340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா?
மனிதன் 40 வயதில் தான் பருவ வயதை அடைகிறான்; அதுவரை எந்தச் சட்டமும் மனிதனுக்கு இல்லை என்று இவ்வசனம் (46:15) கூறுவதாக சில அறிவீனர்கள் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.
இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு நாற்பது வயது வரை எப்படியும் வாழலாம். நாற்பது வயதுக்கு மேல் நல்லவனாக வாழ்ந்தால் போதும் என்று கூறி தாமும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கின்றனர். நாற்பது வயதில் தான் ஒருவன் பருவ வயதை அடைகிறான் எனவும் உளறுகின்றனர்.
நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது; நாற்பது வயது வரை மனிதன் எப்படியும் வாழலாம் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.
பருவம் அடைவது நாற்பது வயதில்தான் என்று இவ்வசனத்தில் கூறப்படவே இல்லை. மாறாக அதற்கு எதிரான கருத்தே கூறப்பட்டுள்ளது. "மனிதன் பருவத்தை அடைந்து மேலும், நாற்பது வயதை அடையும்போது'' என்றுதான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
பருவத்தை அடைவதே நாற்பது வயதில் என்றால் இவ்வாறு கூற முடியாது. இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கூறினால் போதுமானதாகும். பருவ வயதை அடைதல் என்பது வேறு; நாற்பது வயதை அடைதல் என்பது வேறு என்பதை இவ்வாசகத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
"நாற்பது வயதை அடையும்போது'' என்ற சொற்றொடரை இங்கே ஏன் குறிப்பிட வேண்டும்? இதற்கு இவ்வசனத்திலேயே விடை கிடைக்கிறது.
பொதுவாக மனிதன் பருவம் அடையும்போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டுச் சுமந்ததையும், பெற்றெடுத்ததையும் அவன் நினைப்பதில்லை.
திருமணம் ஆகும்போது பெற்றோர் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோரை அவன் உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கின்றானா என்றால் அதுவுமில்லை.
அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும்போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு வருகிறது. நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான்.
இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான். இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.
தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும்போது தான் பெற்றோரின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
- பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!
- கருவில் சுமந்தபோது, தாய் பட்ட கஷ்டம்!
- பெற்றெடுக்கும்போது அவள் படுகின்ற சிரமம்!
இவற்றைச் சுட்டிக் காட்டிவிட்டு "நாற்பது வயதை அடையும்போது'' என்று கூறுவதிலிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.
"என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு'' என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று பருவ வயதை அடையும்போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.
"நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன்'' எனக் கூறி திருந்துகிறான்.
இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசித்தால் நாற்பது வயதை அடையும்போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பதுதான் கூறப்படுகிறது. நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.
உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும்போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல் தானாக இழந்து விடும்.
நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் என்னவாகும்? எனக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இது எந்த அளவு ஆபத்தான கருத்து என்பதை உணர்வார்கள்.