மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் நடைமுறை ஏன்?

ரவுத் தொழுகை இருபது ரக்அத்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருந்தும் மக்கா, மதீனாவில் இருபது ரக்அத்கள் தொழுவது ஏன்?

நஜீம்

சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றன.

அதை நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும்.

மக்காவையும், மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை.

صحيح البخاري رقم فتح الباري

 وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي

மாறாக, நான் எவ்வாறு தொழுதேனோ அவ்வாறு தொழுங்கள்' என்பது தான் அவர்களின் கட்டளை.

நூல் : புகாரி 631, 6008, 7246

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டாத வணக்கத்தை உருவாக்கவோ, அல்லது அதிகப்படுத்தவோ மக்கா, மதீனாவாசிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

இதற்கான ஆதாரங்களை முன்னரே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்த வாதத்தை எழுப்புவோரிடம் காணப்படும் முரண்பாட்டையும் நாம் இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

இருபது ரக்அத் தொழுகைக்கு மட்டும் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் காட்டும் மார்க்க அறிஞர்கள், ஏராளமான விஷயங்களில் சவூதி அரேபியாவை ஆதாரமாகக் கொள்வதில்லை.

சவூதி அரேபியாவில் நான்கு மத்ஹபுகள் இல்லை. அதை இவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள்.

சவூதி அரேபியாவில் கத்தம், பாத்திஹா, மவ்லூது, தாயத்து, தகடு, புரோகிதம் கிடையாது. அதை முன்னுதாரணமாகக் கொண்டு இவர்கள் இந்தச் செயல்களை விட்டொழிப்பதில்லை.

சவூதி அரேபியாவில் தரீக்கா, ராத்திபு, முரீது, பால்கிதாபு, நல்ல நாள் பார்த்தல் உள்ளிட்ட மூட நம்பிக்கைகள் இல்லை. இதை ஏன் இவர்கள் முன்மாதிரியாகக் கொள்வதில்லை?

சவூதியில் நடப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மக்கா, மதீனாவில் செய்யப்படும் காரியங்கள் குர்ஆன் ஹதீஸுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் இல்லை.