அத்தியாயம் : 11 ஹூது

 அத்தியாயம் : 11  

ஹூது – ஓர் இறைத் தூதரின் பெயர்

மொத்த வசனங்கள் : 123

ந்த அத்தியாயத்தில் 50வது வசனம் முதல் 60வது வசனம் வரை ஹூது நபி அவர்களுடைய பிரச்சாரமும், அவர்களுடைய சமுதாயத்தினர் அவருக்குக் கொடுத்த இடையூறுகளும், நல்லோர் காப்பாற்றப்பட்டு தீயோர் அழிக்கப்பட்டதும் கூறப்படுகிறது. எனவே இந்த அத்தியாயம் ஹூது எனப் பெயர் பெறுகிறது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், ரா.2 (இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

2. "அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) வணங்காதீர்கள்! நான் அவனிடமிருந்து உங்களுக்கு நற்செய்தி கூறுபவன்; எச்சரிக்கை செய்பவன்'' (என்று முஹம்மதே! கூறுவீராக!)

3. "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு அழகிய வசதியைக் குறிப்பிட்ட காலம் வரை அளிப்பான். நன்மை செய்யும் ஒவ்வொருவருக்கும் அவரது வெகுமதியை அளிப்பான். நீங்கள் புறக்கணித்தால் மிகப் பெரிய நாளின்1 வேதனை பற்றி உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறுவீராக!)

4. அல்லாஹ்விடமே உங்களின் மீளுதல் உள்ளது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

5. கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

6.பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.463 அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.

7."உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?' என்பதைச் சோதிப்பதற்காக484 அவனே வானங்களையும்,507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 அவனது அர்ஷ்488 தண்ணீரின் மீது இருந்தது. "மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை''285&357 என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

8. குறிப்பிட்ட காலம் வரை நாம் வேதனையை அவர்களுக்குப் பிற்படுத்தினால் "அதைத் தடுத்தது எது?'' என்று கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அது தடுக்கப்படுவதில்லை. அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.

9, 10, 11. மனிதனுக்கு, அருளை அனுபவிக்கச் செய்து, பின்னர் அவனிடமிருந்து அதை நாம் எடுத்து விட்டால் அவன் நம்பிக்கை இழந்தவனாகவும், நன்றி மறந்தவனாகவும் ஆகிவிடுகிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் இன்பத்தை நாம் அனுபவிக்கச் செய்தால் "என்னை விட்டும் தீங்குகள் அகன்று விட்டன'' என்று கூறுகிறான். அவன் பெருமிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.26

12. "இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

13. "இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்!7 அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறுவீராக!

14. உங்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால் அல்லாஹ்வின் ஞானத்துடன் இது அருளப்பட்டது என்பதையும், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் கட்டுப்படுகிறீர்களா? (என்று கேட்பீராக!)

15. இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியையும் நாடுவோரின் செயல்(களுக்கான பலன்)களை இங்கேயே முழுமையாகக் கொடுப்போம். இங்கே அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.

16. அவர்களுக்கு மறுமையில்1 நரகத்தைத் தவிர வேறில்லை. அவர்கள் தயாரித்தவை அங்கே அழிந்து விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் வீணாகி விடும்.

17. தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) சான்றின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து இறைவன் புறத்திலிருந்து சாட்சியாளர் (முஹம்மது) வந்துள்ள நிலையிலும், இதற்கு முன்னர் (அருளப்பட்ட) மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் உள்ள நிலையிலும் இதை நம்புவோரும் இதை மறுக்கும் கூட்டத்தினருமா சமமாவார்கள்? நரகமே இவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட இடமாகும். இதில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்! இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். எனினும் அதிகமான மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

18. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது.6

19. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகக் காட்டுகின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.

20. அவர்கள் பூமியில் வெற்றி பெறுவோராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்களின் வேதனை பன்மடங்காக்கப்படும். அவர்களால் செவியேற்க இயலாது. அவர்கள் பார்ப்போராகவும் இல்லை.

21. அவர்கள் தாம், தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் கற்பனை செய்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.

22. மறுமையில் அவர்களே பெருநட்டமடைந்தோர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

23. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

24. இவ்விரு பிரிவினருக்கும் உதாரணம் குருடன் மற்றும் செவிடனும், பார்வையுள்ளவன் மற்றும் கேட்பவனும் ஆவார்கள். தன்மையில் இவ்விருவரும் சமமாவார்களா? நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா?

25. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

26. அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

27. "எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

28. "என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

29. "என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள்.488 எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்''

30. "என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?''

31."என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்'' (எனவும் கூறினார்.)

32. "நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர்.

33. "அல்லாஹ் நாடினால் அவனே அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் (அவனை) வெல்ல முடியாது'' என்று அவர் கூறினார்.

34. "நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டுவிட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!'' (என்றும் கூறினார்.)

35. "இவர் இதை இட்டுக்கட்டி விட்டார்'' என்று கூறுகிறார்களா? "நான் இட்டுக்கட்டியிருந்தால் அதன் குற்றம் என்னையே சேரும். நீங்கள் செய்த குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன்'' என்று கூறுவீராக!

36, 37. "(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்'' என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.26

38. அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.

39. "இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்!'' (என்றும் கூறினார்)

40. நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கியபோது221 "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

41. "இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (நூஹ்) கூறினார்.

42. மலைகளைப் போன்ற அலைகள் மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏகஇறைவனை) மறுப்போருடன் ஆகிவிடாதே!'' என்று நூஹ் கூறினார்.

43. "ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

44. "பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே507 நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது.222 "அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது.

45. நூஹ், தம் இறைவனை அழைத்தார். "என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார்.

46. "நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான்.

47. "இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நட்டமடைந்தவனாகி விடுவேன்'' என்று அவர் கூறினார்.

48. "நூஹே! உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!'' என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம்; பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.

49. (முஹம்மதே!) இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும், உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! (நம்மை) அஞ்சுவோர்க்கே (நல்ல) முடிவு உண்டு.

50. ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்). "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.

51. "என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?''

52. "என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப்507 பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்!'' (எனவும் கூறினார்.)

53. "ஹூதே! நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை''

54, 55. "எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார்.26

56. எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன். எந்த உயிரினமானாலும் அதன் முன்நெற்றியை அவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். எனது இறைவன் நேரான வழியில் இருக்கிறான்.

57. "உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக46 ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் செய்ய முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'' (எனவும் கூறினார்)

58. நமது கட்டளை வந்தபோது ஹூதையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அவர்களைக் கடுமையான வேதனையிலிருந்து காப்பாற்றினோம்.

59. இந்த ஆது சமுதாயத்தினர், தமது இறைவனின் சான்றுகளை நிராகரித்து, அவனது தூதர்களுக்கு மாறுசெய்தனர். பிடிவாதக்கார ஒவ்வொரு கொடுங்கோலனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றினார்கள்.

60. இவ்வுலகிலும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. கவனத்தில் கொள்க! ஆது சமுதாயத்தினர் தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஹூதுவின் சமுதாயமான ஆது (சமுதாயம் இறையருளை விட்டும்) தூரமாயினர்.

61. ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில்49 உள்ளவன்; பதிலளிப்பவன்'' என்றார்.

62. "ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்! எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கின்றீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

63. "என் சமுதாயமே! நான் எனது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் இருந்து, அவன் எனக்கு அருளும் செய்திருக்க, அவனுக்கு நான் மாறுசெய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள்! அப்போது நட்டத்தையே எனக்கு அதிகமாக்குவீர்கள்'' என்று அவர் கேட்டார்.

64. "என் சமுதாயமே! உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம்.269 அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்'' (என்றார்).

65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். "உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள்! இது பொய்யாகாத எச்சரிக்கை'' என்று அவர் கூறினார்.

66. நமது கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

68. அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள். கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.

69. நமது தூதர்கள்161 இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம்159 என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம்159 என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். 171

70. அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்டபோது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.

71. அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யாகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.223

72. "இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்'' என்று அவர் கூறினார்.

73. "அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும்.224 அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.

74. இப்ராஹீமை விட்டு பயம் விலகி, நற்செய்தி வந்தபோது, லூத்துடைய சமுதாயம் குறித்து நம்மிடம் தர்க்கம் செய்யலானார்.

75. இப்ராஹீம் சகிப்புத் தன்மை மிக்கவர், இரக்கமுள்ளவர். (நம்மை நோக்கி) திரும்புபவர்.

76. "இப்ராஹீமே! இதை நீர் விட்டு விடுவீராக! உமது இறைவனின் கட்டளை வந்து விட்டது. தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும்'' (என்று இறைவன் கூறினான்.)

77. நமது தூதர்கள்161 லூத்திடம் வந்தபோது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். "இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார்.

78. அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா'' என்று கேட்டார்.

79. "உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர்.

80. "உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.

81."லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.161 அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்று தூதர்கள் கூறினார்கள்.

82. நமது கட்டளை வந்தபோது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம்.412

83. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.

84. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! நீங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவே நான் காண்கிறேன். சுற்றி வளைக்கும் நாளின்1 வேதனை குறித்து உங்கள் விஷயத்தில் நான் பயப்படுகிறேன்'' என்றார்.

85. "என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!''

86. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ் வழங்கும் இலாபம் உங்களுக்குச் சிறந்தது. நான் உங்களைக் கண்காணிப்பவனாக இல்லை'' (என்றார்.)

87. "ஷுஐபே! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும், எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட உமது தொழுகை தான் உமக்குக் கட்டளையிடுகிறதா? நீர் சகிப்புத் தன்மையும், நேர்மையும் உள்ளவராவீர்!'' என்று (கேலியாக) கூறினர்.

88. "என் சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்'' என்று கூறினார்.

89. "என் சமுதாயமே! என் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு (உங்களை அநியாயம் செய்ய வைத்து) நூஹுடைய சமுதாயத்திற்கோ, ஹூதுடைய சமுதாயத்திற்கோ, ஸாலிஹுடைய சமுதாயத்திற்கோ ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். லூத்துடைய சமுதாயம் உங்களுக்குத் தொலைவில் இல்லை''

90. "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்'' (என்றார்.)

91. "ஷுஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லை'' என்று அவர்கள் கூறினார்கள்.

92. "என் சமுதாயமே! என் குலத்தவர் அல்லாஹ்வை விட உங்களுக்கு மதிப்புமிக்கவர்களா? அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே! என் இறைவன் நீங்கள் செய்பவற்றை முழுமையாக அறிபவன்'' என்று அவர் கூறினார்.

93."என் சமுதாயமே! உங்கள் நிலையிலேயே நீங்கள் செயல்படுங்கள்! நானும் (என் நிலையில்) செயல்படுகிறேன். இழிவு தரும் வேதனை யாருக்கு ஏற்படும் என்பதையும், யார் பொய்யன் என்பதையும் பின்னர் அறிந்து கொள்வீர்கள்! எதிர்பாருங்கள்! உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்'' (என்றார்).

94. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

95.அங்கே வசிக்காதவர்களைப் போல் (ஆனார்கள்). கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர் (இறையருளைவிட்டு) தூரமானது போல் மத்யன்வாசிகளும் தூரமானார்கள்.

96, 97. மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான அதிகாரத்துடனும் ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் அனுப்பினோம். அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையையே பின்பற்றினார்கள். ஃபிர்அவ்னின் கட்டளை நல்லதாக இருக்கவில்லை.26

98. கியாமத் நாளில்1 அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான். சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது.

99. இங்கேயும், கியாமத் நாளிலும்1 அவர்களைச் சாபம் விரட்டியது. வழங்கப்படும் இக்கூலி மிகவும் கெட்டது.

100. இவை (சில) ஊர்கள் பற்றிய செய்திகள்! இதை நாமே உமக்குக் கூறுகிறோம். அவற்றில் (சில) நிலைத்துள்ளன. (சில) அழிந்து விட்டன.

101. அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கிழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு நட்டத்தைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை.

102. அநீதி இழைத்த ஊர்களைப் பிடிக்கும்போது இவ்வாறே உமது இறைவன் பிடிக்கிறான். அவனது பிடி துன்பம் தருவது; கடினமானது.

103. மறுமையின்1 வேதனையை அஞ்சுவோருக்கு இதில் தக்க பாடம் உள்ளது. அதுவே மக்கள் ஒன்று திரட்டப்படும் நாள்!1 அதுவே (அனைவரும் இறைவனின்) முன்னால் நிறுத்தப்படும் நாள்! 1.

104. குறிப்பிட்ட காலக்கெடுவுக்காகவே அதைப் பிற்படுத்தி வைத்துள்ளோம்.

105. அது ஏற்படும் நாளில் எவரும் அவனது அனுமதியின்றி பேச முடியாது. அவர்களில் கெட்டவர்களும் உள்ளனர். நல்லவர்களும் உள்ளனர்.

106. கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.

107. வானங்களும்507 பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்225 அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர. 173 உமது இறைவன் நினைத்ததைச் செய்வான்.

108.நல்லோர் சொர்க்கத்தில் இருப்பார்கள். வானங்களும்507 பூமியும் நிலையாக இருக்கும் காலமெல்லாம்225 அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உமது இறைவன் நாடியதைத் தவிர.173 (அது) குறைவில்லாத அருட்கொடை.

109. அவர்கள் வணங்குவதில் (அவர்களிடம் சான்று இருக்குமோ என) நீர் சந்தேகத்தில் இருக்காதீர்! முன்பு தமது முன்னோர்கள் வணங்கியது போலவே அவர்களும் வணங்குகின்றனர். குறைவின்றி அவர்களுக்குரிய பங்கை நிறைவாக நாம் வழங்குவோம்.

110.மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதில் பெரும் சந்தேகத்திலேயே உள்ளனர்.

111.ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்(களுக்கான கூலி)களை உமது இறைவன் முழுமையாக வழங்குவான். அவர்கள் செய்வது பற்றி அவன் நன்கறிந்தவன்.

112.உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நீரும், திருந்தியவர்களாக உம்முடன் இருப்போரும் உறுதியாக நில்லுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! நீங்கள் செய்வதை அவன் பார்ப்பவன். 488

113.அநீதி இழைத்தோர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள்! (அவ்வாறு சாய்ந்தால்) உங்களை நரகம் தீண்டும். அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

114. பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும்226 தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.

115. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

116. நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில் குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர்.

117. ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூர்களை அல்லாஹ் அழிக்க மாட்டான்.

118, 119. உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். "மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.26

120.தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது.

121."உங்கள் நிலையில் நீங்கள் செயல்படுங்கள்! நாங்களும் செயல்படுகிறோம்'' என்று நம்பிக்கை கொள்ளாதோரிடம் கூறுவீராக!

122. "எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்க்கிறோம்'' (என்றும் கூறுவீராக!)

123.வானங்களிலும்,507 பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

 

Leave a Reply