28. சூனியம் பற்றி யூதர்களின் புரட்டு வாதங்கள்
இவ்வசனத்தில் (2:102) சூனியம் குறித்து யூதர்கள் செய்த புரட்டு வாதங்கள் அனைத்தையும் அல்லாஹ் மறுக்கிறான்.
இவ்வசனத்தில் சொல்லப்படும் செய்திகள் யாவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள் என்ற வாக்கியம் சொல்வது என்ன?
சூனியம் என்பது நல்லவர்களால் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதைக் கற்றுக் கொடுத்தவர்கள் ஸுலைமான் நபி காலத்தில் வாழ்ந்த தீயவர்கள் தான். இதுதான் மேலே உள்ள வாசகத்தின் கருத்து.
ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை என்ற வாக்கியம் சொல்வது என்ன?
சூனியத்தை ஸுலைமான் நபி கற்றுக் கொடுத்ததாக யூதர்கள் சொல்வது தவறு. அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை. அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து இருந்தால் அதன் காரணமாக அவர் இறை மறுப்பாளராகி இருப்பார். அவர் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவும் இல்லை. இறை மறுப்பாளராக ஆகவும் இல்லை.
அது போல் சூனியத்தை வானவர்கள் கற்றுக் கொடுத்ததாக யூதர்கள் நம்பினார்கள் என்பதும், அந்த நம்பிக்கை தவறானது என்பதும் இங்கே சொல்லப்படுகிறது. அதாவது சூனியத்தைக் கற்பது இறைமறுப்பாகும். இதை ஸுலைமான் நபியும் செய்ய மாட்டார்கள். வானவர்களும் செய்ய மாட்டார்கள்.
பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களேமறுத்தனர் என்ற வாக்கியம் சொல்வது என்ன?
ஹாரூத் மாரூத் எனும் ஷைத்தான்கள் தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் அவர்கள் இறைமறுப்பாளர்களாக ஆயினர்.
"நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற வாக்கியம் சொல்வது என்ன?
இறை மறுப்பாளராகி விட்ட ஹாரூத், மாரூத் எனும் ஷைத்தான்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு முன்பு, கற்றுக் கொள்ள முன்வரும் ஒவ்வொருவருக்கும் மறவாமல் ஒரு எச்சரிக்கையைச் செய்து விடுவார்கள். நாங்கள் சூனியத்தைக் கற்றதால் இறை மறுப்பாளர்களாக ஆகி உங்களுக்கு முன்னால் படிப்பினையாக இருக்கிறோம். எனவே நீங்களும் இதைக் கற்று இறை மறுப்பாளராகி விடாதீர்கள் என்பது தான் அந்த எச்சரிக்கை. ஒருவருக்கும் அந்த எச்சரிக்கையைச் செய்யாமல் அவர்கள் இருந்ததில்லை.
எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் எதன் மூலம் பிரிவினை ஏற்படுத்த முடியுமோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர் என்ற வாக்கியம் சொல்வது என்ன?
இந்த இடத்தில் எனவே என்று நாம் பொருள் செய்த இடம் கவனிக்க வேண்டியதாகும்.
இந்த மனிதன் ஏமாற்றுபவன்; எனவே அவனுக்கு நான் கடன் கொடுக்க மாட்டேன் என்ற வாக்கியத்தில் எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அவனுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவன் ஏமாற்றுபவனாக இருப்பதுதான் என்ற கருத்து கிடைக்கும்.
அது போல் தான் இச்சொற்றொடரும் அமைந்துள்ளது.
சூனியத்தைக் கற்றால் இறை மறுப்பாளர்களாகி விடுவீர்கள் என்று ஹாரூத், மாரூத் எச்சரிக்கை செய்ததால் சூனியத்தைக் கற்காமல் கணவன் மனைவிக்கு இடையே எதன் மூலம் பிரிவினை ஏற்படுத்த முடியுமோ அதைக் கற்றுக் கொண்டார்கள் என்பது இதில் இருந்து விளங்குகிறது.
சூனியத்தைக் கற்றுக் கொள்வதால் இறை மறுப்பாளர்களாகி விடுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்டதால் தங்களை இறை மறுப்பாளர்களாக ஆக்கிவிடும் சூனியத்தைக் கற்றுக் கொள்ளாமல் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள் என்பது எனவே என்ற சொல்லில் இருந்து தெரிகிறது.
காராத்தே கற்றுக் கொண்டால் குருவை வணங்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்து கராத்தே கற்றுக் கொடுத்தார்கள். எனவே மக்கள் மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். கராத்தேயினால் ஏற்படும் தீமையைச் சொல்லி எச்சரித்த காரணத்தால் அவர்கள் கராத்தே அல்லாத மல்யுத்தத்தைக் கற்றுக் கொண்டனர்.
இது போல்தான் மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
கராத்தேயின் கேடுகளைச் சொன்னார்கள். எனவே கராத்தேயைக் கற்றுக் கொண்டார்கள் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். எச்சரிக்கை செய்த பின்னர் அது அல்லாத வேறு ஒன்றைக் கற்றால் தான் எனவே என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும்.
புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டான் என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
புகை பிடிக்காதே என்று தந்தை எச்சரித்தார். எனவே மகன் நன்றாக புகை பிடித்தான் என்று கூறினால் அது பொருத்தமற்றதாக ஆகும்.
இந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வாசகத்தைக் கவனியுங்கள்.
சூனியத்தால் கேடு ஏற்படும் என இருவரும் எச்சரித்தார்கள். எனவே கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படுத்தும் கலையை மக்கள் கற்றுக் கொண்டார்கள் என்ற சொல்லில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலை சூனியத்தில் சேராது. சூனியம் அல்லாத சூனியத்தை விட குறைந்த தீமையுடைய மற்றொன்று என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் நாடினால் தவிர அதன் மூலம் எந்தக் கேடும் செய்ய முடியாது என்று கூறப்படுவதால் சூனியத்தின் மூலம் கேடுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது பலமான ஆதாரமாக அமைந்துள்ளது என்று சிலர் கூறுகிறார்கள்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.
அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தைக் கற்றால் இறை மறுப்பாளர்களாகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.
கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.
இவ்வசனத்தைக் கவனமுடன் ஆய்வு செய்யும்போது சூனியம் அல்லாத, கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் கலையைத் தான் மக்கள் கற்றுக் கொண்டனர் என்பதும், அதன் மூலம் சில தீங்குகள் ஏற்படலாம் என்பதும் தெரிய வருகின்றது.
சூனியத்தினால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இதில் சொல்லப்படவே இல்லை.
கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது சூனியத்தின் ஒரு வகையாக ஏன் இருக்கக் கூடாது என்று சிலர் கருதினால் அது இரண்டு காரணங்களால் தவறாகும்.
சூனியத்தைப் பற்றி அவ்விருவரும் கடுமையாக எச்சரித்த பின்னர் சூனியத்தின் ஒரு வகையைக் கற்றுக் கொண்டு இருந்தால் “எனவே” என்று சொல்லப்பட்டு இருக்காது.
மேலும் சூனியத்தைக் கற்பது இறை மறுப்பாளர்களாக ஆக்கிவிடும் என்று இவ்வசனத்தில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது பாவமான காரியம் என்றாலும் அது இறை மறுப்பாளர்களாக ஆக்கும் குற்றம் அல்ல. நாமும் அவ்வாறு கூறவில்லை. சூனியத்தை நம்புவோரும் அவ்வாறு கூறுவதில்லை. அவர்கள் கற்றுக் கொண்ட இந்தக் கலை ஒருவரை இறை மறுப்பாளராக ஆக்காது என்றால் அது சூனியத்தின் ஒரு வகையாக இருக்க முடியாது என்பது உறுதி.
அதாவது அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. சூனியம் அல்லாத முறையில் கணவன் மனைவியை எவ்வாறு பிரிப்பது என்பதைத் தான் கற்றுக் கொண்டார்கள். அது கூட நூறு சதவிகிதம் வெற்றி தராது. அல்லாஹ் நாடினாலே தவிர அதன் மூலம் கணவன் மனைவியைப் பிரிக்க முடியாது என்று இவ்வசனம் சொல்கிறது.
இவ்வாறு மொழிபெயர்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் பெரும்பாவம் ஏற்படுவதில்லை. சூனியம் என்பது சூழ்ச்சி, தந்திரம், வெற்றி தராது என்றெல்லாம் சொல்லும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இம்மொழிபெயர்ப்பு முரண்படாமல் ஒத்துப்போகிறது..
மேலும் இதில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வாசக அமைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
கணவன் மனைவியை எதன் மூலம் பிரிப்பார்களோ அந்த ஒன்றை என மூலத்தில் உள்ளது.
கணவன் மனைவியரிடையே பிரிக்கும் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்று இதில் சொல்லப்படவில்லை. எதன் மூலம் பிரிக்க முடியுமோ அந்த ஒன்றை என்ற சொல்லமைப்பு சூனியம் அல்லாத வேறு ஒன்று என்பதைத் தான் காட்டுகிறது.
மேலும் இவ்வசனத்தில் ஹாரூத் மாரூத் எனும் இரு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களா? கெட்ட மனிதர்களா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
அந்த இரு வானவர்கள் என்ற சொல்லைத் தொடர்ந்து ஹாரூத், மாரூத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஹாரூத், மாரூத் எனும் வானவர்கள் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ள வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் கொடுக்கும் அர்த்தத்தின் படி ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு வானவர்கள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற கருத்து வருகிறது.
மலக்குகள் எப்படி சூனியத்தைக் கற்றுக் கொடுக்க முடியும்? என்ற நியாயமான கேள்விக்கு விளக்கமளிப்பதற்காக ஒரு கதையையும் சில விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.
மனித சமுதாயத்தை இறைவன் அடிக்கடி புகழ்ந்து பேசுவதைக் கேட்ட வானவர்கள் பொறாமைப்பட்டு இறைவனிடம் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தார்களாம். மனிதர்கள் செய்யும் பாவங்களைப் பட்டியல் போட்டுக் காட்டினார்களாம். அதற்கு இறைவன் "மனிதர்களுக்கு ஆசை என்ற உணர்வை நான் வழங்கியுள்ளேன். இதனால் அவர்கள் பல சமயங்களில் தவறுகளைச் செய்து விடுகிறார்கள். உங்களில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்கும் நான் ஆசை எனும் உணர்வை வழங்குகிறேன். அவர்கள் மண்ணுலகம் செல்லட்டும்'' என்று இறைவன் கூறினானாம். மலக்குகள் ஹாரூத், மாரூத் என்ற இருவரைத் தேர்வு செய்தார்களாம். அவ்விருவரும் பூமிக்கு வந்து மனிதர்களை விட அதிக அளவுக்குப் பாவங்கள் செய்தார்களாம். அவர்கள்தான் சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்களாம். இப்படிப் போகிறது கதை!
இந்தக் கதையும், இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட மேற்கண்ட அர்த்தமும் சரியானது தானா? என்று நாம் ஆராயும்போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் மேற்கண்ட அர்த்தம் மோதுவதைக் காணலாம்.
மனித சமுதாயத்தை இறைவன் படைக்கவிருப்பதாக அறிவித்ததுமே "மனிதர்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள், இரத்தம் சிந்துவார்கள்'' என்று மலக்குகள் கூறியதாக 2:30 வசனம் கூறுகிறது.
ஆதம் (அலை) அவர்களின் சிறப்பையும், தகுதியையும் இறைவன் நிரூபித்துக் காட்டிய பிறகு
"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று கூறி தங்கள் தவறுக்கு மலக்குகள் வருந்தி விட்டனர் என 2:32 வசனம் கூறுகிறது.
அது மட்டுமின்றி ஆதம் (அலை) அவர்களுக்குப் பணிந்து தங்கள் தவறுக்கு வானவர்கள் பரிகாரம் தேடிக் கொண்டதாக 2:34 வசனம் கூறுகிறது.
மனிதனின் தகுதியைப் பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.
இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள், இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபணை செய்திருப்பார்கள்?
மனிதனைப் படைக்கும் போது இறைவன், அவர்களின் கருத்தைக் கேட்ட காரணத்தினாலேயே அவர்கள் தங்கள் கருத்தைக் கூறினார்கள். இதை ஆட்சேபணை என்றோ, அதிகப் பிரசங்கித்தனம் என்றோ கூற முடியாது.
இந்தக் கதையில், மலக்குகளிடம் இறைவன் கருத்து எதுவும் கேட்காத நிலையில், மனிதனைப் படைத்து முடித்து விட்ட நிலையில் மலக்குகள் எதிர்க்கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இது போன்ற அதிகப் பிரசங்கித்தனம் மலக்குகளின் இயல்புக்கு மாற்றமானதாகும்.
ஹாரூத் மாரூத் என்போர் மலக்குகள் தான் என்ற கருத்து சரியானது தானா? என்று நாம் ஆராயும்போது திருக்குர்ஆனின் பல வசனங்களுடன் இக்கருத்து மோதுவதைக் காணலாம்.
வானவர்கள் தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள் என்று 66:6 வசனம் கூறுகிறது.
வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் என்று 21:26,27 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
மேற்கண்ட வசனங்களில் வானவர்களின் பண்புகளும், இயல்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன. இத்தகைய பண்புகளைக் கொண்ட வானவர்கள் இறை மறுப்பில் தள்ளும் சூனியத்தை எப்படி கற்றுக் கொடுத்திருக்க முடியும்.?
ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்பிப்பது இறை மறுப்பாகும் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இறைமறுப்பான காரியங்களை வானவர்கள் ஒருபோதும் செய்திருக்க முடியாது.
ஹாரூத் மாரூத் என்போர் வானவர்கள் என்று நாம் கருதினால் வானவர்களை எவ்வாறு நம்ப வேண்டுமோ அதற்கு மாற்றமாக வானவர்களை நம்பும் நிலை ஏற்படும். எனவே எவ்வாறு பொருள் கொள்வது வானவர்களின் இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்துள்ளதோ அந்தப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.
இதற்கு வானவர்களின் இலக்கணத்துக்கு எதிரான கருத்து வராமல் வேறு விதமாகப் பொருள் கொள்ள முடியுமா என்று நாம் பார்க்க வேண்டும்.
அந்த இரு வானவர்கள் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த இரு வானவர்கள் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்பு அல்லது முன்னுள்ள வசனங்களில் இரு வானவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளதா என்று நாம் தேடினால் 2:98 வசனத்தில் ஜிப்ரீல், மீகாயீல் எனும் வானவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஜிப்ரீல், மீகாயீல் எனும் வானவர்களுக்கு எதிராக நடக்கும் யூதர்கள் இவ்வசனத்தில் கண்டிக்கப்படுகின்றனர்.
யூதர்களின் இந்தப் போக்கை அல்லாஹ் கண்டித்து விட்டு அதன் தொடரில் தான் (2:102 வசனத்தில்) அவ்விரு வானவர்களுக்கும் சூனியம் அருளப்படவில்லை என்று குறிப்பிடுகிறான். ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் வழியாகவே எங்களுக்கு சூனியக்கலை வந்து சேர்ந்தது என்று கூறிய யூதர்களுக்கு மறுப்பாக இதை அல்லாஹ் கூறுகிறான்.
ஜிப்ரீல், மீகாயீல் என்ற வானவர்களுக்கும், சூனியக் கலைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுதான் இதன் கருத்தாகும்.
2:98 வசனத்தில் ஜிப்ரீல், மீகாயீல் எனும் வானவர்களுக்கு யூதர்கள் எதிரிகளாக இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு விளக்கமாக இவ்வசனம் அமைந்துள்ளது. ஜிப்ரீல், மீகாயீல் ஆகிய இரு வானவர்கள் சூனியத்தைக் கற்றுத் தந்தார்கள் எனக் கூறி இரு வானவர்கள் மீது யூதர்கள் சுமத்திய பழியை இதன் மூலம் அல்லாஹ் நீக்குகிறான்.
அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததையே இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று இவ்வசனம் துவங்குகின்றது.
ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்றால் ஷைத்தான்களே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது தீய மனிதர்களை இங்கே ஷைத்தான்கள் என்று குறிப்பிடப்படுகின்றதா?
இதையும் நாம் விளங்க வேண்டும்.
'ஷைத்தான்' என்ற சொல் உண்மையான ஷைத்தானுக்குப் பயன்படுத்தப்படுவது போலவே, மோசமான மனிதர்களுக்கும் 2:14, 6:112, 114:5,6 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனியாகப் பயணம் செய்பவன் ஷைத்தான் என்றும், (அபூதாவூத் 2240, திர்மிதீ 1597) கவிஞர்களை ஷைத்தான் என்றும் (முஸ்லிம் 4548) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் ஷைத்தான்கள் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஷைத்தான்கள் என்பது உண்மையான ஷைத்தான்களைக் குறிக்கின்றதா? அல்லது கெட்ட மனிதர்களைக் குறிக்கின்றதா என்ற ஐயம் எழுகின்றது. இந்த ஐயத்தை அகற்றுவதற்கே இறைவன் ஹாரூத், மாரூத் என்கிறான்.
அதாவது சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள் யாரெனில் ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட மோசமான மனிதர்கள் தான் என்று அடையாளம் அல்லாஹ் காட்டுகிறான்.
அரபுமொழியில் பல அர்த்தங்களுக்கு இடமுள்ள சொல்லைப் பயன்படுத்திவிட்டு அதன் பிறகு விளக்கமாக மற்றொரு சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. இதை அரபு இலக்கணத்தில் பத்ல் (மாற்றுச் சொல்) என்று கூறுவார்கள். ஷைத்தான்கள் என்பதன் (பத்ல்) மாற்றுச் சொல்லே ஹாரூத், மாரூத் என்பது.
யூதர்களுக்கு சூனியக் கலையைக் கற்றுத் தந்தது ஸுலைமான் நபியுமன்று. ஜிப்ரீல், மீகாயீல் என்ற மலக்குகளும் அல்லர். மாறாக ஹாரூத், மாரூத் என்ற மனித ஷைத்தான்களே கற்றுத் தந்தனர் என்பது இதுவரை நாம் கூறியவற்றின் சுருக்கமான கருத்தாகும்.
தப்ஸீர் கலையில் மேதையாகிய குர்துபி அவர்கள் "இந்த வசனத்திற்குப் பல்வேறு வகையில் அர்த்தம் செய்யப்பட்டாலும் இதுவே மிகச் சிறந்த விளக்கமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
குர்துபி அவர்களின் இந்த விளக்கத்தை இப்னு கஸீர் அவர்களும் தமது தப்ஸீரில் எடுத்தெழுதுகிறார்கள்.
10:77 வசனம் சூனியக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறினால் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்தைத் தருகிறது.
7:116 வசனம் சூனியம் என்பது கண்கட்டு வித்தை தான்; மெய்யல்ல என்று கூறுகிறது. சூனியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனத்துக்கும் எதிராக அமைந்துள்ளது.
7:118 முதல் 7:120 வரை உள்ள வசனங்களில் சூனியமும் தோற்றது; சூனியக்காரர்களும் தோற்றனர் என்று கூறப்படுகிறது. சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று கூறுவது இவ்வசனங்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
20:66 வசனத்தில் மிகப்பெரும் சூனியக்காரர்கள் செய்த மிகப் பெரும் சூனியத்தால் கயிறுகளைப் பாம்பு போல் காட்ட முடிந்ததே தவிர பாம்பாக ஆக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு முரணாகவும் இக்கருத்து அமைந்துள்ளது.
20:69 வசனத்தில் சூனியம் என்பது தந்திரமும், சூழ்ச்சியும் தான்; மெய்யல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. சூனியத்தின் மூலம் கணவன் மனைவியரைப் பிரிக்க முடியும் என்பது இதற்கு முரணாகவும் அமைந்துள்ளது.
சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்ற கருத்துப்பட அமைந்த இந்த மொழிபெயர்ப்புகள் தவறானவை என்பதற்கு அறிவுப்பூர்வமான காரணங்களும் உள்ளன.
சூனியத்தைக் கற்றால் இறை மறுப்பாளராகி விடுவீர்கள் என்ற எச்சரிக்கை அவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் மிகச் சிறிய சூனியத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?
சிறியதைக் கற்றாலும் இறை மறுப்பாளராகத் தான் ஆவார்கள். பெரியதைக் கற்றாலும் இறை மறுப்பாளராகத் தான் ஆவார்கள் எனும்போது ஏன் அவர்கள் சிறியதைக் கற்க வேண்டும்?
சூனியத்துக்குத் தாக்கம் உண்டு என்போரின் கருத்துப்படி சூனியம் என்பது ஏராளமான வித்தைகளைச் செய்யத்தக்க கலையாகும். இறை மறுப்பாளராக ஆகிவிட்டுப் போகிறோம் என்று துணிந்தவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் கற்றிருப்பார்கள்.
ஒன்றே ஒன்றை, அதுவும் மிகவும் சிறியதைத் தேர்வு செய்து கற்பார்களா? ஒரு சூனியம் கற்றாலும் இறை மறுப்பாளர் ஆவது உறுதி. ஆயிரம் சூனியம் கற்றாலும் இறை மறுப்பாளர் ஆவது உறுதி. இப்படி இருக்க ஏன் அனைத்தையுமோ, பெரிய பெரிய விஷயங்களையோ அவர்கள் கற்காமல் விட்டார்கள்?
பொருளீட்டுவதற்காகவும், உலக ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் சூனியத்தைக் கற்க முன்வந்திருப்பார்கள். ஒரே ஒரு சூனியத்தைக் கற்றால் குறைவாகவே பொருளீட்ட முடியும். அதிகமான சூனிய வகைகளைக் கற்றுக் கொண்டால் அதிகமாகப் பொருளீட்ட முடியும்.
உலக ஆதாயத்துக்காக இறை மறுப்பாளராவதைப் பற்றி கவலைப்படாதவர்கள் அனைத்து வகை சூனியத்தையும் தானே கற்று இருப்பார்கள் என்று சிந்திக்கும்போது இம்மொழிபெயர்ப்பில் கருத்துப் பிழை இருப்பது தெளிவாகிறது.
எனவே திருக்குர்ஆனின் இதர வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணில்லாத வகையிலும் இவ்வசனத்துக்குப் பொருள் செய்வது தான் சரியானது.
சூனியம் குறித்து முழுவிபரங்களை அறிய 285, 357, 468, 495, 499 ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.