அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

பஷீர்

பதில் :

இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். உண்மையில் இவர்கள் குறைபாடு உள்ள ஆண்களேயாவர்.

இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்மைக் குறைபாடு காரணமாக அரவாணிகள் என்ற பேர் பெற்ற இவர்கள் அதைத் தக்க முறையில் எதிர் கொள்வதில்லை. ஆண்களாகவே நாம் காட்சி அளித்தால் நமக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிப்பார்கள்; இதைத் தவிர்ப்பதற்காக தம்மை மூன்றாம் பாலினம் போல் காட்டுகிறார்கள்.

அதிகமான அரவாணிகள் இப்படி தம்மைத் தாமே இழிவுபடுத்தினாலும் சில அரவாணிகள் இதை வேறு விதமாக எதிர் கொண்டு உயர் நிலையை அடைகின்றனர்.

நாட்டுக்குச் சேவை செய்வதற்காக திருமணம் செய்யாமல் இருக்கப் போகிறேன் எனக் கூறி திருமண வாழ்வைத் தவிர்க்கின்றனர். முற்றிலும் ஆணாகக் காட்டிக் கொண்டு ஆண்களைப் போலவே அவர்கள் நடத்தைகளை அமைத்துக் கொண்டு ஜனாதிபதிகளாகவும், பிரதமர்களாகவும், இன்னும் பல பதவிகளைப் பெற்றவர்களாகவும் ஆகி விடுகிறார்கள்.

இன்னும் பலர் ஆண்களாகவே தம்மை காட்டிக் கொண்டு குடும்பச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி திருமணம் செய்யாமல் உயர் பதவிகளிலும், வேலைகளிலும் இருந்து சாதனை படைக்கின்றனர்.

பெண்களைப் போல் நடித்து ஒழுக்கக் கேட்டைப் பரப்புபவர்களை விட இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இஸ்லாம் இவர்களை ஆண்களாகவே கருத வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும், நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும், மருந்துகளையும் பயன்படுத்தி தங்களைப் பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (எனவும் ஷைத்தான் அல்லாஹ்விடம் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

திருக்குர்ஆன் 4:119

உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

صحيح البخاري

5885 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»

பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5885

5886حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُخَنَّثِينَ مِنْ الرِّجَالِ وَالْمُتَرَجِّلَاتِ مِنْ النِّسَاءِ وَقَالَ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلَانًا وَأَخْرَجَ عُمَرُ فُلَانًا رواه البخاري

பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5886

அரவாணிகள் என்போர் ஆண்களாகவே கருதப்பட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

صحيح البخاري

4324 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، سَمِعَ سُفْيَانَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدِي مُخَنَّثٌ، فَسَمِعْتُهُ يَقُولُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ: يَا عَبْدَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا، فَعَلَيْكَ بِابْنَةِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ، وَتُدْبِرُ بِثَمَانٍ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ»

என்னிடம் அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : புகாரி 4324

ஆண்கள் எவ்வாறு பெண்களுடன் தனித்து இருக்கக் கூடாதோ அதுபோல் அரவாணிகளும் எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்க்க் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.   எனவே அரவாணிகளாக இருப்பவர்கள் ஆண்களுக்குரிய சட்டத்தின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும் இன்றைக்கு உள்ள அரவாணிகள் சமுதாயத்திற்கு நிறைய தீங்குகளை ஏற்படுத்துகின்றனர். ஒழுக்கமான ஆண்களைக் கவர்ந்து விபச்சாரத்திற்கு அழைக்கின்றனர். இதன் மூலம் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸைப் பரப்புவதில் இவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர்.

பேருந்து நிலையம், இரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் மிகவும் துணிச்சலாக பிச்சை எடுக்கின்றனர். கை கால் நன்றாக இருந்தும் உழைத்து உண்பதற்கு உடலில் வலு இருந்தும் மானங்கெட்டு பிச்சை எடுக்கின்றனர். பிச்சை போடாவிட்டால் அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகின்றனர்.

பலர் இவர்களின் கேடுகெட்ட நடத்தைக்கு அஞ்சி காசைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். இது ஒரு வகையான கொள்ளைத் தொழிலாகும்.

صحيح البخاري

6054 – حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، سَمِعْتُ ابْنَ المُنْكَدِرِ، سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ: أَنَّ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ قَالَتْ: اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ائْذَنُوا لَهُ، بِئْسَ أَخُو العَشِيرَةِ، أَوِ ابْنُ العَشِيرَةِ» فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الكَلاَمَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الكَلاَمَ؟ قَالَ: «أَيْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ، أَوْ وَدَعَهُ النَّاسُ، اتِّقَاءَ فُحْشِهِ»

ஆயிஷா! எவரது அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 6054

இஸ்லாத்தின் பார்வையில் மூன்றாம் பாலினம் என்ற ஒன்று இல்லை. அரவாணிகளும் ஆண்கள் தான். குறைபாடுள்ள ஆண்கள் அவ்வளவுதான். திருமணம் செய்வதைத் தவிர்த்துக் கொண்டு எல்லா வகையிலும் ஆண்களைப் போலவே அவர்கள் நடந்து கொள்வது கடமையாகும்.

11.04.2011. 12:41 PM

Leave a Reply