் எத்தனை? கூறுவார்களா?
மொகலாய மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்துக்கள் தமது மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறிப் போகவில்லை. ஆயிரம் நாடுகளாக இருந்த பகுதிகள் ஒரு நாடாகத்தான் மாறின. இதுதான் உண்மை.
வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்டபோது முஸ்லிம்களும், இந்துக்களும் தத்தமது மதத்தின்படி சில சிவில் சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் நாடு சிதறவில்லை. இத்தகைய அணுகுமுறையினால் தான் பரந்த இந்தியாவே உருவானது. மொகலாயர்களும், வெள்ளையர்களும் மதச் சுதந்திரத்தில் தலையிட்டிருந்தால் இன்றைய இந்தியாவை நாம் பார்க்க முடியாது. இதையும் அறிவுஜீவிகள் உணர வேண்டும்.
வெள்ளையர்களும், மொகலாய முஸ்லிம் மன்னர்களும் வழங்கிய தனிசிவில் சட்ட உரிமையால் ஒன்றுபட்ட இந்தியா, இவர்கள் கொண்டு வர எண்ணுகின்ற பொது சிவில் சட்டத்தினால் சிதறுண்டு போகும் நிலைக்குத் தள்ளப்படும். நாட்டில் குழப்பங்களும், கொந்தளிப்பும் ஏற்படும். இதைத்தான் சில விஷம சக்திகள் விரும்புகின்றன. இதற்காகவே பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகின்றன.
புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்லாந்து நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது.
புத்தமத நாடு என்று பிரகடனம் செய்து கொண்ட இலங்கையிலும் கூட முஸ்லிம் தனியார் சட்டம் அமலில் உள்ளது.
கிரீஸ், எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இத்தகைய சட்டங்கள் உள்ளன. இதன் காரணமாக இந்த நாடுகள் சிதறிப் போகவில்லை.
அறிவுஜீவிகளுக்கு இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும் இஸ்லாத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொது சிவில் சட்டம் எனக் கூப்பாடு போடுகின்றனர்.
அடுத்து அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு பாஜக இதை தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது என்றால் பாஜகவுக்கு சட்ட அறிவு இல்லை என்று தான் பொருள்.
குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமையியல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு கூறுவதைத் தான் இவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
அரசியல் சாசனத்தில் 44வது பிரிவு இவ்வாறு கூறுவது உண்மை தான். ஆனால் இது எந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது? அந்தத் தலைப்பின் நிலை என்ன? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை.
இந்தியாவின் எல்லைகள்
குடியுரிமை
பொதுவானவை
கொள்கை விளக்கம்
அடிப்படைக் கடமைகள்
உள்ளிட்ட பல தலைப்புகள் அரசியல் சாசனத்தில் உள்ளன.
கொள்கை விளக்கம் என்ற தலைப்பின் கீழ் 36 முதல் 51 முடிய 17 விதிகள் கூறப்பட்டுள்ளன. பொது சிவில் சட்டம் பற்றி பேசும் 44 வது விதியும் கொள்கை விளக்கம் என்ற பகுதிக்கு உட்பட்டதாகும்.
கொள்கை விளக்கம் என்ற இந்தத் தலைப்பு ஏனைய தலைப்புகளிலிருந்து மாறுபட்டது. ஏனைய தலைப்புக்களில் கூறப்பட்டவைகளை அமல் செய்யாவிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். அமல் செய்யாதவர்கள் அரசியல் சாசனத்தை அவமதித்தவர்களாகக் கருதப்படலாம். ஆனால் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. செயல்படுத்துமாறு நீதிமன்றமும் கட்டளை ஏதும் வழங்க முடியாது. இது அரசுக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகள்தான்.
இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் 37வது விதியில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.
என்று கொள்கை விளக்கத்தின் 37வது பிரிவு கூறுகின்றது.
அரசியல் சாசனத்தில் கூறப்படும் கொள்கை விளக்கம் எனும் தலைப்பில் பல சட்டங்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் மூலம் அவற்றை வற்புறுத்தக் கூடாது. கட்டாயச் சட்டமாக அவற்றை ஆக்கி விடக் கூடாது என்பது தான் மேற்கண்ட் வாசகத்தின் கருத்தாகும்.
