439. ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன
காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால் இல்லை என்பதே அறிவியல் முடிவாகும்.
காதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் பதிவதில்லை. எனவே தான் பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்று இன்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
2:18 வசனத்தில் இவர்கள் செவிடர்கள்; குருடர்கள்; ஊமைகள் என்று நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
இந்த மூன்று குறைபாடுகளுக்கும் காரணம் என்ன என்பது 2:7 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
அவர்களின் உள்ளங்களிலும், காதுகளிலும் முத்திரை இடப்பட்டு விட்டது என்றும் அவர்களின் கண்களில் திரை உள்ளது என்றும் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்வையில் திரை உள்ளதால் அவர்கள் குருடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
செவிகளில் முத்திரை உள்ளதால் அவர்கள் செவிடர்கள் என்று புரிந்து கொள்கிறோம்.
இவ்விரண்டும் எல்லாக் காலத்திலும் மக்கள் சாதாரணமாக அறிந்த உண்மைகள் தான்.
அவர்கள் ஊமைகளாகக் காரணமாக அவர்களின் வாய்களில் முத்திரை இடப்பட்டுள்ளது எனக் கூறாமல் அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
உள்ளத்தில் முத்திரையிடப்படுவதால் தான் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது என்ற உண்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும்.
எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி அவர்கள் தமது காலத்தில் தமது சமுதாயத்தில் நிலவிய அறிவைக் கொண்டு இப்படிக் கூற முடியாது. எனவே இந்தக் கூற்று இறைவனின் புறத்தில் இருந்து வந்த கூற்றாகத்தான் இருக்க முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.