அத்தியாயம் : 56 அல் வாகிஆ

அத்தியாயம் : 56

அல் வாகிஆ – அந்த நிகழ்ச்சி

மொத்த வசனங்கள் : 96

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.


 

 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… .

1, 2, 3. அந்த நிகழ்ச்சி1 நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.26

4, 5, 6. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.26

7. நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.

8. (முதல் வகையினர்) வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?

9. (இரண்டாம் வகையினர்) இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?

10. (மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.

11. அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.

12. இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

13, 14, 15. முதல் வகையினரில் (வலப்புறத்தார்) ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் இருப்பார்கள்.26

16. ஒருவரையொருவர் எதிர்நோக்கி அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.

17, 18. இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.26

19. அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

20, 21. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)26

22, 23. ஹூருல் ஈன்களும்8 மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.26

24. அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததற்கு இது கூலியாகும்

25. அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்

26. ஸலாம் ஸலாம்159 என்ற சொல்லைத் தவிர.

27. (அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன?

28, 29, 30, 31, 32, 33, 34. அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டிவிடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.26

35. அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.

36, 37. அவர்களைக் கன்னியராகவும்,8 ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.26

38, 39, 40. இது முதல் வகையினரில் ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் ஒரு தொகையினரும் ஆகிய வலது புறத்தில் இருப்போருக்கு உரியது.26

41. (அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?

42, 43. அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.26

44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

47, 48. "நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.26

49, 50. "முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின்1 குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்'' என்று கூறுவீராக!26

51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழிகேட்டில் இருந்தவர்களே! பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.26

53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.

54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.

55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

56. தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து.

57. நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் நம்ப மாட்டீர்களா?

58. நீங்கள் விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைச் சிந்தித்தீர்களா?

59. அதை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா?

60, 61.உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் நாம் இயலாதோர் அல்லர்.26

62. முதல் தடவை படைத்ததை நீங்கள் அறிந்துள்ளீர்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?

64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

65, 66, 67. நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். "நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்'' என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.26

68. நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

70. நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?

71. நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?

72. அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?

73. இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பலனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.

74. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.

76. நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.

77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில்157 இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.26

79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.291

80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

81. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்?

82. உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?

83, 84. அது (உயிர்) ஒருவனது தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.26

85. உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்.49 எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.

86, 87. நீங்கள் (இம்மார்க்கத்தை) கடைப்பிடிக்காது இருந்தால், அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அதை (உயிரை) திரும்பக் கொண்டு வரலாமே!26

88, 89. அவர் இறைவனுக்கு நெருக்கமானோரில் ஒருவராக இருந்தால், அவருக்கு உணவும், நறுமணமும், சுகமான சொர்க்கச் சோலையும் உள்ளன.26

90, 91. அவர் வலப்புறத்தைச் சேர்ந்தோராக இருந்தால் வலப்புறத்தாரிடமிருந்து உமக்கு ஸலாம்159!''26

92, 93, 94. பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் எரிவதும் விருந்தாகும்.26

95. இது உறுதியான உண்மை.

96. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

 

Leave a Reply