வலி, ரலி பட்டம் எப்படி கொடுக்கப்படுகிறது?
முஹம்மத் அப்துல் அஸீஸ்
பதில் :
பெயருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் (ரலி) என்று எழுதும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. ரலி என்பது பட்டமல்ல. இது பிரார்த்தனை வாக்கியத்தின் சுருக்கமாகும். ரலியல்லாஹு அன்ஹு (அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக) என்பது இதன் விரிவாக்கம்.
நபித்தோழர்களைக் குறிப்பிடும் போது அவர்களின் பெயருக்குப் பின்னால் ரலி என்று எழுதப்படுகின்றது. இவ்வாறு எழுதப்பட்டால் கூறப்படும் நபர் நபித்தோழர் என்று புரிந்து கொள்ளலாம்.
நபித்தோழர் அல்லாதவர்களைக் குறிப்பிடும் போது அவர்களின் பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் ரஹ் என்று எழுதும் வழக்கம் உள்ளது. ரஹ்மதுல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் அவருக்குக் கிடைக்கட்டும்) என்பது இதன் விரிவாக்கம். இவ்வாறு எழுதப்பட்டால் குறிப்பிடப்படும் நபர் நபித்தோழர் இல்லை என்பதை அறியலாம்.
எனவே ரலி என்பதும் ரஹ் என்பதும் ஒருவர் நபித்தோழரா? இல்லையா? என்பதை உணர்த்துவதற்காகவே எழுதப்படுகின்றது. நபித்தோழர்களின் பெயர்களுக்குப் பின்னால் இவ்வாறு குறிப்பிட வேண்டும் என்றோ, நபித்தோழர்களுக்குப் பயன்படுத்தப்படும் இவ்வார்த்தையை மற்றவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றோ மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக் கொண்ட வழக்கமாகும்.
எனவே (ரலி) என்று குறிப்பிடாமல் நபித்தோழர்களின் பெயரைக் கூறினால் அது தவறல்ல. இதை நபித்தோழர்கள் அல்லாத மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால் அதிலும் தவறில்லை.
ஆனால் வலீ என்பது இதைப் போன்றதல்ல. இறைநேசன் என்பது இதன் பொருள். ஒருவருக்கு இறைநேசன் என்ற இந்தப் பட்டத்தைச் சூட்ட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவரை இறைவன் நேசிக்கின்றானா? இல்லையா என்பதை இறைவன் மட்டுமே அறிந்தவன். மனிதர்கள் யாரும் இதைச் சுயமாக அறிந்துகொள்ள முடியாத போது ஒருவரை இறைநேசன் என்று கூறுவது அதிகபிரசங்கித் தனமாகும். இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். அல்லாஹ்வும், அவனது தூதரும் இறைநேசர் என்று அறிவிப்பு செய்தவர்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் இறைநேசர் எனக் கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
சில போலி ஆண்மிகவாதிகள் தங்களுக்கு இந்தப் பட்டத்தை சூட்டிக்கொண்டு சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். சமுதாயம் இந்தப் பித்தலாட்டக்காரர்களை நம்பி ஏமாந்துவிடக் கூடாது.
ரலி பற்றி மேலும் விபரம் அறிய அர்த்தமுள்ள கேள்விகள் என்ற நமது நூலில் 59 ஆம் கேள்வியைப் பார்க்கவும்.
14.08.2011. 16:43 PM