யாகுத்பா ஓர் ஆய்வு
நூலின் பெயர் : யாகுத்பா ஓர் ஆய்வு
ஆசிரியர் : பி.எஸ்.அலாவுத்தீன்
பக்கங்கள் : 96
விலை ரூபாய் 20.00
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
அறிமுகம்
தமிழக முஸ்லிம்கள் மத்தியில் யாகுத்பா என்பது புனிதமிக்க பாடலாக அறிமுகமாகியுள்ளது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து பாடப்படுவதாகக் கூறப்படும் இப்பாடலை விஷேச நாட்களிலும், ரபீவுல் ஆகிர் மாதத்திலும் பக்திப் பரவசத்துடன் பாடி வருகின்றனர்.
மவ்லுதுப் பாடல்களிலேயே மிகவும் அதிக அளவில் நச்சுக் கருத்தை உள்ளடக்கியுள்ள பாடல் யாகுத்பா எனும் பாடலாகும்.
இப்பாடலில் வலியுறுத்தப்படும் கருத்தின் அடிப்படையிலேயே காயல்பட்டிணம் போன்ற ஊர்களில் இருட்டில் இருந்து கொண்டு அப்துல் காதிர் ஜீலானி என்பவரை ஆயிரம் தடவை திக்ரு செய்யும் மௌட்டீக வழக்கம் நடைமுறைக்கு வந்தது.
எனவே இப்பாடலின் கருத்துக்கள் இஸ்லாத்திற்கு உகந்தது தானா?
இதைப் பாடுவதால் நன்மை கிடைக்குமா? என்பதை விரிவாக ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
அத்துடன் மவ்லிதுகள் சமுதாயத்தில் நுழைந்த வரலாறும், அது ஏற்படுத்திய தீய விளைவுகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் சகோதரர் காலம் சென்ற பி.எஸ்.அலாவுதீன் எனும் பி.ஷேக் அலாவுதீன் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய இந்நூலை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் யாகுத்பா பாடலின் நச்சுக் கருத்தை விளங்கி அதைப் புறக்கணித்து நடக்க வல்ல இறைவன் அருள்வானாக!
நபீலா பதிப்பகம்
யா குத்பா ஓர் ஆய்வு
சுப்ஹான மவ்லிது
ஹஸனார் மவ்லிது
ஹுஸைனார் மவ்லிது
முஹ்யித்தீன் மவ்லிது
ஷாகுல் ஹமீது மவ்லிது
ஹாஜா மவ்லிது
என்று பெரியார்களின் பெயர்களை மரியாதை இல்லாமல் அழைத்துக் கொண்டு இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? என்று கேட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் முன்னிலையிலேயே ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), கஅபு பின் ஜுஹைர் (ரலி) போன்றோர் அண்ணலாரைப் புகழ்ந்து பாடவில்லையா? எனக் கேட்கிறார்கள்.
அவ்விரு நபித்தோழர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் முன்னிலையில் தமது கவிதைகளை அரங்கேற்றி அவர்களின் அங்கீகாரம் பெற்றார்களே தவிர நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அந்தக் கவிதைகளை தமது வீடுகளிலும், கடைகளிலும், இத்யாதிகளுடன் ஓதிக் கொண்டு இருக்கவில்லை.
உண்மையில் அக்கவிதைகளைப் படிப்பது ஒரு நன்மையான காரியம் என்றிருந்தால், நன்மைகள் செய்வதில் நம்மை விட பேரார்வம் படைத்த அண்ணலாரின் அன்புத் தோழர்களும், தாபியீன்களும் அவற்றை ஓதாமலிருந்திருப்பார்களா?
மேலும், எந்தக் கவிதைகள் அண்ணலார் முன்பு பாடப்பட்டு அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றனவோ அவை இன்று மவ்லிதுகளாக ஓதப்படுவதில்லை. ஹிஜ்ரி ஆயிரத்திற்குப் பின்னுள்ளவர்களால் எழுதப்பட்டவைகளைத் தான் இவர்கள் மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதி வருகின்றார்கள்.
அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் அவர்களும் காட்டித்தராத இந்த மவ்லிதுக் கச்சேரிகள் முக்கியமான வணக்கத்தைப் போல் கருதப்படுகின்றதே! இதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா என்று இந்தக் கச்சேரியை நடத்துவோர் சிந்திப்பதில்லை.
மார்க்கத்தைக் குறைவின்றி முழுமையாகக் கற்றுத் தருவதற்காகவே தூதர்களை அல்லாஹ் நியமிக்கின்றான். இறுதித் தூதராம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக இந்த மார்க்கத்தைப் பூரணப்படுத்தியதாகவும் இறைவன் பிரகடணம் செய்கிறான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
மார்க்கத்தை இறைவன் நிறைவாக்கியிருக்க, பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் எப்படி நல்லறமாக ஆக முடியும்?
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
திருக்குர்ஆன் 7:3
இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மாத்திரமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது. இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்றால் அவனது வேதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்; அல்லது அந்த வேதத்திற்கு விளக்கமளிக்க இறைவனால் நியமனம் செய்யப்பட்ட அவனது தூதர் கூறியிருக்க வேண்டும்.
மவ்லிதுக் கச்சேரிகள் நடத்தும்படியோ, இதை நடத்துவதால் இறைவனது அன்பும், இறைத்தூதரின் பரிந்துரையும் கிடைக்கும் என்றோ, இறைவனும் கூறவில்லை. அவனது தூதரும் கூறவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரமாக்கும் முல்லாக்களைத் தவிர வேறு எவரும் இந்தக் கச்சேரியை நடத்துமாறு கூறவில்லை.
المعجم الكبير للطبراني
1520- حَدَّثَنَا زَكَرِيَّا بن يَحْيَى السَّاجِيُّ ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بن عَلِيٍّ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، حَدَّثَنَا أَبُو عُبَادَةَ الزُّرَقِيُّ ، حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ مُحَمَّدِ بن جُبَيْرِ بن مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، بِالْجُحْفَةِ فَخَرَجَ عَلَيْنَا ، فَقَالَ : أَلَيْسَ تَشْهَدُونَ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ ، وَأَنِّي رَسُولُ اللَّهِ ، وَأَنَّ الْقُرْآنَ جَاءَ مِنْ عِنْدِ اللَّهِ ؟ قُلْنَا : نَعَمْ ، قَالَ : فَأَبْشِرُوا فَإِنَّ هَذَا الْقُرْآنَ طَرَفُهُ بِيَدِ اللَّهِ ، وَطَرَفُهُ بِأَيْدِيكُمْ ، فَتَمَسَّكُوا بِهِ ، وَلا تُهْلَكُوا بَعْدَهُ أَبَدًا.
المعجم الكبير للطبراني
17941 – حَدَّثَنَا عُبَيْدُ بن غَنَّامٍ، ثنا أَبُو بَكْرِ بن أَبِي شَيْبَةَ، ثنا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بن عَبْدِ الْعَزِيزِ، قَالَ: ثنا ابْنُ الأَصْبَهَانِيُّ، أَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بن جَعْفَرٍ، عَنْ سَعِيدِ بن أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ:أَبْشِرُوا، أَلَيْسَ تَشْهَدُونَ أَنَّ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ؟قَالُوا: بَلَى، قَالَ: إِنَّ هَذَا الْقُرْآنَ سَبَبٌ طَرَفَهُ بِيَدِ اللَّهِ، وَطَرَفَهُ بِأَيْدِيكُمْ فَتَمَسَّكُوا بِهِ فَإِنَّكُمْ لَنْ تَضِلُّوا، وَلَنْ تَهْلَكُوا بَعْدَهُ أَبَدًا.
இந்தக் குர்ஆனின் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலுள்ளது. மறுபகுதி உங்கள் கைகளில் உள்ளது. எனவே அதனையே நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள்! அதன் பிறகு நீங்கள் (மறுமையில்) நாசமாகவும் மாட்டீர்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)
நூல்: தப்ரானி 22/188
المستدرك على الصحيحين للحاكم
أخبرني إسماعيل محمد بن الفضل الشعراني ثنا جدي عن ثور زيد الديلي عن عكرمة عن ابن عباس : أن رسول الله صلى الله عليه و سلم خطب الناس في حجة الوداع فقال : قد يئس الشيطان بأن يعبد بأرضكم و لكنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم فاحذروا يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا : كتاب الله و سنة نبيه صلى الله عليه و سلم إن كل مسلم أخ المسلم المسلمون إخوة و لا يحل لامرىء من مال أخيه إلا ما أعطاه عن طيب نفس و لا تظلموا و لا ترجعوا من بعدي كفارا يضرب بعضكم رقاب بعض
و قد احتج البخاري بأحاديث عكرمة و احتج مسلم بأبي أويس و سائر رواته متفق عليهم
ஒரு போதும் நீங்கள் வழிதவறிச் செல்ல முடியாத சிலவற்றை உங்களிடையே நான் விட்டுச் செல்கிறேன்; அவை அல்லாஹ்வின் வேதமும், அவனது நபியின் வழிகாட்டுதலுமாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம். 1/172
திருக்குர்ஆனையும், நபிவழியையும் தவிர பிறவற்றை மார்க்கம் என்று சொல்வதற்கு இடமே இல்லை. அவ்விரண்டையும் பேணி நடப்பதிலும், அவ்விரண்டில் இல்லாதவற்றைத் தூக்கி எறிவதிலும் தான் ஈடேற்றம் உள்ளது என்பதை இந்த நபிமொழிகள் கூறுகின்றன. மவ்லுதுக் கச்சேரிகள் நிறுத்தப்பட வேண்டுமென்பதற்கு இவையும் சான்றுகளாகும்.
தமது காலத்துக்குப் பின்னர் பலவிதமான அனாச்சரங்கள் தோன்றும். அவை அனைத்தும் மனிதனை நரகின் பால் இழுத்துச் செல்லும் எனவும், இறைவனிடம் அவை அங்கீகரிக்கப்படாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.
صحيح البخاري
2697 – حدثنا يعقوب، حدثنا إبراهيم بن سعد، عن أبيه، عن القاسم بن محمد، عن عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم: «من أحدث في أمرنا هذا ما ليس فيه، فهو رد
நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
صحيح مسلم
2042 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ « صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ ». وَيَقُولُ « بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ». وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ « أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ». ثُمَّ يَقُولُ « أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَىَّ وَعَلَىَّ ».
செய்திகளில் சிறந்தது, இறைவனின் வேதமாகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகவும் கெட்டது (எனக்குப் பின்னர்) உருவாக்கப்பட்டவையாகும். (இவ்வாறு) உருவாக்கப்பட்ட காரியங்கள் யாவும் அனாச்சாரங்களாகும். அனாச்சாரங்கள் யாவும் வழிகேடாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1435
صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».
நமது உத்தரவு இல்லாமல் யாரேனும் ஒரு காரியத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட காரியங்கள் எதுவானாலும் அவை இறைவனால் அங்கீகரிக்கப்படாது என்றும், அவை வழிகேடு என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்த பிறகும், உண்மையான முஸ்லிம் எப்படி இந்த மவ்லிதுகளை ஓத முடியும்? நன்மை செய்கிறோம் என்று எண்ணி பாவத்தைச் சுமக்க முன் வருபவர் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?
இந்த ஒரு காரணத்துக்காகவே யாகுத்பா உள்ளிட்ட மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும் அவை ஏற்படுத்திய தீய விளைவுகள் மவ்லிதுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மேலும் வலுப்படுத்துகின்றன.
மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்
திருக்குர்ஆனை இழிவுபடுத்துதல்
திருக்குர்ஆன், நபிவழி மூலம் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட நல்லறங்களில் ஒன்று என்று நிரூபிக்கப்பட முடியாத இந்த மவ்லிதுகள் இன்று முஸ்லிம்களில் பெருவாரியானவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டிருக்கிறது. எந்த சுகதுக்கங்களிலும் மவ்லிதுகள் ஓதப்படவில்லையென்றால் அந்தக் காரியமே முழுமை பெறுவதில்லை என்று நம்பப்படுகிறது.
எவற்றிற்கு இதை ஓதுவது? எவற்றிற்கு இதை ஓதக் கூடாது என்ற விவஸ்தை இல்லாது, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து கொண்டு மவ்லிதுகள் கொட்டமடிக்கின்றன.
குழந்தைகள் பெயர் சூட்டும் நிகழ்ச்சியா?
மகள் பருவம் அடைந்து விட்டாளா?
பையனுக்கு சுன்னத்தா?
மக்களுக்குத் திருமணமா?
புதுமனைப் புகுவிழாவா?
திரவியம் தேட திரை கடலோடும் பயணமா?
ஹஜ்ஜுப் பயணமா?
பெருமானாரின் பிறந்த நாள் விழாவா?
பெரியார்களின் நினைவு நாட்களா?
வெள்ளியா?
திங்களா?
ஆறா?
பதினொன்றா?
அழைத்து வா ஆலிம்களை! ஓதச் சொல் மவ்லிதுகளை! என்று இந்த மவ்லிதுகள் படும் பாடு மத்தளம் படுமோ? தரி படுமோ யாமறியோம்.
சாவு வீடுகள் கூட இந்த மவ்லிதுக் கச்சேரிகளுக்குத் தப்புவதில்லை. இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு விட்ட மூன்றாம் பாத்திஹாவிலிருந்து ஏழாம் பாத்திஹாக்கள் ஈறாக, நாற்பதாம் பாத்திஹா, வருட பாத்திஹாக்கள் உட்பட மவ்லிதுக் கச்சேரிகள் இல்லை என்றால் அந்தச் சபைகளே நிரப்பதில்லை.
இது என்ன மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான கொடுஞ்செயல்? ஒரு முஸ்லிம் இறந்து போயிருக்கிறான். அதற்காகக் கவலைப்பட்டுக் கண்ணீர் வடிக்க வேண்டாம்; சினிமா மெட்டுக்களிலும், இனிய ராகங்களிலும், புலவு, பியாணி, குர்மா, கைமா என்று இந்த மவ்லிதுக் கச்சேரிகளை நடத்துவதையாவது தவிர்க்க வேண்டாமா?
யாராவது செத்தால் மட்டுமே கத்தம் ஓதுவதற்காகக் கையில் எடுக்கப்படும் திருக்குர்ஆனை உங்கள் வீட்டின் மங்கள நிகழ்ச்சிகளிலும் ஓதக் கூடாதா? என்று இவர்களிடம் கேட்டால், மங்கள நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனா? இது சாவு வீடா என்ன? என்று கேட்டு திருக்குர்ஆனை இழிவுபடுத்துகின்றனர்.
وفي جواهر الفقه من قيل له ألا تقرأ القرآن أو لا تكثر قراءته فقال شبعت أو كرهت أو أنكر آية من كتاب الله أو عاب شيئا من القرآن أو أنكر كون المعوذتين من القرآن غير مؤول كفر قلت وقال بعض المتأخرين كفر مطلقا أول أو لم يؤول لكن الأول هو الصحيح المعول
திருக்குர்ஆன், பள்ளிவாசல் போன்ற மார்க்கத்தில் மரியாதைக்கு உரியவைகளாகக் கருதப்படுபவைகளை எவர்கள் அலட்சியப்படுத்தி இலேசு காண்பார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்கள்.
இப்படிச் சொல்வது யார் தெரியுமா?
மவ்லிது ஆதரவாளர்களால் வஹ்ஹாபிகள் என்று விமர்சிக்கப்படும் நாமல்ல; தமிழகத்தின் அனைத்து அரபுக் கல்லூரிகளிலும், இஸ்லாமியக் கொள்கை விளக்க நூல் என்று போதிக்கப்படும் ஷரஹ் பிக்ஹில் அக்பர் என்ற நூலில் அறிஞர் முல்லா அலீ காரி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அவர்களே ஒப்புக் கொண்ட நூலையாவது நம்பி இந்த மவ்லிதைத் தொலைக்கக் கூடாதா?
திருக்குர்ஆனை நீ ஓதக் கூடாதா என்றோ, அதிகமாய் அதனை ஓதி வரக் கூடாதா என்றோ ஒருவனிடம் சொல்லப்படும் போது அது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ, ஓதியது போதும்; இனி எனக்கு அது தேவை இல்லை என்றோ கூறுவானேயானால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காஃபிரே ஆவான் என்றும் அதே நூலில் முல்லா அலீ காரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பள்ளிவாசல்களின் புனிதத்தைப் பாழாக்குதல்
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
திருக்குர்ஆன்: 72:18
எந்தப் பள்ளிவாசல்களில் தன்னைத் தவிர வேறொருவரையும் அழைக்கக் கூடாது என்று அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிட்டிருக்கிறானோ, அவற்றில் இருந்து கொண்டு, யா ஹபீபீ யா முஹம்மது என்றும், யா முஹ்யித்தீனி என்றும், யா ஸாஹிபன் நாஹுரி என்றும், யா ஹஸன், யா ஹுஸைன் என்றும், யா ஹாஜா என்றும் அழைப்பதுடன் தொழ வருபவர்களுக்கும் இடையூறுகள் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஒலி பெருக்கிகளையும், அலறவிட்டு விடுகிறார்கள். அல்லாஹ்வை மட்டுமே அழைக்க வேண்டிய இடத்தில் அவனது அடியார்கள் அழைக்கப்படுவதும், தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் திருக்குர்ஆனைக் கூடச் சப்தமிட்டு ஓதக்கூடாது என்றிருக்க இந்தக் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருப்பதும் கொடுமைகள் அல்லவா? இவைகள் ஒழிக்கப்பட வேண்டியவைகளில்லையா?
சில சமயங்களில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், பள்ளிவாசல்களில் ஜமாஅத் (கூட்டுத்) தொழுகை நடந்து கொண்டிருக்கும் போதும் கூட நிறுத்தப்படாமல் ஒலிபெருக்கிகள் மூலம் இந்த மவ்லிதுக் கச்சேரிகள் மாத்திரம் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருக்கும்.
பள்ளிவாசலின் நிர்வாகிகள், ஊரின் முக்கியப் புள்ளிகள் போன்றோரின் வீடுகளில் நடைபெறும் மவ்லிதுக் கச்சேரிகளுக்கு தப்பித்தவறி அங்கு பணியாற்றும் ஆலிம்கள் போகவில்லை என்றால் ஏதோ இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றை விட்டுவிட்டதைப் போன்று தாம்தூம் என்று குதிப்பதும், அதற்காக அவருக்குச் சீட்டுக் கிழிப்பதும் இன்று சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன.
சில இடங்களில் தொழுகைகளுக்குச் சரியாக வராத ஆலிம்களைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதையும், மவ்லிதுக் கச்சேரிகளில் கலந்து கொள்ளாததை மட்டும் பெரிதுபடுத்தி விசாரிப்பதையும் நாம் பார்க்க முடிகின்றது.
மொத்தத்தில் கடமைகள் சாதாரணமானவை போன்றும், மார்க்கத்தில் ஒன்றுமே இல்லாதவை கடமைகளைப் போன்றும் மாறியதற்குக் காரணமான இந்த மவ்லிதுகள் தேவை தானா?
பிற சமயத்துக் கலாச்சாரம்
மவ்லிது, பாத்திஹாக்கள் ஓதப்படும் இடங்களில் வகைவகையான பதார்த்தங்கள், பழங்கள், பண்டங்கள், சீனி சர்க்கரை, சாம்பிராணி, பத்தி, வாசனைத் திரவியங்கள், மல்லிகை ரோஜா மலர்கள் என்று வரிசையாகப் படைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் அப்பப்பா கோவில்கள் கெட்டது போங்கள்!
பிற சமயத்து அன்பர்கள் தத்தமது மூர்த்திகளுக்கு முன்னால் அவற்றிற்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களையும், பிரசாதங்களையும் வரிசையாக அடுக்கி வைத்து படைத்து முடித்ததும், அவைகள் புனிதப் பொருட்களாகி விட்டதாகச் சொல்லி பக்தர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும், இவர்களின் இந்தச் செயலுக்கும் என்ன வித்தியாசம்?
ஓதி முடிக்கப்பட்டதும் அவற்றில் பரக்கத் இறங்கிவிட்டதாகச் சொல்லி தபர்ரூக், நார்சா, நேர்ச்சை, சீருணி போன்ற பல்வேறு பெயர்களில் அந்தப் பிரசாதங்களை வினியோகிப்பதும், அவற்றைப் பத்திரப்படுத்தி எடுத்துச் சென்று ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்தளித்து புளகாங்கிதமடைந்து போவதும், இடுப்பில் துண்டைக் கட்டாத குறையாக எழுந்து நின்று பக்திமேலீட்டால் கண்கள் சொருக அவற்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வதும் வேடிக்கை தான் போங்கள்! இந்த ஆச்சாரங்கள் அனைத்தும் பிற சமயத்து நண்பர்களுடையதல்லவா? அவற்றை நாம் பின்பற்றலாமா?
கூலிக்கு மாரடித்தல்
மவ்லிதுகளில் தான் எத்தனை வகைகள்? வழங்கப்படும் தட்சணைகளுக்கேற்றவாறு அவற்றில் தான் எத்தனை டெக்னிக்குகள்!
நடை மவ்லிது!
ஓட்ட மவ்லிது!
அசுர வேக மவ்லிது!
ஜெட் மவ்லிது!
ராக்கெட் மவ்லிது!
என்று வழங்கப்படும் கூலிக்கும், ஓதுபவருக்கு அன்றைக்கு இருக்கும் கிராக்கிக்கும் ஏற்ப அதன் வேகங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஒன்றே கால் ரூபாய்க்கு நடை மவ்லிதாக இருந்தது இருபத்தைந்து ரூபாய்க்கு அண்டை அயலில் வசிப்பவர்களின் உறக்கத்தையும் ஓதுபவர்களின் சுப்ஹுத் தொழுகையையும் கெடுக்கும் விடி மவ்லிதாக மாறி விடும் விந்தைகளைச் சொல்லி மாளாது.
தட்சணைகளிலும், தால்ச்சா தனிக்கறியின் சுவையிலும், களரிச் சோற்றிலும் மயங்கிக் கிடக்கும் சில ஆலிம்கள் இவற்றை மனப்பூர்வமாக ஆதரிப்பதுடன் இவற்றிற்காக வக்காலத்தும் வாங்குகின்றனர்.
தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்கும் கட்டணங்களும், விருந்துகளும் தரப்படாததைப் போன்று இவற்றிற்கும் கட்டணங்களோ, விருந்துகளோ கிடையாது என்றும், விரும்புபவர்கள் நன்மையை நாடி வந்து ஓதிவிட்டுச் செல்லலாம் என்றும் மக்கள் அனைவரும் ஒருமித்துச் சொன்னால் மவ்லிதுகள் ஓதுவது ஹராம் என்று கூற இப்படிப்பட்டவர்கள் தயங்க மாட்டார்கள்.
அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்
ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு மவ்லிது, பாத்திஹா, ஓதப் போகிறேன் பேர்வழி என்று இமாம்கள், மோதின்கள், லெப்பைகள், அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போன்றோர் செல்வதும், அதனால் பல்வேறு விபரீதங்கள் விளைவதும் நாம் அடிக்கடி பல இடங்களிலும் பார்த்தும், கேள்விப்பட்டும் வரும் உண்மைகள் தானே?
நாற்பது வயதிற்கு மேற்பட்ட இமாம்கள் தேவை என்றும், குடும்பத்தை அழைத்து வராதவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வதில்லை என்றும் நிர்வாகிகள் இன்று நிபந்தனைகள் விதிப்பதற்கு ஒரு சில இடங்களில் விபரீதங்கள் விளைந்தது தானே காரணம்?
அந்த விபரீதங்களுக்கு வழி வகுத்து விட்ட இந்த மவ்லிதுகளும், பாத்திஹாக்களும் தேவை தானா? ஆலிம்களே! ஆண்கள் இல்லாத அந்த வீடுகளுக்கு நாம் அழைக்கப்பட்டாலும் போவது முறை தானா?
صحيح البخاري
5232 – حدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، عن يزيد بن أبي حبيب، عن أبي الخير، عن عقبة بن عامر: أن رسول الله صلى الله عليه وسلم قال: «إياكم والدخول على النساء» فقال رجل من الأنصار: يا رسول الله، أفرأيت الحمو؟ قال: «الحمو الموت»
(அந்நியப்) பெண்கள் இருக்கும் வீடுகளில் நுழைவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என அண்ணலார் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! கணவனின் உறவினர்களைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? எனக் கேட்டார். கணவனின் உறவு என்பது (விளைவுகளைப் பொறுத்த வரை) மரணத்திற்குச் சமமானது (அதாவது தவறான வழிகளுக்கு இட்டுச் சென்று அழித்து விடும்) என அண்ணலார் அவருக்குப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5232
நபிகளாரின் மேற்சொன்ன அறிவுரைகள் நமக்குச் சிறந்த எச்சரிக்கைகளில்லையா? பணத்தை விட நமது மானம், மரியாதைகள் மிக மிக முக்கியமானவைகளில்லையா?
குர்ஆனுக்குச் சமமாக்குதல்
மவ்லிதுகள் ஓதுவதன் மூலம் அண்ணலாரையும், பெரியார்களையும் புகழ்வது தான் தங்களின் நோக்கம் என்று கூறும் இவர்களில் எத்தனை பேருக்கு அங்கே ஓதப்படும் கவிதைகளின் பொருள் தெரியும்?
மவ்லிதுக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்யும் வீட்டுக்காரர்களுக்கும், முறைக்காரர்களுக்கும், அவற்றின் பொருள் புரியுமா?
அல்லது கிடைக்கப் போகும் கூலிக்காக அவற்றை நீட்டி முழக்கி ஓதிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோருக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?
அல்லது ஓதி முடிக்கப்பட்டதும் விநியோகிக்கப்படவிருக்கும் நார்சாக்கள், சீருணிகளுக்காகக் காத்துக் கிடக்கும் மக்களுக்குத் தான் அவற்றின் பொருள் புரியுமா?
திருக்குர்ஆனையும், ஓதி வருமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்ற சில திக்ருகளையும் தவிர வேறு எதனையும் வெறுமனே படிப்பதினால் நன்மைகள் கிடைக்கப் போவதில்லை. திருக்குர்ஆனை பொருள் புரியாது படித்தாலும் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைகள் வீதம் கிடைக்கின்றன என்று நபிமொழிகள் அறிவிக்கின்றன.
سنن الترمذي
2910 – حدثنا محمد بن بشار حدثنا أبو بكر الحنفي حدثنا الضحاك بن عثمان عن أيوب بن موسى قال سمعت محمد بن كعب القرظي قال سمعت عبد الله بن مسعود يقول : قال رسول الله صلى الله عليه و سلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول آلم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف
திருக்குர்ஆனுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகளை இறைவன் பதிவு செய்கிறான்; அலிப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து, மீம் என்பது ஒரு எழுத்து என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: திர்மிதி 2835
வீண் விரயம்
தொழுவதில்லை; இஸ்லாத்தின் ஏனைய கடமைகளில் அறவே அக்கறை செலுத்துவதில்லை; ஆனால் மவ்லிது ஓதுவதில் மாத்திரம் இவர்கள் காட்டும் அக்கறையும் ஆர்வமும், கவனமும், ஓதப்பட வேண்டிய நாட்களைக் கவனித்து எண்ணி வரும் கரிசனமும் நம்மை மலைக்கச் செய்கின்றன.
எந்தப் பெரியவர்களைப் புகழ்வதற்காகவும், அவர்களின் ஆசி(?)யையும் அன்பையும் பெறுவதற்காகவும் இவற்றை நாங்கள் ஓதுகிறோம் எனச் சொல்கின்றார்களோ அந்தப் பெரியார்களே தமது வாழ்க்கையில் மிக வன்மையாகக் கண்டித்திருக்கின்ற வீண் விரயங்கள், ஆடம்பரங்கள், அனாச்சாரங்கள் ஆகிய அத்தனையும் அவர்களின் பெயர்களால் ஓதப்படும் மவ்லிது மஜ்லிஸ்களில் படாதபாடுபடுவதை நாம் பார்க்கிறோம்.
அலங்கார மேடைகள்! கண்ணைச் சிமிட்டும் வண்ண விளக்குகள்! இரவைப் பகலாக்கும் வெளிச்சங்கள்! மேற்கட்டு, மலர் ஜோடனைகள்! வண்ணக் காகிதங்களில் வகை வகையான வேலைப்பாடுகள்! ஒலி பெருக்கிச் சாதனங்கள்! அப்பப்பா?
ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர்.
அல்குர்ஆன் 17:26, 27
வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 6:141
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 7:31
என்பன போன்ற அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. நாம் தான் அந்தப் பெரியார்கள் மீது அன்பு வைத்து விட்டோமே நம்மை அந்த ஆண்டவன் என்ன செய்து விட முடியும்? என்ற இறுமாப்பு இவர்களுக்கு?
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 102:8
என்ற அல்லாஹ்வின் அறிவுறுத்தலையும் மறந்து விட்டு இவர்கள் அடிக்கும் கூத்துக்கு நாளை அல்லாஹ்வின் சந்நிதியில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வாக்கியங்களைச் சிதைத்தல்
தாம் விரும்பும் இராகங்களுக்கும், மெட்டுக்களுக்கும் ஏற்ப அந்தக் கவிதைகளை வளைத்தும், முறித்தும், உடைத்தும், சிதைத்தும் இவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கோ ஒரு முடிவே இல்லை. கவிதைகளை எழுதியவர்களே தமது கவிதைகளுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளைக் கண்டால் இவர்களை வாயாரச் சபிக்காமலிருக்க மாட்டார்கள்.
யாந – பீஸ – லாம – லைக்கும்
யார – ஸுல்ச – லாம – லைக்கும்
என்று இவர்கள் அதனை மென்று கடித்துக் குதறித் துப்புவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும். புதிய படப் பாடல்களின் மெட்டுக்களில் இவ்விடம் மவ்லிது ஓதுவதற்கு ஆட்கள் சப்ளை செய்யப்படும் என்று விளம்பரப் பலகை மாட்டாத குறை தான்.
எந்தக் குழுவினர் இனிய ராகங்களிலும், புதிய படப் பாடல்களின் மெட்டுக்களிலும் ஓதத் தெரிந்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மவுசு அதிகம்.
ரபீவுல் அவ்வல், ரபீவுல் ஆகிர், ஜமாதுல் ஆகிர், ரஜபு மாதங்கள் போன்ற மவ்லிது சீசன்கள் ஆரம்பமாகி விட்டால், கல்யாணம், கத்னா போன்ற வைபவங்களில் பைத்து சொல்ல அழைக்கப்பட்டு விட்டால், தை பிறந்ததும் நாதஸ்வரம் மேளம் வாசிப்பவர்களுக்கு ஏற்படும் கிராக்கியும், மதிப்பும் போல் இவர்களுக்கும் மதிப்பு உயர்ந்து விடும். பிறகென்ன வருமானத்திற்குக் கேட்கவா வேண்டும்? அது வரும் வழியைப் பற்றி இவர்களுக்கென்ன அக்கறை?
நான் பேசி வைத்திருந்த வீட்டில் அவன் போய் ஓதி விட்டு வந்து விட்டான்; நான் பேசிய கட்டணத்தை விட குறைந்த கட்டணம் பேசி ஓதிவிட்டு வந்து விட்டான் என்று உஞ்ச விருத்திப் பாப்பான்கள் போல் போட்டா போட்டிகளுக்கும், நடுத்தெருச் சண்டைகளுக்கும் குறைவே இல்லை.
மக்களுக்கு வழிகாட்டவும், அவர்களை அரசியல் ஆன்மீகம், பொருளாதாரம், சமூகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த முன் மாதிரிகளாக்கவும், படித்த தமது படிப்பைப் பயன்படுத்தக் கடமைப்பட்டவர்கள், இப்படிக் கீழ்த்தரமான காரியங்களுக்கும், உலக இன்பங்களுக்கும் அடகு வைத்துக் கொண்டு அலைந்தால் சமூகம் உருப்படுவது ஒரு புறமிருக்க இவர்கள் எப்படி உருப்படுவார்கள்? சிந்திக்க வேண்டாமா?
இந்தக் கொடுமைகளுக்கு எதிராக எவனாவது ஒருவன் தப்பித் தவறி வாய் திறந்து விட்டால் போதும். அவன் ஓநாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு அவற்றால் கீறிக் கிழித்துக் குதறப்படும் ஆட்டுக்குச் சமமாகி விடுவான்.
வஹ்ஹாபி, ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக்குக்காரன் என்பன போன்ற கணைகளால் துளைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு விடுவான். திட்டமிட்டு இருட்டடிப்பும் செய்யப்படுவான். எத்தனை காலம் தான் இவர்கள் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
மவ்லிதுகள் என்ற பெயரால் ஓதப்பட்டு வரும் கவிதைகளிலெல்லாம், இஸ்லாத்தின் ஆணிவேரான ஏகத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டமாக்கக் கூடியதும், திருக்குர்ஆனுக்கும், அண்ணலாரின் அமுத மொழிகள் பலவற்றிற்கும் நேர் எதிரான கருத்துக்கள் கொண்டதும், இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு படைத்த பாமரன் ஒருவனால் கூட சகித்துக் கொள்ள முடியாததுமான யா குத்பா என்ற கவிதையை எனது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன்.
யாகுத்பா
இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவராக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பவர்கள் ஈரான் நாட்டின் ஜீலான் என்ற குக்கிராமம் ஒன்றில் பிறந்து ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அடக்கமாகியிருக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) என்ற பெரியாராவார்.
இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் கதைகளையும், புளுகு மூட்டைகளையும் படிக்கும் போது இவர்களது அபிமானிகள் என்று சொல்லிக் கொண்ட சிலரால் இந்து மதத்தின் அவதார புருஷர்களுக்கு நிகராக இவர்கள் மதிக்கப்பட்டிருப்பதையும், இன்று வரை அவ்வாறே போற்றப்படுவதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் இவர்களது தலை சிறந்த படைப்புகளான ஃகுன்யத்துத் தாலிபீன், இவர்களின் சொற்பொழிவுத் தொகுப்புகளான ஃபுத்தூஹுல் ஃகைப், அல்ஃபத்ஹுர் ரப்பானீ போன்ற நூல்களைப் படிக்கும் போது இவர்களது கல்வியறிவையும், ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் பணியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தியாக உணர்வையும், மன்னாதி மன்னர்களையும் துச்சமாக மதித்து சத்தியத்தை அவர்கள் முன் எடுத்து வைத்த மனத் துணிவையும், இறையச்சத்தையும் கண்டு நம்மையறியாமல் இவர் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டு விடுகின்றது.
