அருள்மிகு ரமலான்

ஏகத்துவம் 2005 அக்டோபர்

அருள்மிகு ரமலான்

வந்துவிட்டது அருள் மிக்க ரமலான்! "ரம்மியமான ரமலான் வராதா? அல்லாஹ்வின் அருள் மிக்கபாக்கியம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொருபக்கம் பலர் "ஏன்டா ரமலான் வருகிறது?” என்று எண்ணிப் புலம்பித் தவிக்கின்றனர். காரணம்என்னவென்றால், தன் பிள்ளைக்கு இதுதான் தலை நோன்பு! எனவே புது மருமகனுக்குச் சீர் செய்யவேண்டுமே! இதுவே பெரும்பான்மை யான, பெண்ணைப் பெற்ற முஸ்லிம்களின்நிலை.

இது இவ்வாறிருக்க, அதிகமான மக்கள் ரமலான் என்றாலே பெருநாளை மனதில் வைத்துக்கொண்டு, அதற்காக துணி எடுத்தல், வர்த்தகம் செய்தல், சீர் வாங்குதல், சீர் கொடுத்தல் போன்றகாரியங்களை மட்டும் செய்கிறார்களே தவிர ரமலானில் நோன்பு பிடிக்க வேண்டும்; அதில் நின்றுவணங்க வேண்டும்; பல நல்லறங்கள் அதிகம் செய்து அல்லாஹ்வை நெருங்க வேண்டும்; நோன்பைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையே இருப்பதில்லை. நோன்பென்றால் என்ன? அது கடமையான வணக்கமா? அல்லது உபரியான வணக்கமா? நோன்புகடமையாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம்தெரிந்து கொள்வதில்லை; தெரிய நினைப்பதும் இல்லை. கஞ்சிக்குப் பணம் கொடுத்தோமா? எப்போதாவதுதராவீஹ்தொழுதோமா? என்பதோடு முடித்துக் கொள்வார்கள். இதுவே இன்றைய பெருபான்மையானமுஸ்லிம்களின்நிலையாக உள்ளது.

இந்த நிலை மாறி எல்லா முஸ்லிகளும் நோன்பைப் பற்றித் தெரிந்திட வேண்டும் என்பதற்காகவேஇந்த கட்டுரை.

ரமலான் மாதத்தில் இறைவன் கடமையாக்கிய நோன்பு

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சு வதற்காக உங்களுக்கு முன் சென்றோர்மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது (அல் குர்ஆன்2:183)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள்அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்துகாரியங்கள் மீதுஇஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உ.மர் (ரலி)

நூல்: புகாரி 1900

குர்ஆன் அருளப்பட்டதால் தான் நோன்பு கடமை

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில்அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

நோன்பு நோற்பதிலிருந்து சலுகை பெற்றவர்கள்

அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச்செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் “நோன்பு’ நோற்பதே சிறந்தது. (அல் குர்ஆன் 2:184)

ஆரம்பத்தில் நோன்பு கடமை யாக்கப்பட்ட போது "நோன்பு நோற்கச் சக்தி உடையோர்விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவுஅளிக்கலாம்” என்ற சலுகை இருந்தது. அது தான் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

"ரமலான் மாதத்தை அடைபவர் நோன்புநோற்க வேண்டும்” என்ற கட்டளை வந்த பின், "சக்திபெற்றவர் கட்டாயம் நோன்புநோற்க வேண்டும்” என்ற புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச்சட்டம் அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ள லாம். அல்லாஹ் உங்களுக்குஎளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள்முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப்பெருமைப் படுத்திடவும், நன்றிசெலுத்திடவும் (வேறு நாட்களில்நோற்கும் சலுகைவழங்கப்பட்டது) (அல்குர்ஆன் 2:185)

"நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர்ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” என்ற (2:184) இறை வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டு விட்டு, பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றிஅதற்குப் பின்னுள்ள (2:185) வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ (ரலி)

நூல்: புகாரி 4507

நிய்யத்

இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண முடியாத அளவுக்குப் பித்அத்துக்கள் நுழைந்துவிட்டதைப் போன்று இந்த நோன்பு எனும் வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்குஎடுத்துக்காட்டு தான் நிய்யத். ரமளான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல் தோறும் வழங்கப்படும்நோன்பு நேர அட்டைகளிலும், பள்ளிவாசல் போர்டுகளிலும் நோன்பு வைக்கும் நிய்யத் என்றுதலைப்பிட்டு ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்லாஹித் தஆலாஎன்று வாயால் சொல்லி வைக்கப்படும் இந்த நிய்யத்தின் பொருளைப் பார்த்தால் கேலிக்கூத்தாகஅமைந்திருக்கும்.

"இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துசெய்கிறேன்அல்லாஹ்வுக்காக”

இதுதான் மேற்படி நிய்யத்தின் பொருள்.

