34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்
உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபயபூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன.
மக்கா, அபயபூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.
14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலாலும் தோற்கடிக்கப்பட முடியாத ஆலயமாகவும், அப்படி தாக்க வருவோரை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபயபூமியாகவே நீடித்து வருகிறது.
ஹஜ்ஜின் போது பலர் மக்காவில் மரணிக்கிறார்கள். மக்கா அபயபூமியாக இல்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? என்று சிலர் விதண்டாவாதம் செய்யக் கூடும்.
அபயபூமி என்பதன் பொருளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
மக்காவில் ஒருவரும் சாகமாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னரும், இவ்வசனம் அருளப்பட்ட பின்னரும் மக்காவில் பலரும் மரணித்துள்ளனர். பலரும் மரணித்துக் கொண்டு இருப்பதை அனைவரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் மக்கா அபயபூமி என்ற வசனம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்தின் நெருக்கமான பல தோழர்கள் மக்காவில் மரணித்துள்ளனர்.
ஒருவரது மரணம் எங்கே, எப்போது, எப்படி நிகழும் என்று இறைவனால் முடிவு செய்யப்பட்டுள்ளதோ அப்படி நிகழ்ந்தே தீரும். மக்காவில் மரணிப்பார்கள் என்று யார் விஷயத்தில் இறைவன் முடிவு செய்துள்ளானோ அவர் மக்காவில் தான் மரணிப்பார். இதுதான் இஸ்லாத்தின் நம்பிக்கை.
மக்காவுக்குச் செல்லும் ஒருவர் நாம் திரும்பி வருவோமோ இல்லையோ என்று கருதி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. மக்காவில் மரணம், விபத்து ஆகியன ஏற்படாது என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்கள் நம்பாத ஒன்றைக் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது.
சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபயபூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்றும் சிலர் கேட்கின்றனர்.
அபயபூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல. அப்படி முயற்சிப்பவர்கள் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் பொருள். அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பதும் இதன் பொருளாகும்.
அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை. சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.
எனவே மக்கா அபயபூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.
திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.