504. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?
இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது.
ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.
அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.
ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப்பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்தபோது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.
அப்படியானால் ஒரு ஜோடியை மட்டும் படைக்காமல் இரண்டு ஜோடி மனிதர்களைப் படைத்து இதைத் தவிர்க்க இயலுமே என்று சந்தேகம் எழலாம்.
இறைவன் ஒரு ஜோடி மூலம் மனித குலத்தைப் பரவச் செய்ததற்கு முக்கியமான காரணம் உள்ளது.
ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வாசல் முற்றாக அடைக்கப்படும். சகோதரத்துவ உணர்வையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்ற சமத்துவத்தையும் இது ஏற்படுத்துகின்றது.