விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?
விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா?
ஸீனத்
பதில்:
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்காமல் தொழுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கின்றனர்.
ஒரு வகையினர் விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை அறியாது இருப்பதாலோ, அந்தச் செய்தி பலவீனமானது என்று கூறும் சிலருடைய தவறான கூற்றைச் சரி என்று நம்புவதாலோ இது போன்ற காரணங்களால் விரலசைக்காமல் தொழுவார்கள்.
இவர்கள் குறிப்பிட்ட இந்த நபிவழியை விட்டது தவறு என்றாலும் இவர்களின் இத்தவறை இறைவன் மன்னிப்பதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. எனவே இறைவன் இவர்களை மன்னித்து விடலாம்.
ஆனால் இன்னொரு வகையினர் இருக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை இவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பர். மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு இந்த நபிமொழியைப் புறக்கணிப்பர்.
மேலும் சிலர் தனது தொழுகையை நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்கள் என்று பார்க்காமல் மத்ஹபுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வார்கள். இவர்களிடம் நபிமொழியைக் காட்டினால் அதைப் படித்துப் பார்ப்பதற்குக் கூட முன்வர மாட்டார்கள். இவர்களும் நபியவர்களைப் புறக்கணிப்பவர்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டிய முறைப்படி மதிக்கவில்லை. இதனால் இவர்களின் தொழுகையை ஏற்காமல் இறைவன் மறுத்து விடலாம்.