இந்த வருடத்து ரமளான் மாதத்தில்தான் நாம் பிறை பார்த்து முடிவு செய்கின்றோம். ரமளான்மாதத்தில் ஃபர்ளான நோன்பைத் தான் பிடிக்க முடியும். ரமளான் மாதத்தில்நஃபிலானநோன்புகளையா நோற்க முடியும்? "அதாவாக” என்று கூறுகின்றார்கள். ஒரு கடமையைஅதற்குரிய நேரத்தில் செய்வதற்கு அதா என்று பெயர். காலம் தவறி செய்வதற்கு களாஎன்றுபெயர். ரமளான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு அதாவாகத் தானே ஆகும்? இதை வாயால்சொல்லவும் வேண்டுமா?

"நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக” என்கின்றனர். பிறைக் கணக்குப்படிஎப்போது பிறையைப் பார்க்கின்றோமோ அப்போதே அந்த நாள் ஆரம்பமாகி விடுகின்றது. இப்படியிருக்க நாளை பிடிக்க என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?

நிய்யத் என்றால் எண்ணுதல், தீர்மானித்தல் என்று பொருள். இது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். உடல்சம்பந்தப்பட்டது அல்ல. இத்தகையநிய்யத்தை "செய்கிறேன்’ என்று கூறுவதில் எந்தஅர்த்தமும் இல்லை.

உளூ, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் நிய்யத் என்ற பெயரில் வாயால் கூறப்படுவதுமார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது(அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

இந்த ஹதீஸைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, நிய்யத் என்ற பெயரில்மேற்கண்டவாசகங்களைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்குமுன்பே நோன்பு நோற்பதாகத் தீர்மானிப்பது அவசியம்.

ஸஹர் நேரம்

நிய்யத் என்ற பெயரில் சில வாசகங்களைக் கூறுவதோடு நிற்காமல்,நிய்யத் செய்து விட்டால்எதையும் சாப்பிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். நிய்யத் செய்தல் என்பதே இல்லை எனும்போது நிய்யத் செய்து விட்டால் சாப்பிடக் கூடாதுஎன்று தடை போடுவது எந்த விதத்திலும்சரியாகாது.

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரைஉண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாகவரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதைவலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா (ரலி) இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்)அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாகஇருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்துவிடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நோன்பு கால அட்டவணைகளை அச்சிட்டுமக்களிடம் விநியோகிப் பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இதனால் இந்த நேரத்திற்குப் பிறகு உறக்கத்திலிருந்து எழுபவர்கள் சுப்ஹ் நேரத்திற்கு அரை மணிநேரம் இருந்தால் கூட அன்றைய நோன்பை நோற்காமல் வீணாக்குகின்றனர். இது பெரும்குற்றமாகும். குர்ஆன், ஹதீஸைப் பற்றிய தெளிவு இல்லாததால் ரமளான் மாதத்தின்கடமையான நோன்பை இழந்து அல்லாஹ்விடம்குற்றவாளி ஆகும் நிலை ஏற்படுகின்றது.

ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹரைமுடிப்பவர்கள் ஒருபுறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கிவிடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும்.

ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி, நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள்நன்மையில் நீடித்துள்ளனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும்மூன்றுமணிக்குள்ளாக ஸஹரை முடித்து விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டு பாங்குகள்

பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தைஅறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்திபல்வேறு ஹதீஸ்நூற்களில் காணப்படுகின்றது.

"நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுதுகொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ்நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 621

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும்என்பதை விளக்கும் போது, "அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்குசொல்வதற்காகஏறுவார்” என்று இப்னு உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர்விளக்கமளித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவைஅறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.

இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள்சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்டஇரண்டு பாங்குகளை இன்று நம்மில் யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியைநமது ஜமாஅத்தினர் அனைவரும் நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

நோன்பு துறத்தல்

சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்துபகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1954

நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி)

நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள்ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரியமறைவு நேரத்திலிருந்து 5 அல்லதுபத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில்குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக்கவனத்தில்கொள்ள வேண்டும்.

நோன்பு துறக்கும் போது…

நோன்பு துறக்கும் போது, அல்லாஹும்ம லக்க ஸம்து… என்ற துஆவை பரவலாக ஓதிவருகின்றார்கள். இது ஆதாரப் பூர்வமானது அல்ல. மேலும் இந்த துஆவைச் சொல்லி விட்டால்நோன்பு முறிந்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்கெல்லாம் நபிவழியில் எந்தஆதாரமும் இல்லை.

