அன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிதல் 

அன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிதல் 

கேள்வி

பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளைய, கொலுசு  போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா? ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா?

பதில்

பெண்கள் தங்களது அலங்காரங்களை  கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத் தகாத) உறவினர் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

திருக்குர்ஆன் 24:31

மேற்கண்ட வசனத்தில் வெளிப்படையான அலங்காரங்களைத் தவிர மற்ற அலங்காரங்களை ஆண்களிடமிருந்து பெண்கள் மறைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகின்றது.

வெளிப்படையான அலங்காரம் என்பது அவர்கள் அணியும் ஆடையைத் தான் குறிக்கும்.

ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.

என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவுபடுத்தவே, 'வெளியே தெரிபவை தவிர' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவை கருதி ஆடை எனும் அலங்காரத்தை மட்டும் வெளிப்படுத்த இஸ்லாம் இவ்வசனத்தின் மூலம் அனுமதிக்கின்றது.

அதுவல்லாத மேலதிக அலங்காரம் எதையும் பிற ஆண்களிடத்தில் வெளிப்படுத்தக் கூடாது என்பதே மேற்கண்ட வசனம் தெரிவிக்கும் கருத்தாகும்.

இதே வசனத்தின் பிற்பகுதி பெண்கள் தங்களது அலங்காரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட ஆண்களைப் பட்டியலிட்டு விட்டு இவர்களல்லாத வேறு எந்த ஆண்களிடத்திலும் அலங்காரத்தை வெளிப்படுத்தலாகாது எனக் கூறுகிறது.

தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

திருக்குர்ஆன் 24:31

இதே வசனத்தின் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது.

ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن

பெண்கள் தாங்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

திருக்குர்ஆன் 24:31

தாம் அணிந்திருக்கும் அலங்காரத்தை பிற ஆண்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கால்களால் அடித்து நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் இதில் கூறுவதன் மூலம், வெளி அலங்காரம் எதுவும் அந்நிய ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது என்பதை தெளிவாக, திட்டவட்டமாக அல்லாஹ் உணர்த்தி விடுகிறான்.

அலங்காரம் என்றால் என்னவென்பதை அறிந்து கொள்வதும் இக்கேள்விக்கான பதிலைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்.

அலங்காரம் என்பது உடலில் அங்கமாக இல்லாத வெளிப்பொருட்களால் செய்யப்படும் மெருகூட்டலைக் குறிக்கும் சொல்லாகும்.

அதாவது முகத்தில் குத்தப்படும் மூக்குத்தி, கையில் அணிந்துள்ள வளையல், காலில் அணிந்துள்ள கொலுசு, காப்பு போன்ற அனைத்தும் அலங்காரம் எனும் பட்டியலிலேயே வருகிறது.

கைவிரல்களில் அணியப்படும் மோதிரமும் அலங்காரமே ஆகும். எனவே அதை இதர ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தக் கூடாது.

பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அந்நிய ஆண்களுக்குத் தெரியும் வகையில் மோதிரம் அணியலாம் என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.

سنن أبي داود

1565 – حَدَّثَنَا أَبُو كَامِلٍ وَحُمَيْدُ بْنُ مَسْعَدَةَ – الْمَعْنَى – أَنَّ خَالِدَ بْنَ الْحَارِثِ حَدَّثَهُمْ حَدَّثَنَا حُسَيْنٌ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِى يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا « أَتُعْطِينَ زَكَاةَ هَذَا ». قَالَتْ لاَ. قَالَ « أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ ». قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ.

‘ஒரு பெண்மணி ஏமன் நாட்டிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன. அப்போது நபியவர்கள் அப்பெண்மணியை நோக்கி ‘நீர் இதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டீரா?’ எனக் கேட்க அதற்கவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார். உடனே நபியவர்கள் ‘நெருப்பினாலான இரு காப்புகளை அல்லாஹ் அணிவிப்பது உனக்கு சந்தோஷத்தை அளிக்குமா?’ எனக் கேட்டார்கள். அதற்கவர் இரு காப்புக்களையும் கழற்றி நபியவர்களிடத்தில் கொடுத்து விட்டு ‘இந்த இரண்டும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் உரியதாகும்’ எனக் கூறினார்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஷூஐப் (ரலி)

நூல் : அபூதாவூத் 1565

ஒரு பெண்மணி கையில் காப்பு அணிந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் வந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே மோதிரம், வளையல் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்பது அவர்களின் வாதம்.

இது ஆதாரப்பூர்வமான செய்திதான் என்றாலும் இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு இதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

பொதுவாக எந்த ஒரு நபிமொழியையும் குர்ஆனுக்கு இணக்கமாகவே புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனின் கருத்தை உடைத்தெறியும் விதத்தில் நபிமொழிகளுக்குப் பொருள் கொள்வது ஏற்புடையதல்ல. குர்ஆனை விளக்கவே நபிகள் நாயகம் அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

அந்நியர்கள் முன்னிலையில் அலங்காரம் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் திருக்குர்ஆன் கூறும் அடிப்படை விதியாகும்.

