அத்தியாயம் : 30 அர்ரூம் – ரோமப் பேரரசு

அத்தியாயம் : 30

அர்ரூம் – ரோமப் பேரரசு

மொத்த வசனங்கள் : 60

ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், மீம்.2

2, 3, 4, 5. ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள்.313முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.26

6. (இது) அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் தனது வாக்குறுதியை மீற மாட்டான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

7. இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அவர்கள் அறிகிறார்கள். அவர்களே மறுமையைப் பற்றி கவனமற்றுள்ளனர்.

8. அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்கவில்லையா? வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். மனிதர்களில் அதிகமானோர் தமது இறைவனின் சந்திப்பை488மறுப்பவர்கள்.

9. அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? இவர்களை விட வலிமையுடன் அவர்கள் இருந்தனர். பூமியைப் பண்படுத்தி இவர்கள் பயிரிட்டதை விட அதிகம் பயிரிட்டனர். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.

10. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதி அவற்றைக் கேலி செய்ததால் தீமை செய்தோரின் முடிவு தீமையாகவே அமைந்தது.

11. அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

12. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கையிழப்பார்கள்.

13. அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.

14. யுகமுடிவு1 ஏற்படும் நாள்! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

15. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோர், சோலையில் மகிழ்விக்கப்படுவார்கள்.

16. (நம்மை) மறுத்து நமது வசனங்களையும், மறுமைச்1 சந்திப்பையும் பொய்யெனக் கருதியோர் வேதனையின் முன்னே நிறுத்தப்படுவார்கள்.

17, 18. நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும், காலைப் பொழுதை அடையும்போதும், அந்தி நேரத்திலும், நண்பகலிலும் அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும்,507 பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.26

19. அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி செத்த பிறகு அதற்கு உயிரூட்டுகிறான். இவ்வாறே நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

20. மண்ணால் உங்களைப் படைத்து506 பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.368

21. நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

22. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

23. இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

24. மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

25. அவனது கட்டளைப்படி வானமும்,507 பூமியும் நிலைபெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். 175

26. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.

27. அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும்,507 பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.

28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

29. மாறாக, அநீதி இழைத்தோர் அறிவின்றி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் யார்? அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை

30. (முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

31, 32. அவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணைகற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.26

33, 34. மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.26

35. அவர்கள் எதை இணை கற்பிக்கிறார்களோ அது குறித்துப் பேசுகின்ற சான்றை அவர்களுக்கு நாம் அருளியுள்ளோமா?

36. மனிதர்களுக்கு அருளை நாம் சுவைக்கச் செய்யும்போது அதில் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.

37. தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், அளவோடும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.345

38. உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும்206 அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.

39. மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.

40. அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான்.463 பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

41. மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. அவர்கள் திருந்துவதற்காக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வான்.

42. "பூமியில் பயணம் செய்து முன் சென்றோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!'' என்று கூறுவீராக! அவர்களில் அதிகமானோர் இணைகற்பிப்போராக இருந்தனர்.

43. தடுத்து நிறுத்த முடியாத ஒரு நாள்1 அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன் உமது முகத்தை நிலையான மார்க்கத்தை நோக்கி நிலைநிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

44. (ஏகஇறைவனை) மறுப்போரின் நிராகரிப்பு அவரையே சேர்ந்தது. நல்லறம் செய்வோர் தமக்காகவே தயாரித்துக் கொள்கின்றனர்.

45. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அவனது அருளிலிருந்து அவன் கூலி வழங்குவான். (தன்னை) மறுப்போரை அவன் விரும்ப மாட்டான்.

46.தனது அருளை உங்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், கப்பல்கள் அவன் கட்டளைப்படி செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் நற்செய்தி கூறும் காற்றுகளை அனுப்பி வைப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.

47. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்களை அவர்களது சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளை அவர்கள் கொண்டு வந்தனர். குற்றம் செய்தோரைத் தண்டித்தோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.

48. அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர்.419 தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

49. இதற்கு முன் (அதாவது) அவர்களுக்கு அது அருளப்படுவதற்கு முன் நம்பிக்கையிழந்திருந்தனர்.

50. பூமி இறந்த பின் அதை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான் என்று அவனது அருளின் அறிகுறிகளைப் பார்ப்பீராக! அவன்தான் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

51. நாம் காற்றை அனுப்பி அதை (பயிர்களை) மஞ்சள் நிறமாக அவர்கள் கண்டால் அதன் பிறகு அவனை மறுப்போராக ஆகி விடுகின்றனர்.

52. இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடும்போது அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

53. குருடர்களுக்கு அவர்களின் வழிகேட்டிலிருந்து (விலக்கி) நல்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம் வசனங்களை நம்பி கட்டுப்பட்டு நடப்போரைத்தான் உம்மால் கேட்கச் செய்ய முடியும். 81

54. பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

55. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

56. "அல்லாஹ்வின் ஏட்டில்157 உள்ளபடி உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை பூமியில் நீங்கள் வசித்தீர்கள். இதுவே உயிர்ப்பிக்கப்படும் நாள்1 எனினும் அறியாதிருந்தீர்கள்'' என்று அறிவும், நம்பிக்கையும் வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.

57. அந்நாளில்1 அநீதி இழைத்தோரின் சமாளிப்பு அவர்களுக்குப் பயன் தராது. அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு) வணக்கங்கள் செய்ய வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

58.இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் "நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

59. இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

60. பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம்.

 

Leave a Reply