ஷைத்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பானா?
ஷைத்தான் எந்த நபித்தோழருக்கு ஆயதுல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தானா?
அஹ்மத்
ஷைத்தான் ஆயத்துல் குர்ஸீயைக் கற்றுக் கொடுத்த நபித்தோழர் அபூஹுரைரா (ரலி)ஆவார்.
صحيح البخاري
5010 وقال عثمان بن الهيثم ، حدثنا عوف ، عن محمد بن سيرين ، عن أبي هريرة رضي الله عنه قال : وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان، فأتاني آت، فجعل يحثو من الطعام، فأخذته، فقلت : لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم. فقص الحديث : فقال : إذا أويت إلى فراشك فاقرأ آية الكرسي لن يزال معك من الله حافظ، ولا يقربك شيطان حتى تصبح. وقال النبي صلى الله عليه وسلم : " صدقك وهو كذوب، ذاك شيطان ".
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, "உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்' என்று சொன்னேன்' என்று கூறிவிட்டு, அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள்.- (இறுதியில், திருட வந்த) அவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது "ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்க மாட்டான்'' என்று கூறினான். (இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், "அவன் பெரும் பொய்யனாயிருப்பினும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கின்றான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்'' என்று கூறியதாகவும் சொன்னார்கள்.
நூல் : புகாரி 5010
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்பவன், மனித சமுதாயத்தை வழி கெடுப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ள உண்மையான ஷைத்தான் அல்ல. தீய மனிதனைத் தான் இங்கு ஷைத்தான் என்று கூறப்படுகிறது.
திருக்குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். நேரடிப் பொருளில் புரிந்து கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, மற்ற ஹதீஸ்களுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வந்தவன் ஷைத்தானாக இருந்தால் அவனை அபூஹுரைரா (ரலி) அவர்களால் பார்த்திருக்க முடியாது.
ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவனைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவனைத் தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள். வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருக்கவில்லை. கெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம் அறியலாம்.
மேலும் மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும். இது தான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூட. அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி) அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.
ஆனால் அவனால் அவ்வாறு செய்ய இயலவில்லை. திருட வந்தவன் அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் கெட்ட மனிதன் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
ஷைத்தான்களின் உணவு முறையும், மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும் வேறுபட்டதாகும். கால்நடைகளின் சாணங்களும், எலும்புகளும், கரிக்கட்டைகளும் தான் ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தவன் இவற்றைத் திருடுவதற்காக வரவில்லை. மனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களைத் திருடுவதற்காகவே வந்துள்ளான். வந்தவன் மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.
கெட்ட செயலைச் செய்பவர்களையும், கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு குர்ஆனிலும்ம் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
صحيح البخاري
3274 حدثنا أبو معمر ، حدثنا عبد الوارث ، حدثنا يونس ، عن حميد بن هلال ، عن أبي صالح ، عن أبي هريرة قال : قال النبي صلى الله عليه وسلم : " إذا مر بين يدي أحدكم شيء وهو يصلي فليمنعه، فإن أبى فليمنعه، فإن أبى فليقاتله ؛ فإنما هو شيطان ".
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3275
தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்ற வார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருட வந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.
ஸகாத் பொருளைத் திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலி) அவர்களை ஏமாற்றி திருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.