மழைக்காலமும் ஜமாஅத் தொழுகையும்
கடுமையான மழை நேரங்களில் கடமையான தொழுகைக்கு பள்ளிக்கு வராமல் வீடுகளிலேயே தொழுவதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.
அது போன்ற சூழ்நிலையில் பாங்கழைப்பு வாசகத்தைப் பற்றியும் மார்க்கம் சில மாற்றங்களைக் கற்றுத்தருகின்றது.
வழக்கமாக நாம் கூறும் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்ற வாக்கியம் மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்ற வாக்கியங்களைக் கூறாமல் அதற்கு பகரமாக " ஸல்லூ ஃபீ புயூதிகும் " என்று இருமுறை கூறவேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.
இதற்குரிய ஆதாரம்
«901» حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ. قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.
901. அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்:
'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது 'என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்' என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை' என்றும் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 901
ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகையின் பக்கம் வாருங்கள்) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்ற வாக்கியத்தைக் கூறாமல் அதற்கு பகரமாக ஸல்லூ ஃபீ புயூதிகும் (உங்களின் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்) என்ற வாக்கியத்தைக் கூறவேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்!!
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இதற்குப் பகரமாக வேறு சில சொற்களைக் கூறுமாறு சொல்லப்பட்டுள்ளது.
صَلُّوا فِي رِحَالِكُمْ
ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (அஹ்மத் 23215)
أَلَا صَلُّوا فِي رِحَالِكُمْ
அலா ஸல்லூ ஃபீ ரிஹாலிக்கும் (முஸ்லிம் 1241)
الصَّلَاةُ فِي الرِّحَالِ
அஸ்ஸலாத்து ஃபிர்ரிஹால் (புகாரி 616)
أَلَا صَلُّوا فِي الرِّحَالِ
அலா ஸல்லூ ஃபிர் ரிஹால் (புகாரி 632)
இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டுமா? அல்லது அல்லது ஸல்லூ ஃபீ புயூதிகும் எனக் கூற வேண்டுமா?
ஃபீ புயூதிகும் என்றால் வீடுகளில் என்று பொருள். ரிஹால் என்றால் இருப்பிடங்கள் என்று பொருள். இது வீட்டையும், வீடு அல்லாமல் பயணத்தின் போது அமைக்கும் கூடாரங்களையும் குறிக்கும். ரிஹால் என்ற சொல் இடம் பெற்ற அதிகமான அறிவிப்புக்கள் பயணத்தின் போது சொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் என்ற அறிவிப்பு பயணத்தின் போது சொல்லப்பட்டதாக இருக்க முடியாது. பயணத்தில் அமைக்கும் கூடாரங்களை வீடுகள் என்று சொல்வதில்லை. எனவே தான் ரிஹால் என்ற இரு பொருள் தரும் அறிவிப்புக்களை விட ஃபீ புயூதிகும் என்ற சொல் தான் உள்ளூரில் சொல்வதற்குப் பொருத்தமானது.
ஹய்ய அலஸ் ஸலாஹ் என்பதற்குப் பதிலாக ஸல்லூ ஃபீ புயூதிகும் என்று கூறி விட்டு ஹய்ய அலல் ஃபலாஹ் என்று தொடர வேண்டுமா? அல்லது ஹய்ய அல்ல் ஃபலாஹ் என்பதையும் தவிர்க்க வேண்டுமா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஹய்ய அலஸ்ஸலாஹ் என்றால் தொழுகையின் பக்கம் வாருங்கள் என்று பொருள் ஆகும். இதையும் கூறி விட்டு தொழுகைக்கு வர வேண்டாம் வீட்டில் தொழுங்கள் என்றும் கூறினால் இரண்டாம் முரண்படும். வாருங்கள்! ஆனால் வராதீர்கள் என்ற குழப்பமான நிலையைத் தவிர்க்கவே ஹய்ய அலஸ்ஸலாஹ் என்பதை தவிர்க்க சொல்லி இருக்கிறார்கள் என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரியும்.
வீட்டிலே தொழுங்கள் எனக் கூறி விட்டு ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) எனக் கூறினால் அதே முரண்பாடு இதிலும் வரும்.
வீட்டில் தொழுங்கள்! பள்ளிக்கு வராதீர்கள் என்று கூறி விட்டு தொழுகைக்கு வாருங்கள் என்றும் கூற முடியாது. வெற்றிக்கு வாருங்கள் என்றும் கூற முடியாது. எனவே பாங்கில் தொழுகைக்கான அழைப்பைக் குறிக்கும் இரு வாக்கியங்களையும் தவிர்ப்பதே சரியான முறையாகும்.