ஒருவரை எத்தகைய அடைமொழிகளால் அழைப்பதற்கு திருக்குர்ஆனிலும், அண்ணலாரின் அமுதமொழிகளிலும் சற்றேனும் ஆதாரமில்லையோ அத்தகைய அடைமொழியான குத்புல் அக்தாப் என்ற பெயரில் இவர்களின் அபிமானிகள் இவர்களை அழைக்கின்றார்கள்.
குத்புகளுக்கெல்லாம் குத்பு என்பது இதற்குப் பொருள்.
குத்பு என்ற அரபிச் சொல்லுக்கு அச்சாணி என்பது பொருள். ஒரு கோளமோ, சக்கரமோ அச்சாணியின்றி எப்படிச் சுழலாதோ அது போல் இவரில்லாமல் இவ்வுலகம் சுழலாது என்று பொருள் படும் வகையில் அந்த வார்த்தையை இவருக்குப் பயன்படுத்துகின்றனர்.
குத்புகளுக்கெல்லாம் குத்பு எனும் போது இவர்களில்லாமல் இவ்வுலகம் அணுவத்தனையும் இயங்காது என்ற கருத்தே உணரப்படுகின்றது.
ஒரு மனிதரால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது என்ற இந்தக் கருத்தை அல்லாஹ்வையும், அவனது வல்லமையையும் புரிந்து கொண்ட எவரும் பிறருக்குச் சூட்ட மாட்டார். முதலில் இந்தக் கவிதையின் பாட்டுடைத் தலைவரே தனக்கு அத்தகைய ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்.
ஏனெனில் தனது நல்லடியார்களில் பலரை சித்தீக் (உண்மை என்று நம்புபவர்)
சாலிஹ் (நல்லவர்)
ஷஹீது (உயிர்த்தியாகி)
வலீ (நேசர்)
அப்து (அடியார்)
அவ்வாப் (நம்மையே நோக்கி நின்றவர்)
ஹலீம் (பொறுமையாளர்)
ரஹீம் (இரக்கமுள்ளவர்)
ரவூஃப் (அன்பாளர்)
என்றெல்லாம் புகழும் இறைவன் யாரையும் குத்பு என்றோ, குத்புல் அக்தாப் என்றோ புகழ்ந்துரைக்கவில்லை.
அண்ணலாரும் தமது சமுதாயத்தவர்களில் யாரையும் இவ்வாறு புகழ்ந்துரைத்திடவில்லை. சில அரபி மொழி அகராதி நூல்களில் குத்பு என்ற வார்த்தைக்கு தலைவர் என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.
ஆனால் குணங்குடி மஸ்தான் என்பவர் அப்துல்காதிர் ஜீலானி அவர்களைப் புகழ்ந்து
அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்
அடக்கி விளையாட வல்லீர்
அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்
ஆட்டி விளையாட வல்லீர்
மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே
வைத்து விளையாட வல்லீர்
மண்ணகமும், விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்
மாட்டி விளையாட வல்லீர்
கண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டிக்
கலக்கி விளையாட வல்லீர்
கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்
கண்முன் வரு சித்தில்லையோ
நண்டளந் திடுநாழியாவனோ தேவரீர்
நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு
நாதன் முஹ்யித்தீனே!
என்று பாடியிருப்பதிலிருந்து வெறும் தலைவர் என்ற பொருளில் இவர்களின் அபிமானிகள் இவர்களைக் குத்பு என்று அழைக்கவில்லை. இவ்வையகமே சுழல்வது இவர்களால் தான் என்ற பொருளில் தான் இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது.
வானம் பூமியின் அச்சாணி
கவிதையின் முதல் அடி
يا قـطب أهل السما والأرض غوثهما
வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!
என்று துவங்குகிறது.
இதிலிருந்து தான் இக்கவிதையையே யா குத்பா – குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.
வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் (வானவர்கள்) என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே என்பது பொருளாகிறது. வானவர் தலைவர்களான ஜிப்ரீல் (அலை) மீக்காயில் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் அல்லவா?
அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில் நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ, அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா? இதுவல்ல அதன் பொருள் என்றால் அதற்கு என்ன தான் பொருள்? சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருவார்களா?
மகத்தான ரட்சகர்
ا غــوث الأعظم كل الدهر والحين
எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!
என்பது யாகுத்பாவின் மற்றொரு வரியாகும். எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூவி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது? மிகப் பெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஈசா (அலை) அவர்கள் தமது சமூகத்தவரின் குற்றங்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது,
மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன் (எனவும் அவர் கூறுவார்)
திருக்குர்ஆன்: 5:116,117,118
எனத் திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து ஒருவர் எவ்வளவு பெரிய மனிதராயிருப்பினும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் யாருக்கும் எதுவும் செய்து விடவோ, காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெகிறது.
இன்றளவும் உயிருடன் உள்ள தீர்க்கதரிசியின் நிலையே இதுவென்றால் அவர்களை விடத் தரத்தால் பலமடங்கு குறைந்த ஒருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்த பின்னர் பிறரது செயல்களுக்குப் பொறுப்பேற்கவோ, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திடவோ இயலாது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காண மாட்டேன் என்றும் கூறுவீராக
திருக்குர்ஆன்: 72:21,22
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன்: 7:188
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
திருக்குர்ஆன்: 35:13,14
என்பன போன்ற திருவசனங்கள் இறைவனல்லாத எவராக இருப்பினும், அவர்கள் வாழ்வு, சாவு முதல் அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்குட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்த விதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும், மறைவானவற்றை அறிந்திட எவராலும் இயலாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.
எல்லாக் காலங்களிலும், நேரங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே என்று மரணித்தவரை அழைத்திட எவ்வாறு ஒரு முஸ்லிம் மனந்துணிவான்?
இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும் அவ்வாறு பிரார்த்திக்கப்படுபவர் நபியாக ஆனாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்களும் இறைவனின் அடிமைகளே. ஒருக்காலும் அவர்கள் இரட்சகராக முடியவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தாலேயே எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே என்று இந்தக் கவிஞனும், இவனது அபிமானிகளும் அழைக்கத் துணிந்து விட்டனர்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
திருக்குர்ஆன்: 7:194
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.
திருக்குர்ஆன்: 7:197
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
திருக்குர்ஆன்: 22:73
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன்: 39:38
திருக்குர்ஆனின் இந்த வசனங்களையும், இது போன்ற கருத்தில் வருகின்ற ஏராளமான வசனங்களையும் மீண்டும் ஒரு முறை கவனியுங்கள்! இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாறாக யாகுத்பாவின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.
எவராக இருந்தாலும் அவரும் அல்லாஹ்வின் அடிமையே. அணுவத்தனையும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தங்களுக்கே கூட சுயமாக அவர்களால் உதவிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற போதனைகளையும் எல்லாக் காலங்களிலும் மகத்தான இரட்சகரே என்ற இந்தப் புலம்பலையும் ஒரு நேரத்தில் ஒருவன் எப்படி நம்ப முடியும்?
இந்த வரியை நம்பினால் அவன் இறை வசனங்களை மறுக்கிறான். இறை வசனங்களை நம்பினால் அவன் இந்த யாகுத்பாவை மறுக்க வேண்டும்.
மகத்தான இரட்சகரே என்று அழைப்பது ஒரு புறமிருக்கட்டும். சாதாரணமாக அவரது பெயரைச் சொல்லியாவது அழைக்கலாம்? என்றால் அதற்கும் கூட திருக்குர்ஆன் அனுமதி தரவில்லை.
சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பெரியார். அவர் மரணித்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து கொண்டு அழைத்தால் அதை அவரால் செவியுறவே முடியாது.
இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
திருக்குர்ஆன்: 30:52
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
திருக்குர்ஆன்: 35:22
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன்: 16:20,21
இறைவனின் இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகு, என்றோ மரணித்து விட்ட அப்துல் காதிர் (ரஹ்) அவர்கள் கூப்பாடுகளைக் கேட்பார்கள் என்று நம்புவது இந்த வசனங்களை மறுத்ததாக ஆகாதா?
அனைத்து ஆற்றலும் கொண்டவர்
أعطاك من قدرة ما شئت من مستطاع
فأنـت مـقتدر في خـلقه ومـطاع
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்
என்பது இதன் பொருள்:
ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்த போதும் அவர் விரும்பிய ஆற்றல் அத்தனையும் இறைவன் அவருக்கு வழங்கியதில்லை.
மனித ஆற்றல் ஒரு வரையறைக்கு உட்பட்டது தானே தவிர இறைவனுடைய ஆற்றலைப் போன்று வரையறைக்கு அப்பாற்பட்டது அல்ல. மேலும் விருப்பங்கள் அனைத்தையும் இறைவன் யாருக்கும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.
தான் எண்ணிய அனைத்தையுமே சாதிப்பவன் என்ற சிறப்புத் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. இவையனைத்தும் திருக்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து பெறப்படும் இஸ்லாமிய உண்மைகளும் அதன் கொள்கைகளுமாகும். இந்த உண்மைகளுக்கு முரணானதாகவே மேற்கூறப்பட்ட பாடல் அடி இயற்றப்பட்டிருக்கிறது.
மிகப்பெரும் இறைத் தூதர்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்களின் மகன் தனது தந்தையின் வழியைப் பின்பற்றவில்லை. நிராகரிப்பவர்களில் ஒருவனாகவே இருந்தான். நிராகரிப்பவர்களை அழிப்பதற்காக இறைவன் மாபெரும் வெள்ளப் பிரளயத்தைத் தோற்றுவித்தான். இறைவனால் தெரிவிக்கப்பட்டதற்கேற்ப நூஹ் நபி அவர்கள் ஒரு கப்பலைச் செய்து அதில் ஆதரவாளர்களுடன் பயணமானார்கள்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். .ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.
திருக்குர்ஆன்: 11:42,43
நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார்.
திருக்குர்ஆன்: 11:45
என்று பிள்ளைப் பாசத்தால் காப்பாற்றும்படி கதறினார். அதற்கு இறைவன், நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லாதது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான்.
திருக்குர்ஆன்: 11:46
இதே போன்று இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் தந்தை நேர்வழிக்கு வர வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் விரும்பிய இந்தக் காரியம் கைகூடவில்லை என்பதைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன்: 6:74
என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்? என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!. என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன். என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான். என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன் (என்றார்.)
திருக்குர்ஆன்: 19:42-45
தன் தந்தை நேரான வழியை அடைய வேண்டுமென்பதில் இப்ராஹீம் நபிக்கு எவ்வளவு ஆர்வமும், அக்கரையும் இருந்தது என்பதை இந்த வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த விருப்பம் நிறைவேறியதா? அந்த ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினானா? நிச்சயமாக இல்லை. அவர்களால் தம் தந்தையை நேர்வழிக்குக் கொண்டுவர இயலவே இல்லை. அவர்களின் தந்தை அளித்த மறுமொழி இதை நமக்கு விளக்குகின்றது.
இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார்.
(அல்குர்ஆன்: 19:46)
இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பிய ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அப்துல்காதிர் அவர்களுக்கு விரும்பிய ஆற்றலை எல்லாம் அல்லாஹ் வழங்கி விட்டான் என்று இந்தக் கவிஞன் கூறுகிறான்.
صحيح البخاري
1360 – حدثنا إسحاق، أخبرنا يعقوب بن إبراهيم، قال: حدثني أبي، عن صالح، عن ابن شهاب، قال: أخبرني سعيد بن المسيب، عن أبيه أنه أخبره: أنه لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم، فوجد عنده أبا جهل بن هشام، وعبد الله بن أبي أمية بن المغيرة، قال رسول الله صلى الله عليه وسلم لأبي طالب: " يا عم، قل: لا إله إلا الله، كلمة أشهد لك بها عند الله " فقال أبو جهل، وعبد الله بن أبي أمية: يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه، ويعودان بتلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمهم: هو على ملة عبد المطلب، وأبى أن يقول: لا إله إلا الله، فقال رسول الله صلى الله عليه وسلم: «أما والله لأستغفرن لك ما لم أنه عنك» فأنزل الله تعالى فيه: {ما كان للنبي} [التوبة: 113] الآية
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் நேர்வழி பெற வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர் மரணப் படுக்கையில் கிடக்கும் சமயத்தில் போதித்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கலலையுற்ற போது (நபியே) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (28:56) என்ற வசனம் இறங்கியது.
நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை. அப்துல் காதர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் உயர்ந்தவர் என்று இந்தக் கவிஞன் கருதுகின்றான்.
இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:90-93
நபியவர்களுக்கு வழங்கப்படாத ஆற்றல் வேறு ஒருவருக்கு இருப்பதாக யார் நம்பினாலும் அவன் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவனாகவே கருதப்படுவான்.
நபியவர்களின் தரத்தையும், தகுதியையும் குறைக்க வேண்டுமென்பதற்காக யூதர்களால் தான் இது புனையப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இந்தக் கவிஞர்களின் நோக்கம் அது தான் என்பதைக் கடைசி வரியில் இந்தக் கவிஞனே பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவும் செய்கிறான்.
நபியவர்களின் மதிப்பைக் குறைத்தல்
صلى الإله مدى ما الغوث الأعظم قام
عـلى محمـد الــعالي لخير مـقام
என்று கவிதையை இவன் முடிக்கிறான்.
கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!
என்பது இதன் கருத்து,
நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால் நபியை உரிய விதத்தில் மதித்திருக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்கிறான்.
நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இது போன்ற கவிதைகளின் உண்மையான நோக்கம்.
அப்துல் காதிர் ஜீலானிக்கு வந்த வஹீ
وقـد أتـاك خـطاب الله مـستمعـا
يا غـوث الأعـظم كن بالقرب مجتمعا
أنـت الـخليفة لي فى الـكون ملتمعا
سـميت باسـم عـظيم محيى الـدين
காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.
என்பது இந்த நான்கு அடிகளுக்கும் பொருள். இந்த நான்கு வரிகளில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.
* அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.
* அப்துல் காதிர் (கவ்ஸுல் அஃலமாக) மகத்தான இரட்சகராக இருக்கிறார்.
* மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை மனிதர்கள் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவர்களுக்குச் சூட்டினான்.
* மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.
* அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுக்கு கலீஃபாவாக இருக்கிறார்.
* இவைகளை அல்லாஹ்வே அவர்களை நோக்கிக் கூறினான்.
இவ்வளவு கருத்துக்களையும் இந்தக் கவிதை வரிகள் மறைமுகமாக அல்ல; தெளிவாகவே சொல்கின்றன.
இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளன. இதில் எந்தக் கருத்துமே ஏற்புடையதல்ல.
அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்மும் இதை நம்ப மாட்டான். நபிமார்களின் வருகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு நிறைவுபடுத்தி விட்டதாக இறைவன் பிரகடனம் செய்கிறான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
திருக்குர்ஆன் 5:3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்றபின் வேறு எவருடனும் இறைவன் எதற்காகப் பேச வேண்டும்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே? உமருடைய நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற உயர் அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிலாகித்துக் கூறப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட உரையாடாத இறைவன் அவர்களின் தரத்தை அண்ணாந்து பார்க்கும் நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான்; நேரடியாகப் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?
மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்றும் தனக்கு வஹீ வருகிறது என்றும் உளறிய போது தனக்கு வஹீ வருகின்றது என்று சொன்னவனையும், அவனது கூற்றை நம்பியவர்களையும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்கள்; காஃபிர்கள் என்று பத்வா அளித்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?
அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று பத்வா அளிக்காததோடு தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லரைக்காக வீடுகளில் போய் ஓதிவிட்டு வரவும் எப்படித் துணிந்தார்கள்?
யா குத்பாவை ஆதரிப்பவர்களுக்கும், காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இந்த நச்சுக் கருத்துக் கூட இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தோன்றாமல் போனது ஏன்?
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உரையாடல் அல்லாஹ்வுக்கும் அப்துல்காதிர் ஜீலானிக்கும் நடந்ததாக இந்தக் கவிதையை எழுதியவன் கூறுகிறான். இவ்விருவருக்கும் இரகசியமாக நடந்த இந்த உரையாடலை மூன்றாம் நபராகிய இந்தக் கவிஞன் அறிய வேண்டுமானால் அது எப்படிச் சாத்தியமாகும்?
உரையாடிய அல்லாஹ் இதைச் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி சொல்லியிருக்க வேண்டும்; தனது நூல்களில் எழுதி வைத்திருக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வும் சொல்லவில்லை; அப்துல் காதிர் ஜீலானியும் சொல்லவில்லை என்றால் இந்தக் கவிஞனுக்கு இது எப்படித் தெரிந்தது? இவ்வளவு பைத்தியக்காரத்தனமான கருத்தை எப்படி ஒரு சமுதாயம் நீண்ட காலமாக அனுமதித்து வருகிறது?
அல்லாஹ் அவரோடு பேசினான் என்று சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். அவன் என்ன பேசினான் என்பதைக் கவனித்தால் அதை விடவும் பிதற்றலாகவல்லவா உள்ளது?
மகத்தான இரட்சகரே என்று இறைவன் பேசினானாம்!
மகத்தான இரட்சகரே! என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை இக்கவிஞன் உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ் மகத்தான இரட்சகர் எனக் கூறவில்லை.
திருமறை நெடுகிலும் தன்னை மட்டுமே மகத்தான இரட்சகனாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்லாஹ் தன்னுடைய அடிமையை மகத்தான இரட்சகரே என்று அழைத்தான் என்றால் எந்தப் புத்திசாலி தான் இதை நம்ப முடியும்?
இவரை நபியாக ஆக்கியதோடு நின்று விடாமல் அல்லாஹ்வாக அல்லவா ஆக்கி விடுகிறான் இந்தக் கவிஞன்? அல்லாஹ்வே இவரை மகத்தான இரட்சகர் என்று அழைத்து விட்டதாகக் கூறும் போது அல்லாஹ்வுக்கு மேலானவராகவல்லவா இவர் சித்தரிக்கப்படுகின்றார்? சராசரி முஸ்லிமுடைய இரத்தமும் கொதிக்கக்கூடிய இந்த விஷக் கருத்தை பக்திப் பரவசத்துடன் எப்படித் தான் ஒதி வருகின்றார்களோ? மக்களுக்கு வேண்டுமானால் இதன் அர்த்தம் தெரியாமலிருக்கலாம். ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்ற மவ்லவிகள், அதற்கு மேலும் கற்ற பாஸில்கள் இதற்கு வெண்சாமரம் வீசுவது தான் விந்தையாக உள்ளது.
இந்த நச்சுக் கருத்து தவறு என்பதற்குக் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் கூட ஆதாரம் தேவை இல்லை. அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் எழுத்துக்களும், அவர்களின் பேச்சுக்களும் இதைப் பொய்யெனப் பறை சாற்றுகின்றன. இதை எழுதியவன் மடையன் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அதைப் பார்ப்போம்.
அப்துல் காதில் ஜீலானி அவர்கள் தம் கையால் எழுதிய குன்யதுத் தாபீன் அவர்கள் சொற்பொழிவுத் தொகுப்புகளாகிய புதூஹுல் கைப், அல்பதஹுர் ரப்பானி ஆகிய நூல்களில் இவற்றைப் பரவலாகக் காண முடியும்.
إذا ركنت إلى غيره فقد أشركت
இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்து விட்டாய்.
என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஃபுதூஹுல் கைப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
لا تشك من الخالق إلى الخلق بل أشك إليه هو الذي يقدر وأما غيره فلا
படைத்தவனை விடுத்து படைக்கப்பட்டவர்களிடம் நீ முறையிடாதே! அல்லாஹ் தான் (அனைத்திற்கும்) சக்தி பெற்றவன். மற்றவர்களுக்கோ எந்தச் சக்தியுமில்லை.
என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியதாக அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய அல்ஃபத்ஹுர் ரப்பானியில் இடம் பெற்றுள்ளது.
أجيبوني فإني داعي الله عز وجل أدعوكم إلى بابه وطاعته لا أدعوكم إلى نفسي المنافق ليس يدعو الخلق إلى الله عز وجل هو داع إلى نفسه
என் சொல்லைக் கேளுங்கள்! நான் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவன். அவனுக்கு வழிப்பட்டு நடப்பதற்கும், அவனது வாசலுக்கும் தான் உங்களை நான் அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. மக்களை அல்லாஹ்வின் பால் அழைக்காமல் தன் பக்கம் அழைப்பவன் முனாஃபிக் (எனும் வேஷதாரி) ஆவான்
என்பதும் அவர்களின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும். மேற்கூறிய அதே நூலில் இது இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வைத் தவிர உதவுபவன் எவனுமில்லை
لا معين إلا الله
என்றும்
به يكشف كل عمة وبلاء
அவன் மூலமே எல்லாக் கவலைகளும், சோதனைகளும் விலகும்
என்றும் தம் கைப்பட எழுதிய குன்யதுத் தாபீன் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
استوصى عبد الوهاب والده الشيخ رضي الله عنه في مرض موته فقال رضي الله عنه عليك بتقوى الله وطاعته ولا تخف أحدا ولا ترجه وكل الحوائج كلها إلى الله عز وجل ولا تعتمد إلا عليه سبحانه التوحيد التوحيد وجماع الكل التوحيد
வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத் தவிர எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு! அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்!
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய புதூஹுல் கைப் நூலில் இது இடம் பெற்றுள்ளது. அல்ஃபத்ஹுர் ரப்பானியிலும் ஏறக்குறைய இதே கருத்து இடம் பெற்றுள்ளது.
لا محيص لمخلوق من القدر المقدور الذي خط في لوح مستور وأن الخلائق لو جهدوا أن ينفعوا المرء بما لم يقضه الله تعالى لم يقدروا عليه ولو جهدوا أن يضروه بما لم يقضه الله لم يستطيعوا
விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெற்றிருக்கவில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தி விட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவை சக்தி பெறாது
என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது குன்யதுத் தாலீபீன் நூலில் வரைந்து உள்ளார்கள்.
أنه قسم الأرزاق وقدره فلا يسدها ساد ولا يمنعها مانع لا زائدها ينقص ولا ناقصها يزيد ولا ناعمها يخشن ولا خشنها ينعم
இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்து விட்டான்; அதைத் தடுப்பவன் எவனும் இல்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை, குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப் போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப் போவதில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப் போவதுமில்லை
என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.
ومن ذلك أن الإمام يعلم كل شيئ ما كان وما يكون
ஒரு பெரியார் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும் வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும்
என அந்தப் பெரியார் தமது குன்யதுத் தாலீபீனில் வரைந்துள்ளார்கள்.
يكره من الألقاب والأسماء ما يوازي أسماء الله
அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும், பட்டப்பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும்.
எனவும் அவர்கள் தமது குன்யதுத் தாலிபீனில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூடாது என்று தீர்ப்பளித்துள்ள கவ்துல் அஃலம் மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டுபவர்களின் நிலையை என்னவென்பது?
أن الأموات يرجعون إلى الدنيا
இறந்தவர்கள் இந்த உலகத்துக்குத் திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிஜியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும்
என்றும் அந்த பெரியார் தமது குன்யதுத் தாலீபீன் நூலில் தம் கையால் வரைந்துள்ளார்கள்.
அறிவுடைய மக்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்தப் போதனை போதுமானதாகும். அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் எல்லாத் தேவைகளையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவராகத் திகழ்ந்த அப்பெரியாரின் பெயரால் எவ்வளவு பெரிய பொய்களைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக உணர முடியும்.
قد قمت بالصدق والإخلاص والزهـد
والإجـتهاد وفي الـوعـد والـعهـد
فكل أهـل التـقى والزهـد والجهـد
يـدعوك يا غـوث الأعظم محيي الدين
உண்மை உளத்தூய்மை, பற்றற்ற நிலை (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகியவற்றைக் கைக்கொள்வதில் தாங்கள் உறுதியாய் நின்றீர்கள்; வாக்குறுதிகளையும், உடன்பாடுகளையும் நிறைவேற்றுபவராய்த் திகழ்ந்தீர்கள். எனவே முஹ்யித்தீன் அவர்களே! இறையச்சம், பற்றற்ற நிலை, (வணக்க வழிபாடுகளில்) அருமுயற்சி ஆகிய பண்புகளையுடையோர் அனைவரும் தங்களை யா கவ்ஸல் அஃலம் எங்களின் மகத்தான இரட்சகரே என்று அழைக்கின்றனர் என்கிறார்.
இறையச்சமும், வணக்க வழிபாடுகளில் ஆர்வமுமுடைய யாராவது இறைவனைத் தவிர வேறு யாரையும், காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே என அழைக்கத் துணிவார்களா என்ன?
இருட்டு திக்ர்
ومـن يـنادي اسمـي ألـفا بخلـوته
عـزمـا بـهمتـه صـرما لـغفوته
أجـبته مـسرعا مـن أجـل دعوتـه
فالـيدع يا عـبد الـقادر محيي الدين
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன் எனவே ஓ! அப்துல் காதிர் முஹ்யித்தீனே! என்ற அவர் (என்னை) அழைக்கட்டும் (என்றும் தாங்கள் கூறினீர்கள்)
بـعد الصـلاة اثنتي عـشرة من ركعة
مـع الفـواتـح والإخلاص بالخضعة
يا غـوث الأعـظم عبد القادر السرعة
يـا سيـدي احـضرني يا محيي الدين
சூரத்துல் பாத்திஹாவும், சூரத்துல் இக்லாஸும் ஓதி உள்ளச்சப்பாட்டுடன் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுத பின்னர் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே! அப்துல் காதிர் ஜீலானி அவர்களே! விரைந்து வாரும் என் தலைவரே! என்னிடம் ஆஜராகும். ஓ! முஹ்யித்தீனே! என்று அவர்கள் என்னை அழைக்கட்டும் (என்றும் கூறினீர்கள்)
என்று அந்த மாமேதை மீது மாபெரும் களங்கத்தையும், இட்டுக்கட்டையும் சுமத்தியிருக்கிறான் இந்தக் கவிஞன். இறைவனல்லாதவர்களைத் தமது இன்னல்களை நீக்குமாறும், துன்பங்களை அகற்றுமாறும், உதவிகள் புரியுமாறும் அழைப்பதற்கு திருக்குர்ஆன், நபிமொழிகளில் எங்காவது ஆதாரமுண்டா? அவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவனும் ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளனாக இருக்க முடியுமா?
இறைவனுக்கு இணை கற்பிக்கும் இந்த மன்னிக்க முடியாத மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு காலமெல்லாம் ஏகத்துவத்தை நிலைநிறுத்திடும் அறப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பிறருக்குக் கட்டளையிட்டிருப்பார்களா?
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!
திருக்குர்ஆன் 7:194
அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.
திருக்குர்ஆன் 7:197
அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
திருக்குர்ஆன் 35:13,14
அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:20,21
நமக்கு உதவிகள் செய்யவும், நமது துன்பங்களை நீக்கவும் இறைவன் ஒருவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்பதற்கும், அவனல்லாத யாருக்கும் நமது அழைப்பைச் செவியேற்று ஆவண செய்திடவோ நமது பிரார்த்தனைகளை அங்கீகரிக்கவோ அணுவத்தனை அதிகாரமுமில்லை என்பதற்கும் இந்த இறைவசனங்கள் அனைத்தும் சிறந்த சான்றுகளாகும்.
இந்த இறை வசனங்களுக்கு நேர் எதிராக உங்கள் துன்பங்களை அகற்றிடவும், தேவைகளை நிறைவேற்றிடவும், அப்துல் காதிர் ஜீலானி அவர்களே எதிர் வந்து இன்னல் தீரும் என்று என்னையே அழையுங்கள். நான் உங்கள் அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன். எதிர் வந்து இன்னல் தீர்க்கிறேன் என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறியிருப்பார்களா? இது அவர்கள் மீது கட்டி விடப்பட்டிருக்கும் எவ்வளவு பெரிய இட்டுக்கட்டு?
இஸ்லாமியக் கொள்கைப்படி இறைவன் எண்ணிக்கையால் மட்டும் ஒருவனல்ல; தனது பண்புகளிலும் அவனைப் போன்ற இன்னொருவர் இல்லாத அளவுக்குத் தனித்துவமானவன்.
எனவே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றார்கள் என்று நம்புவது மாத்திரம் இறைவனுக்கு இணை கற்பிக்கும் மிகப் பெரும் குற்றமல்ல; அவனது பண்புகளைப் போன்ற பண்புகள் இன்னொருவரிடம் இருப்பதாக நம்புவதும் கூட இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியாத மிகப்பெரும் குற்றம் தான்.
இந்த மாபெரும் குற்றத்தைச் செய்யுமாறு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கூறினார்கள் என்று இட்டுக் கட்டிச் சொல்லியிருப்பது எவ்வளவு பெரிய தவறு? மார்க்கத்தோடு விளையாடும் இவர்கள் மறுமை நாளில் இதற்கெல்லாம் இறைவனிடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
குர்ஆன், ஹதீஸ் அடிப்படைகளையே இந்தக் கவிதை வரிகள் தகர்த்தெறிவதுடன், சுன்னத் ஜமாஅத் எனத் தங்களைக் கூறிக் கொள்வோர் எவற்றைச் சட்ட நூல்கள் என நம்பி இருக்கிறார்களோ அந்த நூல்களிலும் கூட இது போன்ற நம்பிக்கை இறைவனுக்கு இணைவைத்தல் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றனர். அவர்களே ஏற்றுக் கொண்ட அந்த நூல்களை நம்பியாவது இதை விட்டொழிப்பார்களா?
சுன்னத் ஜமாஅத் என்ற தம்மைக் கூறிக் கொள்வோரால் பெரிதும் மதிக்கப்படும் முஹம்மது அப்துல் ஹை லக்னவீ அவர்களால் வழங்கப்பட்ட பத்வாக்கள் தொகுப்பு (மஜ்மவுல் ஃபதாவா) வில் இடம் பெறும் தீர்ப்பு வருமாறு:
கேள்வி எண்:300: வலிமார்கள் என்ற இறை நேசர்கள் அருகிலிருந்தோ, தொலைவிலிருந்தோ, தம்மை அழைப்பவர்களின் அழைப்பைச் செவியுறுகிறார்கள்; அவ்வாறு தான் அழைக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள் என்று நம்பி, தம்முன்னே இருக்கும் ஒருவனை அழைப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளால் அவர்களை அழைத்து அவர்களிடம் உதவி கோருவதுடன், கால்நடைகளை அவர்களுக்காக நேர்ச்சை செய்து விட்டேன் என்று குறிப்பிடும் ஒரு மனிதன் பற்றித் தங்களின் கருத்து என்ன? தெளிவுபடுத்துங்கள்; இறைவனிடம் கைமாறு வழங்கப்படுவீர்.
பதில்: இம்மனிதன் கொள்கை கெட்டவன். இவனிடம் குஃப்ர் என்ற இறை நிராகரிப்புத் தன்மை கூட இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில் வலிமார்கள் (செவியுற முடியாத) தொலைவிலிருக்கும் நிலையிலும் (அவர்களை அழைப்பவர் குரலைச்) செவியுறுகிறார்கள் என்பது ஆதாரமற்ற நிரூபணமில்லாத விஷயமாகும். அனைத்துப் பிரச்சனைகளையும், முக்காலங்களையும் பற்றிய பொதுவான ஞானம் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. மேலும், எவர்கள் தமது குருமார்களின் ஆன்மாக்கள் (தமது அழைப்பை ஏற்று) வருகை தருகின்றன. (தமது அழைப்பைப்) புரிந்து கொள்கின்றன என்று சொல்கின்றார்களோ அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிர்களாகி விட்டார்கள். எவன் அல்லாஹ்வின் சாட்சியாகவும், அவனது திருத்தூதரின் சாட்சியாகவும் என்று கூறி மணமுடித்துக் கொள்கிறானோ அவனும் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட காஃபிராகவே ஆகி விட்டான். ஏனெனில் இதன் மூலம் அவன் (இறைவனால் அறிவிக்கப்படாது எல்லா மறைவானவற்றையும் திருத்தூதர் தாமே சுயமாக) அறிந்து கொள்கிறார்கள் என்ற நம்பி விட்டான். அவ்வாறு நம்புவது அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானதை அறிவேன் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:50
என்ற இறை வசனத்திற்கு முரணானது என்று ஃபதாவா பஜ்ஜிய்யா என்ற மார்க்கத் தீர்ப்புகளின் தொகுப்பு நூலில் அந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்கள். அல்பஹ்ருர் ராயிக் அத்துர்ருல் முஃக்தார் போன்ற சட்ட நூல்களிலும், ஏனைய சட்ட நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கேற்ப இறைவனல்லாதவர்களுக்காக நேர்ச்சைகள் செய்வது ஹராம். தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
(நூல்: மஜ்மவுல் ஃபதாவா , ஆசிரியர்: முஹம்மது அப்துல்ஹை, லக்னவி பக்கம் 361)
இது ஷிர்க் என்ற இணைகற்பிக்கும் பெரும் பாவமில்லையா? என்று அவர்களிடம் கேட்டால் திருக்குர்ஆனில் அவ்வாறு கண்டிக்கப்பட்டிருப்பது பிற சமயத்து தெய்வங்களான சிலைகள் போன்றவற்றை அழைப்பவர்களைத் தான். நாதாக்களையும், நல்லடியார்களையும் பிரர்த்தித்து அழைப்பதையோ, அவர்களை எதிர் வந்து இன்னல் தீர்க்குமாறு கோருபவர்களையோ அல்ல என்று திருக்குர்ஆனைப் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்றவர்களாகப் பிதற்றுகிறார்கள்.
மக்கத்து காஃபிர்களின் கொள்கை எதுவாக அமைந்திருந்ததோ அதனையே இவர்களும் கூறி தங்களின் கொள்கையை நியாயப்படுத்த முயல்கிறார்கள்.
மக்காவில் வாழ்ந்த காஃபிர்களின் கடவுள் கொள்கை எத்தகையதாக அமைந்திருந்தது? என்பதை அறிந்து கொண்டால் தான் இவர்களின் கொள்கைகளுக்கும், மக்கத்து காஃபிர்களின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவுமே கிடையாது என்பதை உணர முடியும்.
மக்கத்து காஃபிர்கள் தங்களை இப்ராஹீம் நபியின் வழியில் நடப்பவர்கள் என்றே நம்பினர். இப்ராஹீம் நபியையும், இஸ்மாயீல் நபியையும் மதிக்கின்றோம் என்ற பெயரால் அவர்களையும், மற்றவர்களையும் வழிபட்டு வந்தனர்.
صحيح البخاري
1601 – حدثنا أبو معمر، حدثنا عبد الوارث، حدثنا أيوب، حدثنا عكرمة، عن ابن عباس رضي الله عنهما قال: إن رسول الله صلى الله عليه وسلم لما قدم أبى أن يدخل البيت وفيه الآلهة، فأمر بها فأخرجت، فأخرجوا صورة إبراهيم، وإسماعيل في أيديهما الأزلام، فقال رسول الله صلى الله عليه وسلم: «قاتلهم الله، أما والله لقد علموا أنهما لم يستقسما بها قط». فدخل البيت، فكبر في نواحيه، ولم يصل فيه
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் பிரவேசித்த போது அங்கே இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகியோரின் உருவச் சிலைகளைக் கண்டார்கள். அவற்றை அப்புறப்படுத்திய பிறகே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1601, 3351, 3352, 4289
இன்றைய மக்கள் கொண்டாடுகின்ற பெரியார்களை விடவும் பல்லாயிரம் மடங்கு இப்ராஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் உயர்வானவர்களில்லையா?
صحيح البخاري
435 – حدثنا أبو اليمان، قال: أخبرنا شعيب، عن الزهري، أخبرني عبيد الله بن عبد الله بن عتبة، أن عائشة، وعبد الله بن عباس، قالا: لما نزل برسول الله صلى الله عليه وسلم طفق يطرح خميصة له على وجهه، فإذا اغتم بها كشفها عن وجهه، فقال وهو كذلك: «لعنة الله على اليهود والنصارى، اتخذوا قبور أنبيائهم مساجد» ي
யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
சிலைகளை, தேவதைகளை வணங்கியவர்களை இங்கே நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிடவில்லை. மாறாக நபிமார்களையும், அவர்களது அடக்க ஸ்தலங்களையும் வணக்க ஸ்தலங்களாகக் கருதுவதைத் தான் கண்டிக்கின்றார்கள்.
சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; நல்லடியார்களையும் அவர்களது சமாதிகளையும் வணங்கலாம் என்ற இவர்களின் கூற்று நியாயமற்றது என்பதை மேற்கண்ட சான்றுகள் கூறுகின்றன.
மக்கத்துக் காஃபிர்கள், யாகுத்பா பக்தர்கள் அளவுக்குக் கூட கடவுள் தன்மைகளைப் பெரியார்களுக்கு வழங்கவில்லை.
வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக!
திருக்குர்ஆன் 10:31
பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!) என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:84,85
ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்? எனக் கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா;? என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:86,87
பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!) என்று கேட்பீராக! அல்லாஹ்வே என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்? என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 23:88,89
வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?
திருக்குர்ஆன் 29:61
வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
திருக்குர்ஆன் 29:63
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 31:25
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 39:38
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 43:9
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
திருக்குர்ஆன் 43:87
மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள்; அவனது வல்லமையைப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனங்கள் சந்தேகத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
பெரியார்கள், நல்லடியார்கள் பற்றி மக்கத்துக் காஃபிர்களின் அதிகபட்ச மரியாதை எத்தகையதாக இருந்தது என்பதையும் அல்லாஹ் விளக்குகின்றான்.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:18
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 39:3
மக்கத்துக் காஃபிர்களின் கொள்கையை விடவும் மோசமான இந்த நம்பிக்கையின் பால் மக்களை அழைக்கும் இந்தக் கவிதையை இனி மேல் பாடலாமா? என்பதைச் சிந்தியுங்கள்!
அல்லாஹ்வின் படைப்புக்களிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றிக் கூட இப்படியெல்லாம் எவரும் நம்பி விடக் கூடாது என்பதால் இறைவன் நபியவர்களைப் பின்வருமாறு கூறும்படிக் கட்டளையிடுகிறான்.
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:26
என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:15
அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 6:50
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 7:188
பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தினால் இஸ்லாத்தை ஏற்பதாக காஃபிர்கள் கேட்டுக் கொண்ட போது
என் இறைவன் மிகவும் தூய்மையானவன். நான் மனிதனாகவும், தூதராகவும் தான் இருக்கிறேன் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:93
என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 46:9
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனது வல்லமையில் எந்தப் பங்கையும் பெற்றிருக்கவில்லை என்பதை இதை விடத் தெளிவாக எவரும் சொல்ல முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் வழங்காத வல்லமைகளையும், ஆற்றல்களையும் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு இறைவன் வழங்கி விட்டதாகக் கூறும் இந்தக் கதைகளை இனியும் பாடலாமா?
அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக! இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
திருக்குர்ஆன் 17:56,57
இந்த வசனத்தில் எவர்களை நீங்கள் உங்களின் இன்னல்களை அகற்றிடும்படி அழைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களால் உங்களின் இன்னல்களை அகற்றிடவோ, உதவிகள் செய்திடவோ இயலாது என்ற கருத்து திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் நீங்கள் உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் அந்த ஏந்தலர்களே தமது இறைவனை நெருங்கிட முயற்சித்தவர்களாகவும், அவனது அருளை எதிர்பார்த்தவர்களாகவும், அவனது தண்டனையை அஞ்சியவர்களாகவுமே வாழ்ந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
வேறு சிலரோ நாம் உலகவாழ்வில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதையும், கைமாற்று, கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வதையும் சுட்டிக்காட்டி, இறைவனிடம் தான் உதவி கேட்க வேண்டுமென்றால், பின்னர் ஏன் மற்றவர்களிடம் கைமாற்று கேட்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறீர்கள் என்று குட்டையைக் குழப்புகிறார்கள்.
உலக வாழ்வில் செய்து கொள்ளப்படும் பரஸ்பர உதவிகளை நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் என்று இறைவனே தமது திருமறையில் அனுமதித்திருக்கிறான்.
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
திருக்குர்ஆன் 5:2
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதாகவும், இறைவனாலேயே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.
இன்று எனக்கு ஒரு உதவி செய்தவருக்கு நாளை நான் ஒரு உதவி செய்திட நேர்ந்திடலாம். இன்று எனக்கு கைமாற்றுத் தந்து உதவியவருக்கு நாளைக்கு என்னிடம் கைமாற்றுக் கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இறந்து விட்டவர்களிடமும், இறைநேசர்களிடமும், சிலைகளிடமும் கேட்கப்படும் உதவிகள் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படுபவைகளாக இருக்கின்றன. எப்பொழுதும் அந்த நல்லவர்களும், நாதாக்களும் தான் இவர்களால் உதவி கேட்கப்படவும் பிரார்த்தித்து அழைக்கப்படவுமாக இருக்கின்றார்களே தவிர அவர்கள் இவர்களை அழைப்பதும் இவர்களிடம் உதவி கேட்பதும் நடப்பதே இல்லை.
எனவே உலக வாழ்வில் நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் பிறரிடம் கேட்கும் உதவியைக் காரணம் காட்டி வலிமார்களிடம் உதவி கேட்கலாம் என்று இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடிபட்டுப் போய் விடுகின்றது.
உயிருடன் உள்ளவரிடம் பரஸ்பரம் உதவி தேடுவதற்கும், இறந்து விட்ட நல்லடியார் ஒருவரிடம் உதவி தேடுவதற்கும் அடிப்படையில் அனேக வித்தியாசங்கள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
நாம் உயிருடனுள்ள ஒருவரிடம் உதவி தேடும் போது அவரிடம் தெய்வீக அம்சம் இருப்பதாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாம் நம்புவது கிடையாது. அவரை நம்மைப் போன்ற ஒரு மனிதராகவே நம்புகிறோம். இறந்து விட்டவரிடம் தேடப்படும் உதவி இவ்வாறு அமைந்திருக்கவில்லை.
ஒரு மனிதனிடம் அதாவது உயிருடனுள்ள மனிதனிடம் உதவி தேடும் அதே சமயத்தில் இன்னும் பலர் அவரிடம் உதவி தேடினால் அவரால் அனைத்தையும் ஒரு நேரத்தில் கேட்க முடியாது என்று நாம் நம்புகிறோம். ஆனால் இறந்து விட்டவரிடம் ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றார்கள். அனைவரது பிரார்த்தனைகளையும் அவரால் கேட்க முடியும் என்றும் நம்புகின்றனர். இறைவன் எப்படி ஒரு சமயத்தில் பல கோடிப் பிரார்த்தனைகளைக் கேட்க முடியுமோ அதே போல் இவரும் கேட்கிறார் என்றால் கேட்கும் திறனில் இறைவனும், இவரும் சமமாவார்கள் என்று ஆகிவிடாதா?
உயிருடனுள்ளவர்களிடம் உதவி தேடும் போது ஒரு வரம்புக்கு உட்பட்டுத் தான் உதவி தேடுவோம். அவரது உதவிக்கு வரம்பு உண்டு என்று திட்டவட்டமாக நாம் நம்புகின்றோம். ஆனால் இறந்தவர்களிடம் உதவி தேடும் போது அவரால் எதுவும் செய்ய முடியும் என நம்புகின்றனர். இங்கேயும் இறைவனுக்குச் சமமாக அவரை ஆக்கி விடுகின்றனர்.
நாம் எவரிடமாவது உதவி தேடினால் அவருக்கு அருகில் சென்று கேட்டால் தான் அவருக்கு விளங்கும் என்று நம்புகிறோம். இங்கே இருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ளவரிடம் (தொலைபேசி போன்ற சாதனங்கள் இன்றி) உதவி தேட முடியாது எனவும் நம்புகிறோம். ஆனால் இறந்துவிட்டவர் எவ்வளவு தொலைவில் இருந்து கேட்டாலும் அதைச் செவியுற முடியும் என்று நம்புகின்றனர். இறைவனது கேட்கும் திறனுக்கு எப்படித் தூரங்கள் தடையாக முடியாதோ அது போன்ற நிலையில் அவரைக் கருதுகின்றனர். இரண்டும் எப்படிச் சமமாக முடியும்?
உயிரோடு உள்ளவரிடம் உதவி தேடுவது என்றால் அவருக்குத் தெரிந்த மொழியில் மட்டும் தான் தேட முடியும். அவருக்குத் தெரியாத மொழிகளில் கேட்டால் அவருக்குப் புரியாது எனவும் நம்புகிறோம். ஆனால் எந்தப் பாஷையில் கேட்டாலும், உயிருடன் அவர் இருந்த சமயத்தில் அவர் அறிந்திராத பாஷையில் கேட்டாலும் இறந்தவர் அதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றனர். இறைத் தன்மையில் அவருக்குப் பங்கிருப்பதாகப் பறை சாற்றுகின்றனர்.
உயிரோடு உள்ளவர்களிடம் தேடப்படும் உதவிகள் நம் புலன்களுக்குத் தெரியும் விதமாக நம்மை அடைகின்றன. நாம் பத்து ரூபாய் கேட்டால் அவர் பத்து ரூபாயை எடுப்பதும் அதை நம்மிடம் தருவதும் நம் புலன்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.
ஒரு மருத்துவரிடம் சென்று உதவி தேடினால் அவர் தரும் மாத்திரைகளும், ஊசியும் நம் புலன் உணர்வுக்குப் புலப்படுகின்றது.
ஆனால் இறந்தவரிடம் கேட்கப்படும் உதவிகள் இப்படி அமைந்திருக்கவில்லை. நம் புலன்களுக்குப் புலப்படாத வகையில் புறச் சாதனங்களின் துணையின்றி இறைவன் அளிக்கும் உதவி போன்ற நிலையில் இது கருதப்படுகின்றது.
இது போல் இன்னும் அனேக வித்தியாசங்கள் உள்ளன. உயிருடன் உள்ளவர்களிடம் உதவி தேடுவதையும், இறந்தவர்களிடம் உதவி தேடுவதையும் சமமாகக் கருதுவதற்கும், அது கூடும் என்பதால் இதுவும் கூடும் எனக் கருதுவதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை.
நேரடி தரிசனம்
شـرفت جـيلان بالـميلاد ساكنـه
عـظمت بـالقبر بـغدادا أمـاكنـه
يـزوره كـل مـشتاق ولـكنــه
في بـيـتـه قـد يـلاقي محيي الدين
நீங்கள் ஜீலான் எனும் ஊரில் பிறந்ததன் மூலம் அவ்வூருக்குச் சிறப்பளித்தீர்கள். பாக்தாத் நகரில் உங்கள் கப்ரை அமைத்துக் கொண்டதன் மூலம் அவ்வூரை மகத்துவப்படுத்தி விட்டீர்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை ஆசிக்கும் அனைவரும் ஸியாரத் செய்கின்றனர். எனினும் சில சமயங்களில் அவர்களை ஆசிப்பவர்கள் தமது வீட்டிலேயே முஹ்யித்தீனை நேரடியாகத் தரிசனம் செய்கின்றனர்.
இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வர முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கவிஞனோ அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பூத உடலுடன் சிலரது வீடுகளுக்கு எழுந்தருளுவதாகக் கதை விடுகிறான். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இது பற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.
மனித இனத்திலேயே இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உயர்வான பதவிகளைப் பெற்றவர்கள் நபிமார்கள். அவர்களின் நிலையை வேறு எவரும் எப்போதும் அடையவே முடியாது. இந்த நிலையை ஒரு மனிதன் தன்னுடைய அமல்கள் மூலம் அடைந்து விட முடியுமா என்றால் அது முடியாது. இறைவனாகப் பார்த்து யாரைத் தேர்ந்தெடுக்கிறானோ அவர்கள் தான் அந்த நிலையை அடைய முடியும். அதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் முழுமைப்படுத்தி முத்திரையிட்டு விட்டான்
ஒரு மனிதன் தனது அமல்கள் மூலம் அடையும் பதவிகளிலேயே மிகவும் உயர்வான பதவி பெறுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த உத்தமர்களாவர். அல்லாஹ்வுக்காக உயிரையே தியாகம் செய்யும் நிலையை வேறு எந்த அமல் மூலமும் அடைய முடியாது.
سنن أبي داود
2520 – حدثنا عثمان بن أبي شيبة ثنا عبد الله بن إدريس عن محمد بن إسحاق عن إسماعيل بن أمية عن أبي الزبير عن سعيد بن جبير عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه و سلم " لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة في ظل العرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أنا أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب ؟ فقال الله سبحانه أنا أبلغهم عنكم قال فأنزل الله { ولاتحسبن الذين قتلوا في سبيل الله } إلى آخر الآية " .
இத்தகைய ஷஹீத்களின் (உயிர்த்தியாகிகளின்) உயிர்கள் கைப்பற்றப்பட்டு இறைவனிடம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்குக் கிடைத்து விட்ட மகத்தான வாழ்வைக் கண்டு அவர்கள் பிரமிக்கிறார்கள். பெருமகிழ்வு கொள்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மகத்தான பாக்கியங்களை, உலகில் உயிருடன் வாழ்பவர்கள் அறிந்தால், அவர்களும் தங்கள் உயிர்களை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து இந்தப் பதவிகளைப் பெறுவார்களே என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இறைவா! எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி உலகில் வாழ்பவர்களிடம் நாங்கள் சொல்லி விட்டு வந்து விடுகிறோம். இதனால் அவர்களும் தம் உயிரை அர்ப்பணிக்கத் துணிவார்கள் என்று இறைவனிடம் அவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள். அப்போது இறைவன் திரும்பவும் உலகுக்குச் செல்ல முடியாது என்பதால் உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியங்கள் யாவை என்பதையும் உலகில் வாழ்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுவதையும் நானே உங்கள் சார்பாக உலகில் உள்ளவர்களுக்கு அறிவிக்கின்றேன் என்று கூறிவிட்டு பின்வரும் வசனங்களை இறக்கியருளினான்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர்த் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து (இறைவனை) அஞ்சியோருக்கு மகத்தான கூலி உள்ளது. (3:169, 170, 171, 172) என்று இறைவன் கூறுகிறான்.
(நபிமொழியின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 2158
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த உயிர் தியாகிகள் நல்ல எண்ணத்துடன் தங்களுக்குக் கிடைத்த பதவிகளைப் பற்றிச் சொல்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கிறார்கள். இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு யாருக்கேனும் அனுமதி, அளிப்பதென்றால் இவர்கள் அதற்கு மிகவும் தகுதியானவர்கள். மேலும் இவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவதற்குக் கூட சுய நலம் எதுவும் காரணம் அல்ல. மாறாக மற்றவர்களையும் ஆர்வமூட்டி அவர்களையும் உயர் பதவிக்குரியவர்களாக ஆக்குவதே இவர்களின் நோக்கம்.
இவ்வளவு உயர்ந்த நோக்கத்திற்காக இவ்வுலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்ட பிறகும் இறைவன் மறுக்கிறான். அவர்களின் விருப்பம் தகாத விருப்பம் என்பதனால் இறைவன் இதை மறுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகுக்குத் தெரிவிக்க விரும்பிய விஷயத்தை அவர்களின் சார்பாக இறைவனே மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிவிக்கவும் செய்கிறான். இறந்தவர்கள் திரும்பவும் உலகுக்கு வர முடியாது என்று தான் வகுத்த நியதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதனாலேயே இவ்வாறு மறுக்கிறான்.
உயிர் தியாகிகள் அனுமதி கேட்ட பிறகும் இவ்வுலகுக்கு வர இறைவன் அனுமதி மறுக்கிறான் என்றால் அப்துல் காதிர் ஜீலானி ஒவ்வொரு வீடுகளுக்கும் எழுந்தருளுகிறார்கள் என்று இந்தக் கவிஞன் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? அவ்வாறு நம்பினால் அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்னுரையை மறுத்தவனாக அல்லவா ஆக நேரும்?
இறைவன் அனுமதி மறுத்தாலும் கூட அதை மீறிக் கொண்டு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வீடு வீடாக வருவார்கள் என்று இதற்கு விளக்கம் சொல்லப் போகிறார்களா? போகிற போக்கைப் பார்த்தால் இப்படியும் சிலர் சொன்னாலும் அதில் ஆச்சயரிப்படுவதற்கில்லை.
அல்லாஹ்வின் தூதரைப் பொய்யாக்கும் இந்த நச்சுக் கவிதை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டாமா? அரபியில் எழுதப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காகவும், சிலரது வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்கிறது என்ற காரணத்துக்காகவும், சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது என்ற காரணத்துக்காகவும் இந்தக் குப்பையை அங்கீகரிக்க வேண்டுமா? அல்லாஹ்வின் தூதருடன் போர்ப் பிரகடனம் செய்யும் இதை ஆதரிக்க வேண்டுமா?
سنن الترمذي
1071 – حدثنا أبو سلمة يحيى بن خلف حدثنا بشر بن المفضل عن عبد الرحمن بن إسحق عن سعيد بن أبي سعيد المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم إذا قبر الميت ( أو قال أحدكم ) أتاه ملكان أسودان أزرقان ( يقال لأحدهما المنكر والآخر النكير فيقولان ما كنت تقول في هذا الرجل ؟ فيقول ما كان يقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فيقولان قد كنا نعلم أنك تقول هذا ثم يفسح له في قبره سبعون ذراعا في سبعين ثم ينور له فيه ثم يقال له نم فيقول ارجع إلى أهلي فأخبرهم ؟ فيقولان نم كنومة العروس الذي لا يوقظه إلا أحب أهله إليه حتى يبعثه الله من مضجعه ذلك وإن كان منافقا قال سمعت الناس يقولون فقلت مثله لا أدري فيقولان قد كنا نعلم أنك تقول ذلك فيقال للأرض التئمي عليه فتلتئم عليه فتختلف فيها أضلاعه فلا يزال فيها معذبا حتى يبعثه الله من مضجعه ذلك
நல்லடியார்களின் உடல்கள் கப்ரில் வைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு தக்க பதில் கூறியதும் அவரது கப்ருக்கு சுவனத்தின் சுகந்தங்கள் திறந்து விடப்படுகின்றன. இதைக் கண்டு மகிழ்ச்சியடையும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அந்தஸ்து பற்றி தம் உறவினர்களிடம் கூறி வருவதற்கு அனுமதி கேட்கிறார்கள். புதுமணமகனைப் போல் நீ உறங்கு என்று வானவர்களால் அவர்களுக்குக் கூறப்படும் என்பது நபிமொழி.
திர்மிதீ 991
இந்த நபிமொழியைக் கொஞ்சம் கவனியுங்கள். நல்லடியார்கள் இவ்வுலகுக்கு வருவதற்கு அதுவும் அன்றாடம் வீடு வீடாக அலைவதற்கு அல்ல. ஒரே ஒரு தடவை மட்டும் தங்களின் சொந்த இல்லத்திற்கு மட்டும் வருவதற்கு அனுமதி கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது. தனது கோரிக்கையைத் திசை அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்து விடக் கூடாது என்பதற்காகவோ, என்னவோ அல்லாஹ் திரும்பவும் உயிர் கொடுத்து அவர் எழுப்பும் வரை உறங்குமாறு அவரிடம் கூறப்படுகின்றது. புதுமாப்பிள்ளை போல் உறங்குமாறும் கூறப்படுகின்றது.
ஒரே ஒரு தடவை தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வரக் கூட நல்லடியார்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நம்புவதா? இந்த மூடக் கவிஞனின் கற்பனையை நம்புவதா? எண்ணிப் பாருங்கள்!
எந்த நல்லடியாரும் கியாமத் நாள் வரை உறக்க நிலையிலேயே உள்ளார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டனர். அதற்கு மாற்றமாக வீடு வீடாக அலைந்து கொண்டிருப்பதாக அப்துல் காதிர் ஜீலானி அவர்களைச் சித்தரித்ததன் மூலம் அவர்களை நல்லடியார்கள் அல்ல என்று தானே நம்பச் சொல்கிறது இந்தக் கவிதை.
மத்ஹபு மாற்றம்
الشـافـعي فـصرت الـحنبلي بـلا
هـجر لـتحتاط بـالخـيرين مـعتدلا
இதுவும் யாகுத்பா கவிதையின் ஒரு அடியாகும்…
நீங்கள் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவராக இருந்தீர்கள். இரண்டு நல்ல வழிகளையும் பேணுவதற்காக ஷாஃபி மத்ஹபில் எவ்வித வெறுப்புமின்றியே ஹம்பலியாக மத்ஹபு மாறினீர்.!
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஏனைய பொய்களைப் போன்றே இதுவும் ஒரு பொய் என்பதைச் சிந்தனையாளர்கள் உணரலாம்.
பணியாற்றும் இடத்திற்கேற்ப ஷாஃபி மவ்லவி ஹனஃபியாகவும், ஹனஃபி மவ்லவி ஷாஃபியாகவும் மாறுவதை இன்று சகஜமாகக் காண்கிறோம். மத்ஹபு என்பது பிழைப்பிற்கு ஒரு வழியாகிவிட்டதை இந்த நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் போடக் கூடிய இரட்டை வேடத்தை நியாயப்படுத்த வேண்டுமல்லவா அதற்காகத் தான் இந்தப் பாடல் வரிகள்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபிலிருந்து ஹம்பலீ மத்ஹபுக்கு மாறி இருக்கும் போது நாங்கள் மாறுவதில் என்ன தவறு? என்று சமாளிக்கவே இந்த வரிகளைப் புனைந்துள்ளனர். இந்த வரிகள் பல்வேறு கோணங்களில் அலசப்பட வேண்டியவையாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ஷாஃபி மத்ஹபில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? தான் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர் என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அல்லது ஆரம்ப காலத்தில் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியுள்ளாரா? தனது நூற்களில் கூறும் சட்டங்களுக்கு ஷாஃபி இமாமுடைய கூற்றுக்களை ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளாரா? இவற்றில் எதுவுமே இல்லை. அவர்கள் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
ஷாஃபியாகவே இருந்தார் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பினாலும் வேறு விதமான கேள்விகள் அங்கே பிறக்கின்றன. ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் அதற்குரிய ஆதாரங்கள் சரியானவை என்று வைத்துக் கொண்டால், ஹம்பலி மத்ஹபின் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.
ஷாஃபி மத்ஹபின் சட்டங்களை விடுத்து, ஹம்பலி மத்ஹபுக்கு மாறினார்கள் என்றால் அதன் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.
ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் சரியானவையாக இருக்கும் போதே மாறினால் சரியான வழியை விட்டு விட்டு தவறான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்று ஆகும்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபை விட்டு விலகி இருக்கும் போது, அவர்களை மதிப்பவர்கள் ஷாஃபி மத்ஹபிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியது தானே?
இப்படியெல்லாம் எவராவது கேட்டு விடக் கூடாது அல்லவா? அதற்காகத் தான் இரண்டு நல்லவற்றையும் பேணுவதற்காக ஷாஃபி மத்ஹபின் மேல் எவ்வித வெறுப்புமின்றி மத்ஹபு மாறினார்கள் என்று புனைந்து உள்ளனர்.
ஷாஃபியிலிருந்து ஹம்பலி மத்ஹபுக்கு எப்போது மாறினார்கள்?
தான் அவ்வாறு மாறிவிட்டதாக எந்த நூலில் குறிப்பிடுகிறார்கள்?
ஹம்பலி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியிருக்கிறார்களா?
தான் கூறும் சட்டங்களுக்கு ஹம்பலி இமாமை ஆதாரமாகக் காட்டுகிறார்களா?
இவற்றில் எதுவுமே இல்லை. வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை.
மத்ஹபை நியாயப்படுத்துவதிலும் கூட ஓர வஞ்சனையைப் பாருங்கள்! ஹனஃபி, மாலிகி மத்ஹபுகளை விட்டு விட்டார்கள். ஷாஃபி, ஹம்பலி இரண்டு மத்ஹபுகளையும் நல்லவை என்பதற்காக அவ்விரண்டிலும் மாறி மாறி இருந்தார்கள் என்றால் ஹனஃபியும், மாலிகியும் என்ன பாவம் செய்தன? அவற்றிலும் கொஞ்ச காலம் இருக்க வேண்டியது தானே!
இதை எழுதியவரும், இன்று வரை பக்திப் பரவசத்துடன் பாடிக் கொண்டிருப்போரும் ஹனஃபியும், மாலிகியும், அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ராஜினாமா செய்த ஷாஃபியும் சரியானவை அல்ல என்று வாக்குமூலம் தருகின்றனர். மத்ஹபுகளை யாகுத்பா பித்தர்கள் முழுமையாக எதிர்க்காவிட்டாலும் மூன்று மத்ஹபுகள் தவறானவை என்று ஒப்புக் கொள்கின்றனர்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களை இவர்கள் மதிப்பது உண்மையானால் ஷாஃபிகளும், ஹனஃபிகளும் அவ்விரு மத்ஹபுகளிலிருந்து விலக வேண்டும்; ஹம்பலிகளாக மாற வேண்டும். இக்கவிதையில் கூறப்படுவது பொய் என்று அவர்கள் கருதினால் இந்த யாகுத்பாவையாவது விட்டுத் தொலைக்க வேண்டும். இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?
மத்ஹபுவாதிகளுக்கு இது ஒரு வாடிக்கை. காலம் சென்ற எவரைப் பற்றிக் கூறுவதென்றாலும், அவருக்கு ஏதேனும் மத்ஹபு முத்திரை குத்தாமல் விட்டதில்லை. புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்கலை மேதைகளாகட்டும்! அப்துல் காதிர் ஜீலானி போன்ற அறிஞர்களாகட்டும்! யாருமே இதிலிருந்து தப்பியதில்லை. மத்ஹபை எதிர்த்துப் போராடிய இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுக்கும் இதே முத்திரையைக் குத்தத் தவறவில்லை. அவரது மாணவர்களாம் இப்னுல் கையிமுக்கும், இப்னு கஸீருக்கும் கூட குத்தினார்கள்.
சான்றுகள் வழியாக மத்ஹபுகளை நிலைநாட்ட வழியில்லாமல் இறந்து போன பெரியார்களுக்கு இந்த முத்திரையைக் குத்துவதன் மூலம் மத்ஹபுகளை நியாயப்படுத்தி விடலாம் என்று திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். அதன் விளைவு தான் இந்த வரிகள்.
உண்மையில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்பதை அவர்களின் நூல்களிலிருந்தும், அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் அறிய முடியும்.
يا غلام العمل بالقرآن يوقفك على منزله والعمل يالسنة يوقفك على الرسول
திருக்குர்ஆனின் அடிப்படையில் செயல்படுவது அல்லாஹ்வின் அருகாமையில் உன்னை நிறுத்தும்! நபிவழியின் பிரகாரம் செயல்படுவது நபியின் அருகே உன்னை நிறுத்தும்!
என்பது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பதினாறாவது சொற்பொழிவு.
(அல்ஃபத்ஹுர்ரப்பானி)
تحفظ القرآن ولا تعمل به تحفظ سنة رسول الله صلى الله عليه وسلم ولا تعمل بها فلأي شيئ تفعل ذلك
குர்ஆனை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்பட மாட்டேன் என்கிறாய். நபியின் சுன்னத்தை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்படுகிறாய் இல்லை! ஏன் இவ்வாறு செய்கிறாய்?
(அல்ஃபத்ஹுர்ரப்பானி எனும் நூலில் அவர்களின் பத்தாவது சொற்பொழிவு)
இதுவும் அதே நூலில் இடம் பெறும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் மூன்றாவது சொற்பொழிவு.
يا مسكين دع الكلام فيما لا ينفعك أترك التعصب في المذهب
ஏழையே! பயனற்ற பேச்சுக்களை விட்டுவிடு! மேலும் மத்ஹபு வெறியையும் விட்டு விடு!
என்பதும் அவர் எழுதியது. (குன்யதுத் தாலிபீன்)
إجعل الكتاب والسنة أمامك واعمل بهما ولا تغتر بالقال والقيل والهوس
குர்ஆனையும், நபிவழியையும் உனக்கு முன்னால் வைத்துக் கொள்! அதன்படி செயல்படு. அவர் சொன்னார்; அதில் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற கூற்றில் நீ மிரண்டு ஏமாந்துவிடாதே!
இவ்வளவு தெளிவாக மத்ஹபுகளை எதிர்த்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் முதலில் ஷாஃபி மத்ஹபில் சேர்ந்தார்களாம். பின்னர் ஹம்பலிக்கு மாறினார்களாம்!
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நேரடியாகச் சொல்வதை நம்புவதா? அல்லது அவர்கள் பெயரால் அவிழ்த்து விடப்பட்ட பொய்யை நம்புவதா?
அந்தப் பெரியாரை மேலும் இழிவுபடுத்தும் விதமாக இந்தக் கவிஞன் பாடியுள்ள மற்றொரு அடியைக் கேளுங்கள்
தலைகளில் பாதம்
قـد قـلت بالإذن مـن مولاك مؤتمرا
قـدمي عـلى رقـبات الأولياء طـرا
فـكلهـم قـد رضوا وضعا لها بشرى
يـا من سـما اسما عليهم محيي الديـن
எனது பாதங்கள் எல்லா அவுலியாக்களின் பிடரி மீதும் உள்ளன என்று தங்களின் எஜமானனாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களையும் விட உயர்ந்து விட்ட முஹ்யித்தீனே! என்பது இதன் பொருளாகும்.
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் ஓரளவுக்கு அறிந்து வைத்துள்ள முஸ்லிம் கூட இது பிதற்றல் எனப் புரிந்து கொள்ள முடியும். அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளதால் இந்தக் கவிதையையும் அலசுவோம்.
இந்தக் கவிதை வரிகளில் மூன்று விஷயங்களைக் கவிஞன் கூறுகிறான்.
* எல்லா அவ்லியாக்களின் தலையின் மீதும் தான் காலைத் தூக்கி வைத்ததாக அப்துல் காதிர் ஜீலானி கூறினார்களாம்!
* இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்துவிட்டு, அவனது அனுமதியுடனே மக்களுக்கும் அறிவித்தார்களாம்.
* காலால் மிதிக்கப்பட்ட அந்த அவ்லியாக்களும் இதை மகிழ்வுடனே ஏற்றுக் கொண்டார்களாம்.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!
திருக்குர்ஆன் 17:37
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
திருக்குர்ஆன் 31:18
என்று வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான். இந்தக் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது.
பெருமையையும், ஆணவத்தையும் வல்ல இறைவன் கண்டித்து இருக்கும் போது தன்னுடைய நேசம் இத்தகையோருக்குக் கிடைக்காது என்று பிரகடனம் செய்திருக்கும் போது ஒரு இறைநேசர் தன் காலை வலிமார்களின் தலையில் வைத்தேன் என்று கூறியிருப்பார்களா? உண்மையிலேயே அப்படிக் கூறி இருந்தால், இத்தகையோரை நேசிக்க மாட்டேன் என்று இறைவன் கூறியிருக்கும் போது அவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்?
அப்துல் காதிர் ஜீலானியை இறை நேசர் அல்ல என்றும் இழிவுபடுத்தும் விதமாக இக்கவிதை அமைந்துள்ளதை இதிலிருந்து விளங்கலாம்.
سنن ابن ماجه (1/ 595)
1853 – حدثنا أزهر بن مروان . حدثنا حماد بن زيد عن أيوب عن القاسم الشيباني عن عبد الله بن أبي أوفى قال : – لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه و سلم . قال ( ما هذا يا معاذ ؟ ) قال أتيت الشام فوافقتهم يسجدون لأساقفتهم وبطارقتهم . فوددت في نفسي أن نفعل ذلك بك . فقال رسول الله صلى الله عليه و سلم ( فلا تفعلوا . فإني لو كنت آمرا أحد أن يسجد لغير الله لأمرت المرأة أن تسجد لزوجها
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கும் சென்ற போது, அங்குள்ள மக்கள் தம் தலைவர்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்வதைக் காண்கிறார்கள். இதைக் கண்டதும், இந்தத் தலைவர்களையெல்லாம் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்தவர்களாயிற்றே! எனவே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். பின்னர் மதீனா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைக் கூறினார். அப்போது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிய அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி இருந்திருக்குமானால் ஒரு பெண் தன் கணவனுக்கு அந்த மரியாதையைச் செய்யுமாறு கூறியிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னுமாஜா 1843
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கால்களிலேயே தலையை வைப்பதற்கு அனுமதி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக அறிவித்து விட்ட பின், அதற்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சொல்லி இருப்பார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் இந்தக் கவிதை நாயகர் உயர்ந்தவர் என்று இந்தக் கவிதையைப் பக்தி சொட்ட சொட்டப் பாடுவோர் நம்புகின்றார்களா?
தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக மற்றவர்கள் எழுந்து நிற்பதைக் கூட வெறுத்தொதுக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக இந்த மாபாதகமான சொல்லை அந்தப் பெரியவர் கூறி இருப்பார்களா?
وفي خـزانـة أسـرار روى سـنـدا
عـن كـل من وضعت في عنقه عددا
إلا أبـا بـكر مـنهم فـتاب فــدا
حـزت الـمعالي جـما محيي الدين
இதுவும் யாகுத்பா என்ற கவிதையின் வரிகளாகும்.
தமது பாதம் எல்லா இறைநேசர்களின் கழுத்தின் மீதும் உள்ளதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கவிதையாசிரியர் காதில் பூச்சுற்றியதைக் கண்டோம். அதைத் தொடர்ந்து மேற்கண்ட வரிகளைக் கவிஞர் கூறுகிறார். இதன் பொருளைக் கேளுங்கள்.
யார் யாருடைய பிடரிகள் மீது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது பாதத்தை வைத்தார்களோ அவர்கள் அனைவர் பற்றியும் அறிவிப்பாளர் வரிசையுடன் கிஸானதுல் அஸ்ரார் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அபூபக்ரு என்பவர் (சுயமரியாதையின் காரணத்தினாலோ என்னவோ) தமது பிடரியைத் தர மறுத்து விட்டார். பின்பு அவரும் (மகிமை உணர்ந்து) தவ்பாச் செய்து விட்டார். முஹ்யித்தீன் அவர்களே எல்லா உயர்வுகளையும் தாங்கள் சேர்த்துப் பெற்று விட்டீர்கள்!
இது இந்தக் கவிதை வரிகளின் பொருள். எல்லா அவ்லியாக்களின் பிடரியின் மீதும் தனது பாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வைத்தார்கள் என்பதற்கு இங்கே ஆதாரம் சமர்ப்பிக்கிறான் இந்தப் புலவன்.
அதாவது யார் யாருடைய பிடரிகள் மீது மிதிக்கப்பட்டது என்ற பட்டியல் கைவசம் உண்டாம். கிஸானதுல் அஸ்ராரில் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கும் என்று கருதியிருந்தால் இப்படிக் கதை விடுவானா? இவன் உளறிக் கொட்டியிருந்தாலும் ஒரு வகையில் இந்தக் கவிதையினால் சில நன்மைகளும் ஏற்பட வழியுண்டு.
யாகுத்பா பக்தர்களிடமும், அதை ஆதரிக்கும் மவ்லவிமார்களிடமும் அந்த கிஸானதுல் அஸ்ராரை வெளியிடுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். முடியாவிட்டால் குறைந்த பட்சம் மிதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலையாவது பகிரங்கமாக வெளியிடுமாறு கேட்கிறோம்.
எல்லா இறைநேசர்களின் பிடரியின் மேலும் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிதித்தார்கள். அவர்களால் மிதிபடாதவர் அவ்லியா இல்லை என்று கவிஞர் கூறியுள்ளதால் அந்தப் பட்டியலை வெளியிடும் போது உலகில் உள்ள அவ்லியாக்கள் யார் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இப்பட்டியலை அவர்கள் வெளியிடும் போது குறைந்த பட்சம் பல கப்ருகளில் அடங்கப்பட்டுள்ளவர்கள் அவ்லியாக்களே இல்லை என நிரூபிக்க முடியும்.
இதனால் தர்ஹாக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழி உண்டு. ஏனெனில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்குப் பின் வந்தவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. அந்தப் பட்டியலையே ஆதாரமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தர்ஹாக்களையும் அங்கே இருப்பவர்களையும் மிதி வாங்கவில்லை என்பதால் இடித்துத் தள்ளலாம்.
யாகுத்பா பக்தர்கள் இதைச் செய்ய முன் வராவிட்டால், கிஸானதுல் அஸ்ரார் என்பதெல்லாம் புருடா தான் என்று ஒப்புக் கொண்டால் அப்போதும் நன்மை ஏற்பட வழி இருக்கிறது.
அதாவது இப்படி புருடா விட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாட்டைத் தீயிலிட்டுப் பொசுக்கச் சொல்லலாம். இந்தக் கப்ஸாக்களால் பயனில்லை என்று ஒப்புக் கொள்ளச் செய்யலாம்.
மவ்லவிமார்களிடம் நாம் கேட்பது இது தான். இந்த யாகுத்பாவை நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? உண்மை என்று நீங்கள் நம்பினால் அந்த அவ்லியாக்களின் பட்டியலை அறிவிப்பாளர் வரிசையுடன் வெளியிடுங்கள் பார்ப்போம்.
வெளியிட முடியாது. இதில் கூறப்படுவது பொய் என்று நீங்கள் கருதினால் அதையாவது பகிரங்கமாக அறிவியுங்கள்! மக்கள் இந்த யாகுத்பா எனும் குப்பையைத் தூக்கி எறிவார்கள். மவ்லவிமார்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்.
وقـلت مـن لا لـه شيـخ فإني لـه
شيـخ ومـرشـده حتى كـأني لـه
جـليسه خـلوة ومـن لــدني لـه
وصـل فـكن هـكذا لي محيي الدين
யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன். எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கின்றது என்று நீங்கள் கூறினீர்கள். எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!
இந்த இந்த வரிகளின் நேரடிப் பொருள்.
இதைப் பல வகைகளிலும் நாம் அலச வேண்டியுள்ளது. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியதாக இந்தக் கவிஞன் பாடியிருக்கிறான்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் தமது எந்த நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்? அல்லது அவர்களின் காலத்திலோ, அதற்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட எந்த நூலில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது? இந்த யாகுத்பாவை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் உஞ்சவிருத்தி மவ்லவிகள் எடுத்துக் காட்டுவார்களா?
இதை எழுதியவன் யாரென்று திட்டவட்டமாகத் தெரிந்தால், அவன் இன்று வரை உயிருடனிருந்தால் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். இதை எழுதியவர் யாரென்பது நிரூபிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்பட்டாலும் நிச்சயம் அவன் இப்போது உயிருடனில்லை. இந்த யாகுத்பா கச்சேரியை யார் முன்னின்று நடத்துகிறார்களோ அந்த மவ்லவிமார்கள் தான் இதை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக் காட்டுவார்களா?
ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லியிருந்தால் அவர்களது காலத்திலோ, அதை அடுத்த காலத்திலோ யாரும் இது பற்றிக் குறிப்பிடாத போது ஹிஜ்ரி பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கவிஞருக்கு எப்படி இந்த விபரம் தெரிய வந்தது? கிஸானதுல் அஸ்ரார் என்ற நூலில் இதற்கு ஸனதுடன் குறிப்பு உண்டு என்று இந்த மவ்லவிகள் சொல்லப் போகிறார்களா?
அடுத்து இந்தக் கவிஞனின் கருத்தை அலசுவோம். யாருக்கு ஷைய்கு கிடையாதோ அவருக்குத் தானே ஷைகாக ஆகிவிட்டதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியிருக்கிறார்கள் அல்லவா?
இதனடிப்படையில் பார்க்கும் போது ஒரு ஷைகைப் பிடித்து முரீது வாங்குபவரை விட, முரீது வாங்காதவரே சிறந்தவர் என்று ஆகின்றது.
சாதாரணமானவரைப் பிடித்துக் கொண்டால் அவர் தான் நமக்கு ஷைகாக ஆகின்றார். ஆனால் எவரிடமும் முரீது வாங்காமல் எவரையும் ஷைகாக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவருக்கோ அவ்லியாக்களின் தலைவர் என்று இவர்கள் நம்புகின்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஷைகாக ஆகி விடுகின்றார்கள்.
இதை அரங்கேற்றும் மவ்லவிமார்களுக்கு இதில் உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எவரிடமும் முரீது வாங்குவதை விட முரீது வாங்காமல் இருப்பதே சிறந்தது எனக் கூற வேண்டும். அப்போது தான் அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நமக்கு ஷைகாக ஆவார்கள். இந்தப் பொய்யை இப்படிச் சொல்லித் தொலைத்தாலாவது கேடு கெட்ட தரீக்காக்கள் பல ஒழிந்து போகும்.
இந்த வரிகளில் கூறப்படுவதைப் பொய் என்று கூறி யாகுத்பாவை ஒழிக்கப் போகின்றார்களா? அல்லது இதை உண்மை என்று நம்பி, முரீது வாங்கக் கூடாது எனப் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களா? இரண்டில் எதைச் செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நன்மையே ஏற்படும்.
ஆனால் இந்த மவ்லவிமார்கள் இரண்டில் எதனையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு இதன் அர்த்தம் பற்றியோ, விளைவு பற்றியோ கவலை எதுவும் கிடையாது. கொடுக்கப்படும் சில்லரைக்கு ஏற்ப நீட்டி முழங்குவதைத் தொழிலாகத் தானே இவர்கள் நடத்தி வருகின்றார்கள்.
முரீது வாங்காதவருக்குத் தானே ஷைகாக ஆகிவிடுவதாக மட்டும் அப்துல் காதிர் ஜீலானி கூறவில்லை. தனித்து இருக்கும் போது உற்ற நண்பராகவும் அவர் ஆகி விடுகின்றாராம். அவருக்கும் இவனுக்குமிடையே கனெக்சன் வேறு இருக்குமாம். கதை விடுகிறான் இந்தக் கவிஞன்.
இறந்து போன ஒருவர் எப்படி மனிதனிடம் கனெக்சன் வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும். உயிருடன் உள்ள அவர் இவ்வுலகில் வாழும் சமயத்தில் கூட இப்படிச் செய்வது சாத்தியமாகுமா?
ஒரு மனிதன் பலகோடி மக்களுக்கருகில் தனிமையில் உள்ள நண்பனாக போய் உட்கார முடியுமா? ஒரு மனிதன் ஒரு இடத்திற்கு மேற்பட்டு, ஒரு நேரத்தில் இருக்க முடியுமா? உயிருடன் இருக்கும் போதே சாத்தியப்படாதது எப்படி மரணத்தின் பின் சாத்தியமாகும்?
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் உள்ளத்துடன் கனெக்சன் வைத்துக் கொள்ள முடியுமா? உயிருடனிருக்கும் போதே செய்ய முடியாத ஒன்று அவர் இறந்த பின் எப்படிச் சாத்தியமாகும்?
முரீது வாங்காத அனைவருடனும் அவர் கனெக்சன் வைத்துக் கொள்வதாக இந்தக் கவிஞன் கூறுகிறானே? அப்படியானால் எவரிடமும் முரீது வாங்காமல், விபச்சாரத்திலும், திருட்டிலும், வட்டியிலும் மூழ்கி பலர் இருக்கிறார்களே? இது கூட அந்தக் கனெக்சன்களின் வெளிப்பாடு தானா?
நானே அவருக்கு வழிகாட்டியாவேன் என்று அவர்கள் சொன்னதாகக் கூறப்படுகிறதே? இந்தத் தப்பான காரியங்களெல்லாம் கூட அவர்களின் வழிகாட்டுதலில் அடங்கியது தானா? யாகுத்பா பக்தர்கள் பதில் சொல்லட்டும்!
இதை விடவும் மோசமான வரிகளைப் பார்ப்போம். திருக்குர்ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் ஆழமாக அறிந்து கொள்ளாத இஸ்லாத்தின் அடிப்படையை ஓரளவு அறிந்து வைத்துள்ள சராசரி முஸ்லிம் கூட இந்த வரிகளின் பொருள் அறிந்தால் ஏற்க மாட்டான்.
இந்த வரிகளின் பொருள் தெரியாத காரணத்தினாலேயே இதைப் புனிதமானது என்று இந்த சராசரி முஸ்லிம் எண்ணுகிறான். விளக்கமோ, விமர்சனமோ இன்றி இவ்வரிகளின் தமிழாக்கத்தை மட்டும் அவன் அறிந்து கொண்டால் இந்த யாகுத்பாவைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றே அவன் முடிவுக்கு வருவான். அவ்வளவு மோசமானவை இவ்வரிகள்.
இந்த அளவு மோசமான இந்த வரிகளையும் ஏழு ஆண்டுகள் அரபு மொழி கற்பதில் செலவிட்ட சில முல்லாக்கள் பாடி வருகின்றனர். இந்தக் கச்சேரியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இங்கே நாம் அடையாளம் காட்டவுள்ள வரிகளைக் கண்ட பின்னும் இவர்களால் யாகுத்பா கச்சேரியை நிறுத்த முடியவில்லை என்றால் இவர்கள் நடத்தும் கச்சேரியின் அர்த்தத்தை இவர்கள் புரியாதவர்களாக இருக்க வேண்டும். பெரும்பாலும் தங்கள் ஸனதுகளைக் கூட வாசித்து பொருள் செய்யத் தெரியாதவர்களைத் தானே மதரஸாக்கள் உருவாக்கி வருகின்றன.
இந்த வரிகளின் அர்த்தத்தை அறிந்த பின்பும் இவர்கள் இக்கச்சேரியை நடத்துகின்றார்கள் என்றால் சராசரி மனிதன் இஸ்லாத்தைப் புரிந்து கொண்ட அளவு கூட புரிந்து கொள்ளாத ஞானசூன்யங்களாக இவர்கள் இருக்க வேண்டும். அல்லது தங்கள் தட்டில் வந்து விழும் தட்சணைகள் இஸ்லாத்தை விடவும் இவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க வழியில்லை.
இதோ அந்த வரிகள்:
وإن جـدي رسـول الله كـان يقول
أنـت الـخليفة لي في خـير كل مقول
فـكن لأمتي الـمدد ارتـضاك عقول
فأنـت قـيم شـرعي محيي الـديـن
இவையும் யாகுத்பா என்ற பெயரில் நம்மவர்களில் பலர் படித்து வரும் நச்சுக் கவிதையின் வரிகளாகும்.
நன்மையான எல்லா சொற்களுக்கும் நீங்களே எனக்கு கலீஃபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகி விடுங்கள்; அறிவுடையோர் உங்களைப் பொருந்திக் கொண்டனர். முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலைநிறுத்தக் கூடியவர் என்று எனது பாட்டனார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.
மேலே கூறப்பட்ட வரிகளின் நேரடி மொழிபெயர்ப்பாகும். இது இந்த வரிகளில் தான் எத்தனை பொய்கள்?
தலையில் சிறிதளவு சரக்கும், சரித்திரத்தில் சிறிதளவு அறிவும் இருக்கக் கூடிய எவரும் கேட்டுச் சிரிக்கக் கூடிய இந்தப் பொய்களைத் தான் மார்க்கத்தின் பெயரால் மவ்லவிமார்கள் நம்மிடம் நிலைபெறச் செய்துள்ளனர். அரபு மொழியில் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் அதன் அர்த்தமும் நமக்குத் தெரியாது என்ற காரணத்தால் நாம் எந்த அளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இப்போதாவது இதன் பக்தர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.
முதலாவது பொய்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முடிந்து சுமார் ஐநூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த அப்துல் காதிர் ஜீலானி அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிச் சந்தித்திருக்க முடியும்? எப்படிப் பேசியிருக்க முடியும்?
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தார் என்று இதன் ஆதரவாளர்கள் சரித்திரத்தையே புரட்டப் பார்க்கிறார்களா? வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்யும் என்றால் புரட்டினாலும் புரட்டுவார்கள். அப்படிப் புரட்டுவார்களேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவரைத் தனது கலீஃபா என்று சொல்லியிருக்க(?) இவரை விட்டு விட்டு நபித்தோழர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை தவறாக கலீஃபாவாக ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்று கூறப் போகிறார்களா?
அல்லது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் வரை அதாவது ஹிஜ்ரி ஐநூறு வரை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?
அல்லது கிறித்தவர்களின் நம்பிக்கையைப் போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து விட்டு மீண்டும் இவரது காலத்தில் உயிர்த்து எழுந்தார்கள் என்று இந்த மவ்லவிமார்கள் இதையும் நியாயப்படுத்தப் போகிறார்களா?
யார் யார் பெயராலோ பொய்களைச் சொல்லி கடைசியில் அல்லாஹ்வின் தூதர் பெயராலும் பொய் சொல்லத் துணிந்து விட்டனர்.
யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது புகலிடமாக நரகத்தையே அடைந்து கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கூட இந்தக் கவிஞன் பொருட்படுத்தவில்லை.
இவனுக்குத் தான் இறையச்சமும், மறுமை பற்றிய பயமும் இல்லை என்றால் ஏழு ஆண்டு காலம் கற்றுத் தேர்ந்த மவ்லவிமார்களுக்குமா இந்த எச்சரிக்கை தெரியாமல் போய் விட்டது? அல்லது நரகைப் பற்றி இவர்களுக்கு அச்சமே இல்லையா?
அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய் சொல்லப்பட்டிருக்கின்ற இந்த ஒரேயொரு காரணத்துக்காகவே யாகுத்பா பாட்டு தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டாமா?
இரண்டாவது பொய்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தன்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என அப்துல் காதிர் ஜீலானி அவர்களே சொன்னதாக மற்றொரு பொய்யையும் புனைந்திருக்கிறான் இந்தக் கவிஞன்.
இதை இவனாகச் சொல்லவில்லையாம். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தான் இப்படி நபியின் பெயரால் பொய் சொன்னார்களாம். உண்மையில் இந்தக் கவிஞன் அந்தப் பெரியாரைப் புகழ்ந்திருக்கிறானா? அல்லது கிண்டல் செய்வதற்காக இப்படிப் பாடியிருக்கின்றானா? என்ற சந்தேகம் நமக்கு வருகின்றது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலம் ஹிஜ்ரி ஐநூறு என்றால் இந்தக் கவிஞனின் காலம் ஹிஜ்ரி ஆயிரத்திற்கும் மேல். இவனுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றது. (இது எழுதப்பட்ட ஆண்டு பற்றி இதன் பக்தர்கள் குறிப்பிடும் காலத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பார்த்தாலும் இருவருக்கும் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி உண்டு.)
