அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?

அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் கொடுப்பது சரியா?

? 33:72 வசனத்திற்கு அமானிதம் என்ற சொல்லுக்கு பகுத்தறிவு என்று விளக்கம் அளித்துள்ளீர்கள். ஆனால் ஜின்களுக்கும் பகுத்தறிவு உள்ளதாக குர்ஆன் வசனங்கள் மூலம் அறிகின்றோம். ஆனால் மேற்கண்ட வசனத்தில் மனிதன் மட்டும் அதைச் சுமந்து கொண்டான் என்று கூறப்படுகின்றது. ஜின்களைக் குறிப்பிடவில்லை. விளக்கம் தரவும்.

ஹிஜாபுல்லாஹ், பல்லாவரம்.

பதில் :

! ஜின்கள் தனி இனமாக இருந்தாலும் பொதுவான விஷயங்களில் ஜின் இனத்தை, மனித இனத்தோடு இணைத்தே கூறப்படுவதை திருக்குர்ஆனில் காண முடிகின்றது.

உதாரணமாக திருக்குர்ஆன் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக அருளப்பட்டது என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜின்களுக்கும் திருக்குர்ஆன் தான் வேதம் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் விளக்குகின்றன.

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று, நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என (முஹம்மதே!) கூறுவீராக! அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம். (என்றும் ஜின்கள் கூறின)

திருக்குர்ஆன்72:1,2

நரகத்தைப் பற்றிக் கூறும் போதும் ஜின் இனத்தை மனித இனத்தோடு இணைத்தே கூறுவதைக் காண முடிகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

இந்த வசனத்தில் நரகத்தில் மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது போன்ற கருத்து இடம் பெற்றுள்ளது. ஆனால் பின்வரும் வசனத்தில் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்பது கூறப்படுகின்றது.

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் 7:179

இதுபோன்று திருக்குர்ஆனில் மனிதர்களை நோக்கிக் கூறப்பட்டுள்ள பெரும்பாலான அம்சங்கள் ஜின்களுக்கும் பொருந்தக் கூடியவையே!

எனவே 33:72 வசனத்தில் மனிதன் சுமந்து கொண்டான் என்பதும் ஜின் இனத்தையும் சேர்த்தே குறிக்கும் என்று விளங்கினால் முரணில்லை.

கூடுதல் விளக்கத்துக்கு கீழே உள்ள ஆக்கத்தைப் பார்க்கவும்

மனிதன் சுமந்த அமானிதம் எது?

23.12.2014. 19:17 PM

Leave a Reply