இது தான் பைபிள்

இது தான் பைபிள்

நூலின் பெயர் : இது தான் பைபிள்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

இது தான் பைபிள்

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்…

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். சிலரைப் புண்படுத்தவும் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புண்படுத்துவதோ என் நோக்கம் அன்று.

உங்களுக்கும், முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும், முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும், நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுள்ளோம்.

காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும், கருத்துகளுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரிசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும், நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

பைபிள் ஓர் அறிமுகம்

பைபிள் எனும் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒரு பகுதி பழைய ஏற்பாடு எனவும் இன்னொரு பகுதி புதிய ஏற்பாடு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிறித்த நம்பிக்கைப்படி பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுடைய வேதங்களின் தொகுப்பாகும். அதாவது பழைய ஏற்பாடு என்பது பல வேதங்களின் தொகுப்பு எனலாம்.

உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 39 அல்லது 45 ஆகமங்கள் உள்ளன. இதில் முதல் 5 ஆகமங்கள் மோசே எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

6வது ஆகமம் யோசுவாவின் புஸ்தகம் என்பதாகும். இது யோசுவா அவர்களின் வேதம்.

முதலாம் சாமுவேல் இரண்டாம் சாமுவேல் என்று இரண்டு ஆகமங்கள் உள்ளன. இது சாமுவேல் எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

யோபு என்றொரு ஆகமம். இது யோபு அவர்களின் வேதம்.

இப்படிப் பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட பல வேதங்களின் தொகுப்பே கிறித்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு ஆகும்.

கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி புதிய ஏற்பாடு என்பது ஏசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவையாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது.

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும், புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம்.

ஏசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், ஏசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் ஏசு எழுதியதையும், ஏசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் ஏற்பாட்டின்படி பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டதாக நீங்கள் நம்புவது சரி தானா? என்பதை ஆராய வேண்டாமா நண்பர்களே!

ஒரு நூலை இறைவேதம் என்று நம்புவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறைவேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறைவேதம் என்று கூற முடியாது.

பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம். நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராய்ந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.

பைபிளை இறை வேதம் என்று ஏற்கத் தடையாகவுள்ள குறைபாடுகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

 1 மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.

இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புகள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் வேதங்களுக்கும், ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புகளே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மத குருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மத குருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயே பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

 2- பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில்,  எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம். எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர் யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட – உலகில் எவருக்குமே தெரியாத – எபிரேயு மொழியிலிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்.

இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று சிலர் கருதலாம். செத்து வழக்கொழிந்து போன பின்னர் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது புராதண எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம்.

கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர் ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980 – ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,

நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960 – ல் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக  வுல்காத்தா எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளி