126. போர்க்களத் தொழுகை
இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது.
போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும்போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க வேண்டும்; மற்றொரு அணியினர் இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும். ஒரு ரக்அத் தொழுததும் அவர்கள் களத்திற்குச் சென்று விட வேண்டும். தொழாத அணியினர் வந்து தொழுகையில் சேர வேண்டும். இவர்கள் வரும் வரை இமாம் தொழுகையை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இதிலிருந்து போர்க்களத்தில் எல்லாத் தொழுகையும் ஒரு ரக்அத் தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இமாம் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்பதைப் பொதுவானதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் இவ்வசனத்தின் துவக்கத்தில் "நீர் அவர்களுடன் இருந்து'' "நீர் அவர்களுக்குத் தொழுகை நடத்தினால்'' என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போது ஒரு அணியினருக்கு மட்டும் அவர்கள் தொழுகை நடத்தி விட்டு மற்றொரு அணிக்குத் தொழுகை நடத்தாமல் விட்டால் அவர்கள் வருத்தம் அடைவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு இறைவன் கட்டளையிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்கள் இமாமாகத் தொழுகை நடத்தும்போது அவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடிக்க வேண்டும். அடுத்த அணியினர் தமக்குள் இன்னொருவரை இமாமாக ஏற்படுத்தி ஒரு ரக்அத் தொழ வேண்டும்.
இந்த வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் எவரும் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ள சிறப்புச் சட்டம் என்பதை அறிந்து கொள்வார்கள்.