36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51 ஆகிய சட்டங்கள் ஆலோசனையாகவே கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இத்தனை சட்டங்களில் ஒன்றையும் சட்டமாக்காமல் 44வது பிரிவை மட்டும் சட்டமாக்க வேண்டும் என்பதும், நீதிமன்றங்கள் தலையிடுவதும் அரசியல் சாசனத்துக்கே எதிரானதாகும்.
உதாரணமாக 45 வது சட்டத்தைப் பாருங்கள்!
இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள், குழந்தைகள் அனைவருக்கும் 14வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அரசியல் சாசனம் 45வது பிரிவு
14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது. இன்று வரை கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ள விஷயங்கள். இதைச் செய்வது கட்டாயம் இல்லை என்று பதில் கூறுகிறார்கள்.
அதே தலைப்பில் தானே பொதுசிவில் சட்டம் பற்றிய ஆலோசனையும் உள்ளது?
கொள்கை விளக்கம் 47வது சட்டத்தைப் பாருங்கள்!
உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தமது தலையாய கடமையாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாக, போதையூட்டும் மது வகைகளையும் உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருட்களையும் மருந்துக்காக அன்றி வேறு விதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
அரசியல் சாசனம் 47வது பிரிவு
இன்றுவரை இந்தக் கொள்கை பின்பற்றப்படவில்லை.
மக்களுக்குக் கேடு தரும் நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றால் மதுவையும் தடுக்க வேண்டும். நச்சுப்புகை உள்ளதால் பட்டாசுகளையும் தடை செய்ய வேண்டும். ஆனால் நாடு முழுவதும் அரசே மதுபானத்தை விற்பனை செய்கிறது. அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட இச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பவர்களையும், விற்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டால் இது கொள்கை விளக்கம் தலைப்பில் உள்ளதால் இது கட்டாயம் இல்லை என்கிறார்கள்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படாது. பெரும்பாலான மக்கள், குறிப்பாகப் பெண்கள் முழுமையாக இதை வரவேற்பார்கள். இதைப் பற்றிப் பேசத் துப்பில்லாத பாஜக பொதுசிவில் சட்டம் பற்றி மட்டும் ஊளையிடுவது ஏன்?
அரசியல் சாசனம் 41 வது சட்டம் கூறுவதைப் பாருங்கள்!
தனது பொருளாதார சக்திக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும், வேலை இல்லாத போதும் வயது முதிர்ந்தோருக்கும் ஊனமுற்றோருக்கும் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு உற்ற துணை புரிவதற்கேற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.
அரசியல் சாசனம் 41வது பிரிவு
அனைவருக்கும் வேலை வாய்ப்பு தரப்பட வேண்டும்; சக்திக்கு மீறிய வேலையாக அது இருக்கக்கூடாது வேலையில்லாதோருக்கும், முதியோருக்கும், நோயாளிக்கும், பொது நிதியிலிருந்து உதவ வேண்டும் என்று இந்தப் பிரிவு கூறுகின்றது.
இவற்றை இவர்கள் செய்யத் தயாராக இல்லை. இது கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உள்ளவை என்று கூறி தப்பித்துக் கொள்கின்றனர். பொதுசிவில் சட்டமும் அதே தலைப்பில் உள்ளதை இருட்டடிப்பு செய்கின்றனர்.
இஸ்லாமிய சிவில் சட்டம் கோருபவர்கள், இஸ்லாமியக் கிரிமினல் சட்டம் கோர மறுப்பதேன்?என்ற கேள்விக்கு வருவோம்.
திருமணம் உள்ளிட்ட அந்த ஐந்து விஷயங்கள் முஸ்லிம்கள் தமக்குள் செயல்படுத்தக் கூடியவை. அதில் அரசுக்கு எந்த வேலையும் இல்லை.
கிரிமினல் சட்டங்கள் ஆட்சியாளர்களால் நடைமுறைப் படுத்தப்படுபவை. சிவில் சட்டங்களிலும் பெரும்பாலானவை ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்படுபவை. மக்கள் இதைத் தாங்களாகவே அமல்படுத்த முடியாது. மக்கள் தமக்கிடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக் கூடிய, மதம் சம்பந்தப்பட்ட, மிகச் சில விஷயங்களில் மட்டுமே தனியார் சிவில் சட்டம் உள்ளது.
இஸ்லாமிய ஆட்சி முறையில் கூட கிரிமினல் சட்டத்தை ஆட்சியாளர்கள்தாம் அமல்படுத்த முடியும். இந்தச் சாதாரண உண்மை கூட அறிவுஜீவிகளான இவர்களுக்கு விளங்கவில்லை.
கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய கடுமையான தண்டனைகளை உங்களுக்குள் நீங்களே அமல்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசு, முஸ்லிம்களை நச்சரித்து வருவது போலவும், அச்சட்டத்தின் கொடுமைக்கு அஞ்சி முஸ்லிம்கள் தயங்குவது போலவும் இத்தகைய கேள்விகளால் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களை, கிரிமினல் விவகாரங்களில் முஸ்லிம்கள் அமல்படுத்திக் கொள்ள அரசு அனுமதித்தால் முஸ்லிம்கள் அதை மனப்பூர்வமாக ஏற்கத் தயாராக உள்ளனர். இஸ்லாமியக் கிரிமினல் சட்டங்களால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பதில் முஸ்லிம்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
ஆனால் தண்டனை வழங்கும் அதிகாரத்தை உலகில் எந்த நாடும் குறிப்பிட்ட சமுதாயத்தின் கைகளில் கொடுக்காது. ஒருவன் கொலை செய்து விட்டால் அவனை ஜமாஅத்தில் இழுத்து வந்து தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள் என்று ஒரு நாடு கூறினால் அந்த ஜமாஅத் மீது அந்த நாட்டுக்கு ஆளுமை இல்லை என்று ஆகிவிடும். இதனால்தான் இந்தக் கிறுக்குத்தனமான சட்ட விரோதமான இக்கோரிக்கையை முஸ்லிம்கள் வைக்கவில்லை.
ஆனால் முஸ்லிம்கள் செய்யும் கிரிமினல் குற்றங்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் தீர்ப்பு அளிப்போம் என்று அரசு முடிவு செய்தால், இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் முஸ்லிம்களைக் கொண்ட தனி நீதிமன்றம் அமைத்தால் இந்திய முஸ்லிம்கள் அதை மறுக்க மாட்டார்கள்.
இந்தத் தண்டனைகளால் முஸ்லிம்களில் கொலையாளிகளும், திருடர்களும் இல்லாமல் போனால் அல்லது பெருமளவில் குறைந்தால் அது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறோம்.
அறிவுஜீவிகள் என்போர், இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் சிறுபான்மையினருக்குத் தனி சிவில் சட்டம் உண்டா? எனவும் கேட்கின்றனர்.
சவூதி அரேபியா முழுக்க முழுக்க முஸ்லிம்களை மட்டுமே குடிமக்களாகக் கொண்ட நாடு. இங்கு பிற சமய மக்கள் குடிமக்களாக இல்லை. இந்தியாவில் ஏறத்தாழ எட்டு சமயத்தவர்கள் குடிமக்களாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் வாழ்கின்றனர்.
நாட்டில் குடிமக்களாக உள்ளவர்கள் மத அடிப்படையிலான தனி சிவில் சட்டத்தின்படி வாழ்வதற்கும், பிழைப்புக்காக அயல்நாடு சென்று அந்நாட்டுக் குடிமக்களாக ஆக முடியாதவர்கள் தனி சிவில் சட்டம் கோருவதற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.
பாகிஸ்தான், பங்களா தேஷ் போன்ற நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் அந்த நாடுகளில் உள்ள இந்துக்களும், கிறித்தவர்களும் அந்த நாடுகளின் குடிமக்கள் என்பதால் இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும் சில விஷயங்களில் தனிச்சட்டங்கள் உள்ளன.
ஆனால் சவூதி உள்ளிட்ட பல அரபு நாடுகளில் முஸ்லிம்களைத் தவிர வேறு குடிமக்கள் இல்லை. பிழைப்புக்காக அங்கே சென்றவர்கள் தான். அவர்களில் யாரும் குடிமக்கள் அல்லர் என்பதால் பிற சமய மக்களுக்கு தனி சிவில் சட்டம் என்ற பேச்சே அங்கு எழவில்லை.
முஸ்லிம் தனியார் சட்டத்தினால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே அதை மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கடைசி அஸ்திரம்.
முஸ்லிம் தனியார் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.
ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு மனைவியைத் திருமணம் செய்வதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்; இது கொடுமை என்கின்றனர்.
முஸ்லிம்களுக்கு இன்னொரு திருமணம் செய்ய அனுமதி! முஸ்லிம் அல்லாதவர்கள் எத்தனை வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டாலும் அது குற்றமில்லை. இது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை இல்லையா?
விபச்சாரம் செய்யலாம்; சிவப்பு விளக்குப் பகுதியில் சல்லாபம் செய்யலாம்; எத்தனை பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் எந்தத் தண்டனையும் கிடையாது. இதனாலெல்லாம் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள் என்கிறார்களா?
மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் உடலுறவு வைப்பது குற்றச் செயல் என்று சட்டம் இயற்ற இவர்களுக்குத் துணிவு உள்ளதா?
முதல் மனைவி இருக்கும்போது, இன்னொருத்தியை மனைவி என்று பிரகடனம் செய்வதுதான் தவறு! மற்றபடி மனைவியிடம் அனுபவிப்பது போன்ற இன்பத்தை மனைவி அல்லாத பெண்களிடம் அனுபவிக்கலாம். அது தவறில்லை என்பது தான் இங்குள்ள பொது சிவில் சட்டம்.
வைப்பாட்டிகளின் குழந்தைகளுக்கு சொத்துரிமை உள்ளதாக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.
எதற்காக இன்னொருத்தியைத் திருமணம் செய்கிறானோ அவை அனைத்தையும் இன்னொரு பெண்ணிடம் அனுபவிக்கலாம். வசதிகள் செய்து கொடுக்கலாம். மனைவி என்று மட்டும் சொல்லக் கூடாது. இதுதான் பொது சிவில் சட்டம்.
இதற்கும், பலதார மணத்திற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? பொதுசிவில் சட்டமும் (மனைவி என்று பிரகடனம் செய்யாமல்) வைப்பாட்டி வைத்துக் கொள்ளவும், விரும்பி விபச்சாரம் செய்யவும் அனுமதித்து முதல் மனைவியைத் துன்புறுத்தத்தான் செய்கிறது.
ஒரு பெண்ணுடைய அழகை, இளமையை அனுபவிக்கக் கூடியவன், அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தை அளித்துவிட்டு அனுபவிக்கட்டும் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுவது இவர்கள் ஆதரிக்கும் சட்டத்தை விட எந்த விதத்தில் குறைவானது? விளக்குவார்களா?
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணப்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதிதான். அதுவும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதியே! வைப்பாட்டிகளை வைத்துள்ள மற்ற சமுதாயத்தவரைவிட இரண்டு மனைவியரை மணந்த முஸ்லிம்களின் சதவிகிதம் மிகவும் குறைவானது என்பதையும் இவர்கள் உணர வேண்டும்.
கண்ட பெண்களுடன் கூடி விட்டுப் பெருநோய்க்கு ஆளாகி, மனைவிக்கு அந்த நோயைப் பரிசாகக் கொடுப்பதை விட, இன்னொருத்திக்குச் சட்டப் பூர்வமான மதிப்பு அளித்து, மணந்து கொள்வது எல்லா வகையிலும் சிறந்தது என்பதில் ஐயமில்லை.
நீதிமன்றத்தை அணுகாமல் முஸ்லிம் கணவன், தனது மனைவியை விவாகரத்துச் செய்யலாம் என்ற முஸ்லிம் தனியார் சட்டம் பெண்களுக்குக் கொடுமையில்லையா? இதனால் பெண்களுக்குப் பாதிப்பில்லையா? என்ற கேள்வியும் தவறாகும்.
நிச்சயமாக இதில் கொடுமை இல்லை. பெண்களுக்கு இதை விடப் பாதுகாப்பான சட்டம் வேறு இருக்க முடியாது என்பதுதான் உண்மை.
