371. மூக்கின் மேல் அடையாளம்
இவ்வசனத்தில் (68:16) ஒவ்வொரு மனிதனையும் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஒரு மனிதனைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை என்பது தான் இதற்குக் காரணம். முக்கியமான ஆவணங்களில் கைரேகை வாங்குவதும் இதற்காகவே.
கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதனைத் தனித்து அடையாளம் காண்பது பற்றி மனிதனின் மூக்கில் அடையாளம் இடுவோம் என்று இவ்வசனம் (68:15,16) கூறுகிறது.
கைரேகைகள் நம் கண்களுக்குத் தெரிகிறது. இதை வெளிப்படையாக நாம் பார்த்து அறிந்து கொள்கிறோம்.
ஆனால் மனிதனின் மூக்கில் ஏதாவது அடையாளம் இடப்பட்டிருப்பது நமக்குத் தெரிகிறதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.
மூக்கில் எந்த அடையாளமும் போடப்பட்டது நமக்குத் தெரியாவிட்டாலும் மூக்கில் அடையாளம் போடப்பட்டுள்ளதை இப்போது நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தீவிரவாதிகளையும், கிரிமினல்களையும் கண்டுபிடிக்க அவர்களது மூக்கு உதவும் என்று இங்க்கிலாந்து பாத் பல்கலைக் கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான புதிய தொழில் நுட்பத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதர்களின் பலவிதமான மூக்கு அளவுகளைக் கொண்டு அவர்களைப் பற்றி துல்லியமான விவரங்களைக் கண்டறியலாம் என்கின்றனர். அதன்படி போட்டோபேஸ் என்ற உயர் தொழில் நுட்ப ஸ்கேனர் மூலம் மூக்கைப் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்.
பிறகு ரோமன், கிரீக், நுபியான், ஹாக், ஸ்னப் மற்றும் டர்ன் அப் என்ற ஆறு வடிவங்களில் மூக்கை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு மூக்கின் விவரங்கள் முனை மற்றும் துளைகள் ஆகியவற்றை கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மூலம் துல்லியமாக சோதனை செய்யப்படும். இது பற்றி டாக்டர் அட்ரியன் ஈவன்ஸ் கூறுகையில் கைரேகை ஸ்கேனை விட மூக்கு ஸ்கேன் மூலம் ஒருவரை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் குற்றவாளியின் தாயகம், இனம் ஆகியவற்றுடன் கைரேகையைப் போல் ஒவொருவரது மூக்கு அமைப்பும் வேறுபடுவதால் அடையாளம் காண்பது எளிது.
மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.