437. ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது?
ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல் அவனிலிருந்து என ஒருமையாகக் கூறுகிறது.
உருவாகும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆணிடம் தான் அதற்கான தன்மை உள்ளது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதை திருக்குர்ஆன் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கூறி இருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
ஒரு குழந்தை உருவாவதற்கு ஆணுடைய உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம்.
பெண்ணின் கருமுட்டைக்குள் 23 குரோமோஸோம்கள் இருக்கும். கருமுட்டைக்குள் சென்ற உயிரணுவிலும் 23 குரோமோஸோம்கள் உள்ளன.
ஆணிடமும், பெண்ணிடமும் உள்ள 22+22=44 குரோமோஸோம்கள் பரம்பரை, குணம், நிறம் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன.
கடைசியாக உள்ள 23வது குரோமோஸோம் தான் பாலினத்தை அதாவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்பதைத் தீர்மானிக்கின்றன.
இந்த குரோமோஸோம் எக்ஸ் எனவும், ஒய் எனவும் இரு வகைப்படும். பெண்ணின் குரோமஸோம் முழுக்க முழுக்க எக்ஸ் ஆகத்தான் இருக்கும்.
ஆணுடைய குரோமோஸோம் சில வேளை எக்ஸ் ஆக இருக்கலாம். சில வேளை ஒய் ஆக இருக்கலாம்.
ஆணுடைய குரோமஸோம் ஒய் ஆக இருந்து பெண்ணின் எக்ஸ் உடன் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகும். ஆணுடையது எக்ஸ் ஆக இருந்தால் பெண்ணின் எக்ஸ் உடன் சேர்ந்து பெண் குழந்தையாகும். அதாவது எக்ஸும் எக்ஸும் சேர்ந்தால் பெண். ஒய்யும் எக்ஸும் சேர்ந்தால் ஆண்.
ஆணிடம் மட்டுமே ஒய் குரோமஸோம் உள்ளதால் ஆணிடம் உள்ள 23வது குரோமஸோம் எக்ஸ் ஆக இருந்தால் பெண்குழந்தையாக உருவாகும். ஆணிடம் உள்ள 23வது குரோமஸோம் ஒய் ஆக இருந்தால் ஆண்குழந்தையாக உருவாகும்.
பெண்ணிடம் உள்ள எல்லா குரோமஸோம்களும் எக்ஸ் ஆகவே உள்ளதால் பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எந்தப் பங்கும் இல்லை.
இன்று கண்டறியப்பட்ட இந்தப் பேருண்மையை அவனிலிருந்து என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்தி இது வேதம் என்பதற்கு சான்று கூறுகின்றது.