மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது

உள்ளே:

நபிமார்களுக்கும் இவ்வுலகில் நடப்பது தெரியாது
மரணித்தவர்கள் செவியுற முடியாது
இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார்
குகை வாசிகளூக்கு ஒன்றும் தெரியவில்லை.

னிதன் மரணித்த பின்னும் இவ்வுலகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், இவ்வுலகில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மரணித்தவர் நல்லடியாராக இருந்தால் அவர் நமது தேவைகளை நிறைவேற்றுவார் என்றும் மார்க்கம் அறியாத சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் காரணமாகவே தர்காக்களில் வழிபாடுகளும் நடத்துகின்றனர்.

மரணித்தவர் மகானாகவே இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது என்ற அறிவு கூட அவர்களுக்கு இருக்காது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தவர்களை நோக்கி 'நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!' என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். 'நீங்கள் எங்களை வணங்கவே இல்லை' என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். 'எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்' என்றும் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 10:29 

மரணித்தவர்களை இறைநேசர்கள் என்று கருதி அவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு இவ்வசனம் மரண அடியாக அமைந்துள்ளது.

மகான்கள்  நமக்கு உதவுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இவர்கள் வணங்கியதும், பிரார்த்தித்ததும், காணிக்கை செலுத்தியதும் இன்னும் இவர்கள் செய்த எந்த வணக்கமும் அந்த மகான்களுக்குத் தெரியவே தெரியாது இவ்வசனம் கூறுகின்றது.

'நீங்கள் எங்களை வணங்கவே இல்லை;  ஒரு வேளை நீங்கள் எங்களை வணங்கி இருந்தால் அது எப்படி எங்களுக்குத் தெரியும்? எனவே நீங்கள் எங்களை வணங்கியது எங்களுக்குத் தெரியாது என்று மறுத்து விடுவார்கள்.

வணங்கியதும், பிரார்த்தித்ததும் அவர்களுக்குத் தெரியாது என்றால் எப்படி அவர்களால் நமக்கு உதவ முடியும் என்பதைச் சிந்தித்தால் சமாதிகளையும், இறந்தவர்களையும் யாரும் வணங்கவே மாட்டார்கள்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21 

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6 

இவ்வசனங்களை ஒன்றுக்குப் பல முறை வாசித்துப் பாருங்கள்!

கியாமத் நாள் வரை அழைத்தாலும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. கியாமத் நாள் வரை அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனவே அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் அவர்களை அழைத்தால் அவர்கள் பதில் தர முடியாது என்பதையும், அவர்களால் நமக்கு உதவ முடியாது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அறிவீனர்கள் தங்களைப் பிரார்த்தித்து வந்தனர் என்ற விஷயமே மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டும் போதுதான் அவர்களுக்குத் தெரிகிறது என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

அது மட்டுமின்றி இவர்கள் எங்களை வணங்கவே இல்லை; அவர்கள் எங்களை வணங்கி இருந்தால் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று கூறி கைவிரித்து விடுவார்கள் என்பதையும் இவ்வசனத்தில் இருந்து அறியலாம்.

இறந்தவர்களின் நிலை குறித்து படைத்த இறைவன் சொல்வதை நம்புவதா? மார்க்கத்தை அறியாத மூடர்கள் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளை நம்புவதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

நபிமார்களுக்கும் இவ்வுலகில் நடப்பது தெரியாது

மனிதர்களில் மிகச் சிறந்தவர்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களில் முதல் நிலையில் இருப்பவர்களும் நபிமார்களே! நபிமார்கள் இவ்வுலகில் வாழும் போது அவர்களைப் பின்பற்றிய மக்களில் அதிகமானவர்கள், நபிமார்களின் மரணத்திற்குப் பின் வழிகெட்டுப் போனார்கள். நபிமார்களையே கடவுளாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் தமது சமுதாயம் வழிகெட்டுப் போனது மரணித்த நபிமார்களுக்குத் தெரியாது என்று அல்லாஹ் பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துவதைக் காணுங்கள்!

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் 'உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?' என்று கேட்பான். 'எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்' என்று அவர்கள் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 5:109 

உங்கள் பிரச்சாரத்தை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் அல்லாஹ் கேட்கும் போது அது பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது; அல்லாஹ்வாகிய உனக்குத்தான் தெரியும் என நபிமார்கள் கூறுவார்கள்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன? ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் இருந்தாலும் இவ்வுலகில் என்ன நடக்கிறது? தமது கொள்கைகளை ஏற்றவர்கள் யார்? தலைகீழாகப் புரட்டியவர்கள் யார் என்ற விபரத்தை அவர்களால் அறிய முடியவில்லை என்பது தெரிகிறது. நபிமார்களின் நிலையே இது என்றால் அவர்களை விட தகுதியில் குறைந்த சாதாரணமான நல்லடியார்களுக்கு இவ்வுலகில் நடப்பது எப்படித் தெரியும்? அவர்கள் எப்படி நமது பிரார்த்தனையை அறிவார்கள்? எப்படி உதவுவார்கள்? குர்ஆன் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படிக் கருத மாட்டார்கள்.

