ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

அஷ்ரஃப் அலி

பதில்:

ற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன.

பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும்.

பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும்.

வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? எங்கு நீட்டக் கூடாது? என்று விதிமுறைகள் அரபுமொழியில் உள்ளன. அரபுமொழியில் அமைந்த பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்பட்டால் அதில் தவறில்லை. ஆனால் நடைமுறையில் பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்படுவதில்லை. பாங்கு சொல்பவர் தான் விரும்பிய இடங்களில் தன் விருப்பப்படி நீட்டிக் கொள்கிறார்.

உதாரணமாக அல்லாஹு என்று கூற வேண்டிய வார்த்தையை அல்லா……………………… என்று சில மணித்துளிகள் நீட்டி பிறகு  ஹு என்று கூறுகிறார். இது அரபு மொழியில் இல்லாத வழக்கு முறை. ஒரு வார்த்தையை அம்மொழி வழக்கிற்கு மாற்றமான முறையில் உச்சரித்தால் அது கேலியாகவும், கிண்டலாகவும் அமையும்.

ஹய்ய என்பதை ஹய்ய்ய்ய்ய்ய என்று நீட்டுவதும், அஷ்ஹது என்பதை அஷ்ஹதூஊஊஊ என்று நீட்டுவதும், இன்னும் பலவாறாக அரபு மொழிவழக்கில் இல்லாத வகையில் நீட்டுவதும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் பாங்கு சொல்வது ஒரு வணக்கமாகும். அதைச் சொல்பவருக்கும், அதைக் கேட்டு பதிலுரைப்பவர்களுக்கும் மார்க்க அடிப்படையில் சிறப்புகள் இருக்கின்றன. வணக்கமாக இருக்கின்ற இந்தக் காரியத்தைச் சரியாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டுமே தவிர கேலிக்குரியதாக ஆக்கிவிடக் கூடாது.

முஅத்தின் பாங்கு சொன்னால் அதைக் கேட்பவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. தேவையின்றி பாங்கு நீட்டப்படும் போது பதிலளிப்பவர் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இடையில் பேச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நீட்டாமல் சாதாரண அறிவிப்பைப் போன்று பாங்கு கூறப்பட்டால் இது போன்ற சிக்கல் ஏற்படாது.

பாங்கில் ராகம் போடுவது கட்டாயமனதல்ல. ராகத்துடன் சொன்னாலும், ராகம் இல்லாமல் சொன்னாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிவாசல்களிலும் கூட பாங்கை நீட்டி முழக்கி கொலை செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சாரகர்களும், நிர்வாகிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

Leave a Reply