341. பாக்கியம் நிறைந்த இரவு
திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்று 2:185 வசனம் கூறுகிறது.
இந்தப் பாக்கியம் பொருந்திய இரவு ரமலானில் தான் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ரமலானில் 'லைலத்துல் கத்ர்' இரவில் திருக்குர்ஆனை அருளினோம் என்று 97:1 வசனம் கூறுகிறது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவதும், 97:1 வசனத்தில் மகத்துவமிக்க இரவு (லைலதுல் கத்ர்) என்று சொல்லப்படுவதும் ஒரே இரவைத்தான் குறிக்கின்றன என்பது உறுதியாகின்றது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவது ஷாபான் மாதத்தின் 15வது இரவைக் குறிக்கிறது என சிலர் வாதிடுகிறார்கள். இதற்கு திருக்குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஷஅபான் மாதத்தின் 15வது இரவில் அருளப்பட்டது என்று கூறுவது, ரமலானில்தான் அருளப்பட்டது என்ற இறைவனின் கூற்றுக்கு எதிரானது.
இந்த வசனத்தைத் தவறாக விளங்கிக் கொண்டதால் தான் 'பராஅத்' என்று ஒரு இரவை சில முஸ்லிம்கள் தாமாக உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
'பராஅத் இரவு' என்ற சொல் திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலோ பயன்படுத்தப்படவே இல்லை. இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து, அல்லாஹ்வின் வசனத்திற்குப் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்து அந்த நாளுக்கென்று சில சடங்குகளை உருவாக்கி, அறியாத முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஷஅபான் மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவது, ரமலானில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரானது என்பதை அவர்கள் விளங்க வேண்டும்.
அவர்கள் தங்களின் தவறான கருத்துக்கு மற்றொரு விளக்கத்தையும் தருகிறார்கள். அதாவது, பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது பராஅத் இரவு, அங்கிருந்து சிறிது சிறிதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது லைலதுல் கத்ர் இரவு எனக் கூறுகிறார்கள். இதற்கு ஏற்கத்தக்க ஹதீஸ்களில் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஒரே இரவில் அருளப்பட்டதா என்பதை அறிய 447வது குறிப்பைக் காண்க!