ரவ்ளா ஷரீப் வேறு! அடக்கத்தலம் வேறு!
ரவ்ளா என்ற வார்த்தைக்கு பூங்கா என்று பொருளாகும். ஆனால் மார்க்க அறிவு இல்லாத சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ரவ்ளா ஷரீப் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை – அடக்கத்தலத்தை ரவ்ளா என்று குறிப்பிடுவதே நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும்போது தம்முடைய வீட்டிற்கும், மஸ்ஜிதுன் நபவீ பள்ளியில் நபியவர்கள் நின்று உரையாற்றும் மிம்பருக்கும் மத்தியிலுள்ள பகுதியைத் தான் ரவ்ளா என்று குறிப்பிட்டார்கள்.
صحيح البخاري رقم فتح الباري (2/ 61)
1195 – حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن عبد الله بن أبي بكر، عن عباد بن تميم، عن عبد الله بن زيد المازني رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: «ما بين بيتي ومنبري روضة من رياض الجنة»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும், எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1196
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவியின் ஒரு பகுதியைத்தான் ரவ்ளா (பூங்கா) என்று குறிப்பிட்டுள்ளார்கள். ரவ்ளா என்பதில் நபியவர்களின் வீடு அடங்காது.
மேலும் இது நபியவர்கள் உயிரோடு வாழும்போது கூறிய வார்த்தையாகும். அப்போது நபியவர்களுக்குக் கப்ரு கிடையாது.
நபியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை ரவ்ளா என்று குறிப்பிட்டுள்ளார்கள். நபிவழிக்கு எதிராக மண்ணறையை ரவ்ளா என்று அறிவீனர்கள் குறிப்பிடுகின்றனர். பள்ளிவாசலைக் குறிக்கும் ரவ்ளா என்ற வார்த்தையை மண்ணறையைக் குறிக்கும் வார்த்தையாக ஆக்கி, மண்ணறையைப் பள்ளிவாசலாக மாற்றுவது தெளிவான யூதக் கலாச்சாரமாகும்.