342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்
இவ்வசனத்தில் (43:61) ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று கூறப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஈஸா நபி அவர்கள் அப்போதே மரணித்து விட்டார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறு என்பதற்கு இவ்வசனம் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.
ஈஸா நபியை எதிரிகள் கொல்ல எத்தனித்தபோது அவர்களை அல்லாஹ் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். வேறொருவரை ஈஸா நபி என்று தவறாகக் கருதி அவரை எதிரிகள் கொன்றார்கள் என்பதே உண்மையாகும்.
இது குறித்து அதிக விபரத்தை 93, 101, 134, 151, 278, 342, 456 ஆகிய குறிப்புகளில் காணலாம்.
உயர்த்தப்பட்ட ஈஸா நபி அவர்கள் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் பூமிக்கு இறக்கப்பட்டு பூமியில் மரணிப்பார்கள் என்று ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன.
அந்த ஹதீஸ்களின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் அவர் வாழ வேண்டும். அப்போதுதான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.
ஈஸா நபி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மரணித்து விட்டார்கள் என்று கூறுவோருக்கு இவ்வசனம் தக்க மறுப்பாக அமைந்துள்ளது.