312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

312. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

பிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியாது என்று இவ்வசனங்கள் (6:112, 7:157, 7:158, 25:5, 29:48) கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் சிலர் இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.

படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர்.

அல்லது படிக்காத ஒருவரை தங்களின் வழிகாட்டி என்று சொல்ல வெட்கப்படுகிறார்களோ என்னவோ?

இதற்கு ஆதரவாகச் சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.

படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகக் கருதப்பட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்துவதாக அமைந்து விடும்.

படிப்பறிவு, மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.

எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் சிறந்த தகுதியாகும்.

அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றிருக்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் நம்பியிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலைதான் இந்தத் தகுதிக் குறைவு.

"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.

இவ்வசனத்தில் (29:48) அல்லாஹ் இவ்வாறுதான் கூறுகிறான். "உமக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம்.

வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இந்தச் சிறப்பை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் (29:48) இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

திருக்குர்ஆன் 7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை 'உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.

25:4,5 வசனங்களில் இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர் என்று கூறப்படுகிறது. இவ்வசனமும் நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இட்டுக்கட்டியதாகவும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் எதிரிகள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக எழுதிக் கொண்டார்கள் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக் கொண்டார்கள் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால்தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள்.

'கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். 'இக்ததப' என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தில் 'இக்ததப' என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக 29:48 வசனம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னரும் எந்த நூலில் இருந்தும் நீர் வாசித்ததில்லை; இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.

உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். 'வலாதஹுத்து' என்பது எதிர்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.

நபியாக ஆவதற்கு முன்பும் நீர் எழுதியதில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் "நபியாக ஆன பின்பு எழுதப்படிக்க அறிந்திருக்கக் கூடும்'' என்று சிலர் வாதம் செய்வது தவறு என்பது நிரூபணமாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுவார்கள்.


ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்று எழுதப்பட்டதை எதிரிகள் மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டால் தான் நமக்கிடையே எந்த விவகாரமும் இல்லையே எனக் கூறினார்கள். இதை ஏற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதச் சொன்னார்கள். நபித்தோழர்கள் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை அழிக்க முன்வரவில்லை. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட தமது பெயரை அழித்தார்கள். (பார்க்க: புகாரீ 2500, 2501, 2947, 3920) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதத் தெரிந்திருந்தால் தான் தமது பெயரைக் கண்டுபிடித்து அழித்திருக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர். எழுதத் தெரியாது என்று தெளிவான சான்றுகள் இவ்வளவு இருக்கும்போது சுற்றி வளைத்துக் கொண்டு சான்று காட்டுகின்றனர்.

இவர்களின் வாதம் தவறு என்று புகாரீ 3184வது ஹதீஸ் மறுக்கின்றது.


“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் “அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்” என்பதை அழித்து விட்டு “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்” என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்குக் கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டார். “அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள் என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்”  

என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply