247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா?

247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா?

முஸ்லிம்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை இவ்வசனத்தில் (9:113)அல்லாஹ் விளக்குகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெற்றோரும், உறவினரும், முஸ்லிம்களின் பெற்றோரும், உறவினரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போராக இருந்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதுதான் அந்தக் கொள்கை விளக்கம்.


 

 

எனக்கு இணை கற்பித்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்னர் அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாக ஆகும் என்பதால் இவ்வாறு தடை விதிக்கப்படுகிறது.


பொதுவாக தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கருதும் மனிதன், தனக்கு வேண்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் செய்யும் தவறுகளை மன்னிப்பவனாக இருக்கிறான்.

ஆனால் அல்லாஹ்வின் தன்மை இதற்கு நேர் எதிரானதாகும். அவனுக்கு இணையாக மற்றவர்களைக் கருதும் போது தனது இடத்தை மற்றவர்களுக்குக் கொடுத்ததால் அல்லாஹ் கோபப்படுகிறான். நபிகள் நாயகமும், முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் தனது கண்ணியம் என்று வரும் போது அதையெல்லாம் அல்லாஹ் கவனிக்க மாட்டான். எனக்கு இணை கற்பித்து எனது கண்ணியத்துடன் விளையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான். அவர்களை மன்னிக்க மாட்டான் என்பது ஒரு புறமிருக்க அப்படி மன்னிப்பு கேட்பதும் குற்றம் என்று சொல்கிறான்.

இவ்வசனம் இக்கொள்கையைத் தெளிவாக விளக்குகிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு நேர்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யலாம். அவர்களுக்கு இவ்வுலகச் செல்வங்களைக் கேட்டு துஆ செய்யலாம். அவர்களது உடல் ஆரோக்கியத்துக்காக துஆச் செய்யலாம். இதையெல்லாம் அனுமதிக்கும் இறைவன் தனக்கு இணை கற்பிப்பவர்களுக்காக மன்னிப்பு கோருவதை அனுமதிக்க மறுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கூட இதில் விதிவிலக்கு இல்லை என்றும் இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இதில் கூடுதல் தெளிவைப் பெறலாம்.

 அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை வைத்து உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்) என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பு அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி)

நூல் : புகாரீ : 3884, 4675 

இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் இஸ்லாத்துக்கு உறுதுணையாக இருந்த அபூதாலிபுக்காக நான் மன்னிப்புத் தேடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறுத்து இவ்வசனம் அருளப்பட்டது.

அல்லாஹ்வின் விஷயத்தில் வரம்பு மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இறைத்தூதர்களும் காப்பாற்ற முடியாது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக அறிவிக்கின்றது.

இது போல் தமது தாயாருக்காக பாவ மன்னிப்பு கோர நபியவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கோரினார்கள். அதற்கும் அல்லாஹ் அனுமதி மறுத்துவிட்டான் என்பதைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

 'என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1621, 1622 

நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி அல்லாஹ்வின் நண்பர் என்று அல்லாஹ்வே பாராட்டிய இப்ராஹீம் நபியவர்களும் தமது தந்தைக்காக பாவமன்னிப்பு தேடியதாகவும், பாவமன்னிப்பு தேட அனுமதி கேட்டதாகவும் 14:41, 19:47, 26:86 வசனங்களில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

இதற்காக அல்லாஹ் இப்ராஹீம் நபியைக் கண்டித்த பின் அதிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டார்கள் என்று 9:114 வசனம் கூறுகிறது.

அனைத்து விஷயங்களிலும் இப்ராஹீம் நபியிடம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உண்டு என்று கூறிய இறைவன் அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடியதில் முன்மாதிரி இல்லை என்று 60:4 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

Leave a Reply