நோன்பை முறித்து விட்டால்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், "உனக்கு என்னநேர்ந்தது?” என்றுகேட்டார்கள். "நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "விடுதலை செய்வதற்கு ஓர் அடிமைஉம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். "தொடர்ந்து இரு மாதம்நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?”என்று கேட்டார்கள். அவர் இல்லைஎன்றார். "அறுபதுஏழைகளுக்கு உணவளிக்க உ.மக்கு சக்தி இருக்கிறதா?” என்றுநபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார்.நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம்மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும்அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். "நான் தான்” என்று அவர் கூறினார். "இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடஏழையாக இருப்போருக்கா? (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் இரண்டுமலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை” என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச்சிரித்தார்கள். பிறகு "இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1936

பயணத்தில் நோன்பு

ஹம்ஸா பின் அம்ரு (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், "பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?” என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீவிரும்பினால் நோன்பு நோற்றுக் கொள். நீ விரும்பினால் விட்டு விடு” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1943

நோன்பினால் ஏற்படும் பயன்கள்

(1) நற்செய்தியைக் கொண்டு வாக்களிப்பதும் சொர்க்கத்தைக் கொண்டு வெற்றி அடைதலும்உள்ளது

(2) உள சுத்தமும் உடலுக்கு பாதுகாப்பும் உள்ளது

(3) இறைநேசத்தையும் இறைவனுக்கு வழிபடுவதையும் ஏற்படுத்தும்.

(4) இயல்பாகவே இதயத்தைத் தூய்மைப்படுத்தி, அதன் மூர்க்க தனத்தைப் போக்கி விடுகிறது

(5) அடியானின் நல்ல தன்மைக்கும் அவனது உறுதியான நம்பிக்கைக்கும் வழிகாட்டியாகும்

(6) தீமையான காரியங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாப்பு அரண்

(7) அல்லாஹ்விடத்தில் ஒரு விதமான அச்சத்தையும் பணிவையும் ஏற்படுத்தும்

(8) அந்தரங்கத்திலும் அல்லாஹ் தன்னை கவனித்துக் கொண்டுள்ளான் என்ற எண்ணத்தைஏற்படுத்தும்

(9) மற்ற படைப்பினங்களைப் போன்று ஒப்பாவதை விட்டும்மனிதனைப் பிரித்துக்காட்டுகிறது

(10) நோன்பில் ஒரு விதமான ஆரோக்கியத் தன்மை உள்ளது. அதாவது குடல் என்பது நோயின்வீடு; பசி என்ற பத்தியமே அதற்கு தலையாயமாமருந்து

(11) அதில் ஷைத்தானிடம் போர் புரியும் போர்க் குணம் உள்ளது

(12) சாப்பிட வழியில்லாதஏழையின் வேதனையையும் உணவு தடை செய்யப்ட்டநோயாளியின் வேதளையையும் உணருவதும் உள்ளது

நோன்பின் நோக்கம்

நோன்பினால் உள்ள பயன்கள் ஆயிரம்சொன்னாலும், இருந்தாலும் அல்லாஹ் தன் குர்ஆனில்கூறிய இறையச்சமும், அவனது தூதர் (ஸல்) அவர்கள் கூறிய உண்மை நிலையுமே அதன்உண்மையான பயனாகும். அது இல்லாவிட்டால் நோன்பே இல்லாமல் போய்விடும்.

ஏனெனில் இறைவன் நீங்கள் இறையச்சமுடையவராக ஆவதற்காக என்று குறிப்பிடுகின்றான்.

"யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட வில்லையோ அவர்பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் எந்த தேவையும் இல்லை” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளிக்கான நற்கூலி

முஸ்லிமான ஆண்களும், பெண்களும்,நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும்ஆண்களும், பெண் களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வைஅதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்குஅல்லாஹ் மன்னிப் பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல் குர்ஆன் 33:35)

சொர்க்கத்தில் ரய்யான் என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும்.உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள்நுழைந்ததும்அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)

நூற்கள்: புகாரி 1896, முஸ்லிம்1947

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சுவர்க்கம் செல்வதற்கேற்றஒருகாரியத்தை எனக்குக் கூறுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் அல்லாஹ்வைவணங்க வேண்டும்;அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையானதொழுகையையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்க வேண்டும்” என்றார்கள். அதற்கவர், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மேல் ஆணையாக! இதைவிடஅதிகமாக நான் எதையும் செய்ய மாட்டேன்” என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், "சுவர்க்க வாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1397

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின் றார்கள் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1899

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நோன்புஎனக்கு உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு(பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர்கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம் கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரைஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும்.முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக! நோன்பாளியின்வாயிலிருந்து வீசும் வாடைஅல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விடவிருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்உள்ளன. நோன்பு திறக்கும் போதுஅவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாகஅவன் மகிழ்ச்சியடைகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி)

நூல்: புகாரி 1904

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையைஎதிர்பார்த்து, ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரதுமுன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 38

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அடிப்படையில் நோன்பு நோற்று அல்லாஹ்வின்அருளைப் பெறுவோமாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit