ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் வேறுபாடு என்ன?
மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்?
மு.கா. அஹ்மத், மதுரை
ஷியாக்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு முன்னால் மத்ஹப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ஹப் என்றால் போகுமிடம், போக்கிடம் என்பது பொருள். மலஜலம் கழிப்பதற்காகப் போகுமிடம், அதாவது கழிப்பிடம் என்ற பொருளில் தான் இந்தச் சொல் ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
سنن أبي داود (1/ 1)
1 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்ஹபுக்குப் போகும் போது தூரமாகச் சென்று விடுவார்கள்.
நூல்கள் : அபூதாவூத்1, திர்மிதீ20, நஸயீ 17, அஹ்மத் 326
ஒருவரது சிந்தனை சென்ற இடம் என்ற கருத்தில் மத்ஹப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு பின்னர் சிந்தனை என்ற கருத்து கொள்ளப்பட்டது.
ஷாஃபி மத்ஹப் என்றால் ஷாஃபி இமாமின் சிந்தனை என்று பொருள். மத்ஹபுகள் நான்கு மட்டுமே இருப்பதாகக் கூறுவது தவறு! மத்ஹப் இஸ்ஹாக் இப்னு ராஹவை, மத்ஹப் சுஃப்யானுஸ் ஸவ்ரி, மத்ஹப் ஹஸன் பஸரி என்று ஏராளமான மத்ஹபுகள் இருந்துள்ளன.
இந்த இமாம்கள் கூறிய மார்க்கச் சட்டங்களை அவரது மத்ஹப் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தார்கள். தனது மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த இமாமும் கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பிடித்துக் கொண்டு, அதை மட்டுமே தாங்கள் பின்பற்ற வேண்டும், அது தான் இஸ்லாத்தின் கொள்கை என்பது போல் மாற்றி விட்டார்கள்.
தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளிலும், இதர மார்க்கச் சட்டங்களிலும் மத்ஹபுகளில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், கடவுள் கொள்கை விஷயத்தில் மத்ஹப்வாதிகளை விட ஷியாக்கள் அதிகம் எல்லை மீறியவர்களாவர்.
அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ (ரலி) அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் கூட்டத்தினர் என்று பொருள். அலீ (ரலி)க்கு ஆதரவான கூட்டம் என்பதால் "ஷீயத் அலீ – அலீயுடைய கூட்டத்தினர்' என்று அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ (ரலி) அவர்களையும், அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி-அன்ஹும்) ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.
அலீ (ரலி) அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.
அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் தாமே வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் "காஃபிர்கள்' (இறை மறுப்பாளர்கள்) என்று ஷியாக்கள் கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.
சமாதி வழிபாடு, தரீக்கா, ஷைக், முரீது என சமுதாயத்தில் நிலவி வரும் எண்ணற்ற வழிகேடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஷியாயிஸம் தான். ஷாதுலிய்யா, காதிரிய்யா போன்ற தரீக்காக்கள் அனைத்தும் சங்கிலி தொடராகச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் போய் முடிவடையும். இந்த வழிகேடுகள் ஷியாக்களிடமிருந்து வந்தவை என்பதே இதற்குக் காரணம்.
இப்படி இஸ்லாத்திற்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான கொள்கைகளை உடையவர்கள் தான் ஷியாக்கள்.