245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை 

இப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245,14:35) கூறுகின்றன.

இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை திருக்குர்ஆன் உயர்த்துகிறது. அவர்களது வழியைப் பின்பற்றுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையும் இடுகிறது.


இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கின்ற இப்ராஹீம் நபியவர்கள், சிலை வணக்கத்தில் இருந்து தமது வழித்தோன்றல்களைப் பாதுகாக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்த விபரம் 14:35 வசனத்தில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் வழித்தோன்றல்கள் சிலை வணங்குவோராக ஆனார்கள்.

மேலும் தமது வழித்தோன்றல்கள் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். இறைவனோ இதனை நிராகரித்து அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் உமது பிரார்த்தனை ஏற்கப்படாது என்று அறிவித்ததாக 2:124 வசனம் கூறுகிறது.

எவ்வளவு பெரிய தூதராக இருந்தாலும் அவர்களது பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இறைவன், தான் நாடியதை மட்டுமே செய்வான் என்ற ஏகத்துவக் கோட்பாட்டை இவ்வசனம் உறுதியாக நிலைநாட்டுகிறது.

மகான்கள் அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் கட்டாயம் அதை ஏற்றுக் கொள்வான் என நம்பி சமாதி வழிபாடு செய்பவர்களுக்குத் தக்க மறுப்பாக இது அமைந்துள்ளது.

இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் உற்ற நண்பராக இருந்தும் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்காமல் விட்டுள்ளான் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply