19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன.

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக 'தூர்' மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைச் சிற்பத்தை உருவாக்கினான்.


மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. "இதுதான் கடவுள்; மூஸா வழிமாறிச் சென்று விட்டார்'' எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான் என 20:96 வசனம் கூறுகிறது.

அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களின் சிந்தனையில் நுழையவில்லை. மூஸா நபி அவர்கள் அந்தச் சிற்பத்தைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள் என்பதை 20:89, 20:97 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஸாமிரி என்பவன் இதுபோல் செய்ய ஆற்றல் பெற்று இருந்தான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். அல்லது பல தடவைகள் அவர் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். ஒரு மனிதன் எப்போது தீக்குச்சியை உடைக்க நினைக்கிறானோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். ஆயிரத்தில் ஒன்று அல்லது இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று உடனே முடிவு செய்ய மாட்டோம். மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அல்லது அதிகமான கடப்பாரைகளை உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடையவேண்டும் எனக் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

இப்படிச் செய்தால் இப்படி நடக்கும் என்ற கலை மூலம் ஸாமிரி திட்டமிட்டு இதைச் செய்தானா? தான் நினைத்த போதெல்லாம் காளைச் சிற்பத்தைச் செய்து அதைச் சப்தமிடச் செய்யும் ஆற்றல் பெற்று இருந்தானா? அல்லது தற்செயலாக ஒரு தடவை நடந்ததோடு சரியா?

இதுபற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

 "ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான். "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.

திருக்குர்ஆன் 20:95, 96, 97 

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்தபோது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று ஸாமிரி கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது; அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான்.

இதுபோல் செய்யும் ஆற்றல் இவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று இவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை.

இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுவார்கள். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

இதைப் புரிந்து கொண்டால் ஸாமிரி எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனுக்கு அந்த ஆற்றல் சிறிதும் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

அற்புதங்கள் குறித்து மேலும் அறிய 269வது குறிப்பையும் பார்க்கவும்.

Leave a Reply