ஹிப்னாட்டிசம் உண்மையா?

ஹிப்னாட்டிசம் உண்மையா?

கேள்வி

ஹிப்னாடிஸம் (hypnotism) என்றால் என்ன? அது ஒருவிதமான கலையா? அல்லது அனைவராலும் இயலுமான காரியமா? அடுத்தவருடைய சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்வது சரியா?

சாந்து மக்பூல் கான்

பதில்:

ஹிப்னாடிசம் என்ற சொல்லிற்கு தமிழில் நோக்குவர்மம் என்று பெயரிட்டுள்ளனர்.

ஹிப்னாடிசம் மூலம் நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தனது முன்னால் இருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ முடியும் என்று சிலரால் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் கற்பனை தானே தவிர உண்மையல்ல. இவ்வாறு செய்ய முடியும் என்று எந்த ஒரு விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. கியாமத் நாள் வரை முயற்சி செய்தாலும் நிச்சயமாக இதனை நிரூபிக்க முடியாது என்பதை உலகத்திற்கு சவாலாகவே நாம் சொல்லிக் கொள்ளலாம்.

ஹிப்னாட்டிசம் மூலம் என்னை வசப்படுத்திக் காட்டுங்கள் என்று பலரிடம் நாம் அறைகூவல் விட்டுள்ளோம். நம்பியவர்களுக்குத் தான் இது பலிக்கும்; நம்பாதவர்களை ஹிப்னாட்டிசம் செய்ய முடியாது என்பது தான் அவர்களின் ஒரே பதிலாக உள்ளது. எல்லா பிராடு பேர்வழிகளும்(?) இதையே தான் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஹிப்னாட்டிசம் குறித்த பல நூல்களை நாம் வாசித்த போது அதில் எந்த விஞ்ஞான உண்மையோ, ஏற்கத்தக்க எந்த லாஜிக்கோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஹிப்னாட்டிசம் செய்வதாக கூறுவோருக்கு மனநோய்க்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் நாம் வர முடிகிறது.

எந்த ஒரு ஹிப்னாட்டிச நிபுணர்(?) முன்வந்தாலும் அவர் முன்னிலையில் அது ஒரு பித்தலாட்டம் என்று நாம் நிரூபித்துக் காட்டத் தயாராக இருக்கிறோம்.

மார்க்க அடிப்படையிலும் இப்படி நம்புவது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றமாகும்.

ஒருவருக்கு பதிப்பை ஏற்படுத்த அல்லாஹ் எந்த வழிகளை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும். எவ்வித புறச் சாதனங்களும் இல்லாமல் பார்த்த மாத்திரத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் என்பது இறைவனுக்குரிய ஆற்றலாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பு ஏற்படுத்த முடியவே முடியாது.

ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும் என்பதை நாம் நம்பலாம். கண்கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வைப் போல் யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்பதை நாம் அறிவோம்.

எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு வகையிலேனும் இறைவனின் நிலையில் வைக்கப்பட்டால் அது அப்பட்டமான இணை வைத்தலாகும். அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக் கொள்கைக்கு இது முரணானதுமாகும்.

அல்லாஹ் ஒரு மனிதனை ஊனமாக்கவோ, கை கால்களை முடக்கவோ, படுத்த படுக்கையில் கிடத்தவோ நினைத்தால் அந்த மனிதன் மீது எந்த சாதனத்தையும் செலுத்தாமல், எப்படி இது நடந்தது யாராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் செய்து முடிப்பான்.

இது போல் மனிதர்களும் செய்வார்கள் என்று நம்புவது அல்லாஹ்வைப் போல் யாரும் இல்லை என்ற அடிப்படைக்கு முரணானதாகும்.

ஹிப்னாடிசம் என்பதைப் பற்றி இப்படித் தான் நம்புகின்றனர். ஹிப்னாடிசம் செய்பவன் தன்னுடைய பார்வையினாலேயே ஒருவனுடைய கை கால்களை முடக்குவான் என்றும், அவனைத் தொடாமல், அவன் மீது எந்தச் சாதனத்தையும் பயன்படுத்தாமல் இதைச் செய்து விடுவான் என்றும், ஒருவனது உள்ளத்தில் உள்ள இரகசியங்களை எல்லாம் ஹிப்னாட்டிசம் மூலம் அறிந்து கொள்வான் என்றும் கருதுகின்றனர். இப்படி நம்பும் போது ஹிப்னாட்டிசம் செய்பவன் இறைவனைப் போன்ற ஆற்றல் உள்ளவன் என்று ஆகிவிடும்.

நம்முடைய உள்ளங்கள் அல்லாஹ்வுடைய கையில்தான் உள்ளன. உள்ளங்களை மாற்றுகின்ற ஆற்றல் மனிதனுக்குக் கிடையாது. எந்த ஒரு மனிதனும் இறைவனைப் போன்று நம்முடைய சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.

உள்ளங்களில் உள்ளதை அறிபவன் என்பது அல்லாஹ்வின் தனிப்பட்ட தகுதிகளில் ஒன்றாகும். ஹிப்னாட்டிசப் பேர்வழிகள் தாங்களும் அந்த இறைத்தன்மையில் கூட்டாளிகளாகக் காட்டிக் கொள்கின்றனர்.

3:119, 3:154, 5:7, 8:43, 11:5, 27:74, 28:69, 29:10, 31:23, 35:38, 39:7, 40:19, 42:24, 57:6, 64:4, 67:13, ஆகிய வசனங்கள் உள்ளங்களில் உள்ளதை அறிந்து கொள்வது இறைவனுக்கு மட்டுமே உள்ள தனித்தகுதி என்று கூறுகின்றன. இவ்வளவு வசனங்களையும் மறுத்து விட்டுத்தான் ஹிப்னாட்டிசத்தை நம்ப முடியும்.

صحيح مسلم

6921 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كِلاَهُمَا عَنِ الْمُقْرِئِ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىَّ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّ قُلُوبَ بَنِى آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ ».

ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரே உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே ஹிப்னாடிசம் என்பதை ஒருவன் நம்பினால் அது இணைவைப்பில் சேர்த்துவிடும்.

ஒரு மனிதனிடம் பக்குவமாகப் பேசி அவனது வாயில் இருந்து சில செய்திகளைப் பிடுங்கலாம் என்பதைத் தவிர ஹிப்னாட்டிசம் பற்றி சொல்லப்படும் அனைத்தும் பொய்யானவை. இதில் கடுகளவும் நமக்கு சந்தேகம் இல்லை.

09.02.2012. 22:25 PM

Leave a Reply