இந்நிலையில் அபூதாவூதில் இடம்பெற்ற நபிமொழியை குர்ஆன் கூறும் அடிப்படைக்கு மாற்றமில்லாமல் புரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

மேற்படி நபிமொழியில் அவர்கள் ஆதாரமாகக் காட்டும் வாசகம்

ஒரு பெண்மணி மன் நாட்டிலிருந்து நபி அவர்களிடத்தில் வந்தார். அவருடன் அவரின் மகளும் இருந்தார். அவரின் மகளின் கையில் தங்கத்தினாலான இரு வளையல்கள் இருந்தன.

என்பதாகும்

இந்த வார்த்தையிலிருந்து வளையல் அணிந்த அப்பெண்மணியின் மகள், விபரமறிந்த பெரிய பெண் என்று எடுத்துக் கொள்ளும் போது தான் இவர்கள் கொண்ட பொருள் வரும்.

அவருடன் வந்த மகள் பருவ வயதை அடைந்தவர் என்றால் மார்க்கச் சட்டத்தை அவரிடமே நபியவர்கள் கூறி இருப்பார்கள். அதாவது அந்த மகளை நோக்கி இதன் ஜகாத்தைக் கொடுத்து விட்டாயா? என்று கேட்டிருப்பார்கள்.

மகளிடம் கேட்காமல் தாயிடம் இக்கேள்வியை நபியவர்கள் கேட்டதில் இருந்து உடன் அழைத்து வரப்பட்ட மகள் பருவமடைந்த பெண் அல்ல என்பது உறுதியாகிறது. பருவமடையாத சிறுமிகளுக்கு அலங்காரத்தை வெளிப்படுத்துவது உள்ளிட்ட எந்தச் சட்டமும் இல்லை. அதனால் தான் அது பற்றி நபியவர்கள் பேசவில்லை.

சிறுமியின் நகை என்றாலும் அதற்கான ஜகாத் சிறுமியின் தாய், தந்தையருக்குத் தான் கடமை என்பதால் ஜகாத் பற்றி மட்டும் கேட்கிறார்கள்.

அந்நியர் முன் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டதில் மோதிரமும் அடங்கும்.

பெண்கள் அணியும் மோதிரம் உண்மையில் ஆண்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்ற அலங்காரம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

எனவே கையில் வளையலுடன் காட்சி அளித்தது பெண் அல்ல, சிறுமி என்று பொருள் கொண்டால் குர்ஆனுடன் மோதல் போக்கும் வராது. அந்நியர் முன் அலங்காரத்தை வெளிப்படுத்துவதாகவும் இது ஆகாது.

மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ் இதுதான்:

صحيح البخاري رقم فتح الباري (1/ 31)
98 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ عَطَاءً، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ: أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ قَالَ عَطَاءٌ: أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – «خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُرْطَ وَالخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும்,  மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 98

பெருநாள் தினத்தில் நபித்தோழியர்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் பிலால் (ரலி) முன்னிலையில் கழற்றிப் போட்டார்கள் என்றால் இத்தகைய அலங்காரத்தை அந்நிய ஆண்கள் முன்னிலையில் வெளிப்படுத்தலாம் என்று தானே புரிய முடியும் என்றும் சிலர் வாதம் வைக்கின்றனர்.

பெருநாள் தினத்திலோ, மற்ற நாட்களிலோ மோதிரம், வளையல் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்படவில்லை. அன்னிய ஆண்களுக்கு அந்த அலங்காரத்தை வெளிப்படுத்துவது தான் தடுக்கப்பட்டுள்ளது.

பெருநாள் தினத்தில் குழுமிய பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் மாத்திரம் இருக்கும் இடத்தில் தான் இருந்தனர். அந்த இடத்தில் ஆண்களுக்கு வேலை இல்லை என்பதால் அவர்கள் மோதிரம் அணிந்திருந்தது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல.

அன்னிய ஆணாகிய பிலாலுக்கு அலங்காரத்தைக் காட்டினார்களா என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸில் மோதிரம் மட்டுமின்றி கழுத்தணிகளையும் கழட்டிப் போட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் காட்டி அன்னிய ஆண்களுக்கு வெளிப்படுத்திக் காட்டும் வகையில் கழுத்தணிகளை அணியலாம் என்று இவர்கள் வாதிட மாட்டார்கள் என்று கருதுகிறோம்.

கழுத்தணியை கழட்டிப் போட்டார்கள் என்றால் பிலால் வரும் போது கழுத்தில் ஆபரணம் இருப்பதைக் காட்டாத வகையில் ஆடையால் மறைத்து கழுத்தணியைக் கழற்றிப் போட்டார்கள் என்று தான் விளக்கம் கொடுப்பார்கள். இதுபோல் தான் மோதிரத்தைக் கழற்றிப் போட்டதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது பெண்கள் மட்டும் உள்ள சபை என்பதால் அவர்கள் மோதிரம் அணிந்திருப்பார்கள். பிலால் என்ற அந்நியர் வந்ததும் விரல்களில் உள்ள அலங்காரத்தை மறைத்து அதைக் கழற்றிப் போட்டு இருப்பார்கள். இப்படி புரிந்து கொள்வது தான் குர்ஆனுக்கு நெருக்கமானது. கழுத்தணியையும் மோதிரத்தையும் முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ள ஏற்றது.

அந்தப் பெண்களின் விரல்களில் மோதிரம் அணிந்திருந்ததை நான் பார்த்தேன் என்று அறிவிப்பாளர் கூறினால் தான் இதை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இதை புகாரியின் 5249 வது செய்தி தெளிவாக சொல்கிறது.

,,,ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَرَأَيْتُهُنَّ يَهْوِينَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ يَدْفَعْنَ إِلَى بِلَالٍ ثُمَّ ارْتَفَعَ هُوَ وَبِلَالٌ إِلَى بَيْتِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து (மார்க்க விஷயங்களையும், மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். மேலும், (ஏழை எளியோருக்கு) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப்பெண்கள், தங்களின் காதுகளுக்கும், கழுத்துகளுக்கும் தங்களின் கைகளைக் கொண்டு சென்று (அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களிடம் கொடுப்பதை நான் கண்டேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ்

நூல் : புகாரி 5249

இந்த நபிமொழியில் பெருநாள் தினத்தில் பங்கு கொண்ட பெண்கள் தங்கள் காதுகளிலும், கழுத்துக்களிலும் உள்ள ஆபரணங்களைக் கழற்றி போட்டார்கள் என்று வருகிறது. இதை ஆதாரமாக வைத்து ஆண்கள் பார்க்கும் விதமாக கழுத்தணிகளை அணியலாம் என்று விளங்க மாட்டோம். ஆண்கள் பார்க்காத வகையில் கழுத்தணிகளைக் கழற்றிப் போட்டனர் என்றே புரிந்து கொள்வோம். மோதிரத்தையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மருதாணியை வெளிப்படுத்த அனுமதியா?

நகைகள் மூலம் செய்யப்பட்ட அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் மருதாணி இட்ட நிலையில் அந்நியருக்கு காட்டலாம் என்று வாதம் செய்கின்றனர்.

அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

صحيح البخاري رقم فتح الباري (5/ 80)

3991 – وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ الزُّهْرِيِّ: يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الحَارِثِ الأَسْلَمِيَّةِ، فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا، وَعَنْ مَا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ. فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الأَرْقَمِ، إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ بِنْتَ الحَارِثِ أَخْبَرَتْهُ: أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ ابْنِ خَوْلَةَ، وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الوَدَاعِ وَهِيَ حَامِلٌ، فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ، فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا، تَجَمَّلَتْ لِلْخُطَّابِ، فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ، رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ، فَقَالَ لَهَا: مَا لِي أَرَاكِ تَجَمَّلْتِ لِلْخُطَّابِ، تُرَجِّينَ النِّكَاحَ؟ فَإِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ، قَالَتْ سُبَيْعَةُ: فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ، وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ «فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي، وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي»

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் "பனூ ஆமிர் பின் லுஅய்' குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார். "விடைபெறும் ஹஜ்ஜின் போது சஅத் (ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள். அப்போது "சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். சஅத் அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ  பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமான போது,  பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான "அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக்' (ரலி) அவர்கள் சுபைஆ அவர்களிடம் வந்து, "திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய "இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்து விட்ட போதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்' என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று சுபைஆ பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 3991

அஹ்மதில் 26166, 26167 ஆகிய எண்களில் பதிவாகியுள்ள அறிவிப்புகளில் சுபைஆ (ரலி) அவர்கள் கையில் மருதாணி பூசியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மணம் பேச வருபவர்களுக்காகத் தான் சுபைஆ (ரலி) தன்னை அலங்கரித்துக் கொண்டார்கள். அதாவது மருதாணி இட்டுக் கொண்டதை தன்னை மணம் பேச வருவோரிடத்தில் தான் வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தியிலிருந்து மணம் பேச வருபவர்களிடம் மருதாணி போன்ற அலங்காரத்தை வெளிப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருத்து கொள்ளலாம்.

எல்லா ஆண்கள் முன்னாலும், எல்லா நேரங்களிலும் மருதாணி போன்ற அலங்காரத்தை வெளிப்படுத்தலாம் என்பதற்கு இந்தச் செய்தியில் ஆதாரமில்லை.

எனவே பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வதில் எந்தத் தடையுமில்லை. ஆனால் அதை மஹ்ரமான ஆண்களைத் தவிர்த்து வேறு எந்த அந்நிய ஆண் முன்னிலையிலும் வெளிப்படுத்த கூடாது என்பதே சரியான கருத்தாகும். பெண் பார்க்க வரும் ஆணுக்கு முன்னால் மருதாணி அணிந்து கொள்ளலாம்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit