அத்தியாயம் : 18 அல் கஹ்ஃப்

அத்தியாயம் : 18

அல்கஹ்ஃப் – அந்தக்குகை

மொத்த வசனங்கள் : 110

ந்த அத்தியாயத்தின் 9 முதல் 26 வரை உள்ள வசனங்களில் கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… .

1, 2, 3, 4. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனே தனது அடியார் மீது, எவ்விதக் கோணலும் இல்லாத நேரான இவ்வேதத்தை, தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் அருளினான்.26

5. இவர்களுக்கும், இவர்களின் முன்னோருக்கும் இது பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்களின் வாய்களில் வெளியாகும் சொற்களில் இது பயங்கரமானதாகும். இவர்கள் பொய்யையே கூறுகின்றனர்.

6. இச்செய்தியை இவர்கள் நம்பாவிட்டால் இவர்களுக்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

7. அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப்484 பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

8. அதன் மீது உள்ளவற்றை வெட்டவெளியாகவும் நாம் ஆக்குபவர்கள்.

9. "அந்தக் குகைக்கும், அந்த ஏட்டுக்கும் உரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானவர்கள்'' என்று நீர் நினைக்கிறீரா?271

10. சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கியபோது "எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!'' என்றனர்.

11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம்.462

12. அவர்கள் தங்கிய காலத்தை இரு சாராரில் நன்கறிந்தவர் யார் என்பதை அறிவிப்பதற்காகப் பின்னர் அவர்களை எழுப்பினோம்.

13. அவர்களது உண்மை வரலாறை நாம் உமக்குக் கூறுகிறோம். அவர்கள் இளைஞர்கள். அவர்கள் தமது இறைவனை நம்பினார்கள். அவர்களுக்கு நேர்வழியை அதிகமாக்கினோம்.

14. அவர்கள் எழுந்து "நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்று அவர்கள் கூறியபோது அவர்களது உள்ளங்களை உறுதிப்படுத்தினோம்.

15. இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

16. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு விலகி அந்தக் குகையில் ஒதுங்குங்கள்! உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான் (எனவும் கூறினர்).

17. சூரியன் உதிக்கும்போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும்போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.

18.அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.462 அவர்களை வலப்புறமும் இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!

19. அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். "எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்'' என்று அவர்களில் ஒருவர் கேட்டார். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்'' என்று (மற்றவர்கள்) கூறினர். "நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்'' என்றும் கூறினர்.413

 20. அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்! (என்றும் கூறினர்.)

21.அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், யுகமுடிவு நேரம்1 சந்தேகம் இல்லாதது என்பதையும் அறிந்து கொள்வதற்காக (குகைவாசிகளைப் பற்றி) அவர்களுக்கு இவ்வாறே வெளிப்படுத்தினோம். அப்போது அவர்கள் தமக்கிடையே முரண்பட்டனர். "அவர்கள் மீது ஒரு கட்டடத்தை எழுப்புங்கள்! அவர்களைப் பற்றி அவர்களது இறைவனே அறிவான்'' என்றனர். தமது காரியத்தில் யாருடைய கை ஓங்கியதோ அவர்கள் "இவர்கள் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்துவோம்''397 என்றனர்.

22. "(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்'' என்று மறைவானதைப் பற்றி யூகத்தினடிப்படையில் (வேறு சிலர்) கூறுகின்றனர். "எழுவர்; எட்டாவது அவர்களின் நாய்'' என்று (சிலர்) கூறுகின்றனர். "அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி என் இறைவனே நன்கு அறிந்தவன். சிலரைத் தவிர அவர்களை யாரும் அறிய மாட்டார்கள்''496 என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் குறித்து தெரிந்ததைத் தவிர (வேறு எதிலும்) தர்க்கம் செய்யாதீர். அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!

23, 24. அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது உமது இறைவனை நினைப்பீராக! "எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழிகாட்டக் கூடும்'' என்று கூறுவீராக!26

25. அவர்கள் தமது குகையில் முன்னூறு ஆண்டுகள் தங்கினார்கள் (என்றும்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கிக் கொண்டனர் (என்றும் கூறுகின்றனர்.)

26. "அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்களிலும்507பூமியிலும் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! 488 நன்றாகச் செவியுறுபவன். 488 அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!

27. (முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை.30 அவனையன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்!

28. தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

29. "இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

30. யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்கிறார்களோ (அவ்வாறு) அழகிய செயல் செய்பவரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

31. அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள இருக்கைகளில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.

32. இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேலி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.

33. அவ்விரு தோட்டங்களும் தமது பலன்களைச் சிறிதும் குறையின்றி அளித்து வந்தன. அவ்விரண்டுக்கும் இடையே ஆற்றை ஓடச் செய்தோம்.

34. மற்ற கனிகளும் இருந்தன. அவன் தனது தோழரிடம் உரையாடும்போது "நான் உன்னை விட அதிகச் செல்வம் படைத்தவன்; ஆள் பலம் மிக்கவன்'' என்று கூறினான்.

35. தனக்குத்தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்துக்குள் நுழைந்தான். "இது அழிந்து விடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை'' என்றான்.

36. "யுகமுடிவு நேரம்1 வரும் எனவும் நான் நினைக்கவில்லை. நான் எனது இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டால் இதை விடச் சிறந்த தங்குமிடத்தையே பெறுவேன்'' (என்றான்).

37.அவனுடன் உரையாடிய அவனது தோழர் "மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும் உன்னைப் படைத்துப்368 பின்னர் மனிதனாக உன்னைச் சீரமைத்தவனை நீ மறுக்கிறாயா?'' என்று கேட்டார்.506

38. "எனினும் அவனே அல்லாஹ். எனது அதிபதி. என் இறைவனுக்கு எவரையும் இணை கற்பிக்க மாட்டேன்''

39. உனது தோட்டத்துக்குள் நுழைந்தபோது அல்லாஹ் நாடியதே நடக்கும். அல்லாஹ்வால் தவிர எந்த ஆற்றலும் இல்லை என்று நீ கூறியிருக்கக் கூடாதா? உன்னை விட செல்வத்திலும், சந்ததியிலும் நான் குறைந்தவன் என்று நீ கருதினாய்''

40. "உனது தோட்டத்தை விட சிறந்த தோட்டத்தை என் இறைவன் எனக்கு வழங்கி, உன் தோட்டத்தின் மீது கணக்குத் தீர்ப்பதை வானிலிருந்து507 அனுப்பி அதை வழுக்கும் களிமண்ணாக ஆக்கிடக்கூடும்''

41. "அல்லது அதன் தண்ணீர் வற்றி விடும். அதைத் தேடிப் பிடிக்க உன்னால் இயலாது'' (என்றும் கூறினார்).

42. அவனது கனிகள் சுற்றி வளைக்கப்பட்டன. அது தலைகுப்புற விழுந்து கிடக்கும் நிலையில் அதற்காகச் செலவிட்டது பற்றி கைகளைப் பிசைந்தான். "நான் என் இறைவனுக்கு ஒருவரையும் இணைகற்பிக்காமல் இருந்திருக்கக்கூடாதா?'' என்று கூறினான்.

43. அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவும் கூட்டம் இல்லை. உதவி பெறுபவனாகவும் அவன் இல்லை.

44. அங்கே உதவுதல் உண்மையான அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனே சிறந்த கூலி கொடுப்பவன்; சிறந்த முடிவு எடுப்பவன்.

45. தண்ணீரை வானத்திலிருந்து507 நாம் இறக்கினோம். அது பூமியின் தாவரங்களுடன் இரண்டறக் கலந்தது. (பின்னர் காய்ந்து) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது. இதை இவ்வுலக வாழ்வுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.

47. நாம் மலைகளை இடம் பெயரச் செய்யும் நாளில்1 பூமியை வெட்ட வெளியாகக் காண்பீர்! அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.

48. உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).

49. அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

50. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் (ஏகத்துவத்துக்கு இணைவைப்பைப்) பகரமாக்கியது மிகவும் கெட்டது.

51.வானங்களையும்,507 பூமியையும் படைத்ததற்கும், அவர்களைப் படைத்ததற்கும்368அவர்களை நான் சாட்சியாக வைத்துக் கொள்ளவில்லை. வழிகெடுப்பவர்களை நண்பர்களாக நான் ஆக்கிக் கொள்வதில்லை.

52. "எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள்'' என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள். அவர்களுக்கிடையே (நரகம் எனும்) அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.

53. குற்றவாளிகள் நரகத்தைப் பார்க்கும்போது 'அதிலே தாங்கள் விழவிருப்பதை' அறிந்து கொள்வார்கள். அதை விட்டுத் தப்பும் இடத்தையும் அவர்கள் காண மாட்டார்கள்.

54. மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.

55. முன்னோருக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கு வரவில்லை என்பதும், அல்லது நேரடியாக வேதனை வரவில்லை என்பதுமே நேர்வழி வந்தபோது நம்பி, தமது இறைவனிடம் பாவமன்னிப்புத் தேட மனிதர்களுக்குத் தடையாக இருக்கிறது.

56. நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவுமே தூதர்களை அனுப்பினோம். பொய்யால் உண்மையை அழிப்பதற்காக பொய்யைக் கொண்டு (ஏகஇறைவனை) மறுப்போர் தர்க்கம் செய்கின்றனர். எனது வசனங்களையும், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதையும் கேலியாகக் கருதுகின்றனர்.

57. அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற மாட்டார்கள்.

58. உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தை அவர்கள் பெற மாட்டார்கள்.

59. பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் அநீதி இழைத்தபோது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.

60. "இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்றுகொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்டகாலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

61. இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்தபோது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

62. அவ்விருவரும் கடந்து சென்றபோது "காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

63. "நாம் அப்பாறையில் இளைப்பாறியபோது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.

64. "அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

65. (அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

66. "உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?'' என்று அவரிடம் மூஸா கேட்டார்.

67, 68. "என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?'' என்று (அந்த அடியார்) கூறினார்.26

69. "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறுசெய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார்.

70. "நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு எதைப் பற்றியும் விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது'' என்று (அந்த அடியார்) கூறினார்.

71. இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

72. "என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.273

73. "நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!'' என்று (மூஸா) கூறினார்.

74. இருவரும் (தொடர்ந்து) நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்டபோது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். "எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.273

75. "நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

76. "இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்'' என்று (மூஸா) கூறினார்.

77. அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரை இருவரும் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே'' என்று (மூஸா) கூறினார்.273

78. "இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

79. அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

80. அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழிகேட்டிலும் தள்ளி விடுவான்'' என்று அஞ்சினோம்.

81. "அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடுபவனைப் பகரமாகக் கொடுப்பான்'' என நினைத்தோம்.

82. அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே. (என்றார்)273

83. (முஹம்மதே!) துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்'' என்று கூறுவீராக!

84. அவருக்குப் பூமியில் (ஆட்சி செய்ய) நாம் வாய்ப்பளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம்.

85. அவர் ஒரு வழியில் சென்றார்.

86. சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபோது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். "துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக் கொள்ளலாம்'' என்று கூறினோம்.

87. "அநீதி இழைத்தவனைப் பின்னர் தண்டிப்போம். பின்னர் அவன் தனது இறைவனிடம் கொண்டு செல்லப்படுவான். அவன் கடுமையாகத் தண்டிப்பான்'' என்று அவர் கூறினார்.

88. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.

89. பின்னர் ஒரு வழியில் சென்றார்.

90. முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.274

91. இவ்வாறே அவரிடம் உள்ளதை முழுமையாக அறிவோம்.

92. பின்னர் ஒரு வழியில் தொடர்ந்து சென்றார்.

93. முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்தபோது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.

94. "துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ்451 என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர்.

95. "என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமிடையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார்.

96. (தனது பணியாளர்களிடம்) "என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமானபோது 'ஊதுங்கள்!' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். "என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்'' என்றார்.

97. அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது.

98. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும்போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.374

99. அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.

100. (நம்மை) மறுப்போருக்கு முன்னே அந்நாளில் நரகத்தை நன்கு எடுத்துக் காட்டுவோம்.

101. என்னை நினைப்பதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. (உண்மையை) கேட்க இயலாமல் இருந்தனர்.

102.(என்னை) மறுப்போர் என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

103. "செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக!

104. இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

105. அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும்488 மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில்1 அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

106. அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

107. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

108. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.

109. "எனது இறைவனின் கட்டளைகளுக்காக155 கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!

110. "நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை488 எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

 

Leave a Reply