மரணித்தவர்கள் செவியுற முடியாது

இவ்வுலகில் மனிதர்கள் பேசிக் கொள்வதை மரணித்தவர்களால் செவியுற முடியாது. தங்களையே ஒருவர் அழைத்தாலும் அவர்களால் அதைச் செவியுற முடியாது. இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறது.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14 

இறந்தவர்கள் செவியுற முடியாது என்று கூறுவதுடன்  நன்கறிந்த என்னைப் போல் உமக்கு யாரும் அறிவிக்க முடியாது என்றும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரணித்தவரின் நிலை என்ன என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். ஆன்மாக்களின் உலகில் என்ன நடக்கிறது என்பதை எந்த மனிதரும் அறிய முடியாது. இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ்வாகிய நான் கூறுகிறேன் என அல்லாஹ் கூறுகிறான்.

மகான்கள் எங்கள் கோரிக்கையைச் செவிமடுத்து ஆவண செய்வார்கள் என்று கட்டுக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு நம்புகிறீர்களே இது பற்றி அறிந்தவர்கள் நீங்களா? அல்லாஹ்வாகிய நானா? என அருமையாக அல்லாஹ் இதைப் புரிய வைக்கிறான். இதற்கு மாற்றமான கருத்து கொள்வோர் அல்லாஹ்வை விட தங்கள் முன்னோர்கள் இது குறித்து நன்கு அறிந்தவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

'நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது'

திருக்குர்ஆன் 30:52 

(நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 27:80 

(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.

திருக்குர்ஆன் 35:22 

சாதாரண மனிதர்கள் இறந்தவர்களை அழைப்பது கிடக்கட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தவர்களை அழைத்தால் கூட இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.

இறந்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தை இவ்வசனம் அழுத்தமாகக் கூறி இருக்கும் போது சமாதி வழிபாட்டுக் கூட்டம் இதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து இதன் அர்த்தத்தை அனர்த்தமாக்குகிறது.

அவர்கள் கூறுவது இதுதான்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது அதைச் சிலர் ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்காதவர்கள் குறித்துத் தான் இவ்வசனம் பேசுகிறது. உங்கள் போதனையை மரணித்த உள்ளம் கொண்ட இவர்கள் செவியுற மாட்டார்கள் என்ற கருத்தில் தான் இது சொல்லப்பட்டுள்ளது. மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை எனக் கூறுகின்றனர்.

மரணித்த உள்ளம் கொண்டவர்களைத் தான் இவ்வசனத்தில் இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்பது உண்மைதான்.

இறந்தவர்களுக்கு எவ்வாறு காது கேட்காதோ அது போன்ற நிலையில் காஃபிர்களும் உள்ளனர். எனவே தான் இறந்தவர்களின் நிலையுடன் இவர்களின் நிலையை ஒப்பிட்டு அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

காஃபிர்களை இறந்தவர்களுடன் ஒப்பிட்டுக் கூறி இருப்பதில் இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்ற கருத்து இன்னும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

மேலும் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எப்படி செவியேற்க மாட்டார்களோ அது போல் இவர்களும் உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்படுவதும் இதே அடிப்படையில் தான்.

அதிகம் பேசாமல் இருக்கும் ஒருவரைப் பற்றி நாம் பேசும்போது இந்த ஊமையனை யாரும் பேச வைக்க முடியாது எனக் கூறுவோம். ஊமையாக இல்லாத, அதிகம் பேசாத மனிதனைப் பற்றித்தான் நாம் இப்படிக் கூறுகிறோம். ஊமையைப் பற்றிப் பேசவில்லை.

ஊமை பேச மாட்டான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத விஷயமாக உள்ளதால் அது போல் இவனும் இருக்கிறான் என்ற கருத்தில் இவ்வாறு பேசுகிறோம். இந்த மனிதனாவது எப்போதாவது பேசிவிடுவான். ஆனால் உதாரணமாகக் காட்டப்படும் ஊமை எப்போதும் பேச மாட்டான்.

அது போல் தான் இந்த உதாரணமும் அமைந்துள்ளது. செத்தவன் எப்படி செவியுற மாட்டானோ அது போன்ற நிலையில் இவர்கள் உள்ளனர். எனவே உமது போதனையைச் செவியுற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது உதாரணம் தான்; எனவே இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதை இது மறுக்க உதவாது என்று யாரேனும் கூறினால், அல்லாஹ் இந்த உதாரணத்தைத் தவறாகக் கூறி விட்டான் என்று சொல்ல வருகின்றார்கள்.

இந்த வசனத்தில் உதாரணமாக அல்லாஹ் கூறினாலும் இதுவல்லாத எத்தனையோ வசனங்களில் இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். 'எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:21 

இந்த வசனத்தில், இறந்தவர்கள் என்பதை உவமையாகக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ் கூறுகின்றான். இறந்தவர்கள் என்று மட்டும் கூறாமல், உயிருடன் இருப்பவர்கள் அல்லர் என்றும் சேர்த்துக் கூறுகின்றான். இதற்கு வேற்றுப் பொருள் கொடுக்கவே முடியாது.

இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார்

முந்தைய காலத்தில் ஒரு மனிதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அதிசய அனுபவத்தைப் பின்வரும் வசனத்தில் எடுத்துக் காட்டுகிறான்.

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.

திருக்குர்ஆன் 2:259 

நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். மரணித்தபின் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே கிடந்தது. பின்னர் அவருக்கு உயிர் கொடுத்து அல்லாஹ் எழுப்பி எவ்வளவு நாளை இந்த நிலையில் கழித்திருப்பீர் என்று கேட்கிறான். அதற்கு அவர் அளித்த பதில் என்ன? ஒரு நாள் அல்லது அதைவிட குறைவான நேரம் என்று அவர் பதிலளிக்கிறார்.

இப்படி அல்லாஹ்வால் மரணிக்கச் செய்யப்பட்டவர் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியாராகத் தான் இருக்க முடியும்.

இப்ராஹீம் நபியவர்கள் இறைவா மரணித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு எனக் கேட்டார்கள். அல்லாஹ் பறவைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிக் காட்டினான். இந்தச் சம்பவம் இதற்கு அடுத்த வசனத்தில் கூறப்படுகிறது.

இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிய நல்லடியார்கள் ஆவல் கொள்ளும் போது அவர்களுக்கு அல்லாஹ் செய்முறை விளக்கம் அளித்துள்ளான்.

இதுபோல் தான் இந்தச் சம்பவத்தில் கூறப்படுபவரும் நல்லடியாராகத் தான் இருக்க முடியும். அதனால் தான் அவருடன் அல்லாஹ் உரையாடி தனது வல்லமையை அவருக்குப் புரிய வைக்கிறான்.

நல்லடியாராக இருந்தும் தற்காலிகமாக மரணமடைந்த அவர் நூறு ஆண்டுகளைக் கடந்துள்ளதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவர் மரணித்து விட்டார் என்பதுதான்.

ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.

குகை வாசிகளூக்கு ஒன்றும் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தத் தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்ற வரலாறைத் திருக்குர்ஆன் கூறுகிறது. அந்த வரலாறும் நல்லடியார்கள் தூங்கும் போது எதையும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?'' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்று (மற்றவர்கள்) கூறினர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர். அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்!

திருக்குர்ஆன் 18:19,20 

இவர்கள் மிகச் சிறந்த நல்லடியார்களாக இருந்தும் எத்தனை ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்தனர் என்பதை அவர்கள் அறியவில்லை. அதற்கு நெருக்கமான கால அளவைக் கூட அவர்கள் கூற முடியவில்லை. ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் தான் நாம் தூங்கி இருப்போம் என்று கூறுகின்றனர்.

மேலும் தமது காலத்து மக்கள் அனைவரும் மரணித்து அடுத்த தலைமுறை மக்கள் தான் தற்போது ஊரில் உள்ளனர் என்பதையும் அறியவில்லை. ஊருக்குள் யாரும் அறியாவண்ணம் சென்று உணவு வாங்கி வருமாறு கூறுகின்றனர். தமது ஊரில் என்ன நடக்கிறது என்பதும் தாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லை.

உறக்க நிலையில் உள்ள போது இந்த நல்லடியார்களுக்கு உலகில் நடப்பது ஒன்றும் தெரியவில்லை எனும் போது மரணித்தவர்கள் எப்படி உலகில் நடப்பதை அறிய முடியும்?

மரணித்தவர்களுக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்திய பின்பும் மரணித்தவர்கள் நமக்கு உதவுவார்கள் என்றும், அவர்களை நினைவு கூறும் சபைக்கு வருகை தருவார்கள் எனவும் சிலர் வாதிடுகின்றனர். சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் அவை இவர்களின் வாதத்தை நிறுவ உதவாது என்பதே உண்மை.

Leave a Reply