இந்தக் கவிஞனுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லி இருந்தால் அது எப்படி இந்தக் கவிஞனுக்குத் தெரியும்? அந்தப் பெரியார் எழுதிய நூல்களில் அல்லது அவரது சொற்பொழிவுத் தொகுப்புகளில் இந்த விபரம் உள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லது அவரது காலத்தில் எழுதப்பட்ட மற்றவர்களின் நூல்களிலாவது இந்த விபரம் இருக்கின்றனவா? நிச்சயமாக அப்படியும் இல்லை.
திட்டமிட்டு அந்தப் பெரியாரின் பெயரால் இந்தக் கவிஞன் பொய் சொல்லியிருக்கிறான் என்பதைத் தான் இது காட்டுகிறது. நபிகள் நாயகத்தை மிகவும் நேசித்த அப்பெரியார் ஒருக்காலும் இப்படி அவர்கள் பெயரால் பொய் சொல்ல மாட்டார் என்று இதைப் பாடியவனுக்குத் தெரியாமல் போகலாம். இன்றளவும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற கண்டிக்க முன் வராத இந்தப் புரோகிதர்களுக்கும் தெரியவில்லை என்றால் எப்படி நம்புவது?
மூன்றாவது பொய்
எல்லா விஷயத்திலும் நீங்கள் தான் எனது கலீஃபா என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்களாம்! காதிலே பூச்சுற்றுகிறான் இந்தக் கவிஞன். நாமும் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அபூபக்ரோ, உமரோ, உஸ்மானோ, அலியோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கலீஃபா அல்லவாம்! ஐநூறு ஆண்டுகளாக வாழ்ந்த மக்களில் எவருக்குமே இந்தத் தகுதி இல்லையாம்! இவர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கலீஃபாவாம்.
இந்த சமுதாயத்திலேயே முதலிடத்தைப் பெற்ற அபூபக்ரையும், ஏனைய மூன்று கலீஃபாக்களையும், அனைத்து நபித்தோழர்களையும், அவர்களுக்கு அடுத்த தலைமுறையையும், எண்ணற்ற அறிஞர்களையும் மூலையில் தூக்கி எறிந்து விட்டு இவரை, அரியாசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றி வைத்தார்கள் என்று கூறும் இந்த வரிகளையும் ஆதரித்து அறிக்கை விடுபவர்கள் தான் நபித்தோழர்களை குலஃபாயே ராஷீதீன்களை மதிக்கிறார்களாம். நன்றாகத் தான் மதிக்கின்றார்கள்(?)
நான்காவது பொய்
தனது சமுதாயத்தினருக்கு உதவி செய்ய எவருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வும் கூட உதவி செய்ய மாட்டான் என்று அஞ்சி இந்தப் பெரியாரை தனது சமுதாயத்திற்கு உதவியாளராக நபியவர்களே நியமித்து விட்டார்களாம்.
எனது சமுதாயம் என்ற இந்தச் சொல்லில் நான்கு கலீஃபாக்கள் உட்பட அனைத்து நபித்தோழர்களும், நான்கு இமாம்களும் உட்பட பலநூறு அறிஞர்களும், அதற்குப் பின் வாழ்ந்த நல்லவர்களும் அடங்குவர். அவர்களுக்கெல்லாம் கூட இந்தப் பெரியாரைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதவியாளராக நியமித்தார்களாம். சொல்லுகின்ற பொய்யை நம்பும்படியாகக் கூட இந்தக் கவிஞனுக்கு சொல்லத் தெரியவில்லை.
அல்லாஹ் ஒருவனை மட்டுமே உதவியாளனாக அறிமுகப்படுத்தி தனக்குத் தானே எந்த நன்மையும் செய்ய முடியாது என்றெல்லாம் தன்னிலை விளக்கம் தந்த இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயம் முழுமையையும் அந்தப் பெரியாரின் கையில் அதுவும் நபியின் காலத்தில் பிறந்தே இருக்காத ஒருவரின் கையில் பிடித்துக் கொடுத்து விட்டுச் சென்றார்கள் என்றால் இதை யாரால் தான் நம்ப முடியும்? நம்புவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?
ஐந்தாவது பொய்
எனது மார்க்கத்தை நீங்களே நிலைநாட்டக் கூடியவர் என்றும் நபியவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்களாம். யாகுத்பா சொல்கிறது.
தனது தூதுத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்து மார்க்கத்தை முழுமையாக நிலைநாட்டி விட்டு எந்த ஒன்றையும் மறைக்காமல் அப்படியே மக்கள் முன் வைத்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றுள்ள போது பிறகு வரும் ஒருவர் தீனை நிலைநிறுத்துவார் என்றால் ஏற்க முடியுமா?
நிலை நிறுத்துவதற்கு வேறு பொருள் என அவர்கள் கூறினால் அதுவும் கூட நம்பும்படியாக இல்லை.
மற்ற நல்லவர்கள், பெரியார்கள், அறிஞர்கள் எப்படி தீனுக்காக உழைத்தார்களோ அந்த அளவுக்குத் தான் அந்தப் பெரியாரும் உழைத்தார்களேயன்றி குறிப்பிட்டுச் சொல்லும்படி அப்படி எதையும் நிலைநாட்டிடவில்லையே?
அவர்கள் காலத்திலும் பிளவுகள், பூசல்கள், தரீக்கா எனும் பெயரால் மோசடிகள், பித்அத்கள் யாவும் இருக்கத் தான் செய்தன. இன்று வரைக்கும் இருக்கத் தான் செய்கின்றன. மற்றவர்கள் போலவே அவற்றை இந்தப் பெரியாரும் கண்டித்துள்ளார்கள் என்பதைத் தவிர வேறு எதை இவர்கள் நிலைநாட்டினார்கள்?
يـا سيـدي سـندي غوثي ويا مددي
كـن لي ظـهيرا عـلى الأعداء بالمدد
مـجير عـرضي وخذ بيدي مدى مدد
خـليفـة الله فـينـا محيي الـديـن
என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்குப் பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகி விடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகி விடுங்கள்! காலா காலம் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும் முஹ்யித்தீனே!
என்பது இதன் பொருள்.
وعـدني مـن مـريدي نهجك الأقوم
ومـن عـبيدك عـبدا طـائعا أدوم
ومـن جـنودك مـقداما إلـيه يؤم
نـعم الأمـير أمـيرا محيي الـديـن
உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னணி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!
என்பது இதன் பொருள்.
என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்டு விட்ட அல்லாஹ்வின் அடியார் ஒருவரைக் கூவி அழைத்து இறைவனது தன்மையைப் பங்கு போடும் விதமாக அமைந்த இக்கவிதை வரிகள் படிக்கத்தக்கது தானா?
بـصر فـؤادي صـراطا أنت سالكه
فـالله أعـطاكـه فـأنت مـالـكه
ونـجه مـن لـظي فـيها مـهالكه
سـلطان كـل ولـي محيي الـديـن
நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்குக் காட்டி விடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்தத் துறைக்குச் சொந்தக்காரர்களாக உள்ளீர்கள். கொளுந்து விட்டெறியும் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள். அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே முஹ்யித்தீனே!
இந்த வரிகளில் அப்துல் காதிரை அல்லாஹ்வாகவே இந்தக் கவிஞன் கருதி இருப்பதை எவருமே உணரலாம்.
ஏராளமான நபிமார்கள் எதிரிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனையோ இறைநேசர்கள் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டதும் உண்டு. அந்தச் சமயங்களில் அந்த எதிரிகளிடமிருந்து சுயமாக அவர்களால் தங்களையே காத்துக் கொள்ள முடிந்ததில்லை. இந்தக் கவிஞனோ தன் எதிரிகளை ஒழிக்குமாறு அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிடுகின்றான்.
அல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹுவல் ஹய்யுல் கையூம் (நித்திய ஜீவனுள்ள அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை) என்று ஒரு புறம் கூறிக் கொண்டு காலா காலம் என் கையைப் பிடித்துக் கொண்டே இருங்கள் என்று மற்றவரை நோக்கிக் கூப்பாடு போடுவது எப்படி முறையாகும்?
அப்துல் காதிர் என்பவரும் அல்லாஹ்வைப் போல நித்திய ஜீவன் பெற்றவரா? காலாகாலமாக இருக்கக் கூடிய வரம் எதனையும் அவர் பெற்று வைத்திருக்கிறாரா?
வேதத்தையும், ஞானத்தையும், நுபுவ்வத்தையும் ஒரு மனிதருக்கு வழங்கிய பின் எனக்கு நீங்கள் அடிமைகளாக ஆகுங்கள் என்று கூற எந்த மனிதருக்கும் அனுமதி இல்லை என்கிறது குர்ஆன்.
(பார்க்க 3:79)
நபிமார்களும் கூட தம் உம்மத்தினரை அடிமைகள் என்று கூற முடியாது என்ற நிலையில் இந்தக் கவிஞன் அப்துல் காதிர் ஜீலானி என்பவருக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கிறான்.
அப்துல் காதிர் என்றாலே அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள். தன்னையே அல்லாஹ்வின் அடிமை என நம்பி வாழ்ந்த இந்தப் பெரியாருக்கு இவன் தன்னை அடிமை என்கிறான். நம்மையும் அவருக்கு அடிமையாக்க எண்ணுகிறான்.
நேரான வழியை உள்ளத்திற்கு உணர்த்துமாறு அப்துல் காதிரிடம் கேட்கும் இந்தக் கவிஞன், உள்ளங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் அல்லாஹ்விடமிருந்து பறித்து அப்துல் காதிரிடம் கொடுக்க எண்ணுகிறான்.
அபூதாலிபு உள்ளத்தில் நேர்வழியை உணர்த்த நபியவர்களுக்கே ஆற்றல் இல்லை என்பதை முன்பே நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். அப்துல் காதிருக்கு அந்த ஆற்றல் இருப்பதாக இந்தக் கவிதை கூறுகின்றது.
இந்தக் கவிஞன் அல்லாஹ்வுக்கென்று எதையும் மிச்சம் வைக்கவில்லை. இவனது இந்தக் கவிதையை நம்பினால் அல்லாஹ் என்று ஒருவன் தேவையே இல்லை. இரண்டு அல்லாஹ் இருப்பதாக இவ்வளவு தெளிவாக அறிவிக்கக் கூடிய இதனை மறுமை நாளை நம்பக் கூடியவர்கள் ஓத முடியுமா?
இதன் பின்னரும் இந்த மாபாதகமான யாகுத்பாவை ஓதுபவர்கள் மறுமையில் நிச்சயம் நஷ்டத்தையே அடைவார்கள். இத்தகையவர்களுக்கு இறைவனின் எச்சரிக்கைகளையும் நினைவூட்டுகின்றோம்.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.
திருக்குர்ஆன் 5:72
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோல் ஆவீராக! என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் 39:65, 66
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்
திருக்குர்ஆன் 6:88
நமது தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் இன்ன பிற நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போய் நிரந்தரமான நரகில் சேர்த்து விடக் கூடிய ஷிர்க் எனும் இணை வைக்கும் காரியத்தைத் தான் மார்க்கத்தின் ஒரு அம்சமாக நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். முல்லாக்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
மறுமையில் இதற்கான தண்டனையை இவர்கள் நிச்சயம் அடைந்தே தீருவார்கள். இது வரை இதை ஓதியதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு இனி மேல் ஓதுவதில்லை எனத் தீர்மானமும் செய்து கொண்டால் மட்டுமே இறைவனுடைய வேதனையிலிருந்து தப்ப முடியும்.
وقـلت إن يـدي هـذي لـدائـمة
لـمن يـريد طـريـقي وهـي قائمة
فـازت بـها أنـفس لـلرشد رائمة
أنـا الـمنادي بـحق محيي الـديـن
எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும். என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். தீனை உயிர்ப்பித்தவர் என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.
இதற்கு முந்தைய வரிகளில் வரம்பு மீறியது போலவே இங்கும் வரம்பு மீறப்படுகின்றது. என்றென்றும் நீடித்திருக்கும் இறைவனது தனித்தன்மை இங்கே அப்துல் காதிருக்கு பங்கு போடப்படுகின்றது. மண்டைக் கனம் கொண்டவராக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இங்கே சித்தரிக்கப்படுகிறார்கள். முந்தைய அடிகளில் நாம் எடுத்து வைத்த குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் முரணாக இவ்வரிகள் அமைந்துள்ளன.
كم من كرامات حق منك قـد ظهرت
منـيرة في قـلوب الـخلق قد زهرت
كمـعجزات نـبي في الورى اشتهرت
يـا مـن دعـى ربـه يـا محيي الدين
உண்மையான அற்புதங்கள் ஏராளமாக உங்களிடமிருந்து வெளிப்பட்டன. மக்கள் உள்ளங்களில் அந்தச் செய்தி தெளிவாகப் பதிந்துள்ளது. நபியவர்களின் அற்புதம் போலவே மக்களிடம் பிரபல்யமாக உள்ளது. இறைவனால் முஹ்யித்தீன் என்று அழைக்கப்பட்டவரே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களுடன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அற்புதங்களை இந்தக் கவிஞன் இங்கே ஒப்பிட்டுச் சமப்படுத்துகின்றான். அப்துல் காதிர் ஜீலானி பெயரால் ஏராளமான பொய்கள் அற்புதங்கள் என்று அவிழ்த்து விடப்பட்டிருப்பதில் ஆனந்தம் கொள்கிறான். புராண இதிகாசங்களில் இதை விடவும் அற்புதங்கள் கூறப்படுகின்றன.
அவை எவ்வாறு நம்பத்தக்கவை அல்லவோ அது போன்ற பொய்களைத் தான் இவன் அற்புதம் என்கிறான். அவரை இறைவனே, முஹ்யித்தீன் என்று அழைத்ததாகக் கூறும் இந்தக் கவிஞன் மற்றொரு இடத்தில் முஹ்யித்தீன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு வேறு ஒரு கதை சொல்கிறான். அந்தக் கவிதை வருமாறு:
رأيت دين الهدي شخصا غـدى حرضا
فـشفيتـه لـمسـة كـفيتـه عرضا
فـزال عـنه الـذي قـد عمه مرضا
فـقام يـدعـوك حـبا محيي الـدين
நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதனிடம் இருந்த நோய் விலகி அவன் எழுந்து அன்புடன் தீனை உயிர்ப்பித்தவரே என்று தங்களை அழைக்கலானான்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கு முஹ்யித்தீன் (தீனை உயிர்ப்பித்தவர்) என்ற பட்டம் எவ்வாறு கிடைத்தது என்று இந்தக் கவிஞன் இங்கே கூறுகிறான்.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறு இருக்க இஸ்லாம் எப்படி மனித வடிவம் பெற முடியும்? இதை எவரேனும் நம்ப முடியுமா?
இதை உருவகமாக அவன் கூறி இருக்கிறான் என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்தக் கவிதை தவறாகவே அமைந்துள்ளதை உணரலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் தூய இஸ்லாத்தில் கலப்படங்கள் நுழைய ஆரம்பித்தன. ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் அந்தக் கலப்படங்களை அப்புறப்படுத்தும் பணியை பலரும் மேற்கொண்டனர். அப்துல் காதிர் ஜீலானி அவர்களும் அவர்களில் ஒருவர் என்று கூறலாமே தவிர அவர் மாத்திரமே தீனை உயிர்ப்பித்தவர் என்பது எல்லா நல்லடியார்களின் சேவையையும் புறக்கணிப்பதாகவே அமையும்.
இப்படி இந்தக் கவிதை நெடுகிலும் ஏராளமான தவறுகள் மலிந்துள்ளன. மிகவும் மோசமான கவிதைகளையே இங்கே நாம் விமர்சனம் செய்துள்ளோம். எல்லா வரிகளும் விமர்சனம் செய்யப்படவில்லை. நாம் விமர்சிக்காது விட்டு விட்ட வரிகள் சிலவற்றில் தவறான கருத்துக்கள் இல்லை. வேறு சில வரிகளில் இருக்கும் தவறுகள் சமாளிக்கத்தக்கதாக உள்ளன. இதனாலேயே விமர்சிக்காமல் விட்டுள்ளோம். யாகுத்பாவிலும், மவ்லுதிலும் இருக்கின்ற தவறுகளை நீக்கி விட்டு அதை ஓதலாம் அல்லவா? என்பது சிலரது கேள்வி.
தவறுகள் இல்லாத எந்தப் பாடலையும் படிக்கத் தடை எதுவும் இல்லை. தவறு இல்லாத ஒரு தமிழ்ப்பாட்டை எப்படிப் படிக்கலாமோ அப்படிப் படிக்கலாம். அதற்காகப் பக்திப் பரவசத்துடன், பத்தி சாம்பிராணியுடன், மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் படிக்க முடியுமா?
தவறுகள் இல்லாத அந்தக் கவிதைகளின் அர்த்தம் தெரிந்தவர்கள் அதைப் படிக்கலாம். வணக்கமாக கருதப்படும் நிலையில் தவறுகளே இல்லாவிட்டாலும் படிக்கக் கூடாது. ஆரம்பமாக நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து இதை விளங்கலாம். இந்த மவ்லிதுகள், யாகுத்பாக்கள் போன்ற ஈமானைப் பறிக்கும் நச்சுக் கவிதைகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!