267. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன?
இவ்வசனங்கள் (17:60, 53:13-18, 32:23) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுகின்றன.
17:60 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்குச் சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இதில் ருஃயா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ருஃயா என்பது கனவைக் குறிக்கும் என்றும், கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சியைத் தான் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான் என்றும் சிலர் விளக்கம் கொடுக்கின்றனர்.
ருஃயா என்பதற்கு கனவு என்ற பொருள் இருப்பது உண்மை தான். பார்த்தல் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது.
புகாரீ 3888வது ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறக்கண்களால் மிஃராஜில் பார்த்ததைத் தான் இவ்வசனம் சொல்கிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளனர்.
இது இப்னு அப்பாஸ் அவர்களின் சொந்த விளக்கம் தான். நபி சொன்னது அல்ல. ஆனால் அரபு மொழியில் ருஃயா என்பது நேரடியாகப் பார்த்ததையும் குறிக்கும் என்பதற்குச் சான்றாகவே இதைக் குறிப்பிட்டுள்ளோம். மொழிக்குப் பொருள் செய்வதற்கு மொழி வல்லுனர்களின் கூற்றைத் தான் சான்றாகக் காட்ட முடியும்.
ருஃயா என்பது கனவில் பார்த்தல், நேரடியாகப் பார்த்தல் என்ற இரு கருத்துக்களுக்கு இடம் தந்தாலும் இந்த வசனத்தில் கனவில் பார்த்தல் என்று பொருள் கொள்ள முடியாது.
அந்தக் காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாக ஆக்கினோம் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
கனவில் நபிகள் நாயகம் (ஸல்) எதைப் பார்த்ததாகக் கூறினாலும் அது மக்களுக்குச் சோதனையாக ஆகாது. கனவில் ஒரு இரவில் இவ்வளவு அதிசயங்களைக் கண்டேன் என்று யார் கூறினாலும் கனவில் தான் எதையும் பார்க்கலாமே என்று மக்கள் ஒப்புக் கொள்வார்கள்.
ஒரு இரவில் இவ்வளவு காட்சிகளை நேரில் பார்த்து விட்டு வந்தேன் என்று கூறினால் தான் அது மனிதர்களுக்குச் சோதனையாக ஆகும்.
இந்தக் காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாக ஆக்கினோம் என்ற வாக்கியத்தில் இருந்து இது கனவுக்காட்சியைப் பற்றி பேசவில்லை என்று அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்னபோது அதை அவர்களில் சிலர் ஏற்க மறுத்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்த பிறகு மதம் மாறிச் சென்றனர். அதைத்தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அக்காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டி அதை அவர்கள் மக்களிடம் கூறும்போது மக்கள் நம்புகிறார்களா என்று சோதித்துப் பார்த்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீனமான நம்பிக்கை உடையவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் சான்றுகளாக உள்ளன.
இதைப் பற்றி அதிக விபரம் அறிய 263, 315, 362வது குறிப்புகளையும் காண்க!