அத்தியாயம் : 34
ஸபா – ஓர் ஊர்
மொத்த வசனங்கள் : 54
ஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும்1 புகழ் அவனுக்கே. அவன் ஞானமிக்கவன்; நன்கறிந்தவன்.
2. பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானிலிருந்து507இறங்குவதையும், அதை நோக்கி மேலே செல்வதையும் அவன் அறிகிறான். அவன் நிகரற்ற அன்புடையோன்; மன்னிப்பவன்.
3. "யுகமுடிவு நேரம்1 எங்களிடம் வராது'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். "அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ,507 பூமியிலோ அணுவளவோ அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில்157 அவை இல்லாமல் இல்லை என்று கூறுவீராக!
4.நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அவன் பரிசளிப்பதற்காக (இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது). அவர்களுக்கு மன்னிப்பும், மதிப்புமிக்க உணவும் உள்ளன.
5. நமது வசனங்களில் நம்மை வெல்ல முயற்சிப்போருக்கு துன்புறுத்தும் வேதனையே தண்டனையாக உள்ளது.
6. (முஹம்மதே!) "உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
7. "நீங்கள் முழுமையாக உருக்குலைந்த பின் புதிய படைப்பைப் பெறுவீர்கள் எனக் கூறும் ஒரு மனிதரைப் பற்றி நாம் உங்களுக்குக் கூறட்டுமா?'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.
8.இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினாரா? அல்லது இவருக்குப் பைத்தியமா?468அவ்வாறில்லை! மறுமையை1 நம்பாதோர் வேதனையிலும், தூரமான வழிகேட்டிலும் உள்ளனர்.
9. வானத்திலும்,507 பூமியிலும் தங்களுக்கு முன்னே இருப்பதையும், தங்களுக்குப் பின்னே இருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களைப் பூமியில் புதையச் செய்திருப்போம். அல்லது அவர்கள் மீது வானத்தின்507 துண்டுகளை விழச் செய்திருப்போம். திருந்துகிற ஒவ்வொரு அடியானுக்கும் இதில் தக்க சான்று உள்ளது.
10, 11. தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம். "மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்!'' (எனக் கூறினோம்.) "போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக'' என (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். "நல்லறத்தைச் செய்யுங்கள்! நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்''488 எனவும் கூறினோம்.26
12. ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.325 அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் கட்டளைப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.
13. அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும்,326 தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)
14. அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்தியபோது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினமே (கரையான்) அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.327
15. ஸபாவாசிகளுக்கு அவர்களின் குடியிருப்புகளில் தக்க சான்று உள்ளது. அதன் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு சோலைகள் (இருந்தன). உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (எனக் கூறப்பட்டது) ஊரும் நல்ல ஊர். இறைவனும் மன்னிப்பவன்.
16. ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். எனவே பெருவெள்ளத்தை அவர்களிடம் அனுப்பினோம். புளிப்பும், கசப்பும் உடைய புற்களும், சிறிதளவு இலந்தை மரங்களும் கொண்ட வேறு இரு சோலைகளாக அவர்களது இரண்டு சோலைகளையும் மாற்றினோம்.
17. அவர்கள் (நம்மை) மறுத்ததால் இவ்வாறு தண்டித்தோம். (நம்மை) மறுப்போரைத் தவிர மற்றவர்களை நாம் தண்டிப்போமா?
18. நாம் பாக்கியம் செய்த ஊர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வெளிப்படையாகத் தெரியும் ஊர்களை ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தையும் ஏற்படுத்தினோம். இரவிலும், பகலிலும் அச்சமற்று பயணம் செய்யுங்கள்! (எனக் கூறினோம்)
19. "எங்கள் இறைவா! எங்களுக்கு தொலைதூர பயணங்களை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறி தமக்குத் தாமே தீங்கிழைத்தனர். அவர்களைப் பழங்கதைகளாக்கினோம். அவர்களை உருக்குலைத்தோம். பொறுமையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.
20. அவர்களைப் பொருத்த வரை இப்லீஸ் தனது எண்ணத்தில் வெற்றியடைந்தான். நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டத்தினரைத் தவிர (மற்றவர்கள்) அவனைப் பின்பற்றினார்கள்.
21. அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. மறுமையை நம்புபவரையும், சந்தேகப்படுபவரையும் வேறுபடுத்திக் காட்டவே (இது நடந்தது). உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன்.
22."அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும்,507 பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை'' என்று கூறுவீராக!
23. யாருக்காக அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை17 பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் "உங்கள் இறைவன் என்ன கூறினான்?'' எனக் கேட்டுக் கொள்வார்கள். "உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன்'' என்று கூறுவார்கள்.
24. "வானங்களிலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?''463 என்று (முஹம்மதே!) கேட்டு, 'அல்லாஹ்' என்று கூறுவீராக! "நாமோ அல்லது நீங்களோ, நேர்வழியிலோ பகிரங்கமான வழிகேட்டிலோ இருக்கிறோம்''
25. "நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்தவை பற்றி நாங்கள் விசாரிக்கப்பட மாட்டோம்''265 என்றும் கூறுவீராக!
26. நம்மை நமது இறைவன் ஒன்று திரட்டுவான். பின்னர் நமக்கிடையே நேர்மையான தீர்ப்பு வழங்குவான். அவன் தீர்ப்பளிப்பவன்; அறிந்தவன் என்றும் கூறுவீராக!
27. நீங்கள் அவனுக்கு இணைகற்பித்தோரை எனக்குக் காட்டுங்கள் என்றும் கூறுவீராக! அவ்வாறில்லை! மாறாக அவனே மிகைத்தவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்.
28.(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்காகவும்281 உம்மை அனுப்பியுள்ளோம்.187 எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
29. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
30. "உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள்1 ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்'' என்று கூறுவீராக!
31. "இந்தக் குர்ஆனையும், இதற்கு முன் சென்றதையும்4 நம்பவே மாட்டோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அநீதி இழைத்தோர் தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும்போது நீர் பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள். "நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்'' என்று பலவீனமாக இருந்தோர் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம் கூறுவார்கள்.
32. "நேர்வழி உங்களிடம் வந்தபோது நாங்கள் தான் உங்களைத் தடுத்தோமா? இல்லை. மாறாக நீங்களே குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' என்று பெருமையடித்தோர் பலவீனர்களிடம் கூறுவார்கள்.
33. "அல்லாஹ்வை மறுக்குமாறும், அவனுக்கு இணையானவர்களைக் கற்பனை செய்யுமாறும் எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டபோது இரவிலும், பகலிலும் செய்த சூழ்ச்சி தான் (எங்களை வழிகெடுத்து விட்டது)'' என்று பெருமையடித்தோரை நோக்கி பலவீனர்கள் கூறுவார்கள். வேதனையை அவர்கள் காணும்போது கவலையை மனதுக்குள் மறைத்துக் கொள்வார்கள். (நம்மை) மறுப்போரின் கழுத்துக்களில் விலங்கிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் தண்டிக்கப்படுவார்களா?
34. எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் "எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
35. "நாங்கள் அதிகமான பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர்'' என்றும் அவர்கள் கூறினர்.
36. "என் இறைவன், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். அளவோடும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
37. உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.
38. நமது வசனங்களில் (நம்மை) வெல்ல முயற்சிப்போர் வேதனையின் முன் நிறுத்தப்படுவார்கள்.
39. எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். அதை அளவோடும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!
40. (அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்!1 பின்னர் "இவர்கள் உங்களைத்தான் வணங்குவோராக இருந்தார்களா?'' என்று வானவர்களிடம் கேட்பான்.
41. "நீ தூயவன்.10 நீயே எங்கள் பாதுகாவலன். இவர்களுடன் (எங்களுக்குச் சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்'' என்று கூறுவார்கள்.
42. எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டீர்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம்.
43. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் "இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனிதராகவே இருக்கிறார்'' எனக் கூறுகின்றனர். "இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்'' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்தபோது "இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை''285 என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.357
44. அவர்கள் வாசிக்கும் எந்த வேதங்களையும் அவர்களுக்கு நாம் கொடுக்கவில்லை. (முஹம்மதே!) உமக்கு முன் அவர்களிடம் எச்சரிக்கை செய்யும் எவரையும் நாம் அனுப்பியதில்லை.
45. இவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அவர்களுக்கு வழங்கியதில் பத்தில் ஒரு பங்கை (கூட) இவர்கள் அடையவில்லை. அவர்கள் எனது தூதர்களைப் பொய்யரெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?
46. "நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் "உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை;468 கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்'' எனக் கூறுவீராக!
47. "உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்டதில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடம் தவிர வேறு (எவரிடமும்) இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்''488 என்று கூறுவீராக!
48. "எனது இறைவன் உண்மையையே போடுகிறான். (அவன்) மறைவானவற்றை நன்கு அறிந்தவன்'' என்று கூறுவீராக!
49. "உண்மை வந்து விட்டது. பொய்(யான கடவுள்கள் எந்த ஒன்றையும்) படைக்கவில்லை. மறுபடி அதைப் படைக்கப் போவதுமில்லை'' என்று கூறுவீராக!
50. "நான் வழிகெட்டால் எனக்கு எதிராகவே வழிகெடுகிறேன். நான் நேர்வழி பெற்றால் அது எனது இறைவன் எனக்கு அறிவித்த தூதுச் செய்தியின் காரணமாகத்தான்.81 அவன் செவியேற்பவன்; அருகில் உள்ளவன்''49 என்று (முஹம்மதே!) கூறுவீராக!
51. அவர்கள் திடுக்குற்றிருக்கும்போது நீர் காண்பீராயின் அவர்கள் தப்பிச் செல்ல முடியாது. அருகிலிருந்து அவர்கள் பிடிக்கப்படுவார்கள்.
52. "அவனை நம்பினோம்'' என அவர்கள் கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (ஒன்றை) அடைந்து கொள்வது எவ்வாறு இயலும்?
53. இதற்கு முன் அதை அவர்கள் மறுத்தனர். தூரமான இடத்திலிருந்து கொண்டு மறைவானவை பற்றி (சந்தேகங்களை) எறிந்து கொண்டிருந்தனர்.
54. இவர்களைப் போன்றோருக்கு முன்னர் செய்யப்பட்டதைப் போல் இவர்களுக்கும், இவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையே திரை போடப்பட்டு விட்டது. இவர்கள் கடுமையான சந்தேகத்திலேயே இருந்தனர்.