69. பெண்களுக்கு இத்தா ஏன்?

69. பெண்களுக்கு இத்தா ஏன்?

ணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:2282:231, 2:2322:234, 2:235, 33:4965:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.


 

2:234, 2:235 வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரை மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது.

கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் அற்றுப் போன வயதானவர்கள் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 65:4 வசனம் கூறுகின்றது.

இவ்வசனத்தில் இரண்டு வகையான இத்தாக்கள் சொல்லப்படுகின்றன. மாதவிடாய் அற்றுப் போனவர்களின் இத்தா மூன்று மாதங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் மாதவிடாயைக் கணக்கிடாமல் நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. இந்த வகை இத்தா தலாக் விடப்பட்ட ம்பாதவிடாய் அற்றுப் போன பெண்ணுக்கு மட்டும் உரியதாகும். கணவனை இழந்த பெண்களுக்கு இது பொருந்தாது.

ஏனெனில் அவர்களின் இத்தா நான்கு மாதமும் பத்து நாட்களும் என்று திருக்குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. மாதவிடாய் அற்றுப்போனவர்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்படும் பெண்களாக இருந்தாலும் நான்கு மாதம் பத்து நாட்கள் கணக்கிட முடியும். 

இவ்வசனத்தில் கூறப்படும் மற்றொரு இத்தா நாட்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல, ஆனால் பிரசவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கணவன் இறக்கும் போது அல்லது தலாக் விடப்படும் போது மனைவி ஒரு மாத கர்ப்பம் என்றால் அவர்கள் இன்னும் எட்டு மாதம் அளவுக்குப் பின்னர் தான் பிரசவிப்பார்கள். ஐந்து மாத கர்ப்பம் என்றால் மேலும் நான்கு மாதம் கழித்து பிரசவிப்பார்கள். ஒன்பதாம் மாதமாக இருந்தால் சில நாட்களில் பிரசவித்து விடுவார்கள். எனவே இந்த வகை இத்தா நாட்களின் எண்ணிக்கையைப் பொருத்தது அல்ல, கருவின் காலத்தைப் பொருத்ததாகும்.

எனவே இவ்வசனத்தில் கூறப்பட்ட இந்த வகை இத்தால் தலாக் விடப்பப்பட்ட பெண்ணுக்கு மட்டுமின்றி கணவனை இழந்த பெண்களுக்கும் உரியதாகும். 

இந்தச் சட்டம் பெண்களுக்கு கேடு செய்வதற்கான சட்டம் அல்ல. அவர்களுக்கு மிகப்பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் சட்டமாகும்.

கணவன் மரணித்தபோது அவனது கருவை மனைவி சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.

முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.

"இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்'' என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.

"கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்? அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே? நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?'' என்று சிலர் நினைக்கலாம்.

இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.

ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று அவள் கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.

இரண்டாம் திருமணம் முடித்து ஆறேழு மாதங்களில் அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால் அவன் இப்படிக் கூற முடியாது. வயிற்றில் குழந்தை இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.

இத்தகைய காரணங்களால், பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.

ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.

அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்தியமுண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ, யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது.

நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்று அறிந்து ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றதற்கு இத்தா எனும் சட்டம் காரணமாக அமைந்தது.

இத்தா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சில முஸ்லிம்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இது தவிர இன்னொரு வகை இத்தாவும் உண்டு. மனைவியை கணவன் விவாகரத்துச் செய்தால் அவர்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலமும் இத்தா எனப்படும். அதாவது விவாகரத்து முடிந்த உடன் பெண்கள் மறுமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் கணவன் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த இத்தாவை 2:228, 2:231, 2:232, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்த இத்தாவுக்கு தனியாக எந்தக் கட்டுப்பாடும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அந்தக் காலம் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமே இந்த இத்தாவின் ஒரே விதியாகும்.

இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 360, 404, 424 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66, 70, 74, 386, 402, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க!

Leave a Reply