நீதிமன்றத்தை அணுகித்தான் விவாகரத்துப் பெற முடியும் என்ற சட்டம் யாருக்கெல்லாம் உள்ளதோ அந்தச் சமுதாயத்தில்தான் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
நீதிமன்றத்தில்தான் விவாகரத்துப் பெற வேண்டும் என்றால் விவாகரத்துப் பெறுவதற்காக மனைவியின் மேல் கணவன் பகிரங்கமாக அவதூறு கூறுகின்றான். அல்லது தீயிட்டுக் கொளுத்திவிட்டு, ஸ்டவ் வெடித்து விட்டது என்று கூறுகின்றான். இதற்குக் காரணம் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள கடுமைதான்.
எந்த முஸ்லிம் கணவனும், தன் மனைவியை தீயிட்டுக் கொளுத்தியதாக வரலாறு இல்லை. காரணம், மனைவியைப் பிடிக்காவிட்டால் எளிதாக அவன் விவாகரத்துச் செய்ய முடியும் என்பதுதான்.
மேலும் மனைவிக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவளும் கணவனை விவாகரத்துச் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. அறிவுஜீவிகள் எதிர்க்கக் கூடிய முஸ்லிம் தனியார் சட்டத்திலேயே இது கூறப்பட்டுள்ளது.
விவாகரத்துச் செய்யும் உரிமையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக இஸ்லாம் வழங்கி இருப்பதாலும், விவாகரத்துச் செய்த பின் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதித்து ஆர்வமூட்டுவதாலும், விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருந்தால் ஏற்படும் தீய விளைவுகள், இஸ்லாமிய சட்டத்தில் இல்லாததாலும் இதில் பெண்களுக்கு எந்தக் கொடுமையும் இல்லை. மாறாக அவர்களுக்கு இதில் பாதுகாப்பே இருக்கின்றது என்பதுதான் உண்மை.
விவாகரத்துச் செய்தபின் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை என்பது கொடுமையில்லையா? என்றும் கேட்கின்றனர்.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் மறுமணம் செய்யும்வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று இஸ்லாமியச் சட்டத்தில் திருத்தம் கோருகிறார்கள்.
இப்படி ஒரு சட்டம் இருந்தால் எந்தப் பெண்ணும் பெரும்பாலும் மறுமணம் செய்ய மாட்டாள். மாறாகக் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு, மற்ற ஆண்களுடன் சல்லாபம் நடத்தத் துணிவாள். ஜீவனாம்சம் இல்லை என்றால்தான் தனது வாழ்க்கையின் பாதுகாப்புக்காகப் பொருத்தமான துணையைத் தேடிக் கொள்வாள். இரண்டில் எது சரியானது என்று சிந்திக்க வேண்டாமா?
பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு வருவோம்.
பொதுவாக சிவில் விஷயங்களில் அரசு நேரடியாகத் தலையிட முடியாது. ஒருவர் வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றமோ, அரசோ அதில் தலையிட முடியாது. கடன் கொடுத்தவன் வழக்கு தொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்.
இவர்கள் பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் எதைக் கொண்டு வந்தாலும் முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தின்படி நடப்போம்; நீதிமன்றத்தை நாட மாட்டோம் என்று முடிவு செய்தால் அந்தச் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதைப் படித்துப் படித்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாமே தவிர, நம்மை அது ஒன்றும் செய்யாது என்பது தான் இதற்கான பதில்.
இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு சிறந்தது என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கு விளக்கி நீதிமன்றத்தை அணுகாத நிலையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் சமுதாயம் அதிகத் தெளிவுடனும், மார்க்கப் பற்றுடனும் திகழ்ந்து அதை முறியடிக்கும். (இறைவன் நாடினால்)
பொதுசிவில் சட்டம் என்ற பெயரில், முஸ்லிம்களாக வாழும் உரிமை பறிக்கப்பட்டால், முஸ்லிம்கள் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொங்கி எழுவார்கள். உலகத்துச் சலுகைகள் எதையும் அவர்கள் இழப்பார்கள்.
ஆனால் முஸ்லிம்களாக வாழ்வதற்கே தடை என்றால் இஸ்லாத்தை விட உயிர் பெரிதில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவார்கள். அத்தகைய நிலை ஏற்பட்டால் எந்தச் சக்தியாலும் அவர்களைத் தடுக்க முடியாது என்று ஆட்சியாளர்களை எச்சரித்து வைக்கிறோம்.
29.04.2014. 8:54 AM