134. ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்
யூதர்களும், கிறித்தவர்களும் இறுதிக் காலத்தில் சரியான முறையில் ஈஸா நபியைப் பற்றி நம்பிக்கை கொள்வார்கள் என்று இவ்வசனத்தில் (4:159) கூறப்பட்டுள்ளது.
யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தவறான வழியில் பிறந்தவர் என்று ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.
கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.
எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.
இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில், அதாவது ஈஸா நபி குறித்து இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் (4:159) முன்னறிவிப்புச் செய்கிறது.
இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டுவோம்.
'அவரை நம்பிக்கை கொள்ளாமல்' (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் 'அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத்தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத்தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.
ஆனால் இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த 'அவரது' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.
"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று சிலர் பொருள் கொள்கின்றனர். இது தவறான மொழிபெயர்ப்பாகும்.
அவரது மரணத்திற்கு முன்னர் என்றால் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று மற்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். பல காரணங்களால் இதுவே சரியான மொழிபெயர்ப்பாகும்.
அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இதில் இடமிருக்கிறது. இதுபோன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது தான் முறையாகும்.
ஆனால், இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளில் முதல் மொழிபெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. இந்த மொழிபெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.
இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!
"வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.'' இதுதான் முதல் சாராரின் மொழிபெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.
அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் தாம் மரணிப்பதற்கு முன் சரியான முறையில் நம்பிக்கை கொண்டு விடுகிறார்கள் என்பது இதன் கருத்து.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் சரியான நம்பிக்கையில் மரணிக்கிறார்கள் என்ற கருத்தின்படி யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.
ஓரிறைக் கொள்கையை ஏற்காத மற்றவர்கள் தண்டிக்கப்படுவதைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.
ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும்போது முஸ்லிம்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.
இந்த மொழிபெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும்போது, அவரது மரணத்திற்கு முன் – அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத்தான் நாம் ஏற்றாக வேண்டும்.
இவ்வசனம் அருளப்படும்போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது.
மேலும், நம்பிக்கை கொண்டார்கள் என்று இறந்தகால வினையாகக் கூறாமல் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா நபி மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.
ஈஸா நபி இறுதிக் காலத்தில் இறங்குவார்கள். அப்போது அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் ஈஸா நபி மரணிப்பார்கள் எனக் கூறும் ஹதீஸ்கள் இந்த வசனத்தின் விளக்கமாக அமைகின்றன.
இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும்போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம்பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டிவிடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும்போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.
திருக்குர்ஆனில் ஒரு செய்தி கூறப்படுமானால் அதை நமது சொந்த அபிப்பிராயங்களைக் கூறி நிராகரிக்கக் கூடாது. "ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் அவரை வேதமுடையவர்கள் ஏற்கும் நிலை உருவாகும்'' என்றால் இதிலிருந்து அவர் மரணிக்கவில்லை என்று புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.
ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.
ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் "இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்'' என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ளலாம். (நூல் : புகாரீ 3448)
ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது மேலும் இது உறுதியாகின்றது.
இவ்வசனத்தில் அவர்களுக்கு சாட்சி சொல்வார் என்று மொழிபெயர்த்த இடத்தில் அரபுமூலத்தில் அலைஹி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அலைஹி என்று சொல்லப்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறு பொருள் கொண்டால் ஈஸா நபியை ஏற்றவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வார் என்ற கருத்து கிடைக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
தன்னை ஏற்றுக் கொண்டவர்களுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக ஈஸா நபி சாட்சி சொல்வார் என்பதில் இருந்து அவர்கள் ஈஸா நபியை ஏற்க வேண்டிய விதத்தில் ஏற்கவில்லை என்று ஆகின்றது. எனவே அனைவரும் இறுதிக் காலத்தில் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று பொருள் கொள்வது தவறு என்றும் வாதிடுகின்றனர்.
அலைஹி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வார் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. அவர்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்வார் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
அதாவது சாதகமாகச் சாட்சி சொல்லுதல், பாதகமாகச் சாட்சி சொல்லுதல் என்ற இரு அர்த்தங்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இடத்தைப் பொருத்து இதற்கு பொருள் செய்வதே சரியாகும்.
உதாரணமாக 22:78 வசனத்தில் முஸ்லிம்கள் பற்றி பேசும்போதும் இதே போன்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முஹம்மது நபி சாட்சி சொல்வார் என்று பொருள் கொள்ள முடியாது.
2:143, 4:41, 5:113, 16:89, 73:15 ஆகிய வசனங்களிலும் இது போன்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுதல் என்று பொருள் கொள்ளாமல் அவர்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்லுதல் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
நல்லவர்களைக் குறித்து இச்சொல் பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்குச் சாதகமாக சாட்சி கூறுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். கெட்டவர்கள் குறித்து இச்சொல் பயன்படுத்தப்பட்டால் பாதகமாக சாட்சி சொல்வார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஈஸா நபியைச் சரியான முறையில் நம்பிக்கை கொண்ட யூத கிறித்தவர்கள் பற்றி இவ்வசனம் கூறுவதால் சாதகமாக சாட்சி சொல்வார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக்காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி அறிய 93, 101, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளையும் காண்க!