அத்தியாயம் : 31 லுக்மான்

அத்தியாயம் : 31

லுக்மான் – ஒரு நல்ல மனிதரின் பெயர்

மொத்த வசனங்கள் : 34

லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், மீம்.2

2. இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள்.

3. நன்மை செய்வோருக்கு (இது) நேர்வழியும், அருளுமாகும்.

4.அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அவர்களே மறுமையை1 உறுதியாக நம்புவார்கள்.

5. அவர்களே தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் உள்ளனர். அவர்களே வெற்றி பெற்றோர்.

6. அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.

7. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!

8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகள் உள்ளன.

9. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

10. நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி240 வானங்களைப்507 படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.248 அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம்.

11. இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழிகேட்டில் உள்ளனர்.

12. "அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏகஇறைவனை) மறுக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்;485புகழுக்குரியவன்'' என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம்.

13.லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

14.மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

15. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

16.என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ,507 பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

17. என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

18. மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

19. "நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).

20. வானங்களில்507 உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா? அறிவு, நேர்வழி, ஒளிவீசும் வேதம் எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.

21. "அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?

22. நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.

23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

24. அவர்களைச் சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையில் அவர்களைத் தள்ளுவோம்.

25. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

26.வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவன்; 485 புகழுக்குரியவன்.

27. பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள்155 எழுதி முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

28.உங்களைப் படைத்ததும் உயிர்ப்பிப்பதும் ஓர் உயிரைப் (படைப்பது) போன்றதே. அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன். 488

29.அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.241 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

30. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் அழைப்பவை பொய்யானவை என்பதும் அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் தான் இதற்குக் காரணம்.

31. உங்களுக்கு அல்லாஹ் தனது சான்றுகளைக் காட்டுவதற்காக அவனது அருளால் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் அறியவில்லையா? சகிப்புத் தன்மையும் நன்றியுணர்வுமுடைய ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.

32. முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

33. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை1 அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

34.யுகமுடிவு நேரம்1 பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

 

Leave a Reply