அத்தியாயம் : 28 அல் கஸஸ்

அத்தியாயம் : 28

அல் கஸஸ் – நடந்த செய்திகள்

மொத்த வசனங்கள் : 88

ந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. தா, ஸீம், மீம்.2

2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.

3. மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.

4. ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.

5, 6. அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.26

7. "இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

8. தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.

9. "எனக்கும், உமக்கும் இவர் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.

10. மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்காவிட்டால் அவர் (உண்மையை) வெளிப்படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.

11. "நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

12. பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) தடுத்திருந்தோம். "உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.

13. அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிர்வதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரை (மூஸாவை) அவரிடம் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

14. அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்தபோது அவருக்கு அதிகாரத்தையும்,164கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

15. அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.375

16. "என் இறைவா! எனக்கே நான் தீங்கிழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.375

17. "என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.

18. அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். "நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார்.

19. பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்றபோது "மூஸாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை'' என்று அவன் கூறினான்.375

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து "மூஸாவே! பிரமுகர்கள் உம்மைக் கொல்ல ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.

21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார்.

22. அவர் மத்யன் நகருக்கு வந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டக்கூடும்'' என்றார்.

23. மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்தபோது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு "உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். "மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று அவர்கள் கூறினர்.

24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, "என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார்.

25. அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, "நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். "நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் தப்பித்து விட்டீர்'' என்று அவர் கூறினார்.

26. "என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.

27. "எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.309

28. "இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார்.

29. மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்டபோது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.

30. அவர் அங்கே வந்தபோது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து "மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார்.

31. உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்டபோது269திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். "மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.''

32. உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும்.269 பயத்தின்போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!367இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகளாகும். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.

33. "என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

34. "என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்).

35. "உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான்.

36. மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம்285 தவிர வேறில்லை.357 இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

37. "தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றிபெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

38. "பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.

39. அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.

40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். "அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?'' என்று கவனிப்பீராக!

41. அவர்களை நரகிற்கு அழைக்கும் தலைவர்களாக்கினோம். கியாமத் நாளில்1 அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

42. இவ்வுலகில் அவர்களுக்கு சாபத்தைத் தொடரச் செய்தோம். கியாமத் நாளில்1 அவர்கள் இழிந்தோரில் இருப்பார்கள்.

43. முந்தைய தலைமுறையினரை அழித்த பின், இவர்கள் படிப்பினை பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்குப் பாடமாகவும், அருளாகவும், நேர்வழியாகவும் இருக்கிறது.

44. மூஸாவுக்கு நாம் கட்டளை பிறப்பித்தபோது அந்த மேற்குத் திசையில் நீர் இருக்கவுமில்லை. நீர் பார்க்கவுமில்லை.

45. எனினும் பல சமுதாயத்தினரை உருவாக்கினோம். ஆண்டுகள் பல அவர்களைக் கடந்து விட்டன. மத்யன்வாசிகளிடம் நமது வசனங்களை ஓதிக்கொண்டு, அவர்களுடன் நீர் வசிக்கவுமில்லை. மாறாக நாம் தூதர்களை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.

46. நாம் (மூஸாவை) அழைத்தபோது தூர் மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. மாறாக உமது இறைவனின் அருளால், இதற்கு முன் எச்சரிக்கை செய்பவர் வராத ஒரு சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)

47. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே; நம்பிக்கை கொண்டிருப்போமே'' எனக் கூறுவார்கள் என்பது இல்லையானால் (உம்மைத் தூதராக அனுப்பியிருக்க மாட்டோம்.)

48. நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோது "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? "இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே''285 என்று கூறுகின்றனர். "அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்'' எனவும் கூறுகின்றனர்.357

49. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக! 7

50. அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

51. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இச்செய்தியை அவர்களுக்குக் கிடைக்கச் செய்தோம்.

52. இதற்கு முன் நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்களே இதை நம்புகின்றனர்.

53. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும்போது "இதை நம்பினோம். இது நமது இறைவனிடமிருந்து வந்த உண்மை. இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்'' என்று கூறுகின்றனர்.

54. அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.

55. வீணானவற்றை அவர்கள் செவியுறும்போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.

56. (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன். 81

57. "நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா?34 ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.310

58. வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்ட எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். இதோ அவர்களின் குடியிருப்புகள்! அவர்களுக்குப் பின் குறைவாகவே தவிர அங்கே யாரும்குடியிருக்கவில்லை. நாமே (அதற்கு) வாரிசுகளாகி விட்டோம்.

59. ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார். ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைத்தால் அன்றி எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

60.உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா?

61.நாம் அழகிய வாக்குறுதி அளித்து அதை மறுமையில் அடையவிருப்பவர், இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளை நாம் யாருக்கு வழங்கினோமோ அவனைப் போன்றவரா? அவன் கியாமத் நாளில்1 (இறைவன்) முன் நிறுத்தப்படுபவன்.

62. அவன், அவர்களை அழைக்கும் நாளில்1 "எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?'' என்று கேட்பான்.

63. "எங்கள் இறைவா! இவர்களையே வழிகெடுத்தோம். நாங்கள் வழிகெட்டது போலவே இவர்களையும் வழிகெடுத்தோம். அதிலிருந்து விலகி உன்னை நோக்கித் திரும்புகிறோம். இவர்கள் எங்களை வணங்கவில்லை'' என்று யாருக்கு எதிராக வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் கூறுவார்கள்.

64. "உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!'' என்று கூறப்படும். இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர்வழி சென்றிருக்கக் கூடாதா?

65. அவன் அவர்களை அழைக்கும் நாளில்1 "தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?'' என்று கேட்பான்.

66. செய்திகள் அந்நாளில் அவர்களுக்கு முற்றாக மறந்து விடும். எனவே அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்.

67. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.

68. தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்; தேர்வு செய்வான். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.

69. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிகிறான்.

70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

71. "கியாமத் நாள்1 வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

72. "கியாமத் நாள்1 வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

73. நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.

74. அவர்களை அவன் அழைக்கும் நாளில்1 "எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?'' என்று கேட்பான்.

75. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். "உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!'' என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.

76. காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

77. அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).

78. "என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

79. தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.

80. "உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.

81. அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

82. "அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். அளவோடும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். "அந்தோ! (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.

83. பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

84. நன்மையைக் கொண்டு வருவோருக்கு அதை விடச் சிறந்தது உண்டு. தீமையைக் கொண்டு வருவோருக்கு அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதுவும் கூலி கொடுக்கப்படாது.

85. (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன்.311 "நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

86. இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை).344 எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகிவிடாதீர்!

87. அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

88. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியும். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

 

Leave a Reply