இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..?

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..?

இமாம் லுஹர் தொழும் போது மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்து விட்டார். மூன்று ரக்அத்கள் தான் தொழுதோம் என்று தெரிந்ததும் மீண்டும் நான்கு ரக்அத்கள் தொழுவித்தார். இது கூடுமா? அது போல் 5 ரக்அத்கள் தொழுது விட்டால் என்ன செய்ய வேண்டும்?

தொழுகையில் ரக்அத்துகளைக் குறைத்து விட்டாலோ, அல்லது அதிகமாக்கி விட்டாலோ அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழ வேண்டியதில்லை. இது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் ரக்அத்களில் குறைவு ஏற்பட்டு விட்டால் விடுபட்ட ரக்அத்களை மட்டும் தொழுது விட்டு மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்துள்ளார்கள். தொழுகை முழுவதையும் திருப்பித் தொழுததில்லை.

صحيح البخاري

482 – حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلاَتَيِ العَشِيِّ – قَالَ ابْنُ سِيرِينَ: سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا – قَالَ: فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي المَسْجِدِ، فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى اليُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ اليُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ المَسْجِدِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلاَةُ؟ وَفِي القَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي القَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ، يُقَالُ لَهُ: ذُو اليَدَيْنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ؟ قَالَ: «لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ» فَقَالَ: «أَكَمَا يَقُولُ ذُو اليَدَيْنِ» فَقَالُوا: نَعَمْ، فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، فَرُبَّمَا سَأَلُوهُ: ثُمَّ سَلَّمَ؟ فَيَقُولُ: نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: ثُمَّ سَلَّمَ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒரு தொழுகையை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசர வேலையுள்ளவர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு 'தொழுகை குறைக்கப்பட்டு விட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்க அவர்கள் அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர் இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர், 'அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரி தானா?என்று கேட்க, மக்கள் ஆம் என்றனர். உடனே தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 482

அது போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் ரக்அத்தை அதிகமாக்கி விட்டால் அதற்காக இரண்டு ஸஜ்தாக்கள் மட்டும் செய்துள்ளார்கள்.

صحيح البخاري

1226 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ لَهُ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ

(ஒரு முறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்துகள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் 'தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்' என்று ஒருவர் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரீ 1226

எனவே தொழுகையின் ரக்அத்களில் கூடுதல், குறைவு ஏற்பட்டால் மேற்கண்டவாறு தான் செய்ய வேண்டுமே தவிர தொழுகையைத் திருப்பித் தொழக் கூடாது. சில ஆலிம்கள் இந்தச் சட்டம் தெரியாமலோ அல்லது பேணுதல் என்ற பெயரிலோ திருப்பித் தொழுகின்றனர். இது நபிவழிக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply