அத்தியாயம் : 73 அல் முஸ்ஸம்மில்

அத்தியாயம் : 73

அல் முஸ்ஸம்மில் – போர்த்தியிருப்பவர்

மொத்த வசனங்கள் : 20

ந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. போர்த்திக் கொண்டிருப்பவரே!

2. இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக!

3. அதில் பாதியளவு, அல்லது அதைவிடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக!

4. அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

5. உம் மீது கனமான சொல்லை நாம் போடுவோம்.

6. இரவில் எழுவது மிக்க உறுதியானதும், சொல்லைச் சீராக்குவதுமாகும்.

7. (முஹம்மதே!) பகலில் உமக்கு நீண்ட பணி உள்ளது.

8. உமது இறைவனின் பெயரை நினைப்பீராக! அவனிடம் முற்றிலும் சரணடைவீராக!

9. (அவன்) கிழக்குக்கும், மேற்குக்கும் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. எனவே அவனையே பொறுப்பாளனாக்கிக் கொள்வீராக!

10. அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! அவர்களை அழகிய முறையில் முற்றிலும் வெறுத்து விடுவீராக!

11. பொய்யெனக் கருதும் சுகவாசிகளை என்னோடு விட்டு விடுவீராக! அவர்களுக்குக் குறைவான அவகாசமும் அளிப்பீராக!

12, 13. நம்மிடம் விலங்குகளும், நரகமும், விக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.26

14. பூமியும், மலைகளும் அந்நாளில் ஆட்டம் காணும். மலைகள் மண் குவியலாகி விடும்.

15. ஃபிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போல் உங்களிடமும் உங்களைப் பற்றி சாட்சி கூறும் தூதரை நாம் அனுப்பினோம்.

16. ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறுசெய்தான். எனவே அவனைக் கடுமையாகத் தண்டித்தோம்.

17. (ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில்1 எவ்வாறு தப்பிப்பீர்கள்?

18. அதில் வானம்507 வெடித்து விடும். அவனது வாக்குறுதி செய்து முடிக்கப்படும்.

19. இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார்.

20. "(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்'' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான்.118 எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன்75 கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

 

Leave a Reply