இயேசு இறை மகனா?

இயேசு இறை மகனா?

நூலின் பெயர் : இயேசு இறை மகனா?

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 128

விலை : 24

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

இயேசு இறை மகனா?

அறிமுகம்

பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே  இயேசு இறை மகனா?  என்ற இந்த நூல்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட பதினேழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் பதினெட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.

ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும்.

 இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்  என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே ஆசிரியர் நிலை நாட்டுகிறார்.

கிறித்தவர்களுக்காக ஆசிரியர் எழுதிய இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம்  ஆகிய நூல்களையும் நாம் வெளியிட்டோம்.

அதன் பின்னர் இயேசுவின் சிலுவைப்பலி என்ற நூலையும் வெளியிட்டோம்.

இந்த நான்கு நூல்களுமே கிறித்தவ அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூலகளாகும். நடுநிலைக் கண்ணோடு இதை வாசிக்கும் கிறித்தவர்கள் நிச்சயம் உண்மையை விளங்குவார்கள். அந்த அளவுக்கு வலிமையான வாதங்கள் இந்த நூல்களில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூல்கள் நல்ல பயனை அளித்திட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

இவன்

நபீலா பதிப்பகம்.

முன்னுரை

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால்…

இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர்  என்றும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவர்  என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே இயேசுவை அறிமுகப்படுத்தியுள்ளதால் அப்படி நம்புவது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.

இயேசுவை நம்புகின்ற, அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற கிறித்தவ சமயத்தினர் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்றும் அவரே கடவுள் என்றும் நம்பி வழிபட்டு வருகின்றனர்.

உலகின் இரு பெரும் மார்க்கங்களால் ஏற்கப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய சரியான முடிவு என்ன? இது பற்றி அலசும் கடமையும், உரிமையும் நமக்கிருக்கின்றது.

குர்ஆனில் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி இயேசு இறை மகனே  என்று முஸ்லிம்களையும் நம்பச் செய்யும் முயற்சிகளில் கிறித்தவ சபையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த அவசியம் மேலும் அதிகரிக்கின்றது.

பைபிளைப் பற்றியும், குர்ஆனைப் பற்றியும் ஞானமில்லாதவர்கள் கூட நியாயமான பார்வையுடன் ஆராய்ந்தால் கடவுளுக்கு மகனிருக்க முடியாது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.

இப்படித் தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பிருந்தும் மத குருமார்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கர்த்தரின் போதனைக்கு மாற்றமாக, கடவுளுக்குக் குமாரனைக் கற்பித்து, பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடையும் வாய்ப்பை கிறித்தவ சகோதரர்கள் தவற விட்டு வருகின்றனர்.

எனவே இயேசு இறை மகனா? அல்லது மனிதரா? என்பதை பைபிளின் துணையுடன் இந்நூலில் விளக்கியுள்ளேன். இந்நூலை நான்கு பகுதிகளாக வகைப்படுத்தியிருக்கிறேன்.

எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனரோ அந்தக் காரணங்களால் ஒருவரை இறை மகன் எனக் கூற முடியாது என்பதை முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

கடவுளுக்கென சில இலக்கணங்களை பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகின்றது. மனிதனுக்குரிய இலக்கணங்களையும் பைபிள் குறிப்பிடுகின்றது. பைபிளில் கடவுளுக்குரிய இலக்கணங்களாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. அதே சமயம் மனிதனுக்குக் கூறப்படுகின்ற அத்தனை இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன என்பதை இரண்டாம் பகுதியில் விளக்கியுள்ளேன்.

இயேசு இறை மகனல்லர்  என்று இறைவனே சில இடங்களில் கூறுவதாக பைபிள் ஒப்புக் கொள்கிறது. இயேசுவும் தாம் இறை மகனல்லர்  என்று பல இடங்களில் வாக்குமூலம் தந்துள்ளார். இத்தகைய சான்றுகளை முன்னிருத்தி இயேசு இறை மகனல்லர் என்பதை மூன்றாம் பகுதியில் விளக்கியுள்ளேன்.

இயேசு இறை மகன்  என்பதைக் குர்ஆன் ஒப்புக் கொள்வதாக கிறித்தவர்களால் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தின் போலித்தனத்தையும், அவர்கள் எழுப்பும் வாதங்களுக்கான நேர்மையான பதிலையும் இஸ்லாமிய அடிப்படையில் இயேசுவின் நிலை என்ன என்பதையும் நான்காம் பகுதியில் விளக்கியுள்ளேன்.

இந்நூலை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள்.

இயேசுவைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ கருதாமல், அவர் தூய்மையான தீர்க்கதரிசி என்ற உண்மையை உணர்வார்கள்.

* இறைவனுக்கு மகனா…?

* இறைவன் தனித்தவன்

* யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்

* அவன் யாரையும் பெறவில்லை

* யாராலும் பெறப்படவுமில்லை

* அவனுக்கு நிகராக யாருமே இல்லை

* அவனே அகிலங்களைப் படைத்தவன்

* பரிபாலிப்பவன்

* ஆக்க, அழிக்க ஆற்றலுள்ளவன்

* என்றென்றும் நிலையாக ஜீவித்திருப்பவன்

இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை.

கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்து, கடவுளின் தன்மையை சிலர் மாசுபடுத்துகின்றனர்.

தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக,  இறைவனுக்கு மகன் உண்டு  என்று நம்பி வருகின்றனர்.

அவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுளின் குமாரர் தாமா என்பதை ஆராயும் முன் இறைவனுக்கு மகன் தேவையா என்பதைப் பார்ப்போம்.

கடவுளுக்கு மகன் தேவையில்லை!

யார் மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் எதிர்கொள்ள இருக்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை!

யார் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் – தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக – வாரிசு தேவை!

மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான்.

மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான்.

மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்கொள்பவனாக இருக்கும் போதே, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான்.

சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான்.

கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை.

கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை.

அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர்.

கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்பதை மறுக்க மாட்டார்.

இயேசு இறை மகன்  என்று நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் இது போன்ற தர்க்க வாதங்களுக்காகத் தங்களின் நம்பிக்கையை விட்டு விட மாட்டார்கள்.

எனவே எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என நம்புகிறார்களோ அந்தக் காரணங்களை அலசி, அவர்களும் ஏற்கும் வகையில் விளக்கியாக வேண்டும். அவர்களே வேதம் என்று நம்புகின்ற நூலிலிருந்து அதற்குரிய சான்றுகளை எடுத்து வைக்க வேண்டும். அது தான் அவர்களுக்குச் சரியான தெளிவையளிக்கும்.

பகுதி ஒன்று

1 இயேசு என் குமாரன்  எனக் கர்த்தர் கூறுவது:

1. இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே பைபிளிள் குறிப்பிட்டுள்ளார்.

2. இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது.

3. பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது.

4. இயேசு தந்தையின்றிப் பிறந்தார்.

5. இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

6. இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார்.

7. இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.

என்பன போன்ற காரணங்களால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கிறித்தவ மக்கள் நம்புகின்றனர்.

இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி:  இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்  என்று உரைத்தது.

மத்தேயு 3:17

என்னுடைய நேச குமாரன்  என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்?

என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.

கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.

பைபிளில் இறை மகன்  என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்

அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்  இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்  என்றார்.

யாத்திராகமம் 4:22,23

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.

எரேமியா 31:9

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.

இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.

முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு வசனங்கள் கூறுகின்றன.

அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:

மத்தேயு 4:5

மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:

மத்தேயு 4:8

மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் பிசாசு இயேசுவைச் சோதித்ததாகக் கூறப்படுள்ளது. ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.

இயேசுவைக் கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!

தாவீது இறை மகன்

நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்.

சங்கீதம் 2:7

என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்.

முதலாம் நாளாகமம் 17:13

சாலமோன் இறை மகன்

அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

முதலாம் நாளாகமம் 22:10

எப்ராயீம் இறை மகன்

இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.

எரேமியா 31:9

சாமுவேல் இறை மகன்

நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.

இரண்டாம் சாமுவேல் 7:14

இயேசு இறை மகன்  எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்?

இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்  எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.

எல்லா மக்களும் தேவ குமாரர்கள்

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்!

உபாகமம் 14:1

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.

சங்கீதம் 68:5

திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால்  அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள்  என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?

இறை மகன்  எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்  எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள்  எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறை மகன்  என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

இயேசுவின் வாக்கு மூலம்

மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்  என்று சொல்லியிருக்கிறார்.

மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார்.

மத்தேயு 6:14,15

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.

மத்தேயு 5:9

இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.

மத்தேயு 5:45

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

மத்தேயு 7:11

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

மத்தேயு 23:9

அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

யோவான் 1:12

அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

லூக்கா 6:35

பவுல் வாக்கு மூலம்

இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைத்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இயேசு மட்டும் இறைவனுக்கு மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.

நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அப்போஸ்தலர் 17:29

நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.

ரோமர் 8:16

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.

இரண்டாம் கொரிந்தியர் 6:18

* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.

* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.

* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.

இதிலிருந்து குமாரர்  எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதல்வர்கள்  எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இறை மகன்  என்பதன் பொருள்

இயேசு இறை மகன் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளார்.. இன்னும் பலரும் இறை மக்கள் என்று கூறப்பட்டுள்ளனர். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

கிறித்தவர்கள் தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும்.

* இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர், அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?

* அல்லது இறைவன் விரும்பும் விதமாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்று பொருள் கொள்வதா?

இதைத் தான் கிறித்தவர்கள் விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

இறை மகன் என்பது போன்ற சொற்களுக்கு முதலாவது அர்த்தம் இருக்க முடியாது.

இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படும் போது முதலில் சொன்ன பொருளை கிறித்தவர்கள் கொள்வதில்லை. அந்தச் சொல்லுக்கு இரண்டாவது பொருளே கொள்கின்றனர். பைபிளும் கூட இதை உறுதி செய்கின்றது.

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

மத்தேயு 23:9

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா – தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும்.

ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார்.

அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா  என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.

படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு.

பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு.

ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள் என்ற வசனத்தில் பிதா என்பது, படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள்  என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.

 பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை  என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.

பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில், ரேஷன் கார்டுகளில், பாஸ் போர்ட்டுகளில், திருமணப் பதிவேடுகளில் ஆதார் அட்டைகளில் இன்னும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் தந்தையின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டால் பரலோகத்திலிருப்பவர்  என்று கிறித்தவர்கள் கூறுவார்களா? அல்லது தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் கூறுவார்களா?

நிச்சயமாக தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரையே கூறுவார்கள்! அப்படியானால் பைபிளின் கட்டளையைக் கிறித்தவர்கள் மீறி விடுகிறார்களே! இந்தக் கட்டளையை மீறாமல் உலகில் வாழவே முடியாதே! இப்படித் தான் அவர்கள் கூறப் போகிறார்களா?

நிச்சயமாகக் கூற மாட்டார்கள். பிதா  என்பது கடவுள் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறுவார்கள்.

பிதா  என்பதற்குப் படைத்தவன்  என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன்  என்பதற்கு படைக்கப்பட்டவன்  என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.

பிதா என்பதற்கு இறைவன்  என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான்  என்பது தான் பொருளாக இருக்க முடியும்.

இந்தச் சாதாரண உண்மையைக் கிறித்தவர்கள் விளங்கிக் கொண்டால்  இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர்  என்று கூற மாட்டார்கள்! இறை குமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுவதால் அவரும் இறைவனே  என்று நம்புகின்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

பைபிளின் பிரகடணம்

ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

யாத்திராகமம் 20:3

என்னையன்றி வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம்  என்ற கர்த்தரின் கூற்று தெரிவிப்பதென்ன? கடவுளாகிய கர்த்தரைத் தவிர வேறு தேவர்கள் கிடையாது என்பதைத் தானே? இதற்கு முரணாக, இயேசு இறை மகன்  என்று எப்படிக் கூற முடியும்?

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.

உபாகமம் 4:35

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.

உபாகமம் 6:4-6

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை.

ஏசாயா 46:9

என்று கர்த்தர் கூறினார்.

நானும் கடவுள்  என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும்.

நானே – நான் மட்டுமே – கடவுள்  என்ற பைபிளின் இவ்வசனம் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.

எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறை மகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?

ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

யோவான் 17:3,4

என்று இயேசு கூறினார்.

கிறித்தவர்கள் எந்த இயேசுவைக் கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறார்களோ அந்த இயேசு கூறிய போதனை இது!

நான் கடவுள் இல்லை  என்று இயேசு தருகின்ற தெளிவான ஒப்புதல் வாக்கு மூலம் இது.

*  மெய்யான ஒரே கடவுளாகிய  என்று அவர் கூறியதன் மூலம் தாம் கடவுள் அல்லர்  என்று ஒப்புக் கொள்கிறார்.

*  நீர் அனுப்பினவராகிய இயேசு  என்று அவர் கூறியதன் மூலம் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே  என்று ஒப்புக் கொள்கிறார்.

*  நான் செய்யும் படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்து முடித்து  என்று கூறுவதன் மூலம் அந்த ஒரே கடவுளின் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டவன் நான்  என்றும் கூறுகிறார்.

* செய்து முடித்து  என்பதன் மூலம்  நான் வந்த வேலை முடிந்து விட்டது; இனி என்னை அழைப்பதில் பயனில்லை  என அறிவிக்கிறார்.

 நான் இறைவனுக்குப் பிறந்தவனுமல்லன்; இறைவனுமல்லன்  என்று இயேசு பிரகடனம் செய்ததற்கு முரணாக, இறை மகன்  என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது இயேசுவையே அவமதிக்கும் போக்காகக் கிறித்தவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?

முதன்மையான கற்பனை

போதகரே! நியாயப் பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும், உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.

மத்தேயு 22:36-38

பாதி இதயத்தையும், பாதி ஆத்மாவையும், பாதி மனத்தையும் இயேசுவுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பது பிரதானமானதும், முதன்மையானதுமான கற்பனையை மீறுவதாகும்.

இறை மகன்  என்பதற்கு கிறித்தவ சபையினர் கொள்கின்ற பொருள் சரி தான் என்றால் இயேசு இவ்வாறு கூறியிருப்பாரா?

அந்த நாளை குமாரனும் அறியார்

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.

மார்க்கு 13:32

என்று இயேசு கூறினார்.

இயேசுவே கடவுள் என்றால்  அந்த நாளும், நாழிகையும் தமக்குத் தெரியாது; பிதாவுக்கு மட்டுமே தெரியும்  என்று கூறியிருப்பாரா? கடவுளுக்குத் தெரியாதது என்று ஏதும் இருக்க முடியுமா? கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்!

கடவுளின் ராஜ்ஜியத்தில் அதிகாரம் இல்லை

அவர் அவளை நோக்கி  உனக்கு என்ன வேண்டும்  என்று கேட்டார். அதற்கு அவள்  உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும்  என்றாள்.

மத்தேயு 20:21

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன்  என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:23

கர்த்தரின் சன்னதியில் அனைவரும் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாளில் சொர்க்கத்தை வழங்குவதும், நரகத்தை வழங்குவதும் கர்த்தரின் தனிப்பட்ட அதிகாரம். எனக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று இயேசு அறிவிப்பது கிறித்தவர்கள் உண்மையை விளங்கப் போதிய ஆதாரமாகும்.

கடவுளின் ராஜ்ஜியத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை  என்று இயேசு அறிவித்த பின்னரும் இறை மகன் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு, இயேசுவிடம் வேண்டுதல் செய்வதும், அவரை வழிபடுவதும் சரி தானா?

கடவுள் அழிவில்லாதவர்; காணப்படாதவர்

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்.

1 தீமோத்தேயு 1:17

கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே!

(கிறித்தவ நம்பிக்கைப்படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?

இயேசுவைப் பற்றிப் பிடிக்காதே!

இயேசு அவளை நோக்கி,  என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன்  என்று அவர்களுக்குச் சொல்லு  என்றார்.

யோவான் 20:17

இயேசுவைப் பற்றிப் பிடித்துக் கொள்வதில் நித்திய ஜீவனை அடைய முடியாது என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.

பிதா என்பதன் பொருளையும் இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.

இயேசு மனுஷ குமாரன்

இறை மகன்  என்பதை இறைவன்  என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், இயேசு தம்மை மனிதன்  என்றும் மனுஷ குமாரன்  என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு இயேசு,  நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை  என்றார்.

மத்தேயு 8:20

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி,  நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ  என்றார்.

மத்தேயு 9:6

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள்.

மத்தேயு 9:8

பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

மத்தேயு 16:13

மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

மத்தேயு 16:27

அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார்.

மத்தேயு 17:22

ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.

மத்தேயு 17:12

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி,  மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம்  என்று கட்டளையிட்டார்.

மத்தேயு 17:9

அதற்கு இயேசு,  மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள்  என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:28

இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து…

மத்தேயு 20:18

அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

மத்தேயு 20:28

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்.

மத்தேயு 24:27

மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.

மத்தேயு 26:24

அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26:64

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார்.

மத்தேயு 26:45

மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன்  என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்று, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?

இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.

இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர் என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?

இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக – அதாவது இறைவனாக – இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா?

இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது 

ஒன்றுக்குள் ஒன்று

2. ஒன்றுக்குள் ஒன்று என்ற சொல்லுக்கு  கடவுள் எனப் பொருளா?

இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவான் 10:30

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்.

யோவான் 14:10

நானும், பிதாவும் வெவ்வேறானவர்கள் அல்லர்; நான் தான் பிதா; பிதா தான் நான்; இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து விட்டோம்  என்பது இதன் பொருள். எனவே இயேசுவும் கடவுள் தாம் என்பதும் கிறித்தவர்களின் ஆதாரம்.

இறை மகன்  எனும் சொல்லைத் தவறான பொருளில் புரிந்து கொண்டது போலவே நானும், பிதாவும் ஒன்றே  எனும் சொல்லையும் கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கி விட்டனர். இவர்கள் புரிந்து கொண்ட பொருள் தவறானது தான் என்பதை பைபிளின் வெளிச்சத்திலேயே நிரூபிக்க முடியும்.

நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

யோவான் 14:20

நான் என் பிதாவில் இருக்கிறேன்  என்று இயேசு கூறியதால்  இயேசுவும், பிதாவும் ஒருவரே  எனத் தவறான பொருள் கொண்ட கிறித்தவர்கள்,  நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன்  என்று இயேசு கூறியதையும் அதே போன்று விளங்க மறுப்பது ஏன்?

நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன்  என்று இயேசு கூறியதை  மக்களும் இயேசுவும் வேறு இல்லை; மக்கள் தாம் இயேசு; இயேசு தான் மக்கள்  என்று விளங்குவார்களா?

இதனால் இயேசுவும், மக்களும் ஒன்று தான் என்ற நிலை ஏற்படுவதுடன் மக்கள் அனைவருமே கடவுள் தான் என்ற விபரீதமும் ஏற்படும்.

கிறித்தவர்களின் இந்தத் தவறான போக்கு இயேசுவை மட்டும் கடவுளாக்கவில்லை; மக்களையும் கடவுளாக்கி விடுகின்றது. இதன் விபரீதம் கிறித்தவர்களுக்குப் புரியாமல் போனது ஏன்?

இன்னும் தெளிவாக இயேசு கூறுவதைக் கேளுங்கள்!

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

யோவான் 17:21,22

இயேசு கடவுளுக்குள்ளும், கடவுள் இயேசுவுக்குள்ளும் இருப்பது போல் மக்களெல்லாம் அவ்விருவருக்குள்ளும் இருப்பதாக இயேசுவே கூறுகிறார்.

அப்படியானால் மக்களெல்லாம் கடவுள்கள் தாம் என்று இதை ஏன் கிறித்தவர்கள் புரிந்து கொள்வதில்லை? அவர்கள் வேதத்திலேயே அவர்களுக்கு நம்பிக்கையில்லையா?

எல்லா மக்களுமே கடவுளர்கள் என்றால் இயேசுவுக்கு இதில் என்ன சிறப்பு இருக்கிறது? மக்களே கடவுளர்களாக இருக்கும் போது யாரையும் அவர்கள் வழிபடுவதில் ஏதேனும் நியாயமிருக்கிறதா? இதைச் சிந்தித்தால் நானும் பிதாவும் ஒன்றே  என்று இயேசு கூறியதன் சரியான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.

நெருங்கிய நட்பு கொண்ட இருவரைப் பற்றி  இருவரும் இரண்டறக் கலந்து விட்டார்கள்  எனக் குறிப்பிடுவது உலகமெங்கும் ஏற்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒரு நபராகி விட்டார்கள். ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவி விட்டனர்  என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருவருக்கிடையே அதிக நெருக்கம் உள்ளது என்றே இந்தச் சொல்லைப் புரிந்து கொள்வார்கள்.

பைபிளும் கூட இவ்வாறு பொருள் கொள்வதற்கே இடம் தருகின்றது.

இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

ஆதியாகமம் 2:24

கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்பதால் இருவரும் ஒருவர் தாம் என்று புரிந்து கொள்வதுண்டா?

தங்கள் மனைவிகள் சாப்பிட்டதும் தங்கள் வயிறு நிரம்பி விட்டதாக எண்ணி கணவர்கள் சாப்பிடாமல் இருப்பார்களா?

தம் இயற்கைத் தேவையைத் தம் மனைவியை விட்டு நிறைவேற்றுவார்களா?

மனைவி இறந்து விட்டால் அவர்களும் இறந்து விட்டதாக எண்ணிக் கல்லறைக்குள் புதைக்கப்பட்டு விடுவார்களா? மாட்டார்கள்.

கணவன் மனைவி இருவரின் நெருக்கம் மற்றெவரது நெருக்கத்தை விட அதிகமானது என்று தானே இதைப் புரிந்து கொள்வார்கள். இயேசு கூறியதையும் அதே போன்று புரிந்து கொள்வது தானே அறிவுடைமை.

இதனிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள். இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.

மார்க்கு 10:7,8

புதிய ஏற்பாட்டில் உள்ள இவ்வசனத்தில் இருவராயிராமல்  என்று இன்னும் அழுத்தத்துடன் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு விஷயத்தில் கூட இருவராயிராமல்  எனக் கூறப்படவில்லை. இதை எவ்வாறு கிறித்தவ உலகம் புரிந்து கொள்கிறதோ அவ்வாறு தானே இயேசு கூறியதையும் புரிந்து கொள்ள வேண்டும்?

3. ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா?

பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்  எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.  இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம்  என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும்.

இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் பைபிள் இதற்கு மாற்றமாகக் கூறுகிறது.

கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்

இயசு அவர்களை நோக்கி,  நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள்  என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக  நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை. நீர் மனுஷனாயிருக்க உன்னை தேவனென்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிற படியினால் உன் மேல் கல்லெறிகிறோம்  என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக  தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க வேதவாக்கியமும் தவறாததாயிருக்க.

யோவான் 10:32-35

இயேசு மனிதராயிருந்தும் ஆண்டவர் எனக் கூறிக் கொண்டதால் யூதர்கள் அவரைக் கல்லெறியத் திட்டமிட்டார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும் போது  கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்  எனக் கூறுகிறார். கடவுள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைத் தாம் பயன்படுத்தவில்லை. தேவர்கள் என்றால் கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள்  என்பதே பொருள் எனத் தெளிவுபடுத்துகிறார்.

பைபிளில் பயன்படுத்தப்படும் ஆண்டவர் , தேவர்  என்பது போன்ற பதங்கள் கடவுளின் தூதர்கள், கடவுளின் வார்த்தையைப் பெற்றவர்கள்  என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது சரியான சான்றாகும்.

இயேசு, தேவர் எனத் தம்மைக் கூறிக் கொண்டது கடவுள் என்ற அர்த்தத்தில் தான் என்று கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அதற்கும் மேற்கண்ட வசனத்தில் போதுமான மறுப்பிருக்கின்றது.

நான் மட்டும் தேவனல்லன்; கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்ட அனைவருமே தேவர்கள் தாம் என இயேசு குறிப்பிடுகிறார்.

எண்ணற்ற தேவர்கள்

மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் மற்றும் பல தீர்க்கதரிசிகளும் தேவர்கள் என பைபிள் கூறுகிறது.

அப்படியானால் அவர்களையெல்லாம் கடவுள்கள் என்று கூறாத கிறித்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் எனக் கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

மோசேயும் தேவர்

கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி  பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

யாத்திராகமம் 7:1

மக்களும் தேவர்கள்

நீங்கள் தேவர்களென்றும் நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

சங்கீதம் 82:6

என்று தாவீது தம் சமூகத்தாரிடம் கூறியிருக்கிறார்.

தேவர்கள் எனும் சொல் இயேசுவுக்கு மட்டுமின்றி மோசேவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்லா மக்களுக்கும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுவை வழிபடக் கூடியவர்களும் கூட தேவர்களாக இருக்கும் போது இயேசுவை வழிபடுவது என்ன நியாயம்? இயேசுவுக்கு இதில் சிறப்பு என்ன இருக்கிறது?

கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கிக் கொண்ட ஆண்டவன்  என்ற அதே வார்த்தை இன்னும் எத்தனையோ மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுகிறது!

மன்னரும் ஆண்டவரே

அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு…

முதலாம் ராஜாக்கள் 1:2

இங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வீட்டு எஜமானரும் ஆண்டவரே

வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று…

லூக்கா 13:25

பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

மத்தேயு 25:11

இவ்வசனங்களில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர்.

கணவரும் ஆண்டவரே

அந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்…

1 பேதுரு 3:6

இங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள்

நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்…

முதலாம் ராஜாக்கள் 1:11

இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி!

ஆதியாகமம் 32:18

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.

ஆண்டவர் எனும் சொல்

கணவன்

எஜமான்

தலைவன்

நல்லவன்

ஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன.

இன்றைக்குக் கூட கத்தோலிக்கர்கள் தங்கள் தலைமை குருவை போப் ஆண்டவர் எனக் கூறுவதில்லையா? அவரும் இயசுவைப் போல் கடவுள் தாமா?

 இயசுவை ஆண்டவர் எனப் பைபிள் கூறுவதால் அவர் கடவுளே  எனக் கிறித்தவர்கள் கூறுகின்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

4. தந்தையின்றிப் பிறந்தால் கடவுளா?

இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்  எனக் கிறித்தவர்கள் காரணம் காட்டுகின்றனர்.

இந்த வாதமும் அறிவுடையோர் ஏற்கக் கூடிய வாதமன்று. இயேசுக்குத் தந்தையில்லை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

தந்தையின்றிப் பிறந்தார் என்பதில், தந்தையின்றி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து அவரைக் கடவுளாக்க முயற்சிக்கும் கிறித்தவர்கள், பிறந்தார் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையே அது ஏன்?

பல ஆண்டுகள் இல்லாமல் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் அவர் தோன்றியுள்ளார் என்பது தானே பிறந்தார் என்பதன் பொருள்.

பல ஆண்டு காலம் இல்லாமலிருந்தார்  என்பது கடவுளுக்குப் பொருந்தக் கூடியது தானா? பல ஆண்டுகள் இல்லாமலிருந்தவர் கடவுளாக முடியுமா? கடவுள் பல ஆண்டுகள் இல்லாமல் இருந்தால் உலகம் என்னவாகும்?

தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் – மனிதர் தாம் – என்பதை நன்கு விளக்கவில்லையா?

தந்தையின்றிப் பிறந்தார்  என்ற கூற்றில் தந்தையின்றி  என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரிய வருமே!

தாயின்றிப் பிறக்கவில்லை  என்ற கருத்தையே தந்தையின்றி  என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.

கடவுள் என்பவனுக்குத் தந்தை தான் இருக்கக் கூடாது; தாய் இருக்கலாம்  என்பது தான் கடவுளுக்குரிய இலக்கணமா? அப்படியானால் பரமபிதாவுக்கு – கர்த்தருக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று கிறித்தவர்கள் கூறப் போகிறார்களா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தந்தையில்லாமலிருப்பதால் மட்டும் ஒருவர் கடவுளாகி விட முடியாது என்பதே உண்மையாகும். பைபிளே இதை ஒப்புக் கொள்கிறது.

தந்தையில்லாதவர் பலர்

ஏனோஸ் சேத்தின் குமாரன். சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனாலே உண்டானவன் என்று பைபிள் கூறுகிறது.

லூக்கா 3:38

தந்தையின்றிப் பிறந்ததால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் தந்தையுமின்றி, தாயுமின்றி, கருவறை வாசமுமின்றி, தேவனாலே நேரடியாக உண்டாக்கப்பட்ட ஆதாமுக்குக் கடவுளாக அதிகத் தகுதி இருக்கிறதல்லவா? அவரை ஏன் கடவுள் என்றோ, கடவுளின் மைந்தன் என்றோ கிறித்தவர்கள் நம்பவுது இல்லை?

இயேசுவை விடப் பெரிய கடவுள் என்று சொல்லப்படுமளவுக்கு ஆதாமிடம் நியாயமிருந்தும் கூட இயேசுவுக்குச் சமமான கடவுளாகக் கூட ஆதாமை ஏற்காமலிருப்பது கிறித்தவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றவில்லையா?

ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி?

யோபு 25:4

இயேசு ஒரு ஸ்திரீயிடம் பிறந்துள்ளதால் தூயவரல்லர்  என்று இவ்வசனம் கூறுகிறது. தூயவராக இல்லாதாவர் எப்படி கடவுளாக முடியும்?

ஆனால் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இந்தப் பலவீனம் இல்லை.

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர், தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

ஆதியாகமம் 2:21,22

மனிதர் அனைவரிடமும் காணப்படுகின்ற ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் என்ற நிலை இவ்விருவருக்கு மட்டுமே இல்லை.

பைபிளின் போதனைக்கே முரணாகக் கிறித்தவர்கள் நடக்கிறார்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?

மெல்கிசேதேக்கு என்பவனைப் பற்றி பைபிள் கூறுகிறது. இவன் கடவுளாகக் கருதப்பட இயசுவை விட அதிகம் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டு போய் அவனை ஆசீர்வதித்தான்.

எபிரேயர் 7:1

ஆபிரகாமுக்கே ஆசி வழங்கக் கூடிய தகுதி பெற்ற இவன் யார்? எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்? இதோ பைபிள் கூறுகிறது.

இவன் தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

எபிரேயர் 7:3

இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாம் முதலாய்க் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான்.

எபிரேயர் 7:4

இயேசுவுக்கு தகப்பன் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக அவர் இறைவனுக்கு மகனாகி விட்டார் என்று நம்புகின்ற கிறித்தவர்களால்

* தகப்பனுமில்லாத

* தாயுமில்லாத

* வம்ச வரலாறு கூட இல்லாத

* ஆரம்பமும், முடிவும் இல்லாத

* என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய

*  எவ்வளவு பெரியவன் பாருங்கள்  என பைபிளே வியக்கக் கூடிய

மெல்கிசேதேக்கு என்பவன் கடவுளாகக் கருதப்படவில்லையே! அது ஏன்?

பைபிளில் கூறப்படும் எவரையாவது கடவுள் என்று நம்ப வேண்டுமானால் – அது கடவுளால் அனுமதிக்கப்பட்டதாக இருக்குமானால் – அதற்குரிய முழுத் தகுதியும் மெல்கிசேதேக்குவிடம் இருக்கிறது.

இவனுடன் ஒப்பிடும் போது இயேசு எத்தனையோ மடங்கு குறைந்த தகுதியுடையவராகத் தென்படுகிறார். ஆனாலும் இவனைக் கூட கடவுளின் மகன் எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை. இவன் பெயர் கூட கிறித்தவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது தனி விஷயம்.

கடவுளுக்கு மகனிருக்க முடியாது.

எவரும் கடவுளின் தன்மையைப் பெற முடியாது.

கடவுள் கடவுள் தான்.

மனிதன் மனிதன் தான்

என்று மனசாட்சி தீர்ப்பு வழங்குவதால் ஆதாம், ஏவாள், மெல்கிசேதேக்கு ஆகியோரைக் கடவுளர்கள் என்று கிறித்தவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

ஆனால் இயேசு விஷயத்தில் மட்டும் தங்கள் மத குருமார்கள் போதித்த தவறான போதனைகளின் காரணமாக சிந்திக்க மறுக்கிறார்கள்!

பைபிளின் மீது கிறித்தவர்களுக்கு பரிபூரண நம்பிக்கை இருக்குமானால் இம்மூவரையும் பெரிய கடவுளர்களாகவும், இயேசுவை அவர்களை விட மிகச் சிறிய கடவுளாகவும் தான் ஏற்க வேண்டும்.

அல்லது கர்த்தராகிய ஒருவரைத் தவிர வேறு எவரும் கடவுளாக முடியாது என்று நம்ப வேண்டும்.

இதை விடுத்து இயேசுவையும், இம்மூவரையும் பிரித்துப் பார்த்தால் பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது.

5. அற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா?

மனிதர்களுக்குச் சாத்தியமாகாத – கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய – ஏராளமான அற்புதங்களை இயேசு நிகழ்த்தியிருக்கிறார். இதன் காரணமாக

* அவர் கடவுளின் மகனாக

* கடவுளின் அவதாரமாக

* கடவுளின் தன்மை பெற்றவராக

* கடவுளாக

இருக்கிறார் என்பதும் கிறித்தவர்கள் காட்டுகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.

பல காரணங்களால் இந்த வாதமும் ஏற்கக் கூடியதன்று. பைபிளிலிருந்தே அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

இறந்தவர்களை உயிர்ப்பித்தவர்கள்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்துக் காட்டிய பெரிய அற்புதத்தை எடுத்துக் கொள்வோம். இறந்தவரை உயிர்ப்பிப்பதால் ஒருவர் கடவுளாகி விடுவார் என்றால் இன்னும் பலர் இதே அற்புதத்தைச் செய்ததாக பைபிள் கூறுகிறதே!

முழு பைபிளையும் ஆராய்ந்தால் இயேசு மூன்றே மூன்று நபர்களை மட்டுமே உயிர்ப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதை விட அதிக எண்ணிக்கையில் மற்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனரே?

கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்மா அவனுள் திரும்பி வந்தது. அவன் பிழைத்தான்.

முதலாம் ராஜாக்கள் 17:22

கிட்டே போய் தன் வாய், பிள்ளையின் வாயின் மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டான். அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.

இரண்டாம் ராஜாக்கள் 4:34

இயேசுவைப் போலவே எலியாவும், எலிஷாவும் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக பைபிள் கூறியிருக்கும் போது கிறித்தவர்கள் இவ்விருவரையும் கடவுளர்களாக நம்ப மறுப்பது ஏன்?

எசக்கியேல் எனும் தீர்க்கதரிசி பல்லாயிரக் கணக்கான மனித எலும்புகளுக்கு உயிர் கொடுத்து எழச் செய்ததாக எசக்கியேல் 37ஆம் அதிகாரம் கூறுவதைப் பாருங்கள்!

கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப் பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப் பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள் மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்து கொண்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ, அவைகள் மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத் திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும் படிக்கு இவர்கள் மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

எசக்கியேல் 37:1-10

மூன்றே மூன்று நபர்களை – உடலுடன் கூடிய மூன்று நபர்களை – உயிர்ப்பித்ததால் இயேசு கடவுளாக முடியும் என்றால் உடலில்லாத வெறும் எலும்புகளை உயிர்ப்பித்ததாலும், பல்லாயிரம் மக்களை உயிர்ப்பித்ததாலும் எசக்கியேல் பெரிய கடவுள் அல்லவா? அவரை ஏன் கடவுள் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை? சிந்தித்துப் பாருங்கள்!

இயேசு உயிருடனும், உடலுடனும் நடமாடிய காலத்தில் தான் மூன்று நபர்களை உயிர்ப்பித்திருக்கிறார். இன்னொருவரோ தாம் மரணித்த பிறகும் கூட மற்றவர்களை உயிர் பெறச் செய்திருக்கிறார் என பைபிள் கூறுகிறது!

அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப் போகையில் அந்தத் தண்டைக் கண்டு அந்த மனுஷனை எலிஷாவின் கல்லறையில் போட்டார்கள். அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிஷாவின் எலும்புகளின் மேல் பட்ட போது அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.

இரண்டாம் ராஜாக்கள் 13:21

இயேசுவின் அற்புதத்தை விட இது பேரற்புதமாகக் கிறித்தவர்களுக்குத் தோன்றவில்லையா? எலிஷாவின் எலும்பு கூட மற்றவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றால் இவர் இயேசுவை விடப் பெரிய கடவுள் அல்லவா? இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்ததை ஆதாரமாகக் கொண்டு அவரைக் கடவுள் எனக் கூற முடியாது என்பதை இது விளக்கவில்லையா?

அற்புதங்களை நிகழ்த்தியவர்கள்

இது போக, இயேசு நிகழ்த்திய மற்ற அற்புதங்களை எடுத்துக் கொள்வோம். அவரது அற்புதங்களை விட பெரிய அற்புதங்களை மற்றவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

ஐந்து ரொட்டித் துண்டுகளையும், இரண்டு மீன்களையும் பலருக்கு இயேசு விநியோகம் செய்திருப்பதாக பைபிள் கூறுகிறது. மற்றவர்கள் செய்த அற்புதங்களைக் கேளுங்கள்!

பின்பு பாகால் சலிஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற் பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது அவன் ஜனங்களுக்கு சாப்பிடக் கொடு என்றான். அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன் இதை நான் நூறு பேருக்கு முன் வைப்பது எப்படி என்றான்? அதற்கு அவன்  அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு! சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்  என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான். கர்த்தருடைய வார்த்தையின் படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.

இரண்டாம் ராஜாக்கள் 4:42-44

அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின் படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.

முதலாம் ரஜாக்கள் 17:13-16

எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல் வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக் கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.

இரண்டாம் ராஜாக்கள்  4:2-6

இயேசுவின் அற்புதம் ஒரே நாளில் முடிந்து போய் விட்டது. எலிஷா, எலியா ஆகியோரின் அற்புதங்களோ நீண்ட நாட்கள் நிலைத்திருந்த அற்புதங்களாக இருந்தன. இந்த எலிஷாவையும், எலியாவையும் கிறித்தவர்கள் கடவுள் என்று நம்பி வழிபட்டிருக்க வேண்டுமே? அவர்களை விட்டு விட்டு இயேசுவை மட்டும் வழிபட என்ன நியாயம் வைத்திருக்கிறார்கள்?

அற்புதம் நிகழ்த்த முடியாத இயேசு

காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதனிடத்திற்போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்  இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது  என்றார். உடனே அத்தி மரம் பட்டுப்போயிற்று.

மத்தேயு 21:18,19

அற்புதம் நிகழ்த்தியதால் அவர் கடவுளாகி விடவில்லை என்பதற்கும், அவர் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதற்கும் இதை விடச் சான்று வேறு என்ன வேண்டும்?

அற்புதம் நிகழ்த்தியதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் அவருக்குப் பசி எடுத்தது எப்படி?

கடவுளுக்குப் பசிக்குமா?

அத்தி மரத்தில் கனி இருக்குமா? இருக்காதா என்பது கடவுளுக்கு முன் கூட்டியே தெரியாமல் போகுமா?

ஏமாறுவதும், அறியாமையும் கடவுளுக்குரிய பண்புகளாக இருக்க முடியுமா?

அத்தி மரத்தைக் கனியுடையதாக்கியதும், கனியில்லாமல் செய்ததும் அந்த மரத்தின் செயலன்று. கடவுள் தாம் அவ்வாறு ஏற்படுத்துகிறார். இயேசுவே கடவுள் என்றால் மரத்தில் கனியில்லாமலாக்கியதும் அவர் தாமே? பிறகு ஏன் அத்தி மரத்தைச் சபிக்க வேண்டும்? அவ்வாறு சபிப்பது தம்மையே சபிப்பதாக ஆகாதா?

ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுயை பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை இது விளக்கவில்லையா?

அது தான் போகட்டும் விட்டு விடுவோம்! தெரியாமல் கனியில்லாத மரத்திடம் வந்து விட்டார். வந்தவர் கடவுள் அல்லவா? அவர் வந்த உடனே அம்மரத்தில் கனி உண்டாகியிருக்க வேண்டாமா? அப்படியும் நடக்கவில்லையே? ஊராரின் பசியைப் போக்கியவருக்குத் தம் பசியை நீக்கும் வகையில் அற்புதம் நிகழ்த்த முடியாமல் போனது ஏன் என்பதையாவது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?

காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும், இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

முதலாம் ராஜாக்கள் 17:6

கனி தருவது மரங்களின் இயல்பு. அந்த இயல்பே இயேசு விஷயத்தில் மாறி அவரைச் சிரமப்படுத்தியிருக்கிறது. பிறரது உணவைத் தட்டிப் பறிப்பது காகங்களின் இயல்பு. அந்த இயல்புக்கு மாற்றமாகக் காகங்கள் எலியாவுக்கு தினமும் உணவு கொண்டு வந்து உபசரித்திருக்கின்றன.

இவ்விரண்டில் எதை அற்புதம் என்று கிறித்தவர்கள் சொல்லப் போகிறார்கள்? இவ்விருவரில் யாரைக் கடவுள் என்று நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்!

தொழுநோயைக் குணப்படுத்தியவர்கள்

இயேசு அற்புதமான முறையில் தொழு நோயளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்றால் அதே அற்புதத்தை மற்றவர்களும் கூடச் செய்துள்ளனர்.

அப்பொழுது எலிஷா அவனிடத்தில் ஆளனுப்பி  நீ போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணு! அப்பொழுது உன் மாம்சம் மாறி நீ சுத்தமாவாய்  என்று சொல்லச் சொன்னான்.

இரண்டாம் ராஜாக்கள் 5:10

அப்பொழுது அவன் இறங்கி தேவனுடைய மனுஷன் வார்த்தையின் படியே யோர்தானில் ஏழு தரம் முழுகின போது அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான்.

இரண்டாம் ராஜாக்கள் 5:14

குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தவர்கள்

இயேசு சில குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் என்றால் அதையும் கூட மற்றவர்களும் செய்துள்ளனர்.

அப்பொழுது எலிஷா விண்ணப்பம் பண்ணி கர்த்தாவே இவன் பார்க்கும் படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான். உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்…

இரண்டாம் ராஜாக்கள் 6:17

அவர்கள் சமாரியாவில் வந்த போது எலிஷா  கர்த்தாவே! இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும்  என்றான். பார்க்கும் படிக்கு கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும் போது இதோ அவர்கள் சாமாரியாவின் நடுவே இருந்தார்கள்.

இரண்டாம் ராஜாக்கள் 6:20

தண்ணீரில் நடந்தவர்கள்

மோசே தன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

யாத்திராகமம் 14:21,22

எலிஷா இரும்புக் கோடாலியைத் தண்ணீரில் மிதக்கச் செய்திருக்கிறார்.

ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்த போது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப் பண்ணி, அதை எடுத்துக் கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 6:5-7

இயேசு எந்த அற்புதத்தை நிகழ்த்தியதாகக் கூறி அவரைக் கடவுள் என்று வாதம் செய்தாலும் அந்த அற்புதங்களை அவருக்கு முன்பே மற்றும் பலர் செய்திருப்பதாகப் பைபிளில் காண முடிகின்றது. இயேசுவை விடச் சிறப்பாகச் செய்திருப்பதையும் காண முடிகின்றது. அவர்களையெல்லாம் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்பினால் இயேசுவைக் கடவுள் என்று நம்புவதில் ஓரளவாவது நியாயமிருக்கும்.

அற்புதம் நிகழ்த்தியது எப்படி?

அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருந்தே நாம் அளிப்போம்.

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 5:30

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

லூக்கா 11:20

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி,  கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?  என்பார்கள். அப்பொழுது நான்,  ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்  என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7:22,23

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.

மத்தேயு 7:21

இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.

மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப்படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை தாம் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.

இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?

அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார்.

மாற்கு 6:5,6

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொண்டிருக்க மாட்டார்கள். அதிக விசுவாசம் கொண்டிருப்பார்கள்.

ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவாகிறது.

அப்பொழுது வேதபாரகரிலும், பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே! உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக  இந்தப் பொல்லாத விபசார சந்ததியர் அடையாளத்தைத் தேடுகிறார்கள்  ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

மத்தேயு 12:38,39

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே பொருள்.

மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

மத்தேயு 9:8

அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

கெட்டவர்களும் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

அற்புதங்கள் நிகழ்த்துவதால் ஒருவன் கடவுளாக முடியாது. ஏன்? அற்புதம் செய்பவர்கள் நல்ல மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இதையும் பைபிள் தெளிவாகக் கூறுகின்றது.

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி உங்களுக்கு ஓரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளை கேளாதிருப்பீராக. உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

உபாகமம் 13:1-4

தீர்க்கதரிசி அல்லாதவரும் கூட அற்புதங்கள் செய்யலாம்; நாம் முழு இதயத்துடன் கர்த்தரை மட்டுமே வழிபட வேண்டும் என்று அறிவிக்கும் இந்த வசனங்கள் கிறித்தவர்களின் கண்களில் படவில்லையா? இதை அறிந்து கொண்டே இயேசுவைக் கடவுளாக்க முயன்றால் மேற்கண்ட வசனங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதே பொருள்.

இயேசுவும் கூட இதைத் தெளிவாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.

ஏனெனில் கள்ளக் கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.

மத்தேயு 24:24

அற்புதங்களை இயேசு மட்டுமின்றி இன்னும் பல நல்ல மனிதர்கள் செய்திருப்பதாக பைபிள் கூறுவதாலும்

நல்ல மனிதர்கள் மட்டுமின்றி மோசமான மனிதர்கள் கூட அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று பைபிள் கூறுவதாலும்

அற்புதங்கள் நிகழ்த்திய இயேசு கடவுளாக முடியாது என்பதை ஐயமற அறியலாம்.

இதன் பின்னரும் இயேசுவைக் கடவுள் என்று யாரேனும் நம்பினால் அவர் பைபிளையும் நம்பவில்லை; இயேசுவின் போதனையையும் மதிக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.

6. மரணித்த பின் உயிர்த்தெழுந்தால் கடவுளா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்  என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.

இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதை அணுகுவோம்.

மரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

ஒன்று மரணித்தல்

மற்றொன்று உயிர்த்தெழுதல்

இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள்! மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா?

யார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.

பாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்…

எசக்கியேல் 18:20

மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவம் செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது  என்பதை இந்த வசனம் கூறவில்லையா?

கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா…

எரேமியா 10:10

கடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. நிரந்தரமான உயிருள்ளவர்  என்ற தகுதியை மரணித்ததன் மூலம் இயேசு இழந்து விடுகிறாரே! இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா?

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?

ஏசாயா 40:28

கடவுளுக்குச் சோர்வோ, களைப்போ ஏற்படக் கூடாது! மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்? இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்?

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!

1 தீமோத்தேயு 1:17

கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.

இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.

கடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

பலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.

உயிர்த்தெழுந்ததால் கடவுளா?

இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம்.

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதை  இயேசுவின் சிலுவைப் பலி  என்ற நூலில் நாம் விளக்கியுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவில்லை.

ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்!

இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

யோவான் 20:17

என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே! எனக்கும், உங்களுக்கும் ஒரே கடவுள் தான்  என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது!

இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று  உங்களுக்குச் சமாதானம்  என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே  என்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்  புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா  என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும், தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்.

லூக்கா 24:36-43

உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்த்தெழுந்த பின்பும்  புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா  என்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவும் மனிதனின் இயல்பு தான். உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்தெழுந்த பின்பு சீடர்களும், வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே – கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே – இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.

மற்றவர்களும் உயிர்த்தெழுந்துள்ளனர்

மற்றொரு கோணத்திலும் இதைக் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே? அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்?

இதோ! பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்.

ஆதியாகமம் 5:24

விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான்.

எபிரேயர் 11:5

இயேசு மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான்.

கிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை? விளக்குவார்களா?

அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு…

இரண்டாம் ராஜாக்கள் 2:11,12

இயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்பட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால்  எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள்  என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா?

எலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும், இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும்  இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம்  என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.

7. பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?

இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும், கடவுளின் குமாரராகவும், கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.

லூக்கா 1:15

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக…

லூக்கா 1:67

இவ்விரு வசனங்களும் சகரியா, அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?

எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு…

லூக்கா 1:41

யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்,

அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்,

அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்

என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?

இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்.

மத்தேயு 4:1-10

இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.

யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாக மத்தேயு (3:16) கூறுகிறார்.

அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?

இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

மத்தேயு 10:20

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா?

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.

லூக்கா 2:25

இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

அப்போஸ்தலர் 5:32

அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 11:24

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு…

அப்போஸ்தலர் 6:5

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்!

இரண்டாம் தீமோத்தேயு 1:14

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்.

இரண்டாம் பேதுரு 1:21

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.

தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள், இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.

யாக்கோபு 1:13

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது.

மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால்,  இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்  என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.

பகுதி இரண்டு

கடவுளின் இலக்கணம்

கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.

1. காணப்படுதல் கடவுளின் தன்மை அன்று

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

யோவான் 1:18

 கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது  என்று இவ்வசனம் கூறுகிறது.

இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.

2. இரத்தமும் சதையும் கடவுளுக்குக் கிடையாது

 கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்  எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.

தேவன் ஆவியாக இருக்கிறார்.

யோவான் 4:24

இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா?

இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது.

இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார்.

அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் இவ்வாறே இருந்தார்.

ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது.

இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.

அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.

அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

லூக்கா 24:38-40

உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று எப்படி நம்ப முடியும்?

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

நீதிமொழிகள் 17:15

கெட்டவனை நல்லவன் என்றும், நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் கூறுகிறது.

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து  எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இடறலாயிருக்கிறாய். தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்  என்றார்.

மத்தேயு 16:23

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்

இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்

கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிஷேசங்களும் கூறுகின்றன.

இவ்வளவு மோசமான துன்மார்க்கனுக்கு இயேசு வழங்கிய அந்தஸ்து என்ன தெரியுமா?

பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும். பூகோலத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்றார்.

மத்தேயு 16:19

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்தும் ஐயமற அறியலாம்.

4. நிலையாமை கடவுளின் தன்மையன்று

கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.

கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார்.

சங்கீதம் 9:7

இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பினால் கூட அவர் பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.

5. கொல்லப்படுவது கடவுளின் தன்மை அன்று

கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.

உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே!

எசக்கியேல் 28:9

குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்த இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.

நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி….

அப்போஸ்தலர் 5:30

கொலை செய்யப்பட்ட காரணத்தால் தாம் கடவுள் இல்லை என்று இயேசு தெளிவாகக் காட்டிச் சென்ற பின் அவரைக் கடவுள் என்று கூறலாமா?

6. கடவுளுக்குத் துன்பமில்லை

 கடவுளுக்கு எந்தத் துன்பமும் ஏற்பட முடியாது. மற்றவர்களின் துன்பங்களை அவர் நீக்கக் கூடியவராக இருக்க வேண்டும்  எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.

நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

சங்கீதம் 34:19

இயேசு இந்த இலக்கணத்திற்கு மாறாகத் துன்பங்கள் பல அடைந்திருக்கிறார். அது மட்டுமின்றித் தம்மைத் துன்பங்களிலிருந்து காக்கும் படி கடவுளிடம் வேண்டுதலும் செய்திருக்கிறார்.

இப்பொழுது என் ஆத்மா கலங்குகிறது. நான் என்ன சொல்லுவேன். பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனா? ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.

யோவான் 12:27

சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து; என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும் படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல. உம்முடைய சித்தத்தின் படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார்.

மத்தேயு 26:39

அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து;

மத்தேயு 26:67

அவரைக் கட்டி; கொண்டு போய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள்.

மத்தேயு 27:2

அப்பொழுது, அவன் பாபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்துச் சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக் கொடுத்தான். அப்பொழுது தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டு போய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச் செய்து…

மத்தேயு 27:26-27

முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு, யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி, அவர் மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.

மத்தேயு 27:29-30

அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் சீட்டுப் போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது.

மத்தேயு 27:35

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு; ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு 27:46

இயேசு தமது வாழ்நாள் முழுவதும் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பதை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. மேலே நாம் சுட்டிக்காட்டியவை அவரது வாழ்வில் கடைசியாக பட்ட துன்பங்கள் மட்டுமே. மிகவும் கேவலமான முறையில் இயேசு நடத்தப்பட்டிருக்கிறார்.

என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று புலம்பும் அளவுக்கு அவரால் தாங்கிக் கொள்ள முடியாத பெருந்துன்பத்தை அவர் அடைந்திருப்பதை இதிலிருந்து அறியலாம்.

கடவுள் என்பவர் எந்தத் துன்பத்தையும் அடையக் கூடாது. அடைய மாட்டார் என்று பைபிளே கடவுளுக்கு இலக்கணம் சொல்லும் போது அதை மீறி துன்பத்திற்கு ஆளானவரைக் கடவுள் எனக் கூறுவது தகுமா? கிறித்தவர்கள் இதையும் சிந்திக்க வேண்டும்.

இதிலிருந்து இயேசு கடவுளல்லர் என்பது தெளிவாகவில்லையா? பைபிள் கூறும் கடவுளுக்குரிய இலக்கணத்தைக் கூடக் கிறித்தவர்கள் நம்ப வேண்டாமா?

7. கடவுள் தவறு செய்ய மாட்டார்

கடவுள் அனைத்து விஷயங்களிலும் நல்லதையே செய்ய வேண்டும். எந்தத் தவறும் செய்யக் கூடாது என்று பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.

கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர்…

முதலாம் நாளாகமம் 16:34

இந்த இலக்கணம் தம்மிடம் இல்லை என்று இயேசுவே மறுத்துள்ளார்.

அதற்கு இயேசு,  நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே  என்றார்.

மார்க்கு 10:18

8. கடவுள் அறியாமைக்கு அப்பாற்பட்டவர்

கடவுளுக்கு எதைப் பற்றியும் அறியாமை இருக்கக் கூடாது. அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதும் கூட அவருக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு பைபிள் கூறுகிறது.

தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால்…

முதலாம் ராஜாக்கள் 8:40

மனிதர்களின் இருதயங்களில் உள்ளதை அறிவது ஒரு புறமிருக்கட்டும்! வெளிப்படையான பல விஷயங்கள் கூட இயேசுவுக்குத் தெரியாமல் இருந்திருக்கின்றன.

அப்பொழுது இயேசு, என்னைத் தொட்டது யார் என்று கேட்டார்.

லூக்கா 8:45

காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்தி மரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார்; உடனே அத்தி மரம் பட்டுப் போயிற்று.

மத்தேயு 21:18-19

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:28

என்று இயேசு கூறினார்.

அந்தப் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அப்போது இயேசு அறியவில்லை.

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார். குமாரனும் அறியார்.

மார்க்கு 13:32

இப்படி ஏராளமான விஷயங்களை இயேசு அறிந்திருக்கவில்லை. பக்தர்களைக் காப்பது என்றால் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லையா? தன்னைத் தொட்டது யார் என்பதைக் கூட அறியாத ஒருவர் தங்களை இரட்சிப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது முறை தானா? சிந்திக்கட்டும்.

9. கடவுள் உறங்க மாட்டார்

இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை. தூங்குகிறதுமில்லை.

சங்கீதம் 121:4

அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத் தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.

மத்தேயு 8:24

இயேசு நன்றாக அயர்ந்து தூங்கினார் என்று இவ்வசனம் கூறுகிறது. கடவுள் உறங்கக் கூடாது என்ற இலக்கணத்துக்கு இது முரணாகவுள்ளது.

10. கடவுள் பாவியா?

இயேசு தம்மைச் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்திருக்கிறார்.

அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாத படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம் பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக் கூடாதாகில், உம்முடைய சித்தத்தின் படி ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார். அவர் திரும்ப வந்த போது, அவர்கள் மறுபடியும், நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரை மயக்கம் அடைந்திருந்தது. அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம் பண்ணினார்.

மத்தேயு 26:38-45

அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும், ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.

மார்க்கு 14:36

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

லூக்கா 22:44

ஆனாலும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்.

தேவனிடம் நல்லவர் செய்யக்கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் போதனை.

யோவான் 9:31

இயேசுவின் கோரிக்கை இறைவனால் ஏற்கப்படாதது எதைக் காட்டுகிறது?

இயேசு பாவம் செய்பவராக இருந்திருக்கிறார்; நல்லவராக இருக்கவில்லை என்று இந்த வசனத்திலிருந்து விளங்கவில்லையா?

11. கடவுள் போதை அடிமையா?

மதுபானம் அருந்துவதைப் பைபிள் கடுமையாகக் கண்டிக்கிறது. எல்லாத் தீமைகளும் மதுபானம் அருந்துவதால் தான் ஏற்படுகிறது எனவும் பைபிள் கூறுகிறது.

(பார்க்க: நீதிமொழிகள் 23:29-35)

இயேசுவோ மதுபானம் அருந்துபவராக இருந்தார் என்று பைபிள் அறிமுகம் செய்கிறது.

மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப் பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

மத்தேயு 11:19

இயேசு மதுபானம் அருந்துபவராக மட்டுமல்ல. அதை மிகவும் விரும்பக் கூடியவராக இருந்தார் என்பதும், இது மக்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தது என்பதும், அதை மக்கள் விமர்சனம் செய்தார்கள் என்பதும், அந்த விமர்சனம் இயேசுவின் காதுகளுக்கு எட்டியது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து தெரிகிறது.

மதுபானம் அருந்திய ஒருவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?

(இயேசு இறைவனின் தூதராக இருந்ததால் அவர் மதுபானம் அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என்று இஸ்லாம் அவரைக் கண்ணியப்படுத்துகிறது. பைபிள் அவரை மதுபானப் பிரியர் எனக் கூறுவதால் அதைச் சுட்டிக் காட்டுகிறோம்)

12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்

விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள்.

(பார்க்க : நீதிமொழிகள் 6:29)

ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது.

(பார்க்க : யோவான் 8:3-11)

அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை)

இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?

கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்?

13. கடவுள் முன்கோபியா?

சாந்த குணம் தான் புத்திசாலித்தனம்; முன்கோபம் மதியீனம் என்று பைபிள் கூறுகிறது.

(பார்க்க: நீதிமொழிகள் 14:29)

இயேசு இந்தப் போதனையை பல தடவைகள் மீறியிருக்கிறார்.

விரியன் பாம்புக் குட்டிகளே! நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்?

மத்தேயு 12:34

இதே கருத்து லூக்கா 3:7-லிலும் உள்ளது.

இந்தப் பொல்லாத விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்…

மத்தேயு 12:39

இதே கருத்து மத்தேயு 16:4-லிலும் உள்ளது.

அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

மத்தேயு 15:26

சர்ப்பங்களே – விரியன் பாம்புக் குட்டிகளே

மத்தேயு 23:33

எனத் திட்டினார்.

இப்படியெல்லாம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி சாந்த குணத்தை இயேசு இழந்திருப்பதாக பைபிள் கூறுகிறது. இதன் பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?

14. கடவுளுக்குப் பசி, தாகமா?

ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொறித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி…

லூக்கா 24:41-43

இயேசு… தாகமாயிருக்கிறேன் என்றார்.

யோவான் 19:28

ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் தான் அவர் சாப்பிட்டார் என்று நினைத்து விடக் கூடாது. நன்றாக விரும்பிச் சாப்பிடக் கூடியவராக இருந்தார்.

இயேசு மதுபானம் அருந்தியதாகக் கூறும் வசனத்தில் (மத்தேயு 11:19) போஜனப் பிரியர்  என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் அதிக விருப்பம் உள்ளவராக இயேசு இருந்திருக்கிறார். சாப்பிடுதல் கடவுளின் இலக்கணமாகுமா? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

15 கடவுள் மலஜலம் கழிப்பாரா?

வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்து போம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

மத்தேயு 15:17

வாயின் வழியாக எது உள்ளே போனாலும் அது வெளியே வந்தாக வேண்டும் என்பது இயேசுவே கூறுகிற நியதி. அவர் தனது வாயின் வழியாக பல உணவுகளையும், பானங்களையும் உள்ளே செலுத்தியுள்ளார். எனவே அவர் மல ஜலம் கழித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

கடவுள் மல ஜலம் கழிப்பாரா? என்பதைச் சிந்திப்பவர்கள் இயேசுவைக் கடவுள் என்று ஒருக்காலும் கூற மாட்டார்கள்.

16 கடவுள் நன்பரைக் கைவிடுவாரா?

இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய குருநாதர் யோவான் காவலில் வைக்கப்பட்டதை அறிந்தும் இயேசு அவரைக் காக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.

யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,

மத்தேயு 4:12

தனக்கு ஞானஸ்நானம் தந்த குருநாதராகிய யோவான் காவலில் வைக்கப்பட்டது தெரிந்ததும் அவருக்கு எந்த வகையிலும் உதவாமல் ஊரைவிட்டே வெளியேறி கலிலேயாவுக்குச் சென்றுவிட்டதாக என்று இவ்வசனம் கூறுகிறது.

குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஊரிலேயே இருந்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை.

17. கடவுளுக்கு அச்சமில்லை

கடவுள் அச்சத்திற்கு அப்பாற்பட்டவர்; யாருக்கும், எதற்கும் அஞ்சத் தேவையற்றவர். ஆனால் இயேசு அச்சமுற்று வரிப்பணம் வசூலிக்கிறவர்களிடம் வரி செலுத்தக் கூறியிருக்கிறார்.

அவன் வீட்டிற்குள் வந்த போது, அவன் பேசுவதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி  சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்?  என்று கேட்டார். அதற்குப் பேதுரு அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள்  என்றான். இயேசு அவனை நோக்கி,  அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு  என்றார்.

மத்தேயு 17:25-27

அந்நியரிடத்தில் தான் வரி வாங்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் இருந்த நியதிக்கு மாறாக குடிமகன்களிடமே அன்று வரி வாங்கியுள்ளனர். அதைத் தவறு என்று கண்டிக்கும் இயேசு வரி செலுத்தாவிட்டால் அதனால் இடைஞ்சல் ஏற்படும் என அஞ்சி வரி செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

தவறாக வரி வசூலித்தால் அந்த வரியைச் செலுத்த முடியாது எனக் கூறி அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க அவர் அஞ்சியிருக்கிறார்.

இயேசு, தாம் யூதர்களால் பிடிக்கப்படப் போவதை அறிந்து அச்சமும் துக்கமும் கொண்டிருந்தார்.

அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி, நான் ஜெபம் பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டு போய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது அவர், என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி விழித்திருங்கள் என்று சொல்லி…

மாற்கு 14:32-34

யூதர்கள் தம்மைக் கல்லால் எறியத் தேடிய போது இயேசு இருளைத் தேடினார்.

யோவான் 8:59-10:39

ஆகையால் இயேசு அதன் பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம் விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப் போய், அங்கே தம்முடைய சீஷருடனே கூடத் தங்கியிருந்தார்.

யோவான் 11:54

யூதர்கள் தன்னைத் தேடுகிறார்கள் என்பதை அறிந்தவுடன் இயேசுவுக்கு ஏற்பட்ட அச்சம் சாதாரணமானது அல்ல.

மரணத்துக்கு நிகரான துக்கத்தில் இருக்கிறேன் என்றார்.

நான் ஜெபம் பண்ணும் போது யாரும் என்னைப் பிடித்து விடாதிருக்கத் துணையாக இருங்கள் என்கிறார்.

தனக்குப் பாதுகாப்பாக தூங்காமல் விழித்திருக்குமாறு சீடர்களிடம் கெஞ்சுகிறார்.

இருளைத் தேடி ஓடி தலைமறைவாக இருந்துள்ளார்.

காட்டுக்குச் சென்று ஒளிந்திருக்கிறார்.

வேறொரு ஊருக்குச் சென்று அங்கே ஒளிந்து கொண்டார்

என்றெல்லாம் இவ்வசனங்கள் கூறுகின்றனவே? கடவுள் இப்படித் தான் அஞ்சி நடுங்குவாரா? மனிதனுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வது தான் கடவுளின் தன்மையா? என்னோடு இருங்கள் என்று மற்றவர்களிடம் கெஞ்சுவது தான் கடவுளின் இலக்கணமா?

18 கடவுள் பிசாசினால் சோதிக்கப்படுவாரா?

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.

மத்தேயு 4:1

19. கடவுள் சலிப்படையார்

இயேசு தமக்குத் தனிமையில்லை; ஓய்வில்லை என்று சலிப்புற்றிருக்கிறார்.

அதற்கு இயேசு நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

மத்தேயு 8:20

20. கடவுளுக்கு படிப்படியான வளர்ச்சி உண்டா?

பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர் மேல் இருந்தது.

லூக்கா 2:40

அவருக்குப் பன்னிரண்டு வயதான போது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்

லூக்கா 2:42

இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகரித்து, கடவுளுக்கும் மனுஷனுக்கும் பிரியராக மென்மேலும் வளர்ந்து வந்தார்.

லூக்கா 2:52

சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனை தன்மைகளும், பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயேசுவும் இருந்திருக்கிறார் என்பதை பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் காட்டவில்லையா?

21 கடவுள் தாய்க்குப் பிறப்பாரா?

அவள் தன் முதற் பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

லூக்கா 2:7

தாய் வயிற்றில் உருவாகிப் பிறந்தவர் கடவுளாக இருப்பது கிடக்கட்டும். தூய்மையானவராகக் கூட இருக்க முடியாது என்று பைபிள் கூறுகிறது.

ஸ்திரீயிடத்தில் பிறந்தவன் சுத்தமாய் இருப்பது எப்படி?

யோவான் 25:4

22 கடவுள் தாய்ப்பால் குடிப்பாரா?

அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக் கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும், நீர் பாலுண்ட முலைகளும், பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.

லூக்கா 11:27

23 கடவுள் விருத்த சேதனம் செய்யப்படுவாரா?

பிள்ளைக்கு விருத்த சேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

லூக்கா 2:21

24 கடவுள் தொழில் செய்வாரா?

இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.

மார்க்கு 6:3

25 கடவுள் பாவ அறிக்கையிடுவாரா?

தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

மத்தேயு 3:6

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யோவானிடம் மக்கள் ஞானஸ்நானம் பெற்றனர் என்பதை இவ்வசனம் கூறுகிறது.

மேலும் ஞானஸ்நானம் பெறுபவர் தான் பாவம் செய்திருப்பதை ஒப்புக் கொண்டு பாவ அறிக்கையிட வேண்டும் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

இந்த யோவானிடம் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றதாக பைபிள் கூறுகிறது.

அப்பொழுது யோவானால் ஞானஸ் நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

மத்தேயு 3:13

எனவே ஞானஸ்நானம் பெறும் போது இயேசுவும் பாவ அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பதை இரண்டு வசனங்களிலிருந்தும் நாம் அறியலாம்.

26 கடவுள் பிறருக்கு கால் கழுவி விடுவாரா?

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

யோவான் 13:5

27 கடவுள் நறுமணம் பூசிக் கொள்ள ஆசைப்படுவாரா?

ஒரு ஸ்திரீ விலையேறப் பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக் கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜன பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து  இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று தரித்திரருக்கு கொடுக்கலாமே  என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி : நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

மத்தேயு 26:7-10

28 கடவுளுக்கு மோசமான பரம்பரையா?

வேசிப் பிள்ளைகள், விபச்சாரச் சந்ததியினர் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் கூறுகிறது.

உபகாமம் 23:2,3

விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் பைபிள் கூறுகிறது.

தாமார்

தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.

அப்பொழுது  உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?  சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நேக்கி: வழியண்டை நீரூற்றுக்கள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டு போனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்ற பின்பு  உன் மருமகளாகிய தாமார் வேசித் தனம் பண்ணினாள், அந்த வேசித் தனத்தினால் கர்ப்பவதியுமானாள்  என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா:  அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்  என்றான். அவள் வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்த போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிற போது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறி வந்ததென்ன, இந்த மீறுதல் உன் மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

ஆதியாகமம் 38:13-29

பைபிளின் மேற்கண்ட வசனத்தில் தாமார் என்ற பெண்ணைப் பற்றிக் கூறப்படுகிறது. அவன் தெரிந்து கொண்டே தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து அதன் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மாமனாரிடம் வஞ்சகமாக அடைமானம் பெற்றுக் கொண்டவள் என்பதும் தெரிகின்றது.

ஒழுக்கம் கெட்டவள் என்று பைபிள் அறிமுகப்படுத்தும் தாமார்  என்பவள் வழியில் தான் இயேசு பிறந்தார் எனவும் பைபிள் கூறுகிறது.

மத்தேயுவின் முதல் அதிகாரத்தில் 1 முதல் 16 வரை இயேசுவின் பரம்பரைப் பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றொன்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;

ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசோக்கியாவைப் பெற்றான்;

எசோக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போன பின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்திலேல் சொரொபாபேலைப் பெற்றான்;

சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோதைப் பெற்றான்;

ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆதீமைப் பெற்றான்; ஆதீம் எலியூதைப் பெற்றான்;

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.

மத்தேயு 1:1-16

இதில் மூன்றாவது வசனத்தைப் பாருங்கள்!

தாமார் என்பவள் மாமனாருடன் விபச்சாரம் செய்தாலும் அவள் விபச்சாரம் செய்வதற்கு முன் கணவன் மூலம் பிள்ளை பெற்றிருக்கலாம் அல்லவா? அந்தப் பிள்ளையின் வழித் தோன்றலாக இயேசு பிறந்திருக்கலாம் அல்லவா? என்றெல்லாம் நாம் நல்லெண்ணம் வைக்க நினைத்தாலும் பைபிள் அதற்கு குறுக்கே நிற்கிறது.

ஏனெனில் தாமார் தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து எந்தப் பிள்ளையைப் பெற்றாலோ அந்தப் பிள்ளையும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

தாமார் விபச்சாரம் செய்ததைக் கூறும் வசனத்தில் விபச்சாரத்தில் பிறந்த மகனுக்கு பாரேஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாரேஸ் வழியில் தான் இயேசு பிறந்தார் என்று மத்தேயுவின் பரம்பரைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

மத்தேயு மூன்றாம் வசனத்தில் இவரது பெயர் கூறப்பட்டுள்ளது.

விபச்சாரச் சந்ததியினர் கடவுளை நெருங்க முடியாது என்று ஒரு பக்கம் பைபிள் கூறுகிறது.

மறுபக்கம் இயேசு விபச்சாரச் சந்ததிகளின் வழித்தோன்றலாக வந்தவர் எனவும் கூறுகிறது.

கடவுளுக்கு மகன் இருக்க முடியாது என்பதை மறந்து விட்டு மகன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மாமனாரும், மருமகளும் கூடி விபச்சாரம் செய்து அதன் மூலம் பிறந்த சந்ததியின் வழித்தோன்றலில் தானா தனது மகனைக் கடவுள் தேர்வு செய்வார்? இதைக் கூட கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

உரியாவின் மனைவி

மேலும் அதே வம்சப் பட்டியலில்  தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான்.

மத்தேயு 1:6

என்று கூறுகிறது.

இன்னொருவன் மனைவி மூலம் தாவீது ராஜா பெற்ற சாலமோன் வழியாக இயேசுவின் வம்சம் தொடர்வதாக பைபிள் கூறுகிறது.

ராகாப்

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.

மத்தேயு 1:5

இயேசுவின் வம்சப் பட்டியலில் இடம் பெறும் இந்த ராகாப் யார்?

அவர்கள் போய் ராகாப் என்னும் பெயர் கொண்ட வேசியின் வீட்டிக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

யோசுவா 2:1

இந்த விபச்சாரியின் வழியில் தான் இயேசு பிறந்ததாக பைபிள் கூறுகிறது.

ரூத்

போவாஸ் ஒபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்.

மத்தேயு 1:5

இயேசுவின் பாரம்பர்யப் பட்டியலில் இடம் பெறும் ரூத் என்பவள் யார்?

அவளும் தகாத நடத்தையுடயவள் என்று ரூத் 1:4, 4:10 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

கடவுள் எந்தப் பரம்பரை தமது சபைக்கு வரலாகாது என்று கூறினாரோ அந்தப் பரம்பரையிலிருந்து தான் தனக்கு மகனைத் தேர்வு செய்வாரா?

பைபிள் கூறும் இயேசுவின் பாரம்பர்யம், நடத்தை, அவரது பலவீனங்கள் இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது இயேசு நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு வர இயலாது.

இதன் பின்னரும் கிறித்தவர்கள் அவரைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கூறினால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை பைபிள் வசனங்களையும் மறுக்கிறார்கள் என்றே பொருள்.

கடவுளிடம் இருக்கக் கூடாத பலவீனங்கள்!

இயேசுவிடம் காணப்பட்ட பலவீனங்கள் அனைத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்து பாருங்கள்! இத்தனை பலவீனங்களையும் கொண்டிருந்த ஒருவர் கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க இயலுமா? என்றும் சிந்தியுங்கள்!

* இயேசு கண்ணீர் விட்டுக் கலங்கி, துக்கங் கொண்டிருந்தார்.

* இயேசுவுக்குத் தாகம் எடுத்திருக்கிறது.

* இயேசு சாப்பிட்டிருக்கிறார்.

* இயேசு பயந்திருக்கிறார்.

* இயேசு கவலைப்பட்டிருக்கிறார்.

* இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார்.

* குருவைக் கைவிட்டிருக்கிறார்

* மிகவும் சலிப்படைந்திருக்கிறார்.

* மதுபானம் அருந்தியிருக்கிறார்.

* மலஜலம் கழித்திருக்கிறார்.

* அரசனுக்குப் பயந்திருக்கிறார்.

* மோசமான ஆட்சியாளருக்குப் பயந்து கொண்டு வரி செலுத்தி இருக்கிறார்.

* பலரை மோசமான முறையில் திட்டியிருக்கிறார்.

* விருத்த சேதனம் செய்யப்பட்டிருக்கிறார்.

* தாய்ப்பால் குடித்திருக்கிறார்.

* தொழில் செய்திருக்கிறார்.

* மனிதனாகவே வளர்ந்தார்.

* பாவ அறிக்கையிட்டிருக்கிறார்.

* பிறருக்கு கால் கழுவி விட்டிருக்கிறார்.

* ஓடி ஒளிந்திருக்கிறார்.

* நறுமணம் பூசிக் கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்.

* துன்புறுத்தப்பட்டுள்ளார்.

* அவரது முகத்தில் துப்பியுள்ளனர்.

* தலையில் குட்டி கன்னத்தில் அறைந்துள்ளனர்.

* வாரினால் அடிக்கப்பட்டார்.

* முள் முடியைத் தலையில் சுமந்தார். * அவரை நிர்வாணப்படுத்தியுள்ளனர்.

* அவர் வேதனை தாளாமல் கத்தியிருக்கிறார்.

சாதாரண, சராசரி மனிதனுக்கு உள்ள அத்தனை பலவீனங்களும் இயேசுவிடம் இருந்துள்ளன. மனிதர்கள் எப்படிப் பலவீனங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்களோ அப்படித் தான் இயசுவும் இருந்திருக்கிறார் என்பதைப் பைபிளின் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறவில்லையா?

இவ்வளவு பலவீனங்களைக் கொண்ட ஒருவரைக் கடவுள் என்று நம்ப, கிறித்தவர்கள் வெட்கப்பட வேண்டாமா? தன்னையே காத்துக் கொள்ள முடியாதவர் தங்களைக் காப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது விவேகமாகுமா?

கடவுள் இவ்வளவு பலவீனங்கள் உள்ளவரைத் தான் தனக்கு மகனாக தேர்வு செய்வாரா?

கடவுளின் மகன் என்றால் சராசரி மனிதர்களின் அத்தனை பலவீனங்களும் அவரிடம் இருந்திருக்குமா?

மனிதர்களையும், இயேசுவையும் யார் படைத்தானோ – இயேசு எவனிடம் தமது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தாரோ அந்த ஒரே கடவுளிடம் தான் அனைவரும் திரும்ப வேண்டும்! ஏனெனில் அவனிடம் தான் இத்தகைய பலவீனங்கள் ஏதும் கிடையாது.

பகுதி மூன்று

கர்த்தரின் அறிவுரைகள்

இயேசுவைப் பற்றி எடுக்கப்படும் முடிவாகட்டும்! கிறித்தவர்கள் மதம் சம்மந்தப்பட்ட சட்டங்களைத் தீர்மானிப்பதாகட்டும்! கிறித்தவர்கள் வேதமாக நம்புகின்ற பைபிளின் போதனைக்கு உட்பட்டதாகவே அது இருக்க வேண்டும். பைபிளுக்கு முரணாக எடுக்கப்படும் எந்த முடிவாக இருந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும்.

இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ நம்புவதற்கு கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் தவறானவை என்பதை பைபிளிலிருந்தே நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

முடிவாகச் சில போதனைகளை முன் வைக்கிறோம். கடவுள் ஒருவர் தான் என்பதை அழுத்தமாகச் சொல்லும் அந்தப் போதனைகளைப் பைபிளிலிருந்தே முன் வைக்கிறோம்.

கடவுள் யார்?

கடவுள் தன்னுடைய அதிகாரத்தை எவருக்கேனும் வழங்கியிருக்கிறாரா?

மோசேயின் உபாகமம்

ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து

உபகாமம் 4:39

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்கிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி

உபாகமம் 6:4-7

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனங்காண்கிறவனாகிலும் எழும்பி நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும், அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து அவரைப் பற்றிக் கொள்வீர்களாக.

உபாகமம் 13:1-4

அங்கே காணாமலும், கேளாமலும், சாப்பிடாமலும், முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள். அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவானகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும் போது, அவரைக் கண்டடைவாய்.

உபாகமம் 4:28-29

மோசே எனும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தரால் அருளப்பட்டதாக கிறித்தவர்கள் நம்புகின்ற உபாகமத்தில் காணப்படும் ஓரிறைக் கொள்கைப் பிரகடனம் இவை.

இவைகளை கிறித்தவர்கள் அலட்சியம் செய்தால் பைபிளில் அவர்களுக்கே நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு என்ன பொருள்? பரலோக ராஜ்ஜியத்தில், இந்தப் போதனைகளை மீறியதற்காக கர்த்தர் விசாரணை செய்தால் கிறித்தவர்கள் என்ன பதில் கூறுவீர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!

ஏசாயாவிடம் கர்த்தர் உரைத்தவை

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே. என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

ஏசாயா 44:6

எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 43:10-12

வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 45:18

தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து இரட்சிக்க மாட்டாத தேவனைத் தொழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனை பண்ணுங்கள். இதைப் பூர்வ கால முதற்கொண்டு விளங்கப் பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும், இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத் தவிர வேறொருவரும் இல்லை. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே! என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும். நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறேன். இந்த ரீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

ஏசாயா 45:20-23

விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணார். அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? இதோ அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள். தொழிலாளிகள் நரஜீவன்கள் தானே; அவர்கள் எல்லோரும் கூடி வந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.

ஏசாயா 44:9-11

நானே கர்த்தர். வேறொருவர் இல்லை. என்னைத் தவிர தேவன் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

ஏசாயா 45:5,6

நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி….

ஏசாயா 46:9,10

இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான். தட்டான் பொன் தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச் சங்கிலிகளைப் பொருந்த வைக்கிறான்.

ஏசாயா 40:18,19

இவை யாவும் ஏசாயா எனும் தீர்க்கதரிசியிடம் கடவுள் உரைத்தவை.

சிலுவையையும், இயேசுவையும், அவரது தாயாரையும் உருவங்களாக்கி அவற்றைக் கடவுள்கள் என்று எண்ணி வழிபட்டு, பைபிளின் இந்தப் போதனைகளைப் புறக்கணிப்போர் தங்களைக் கிறித்தவர்கள் என்று கூறிக் கொள்ள அருகதை உள்ளவர்கள் தாமா?

பைபிளைத் தூக்கி எறிந்து விட்டு தங்கள் பாதிரிமார்கள் கூறிய திரித்துவம் (முக்கடவுள் கொள்கை) எனும் கொள்கையை ஏற்கலாமா?

பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அது வலியுறுத்தும் ஓரிறைக் கொள்கையின் பால், அந்தக் கொள்கையை அழுத்தமாகப் போதிக்கும் இஸ்லாத்தின் பால் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதை உணருங்கள்!

உபாகமத்திலும், ஏசாயாவிலும் கூறப்படும் இந்தக் கொள்கைப் பிரகடனத்தை ஒன்றுக்குப் பல முறை மனதில் அசை போட்டுப் பாருங்கள்.

வானிலும், பூமியிலும் கடவுள் ஒருவரே! அவருக்கு நிகரில்லை. இதை எல்லா நிலைகளிலும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அற்புதங்களைக் கண்டு யாரையும் கடவுளர்களாக எண்ணி விட வேண்டாம். கிறித்தவர்கள் வணங்கும் இயேசுவின் சிலையும், சிலுவையும் பார்க்கவும், கேட்கவும், புசிக்கவும், முகரவும் சக்தியற்றவை.

கர்த்தருக்கு முன்னரோ, பின்னரோ எந்தத் தெய்வமும் இல்லை.

அனைவரையும் இரட்சிப்பவர் அவர் மட்டுமே.

முழங்காலை அவருக்கு முன்னால் மட்டுமே மண்டியிடச் செய்ய வேண்டும்

என்றெல்லாம் தெளிவாகப் பிரகடனம் செய்யும் இந்த வசனங்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி எனும் முக்கடவுள் கொள்கையைத் தகர்க்கவில்லையா? இயேசு உள்ளிட்ட யாரும் கடவுளுக்குக் குமாரர்களாக இருக்க முடியாது என்பதை அறிவுறுத்தவில்லையா?

இவற்றையெல்லாம் சிந்தித்து உண்மையான மார்க்கத்தின் பால் கிறித்தவர்கள் திரும்ப வேண்டாமா?

கிறித்தவக் குருமார்கள் புதிதாகக் கண்டுபிடித்த முக்கடவுள் கொள்கை தவறானது. அதற்கும், பைபிளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றும் சில பைபிள் வசனங்களைப் பாருங்கள்!

மோசேவின் லேவியராகமம்

விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 19:4

நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 26:1

மோசே தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாகக் கிறித்தவர்கள் நம்பும் லேவியராகமத்தின் வசனங்கள் இவை.

யாத்திராகமத்தில் கர்த்தர் உரைத்தவை.

உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

யாத்திராகமம் 20:2-5

நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும் அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும் அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக் கடவீர்கள்!

யாத்திராகமம் 23:24,25

விக்கிரகத்தை உடைத்துப் போடுமாறு கடவுள் இட்ட கட்டளைக்கு தமது செயல் மாற்றமாக இருப்பது கிறித்தவ நண்பர்களுக்குத் தெரியவில்லையா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இன்னும் பல ஆகமங்களில் ஓரிறைக் கொள்கை எவ்வளவு வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்!

ஏரேமியாவுக்கு கர்த்தர் உரைத்தவை

ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள். அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப் போல நெட்டையாய் நிற்கிறது. அவைகள் பேச மாட்டாதவைகள். அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்பட வேண்டும். அவைகளுக்குப் பயப்பட வேண்டாம்; அவைகள் தீமை செய்யக் கூடாது, நன்மை செய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தாவே உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

ஏரேமியா 10:3-6

சங்கீதத்தில் தாவீது ராஜா உரைத்தவை

ஆகாய மண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

சங்கீதம் 89:6

ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

சங்கீதம் 86:8

நீர் ஒருவரே தேவன்.

சங்ககீதம் 86:10

நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

சங்கீதம் 113:5,6

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே! மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை.

முதலாம் ராஜாக்கள் 8:23

பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் வசனங்கள் இவை!

ஆரம்பத்தில் ஒரே கடவுளாகிய கர்த்தரை வணங்கும் வழக்கமே கிறித்தவர்களிடம் இருந்து வந்தது. பின்னர் மக்களாக உருவாக்கிக் கொண்டவை தாம் சிலுவை, இயேசு, மேரி ஆகிய உருவங்கள் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நாம் விசாரிக்கப்படுவோம் என்பதை நம்புகின்ற எந்தக் கிறித்தவரும் இந்த முக்கடவுள் கொள்கைக்குப் பலியாக மாட்டார்கள்.

இனி புதிய ஏற்பாட்டில் காணப்படும் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனத்தைப் பாருங்கள்!

இயேசுவின் ஏகத்துவக் கொள்கைப் பிரகடனம்

அப்பொழுது இயேசு:  அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே  என்றார்.

மத்தேயு 4:10

ஒரு கடவுளைத் தவிர மற்றவர்களை வணங்குவோர் சாத்தான்கள் என்பது இயேசுவின் இந்த வார்த்தையிலிருந்து தெரிகின்றது.

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்.

மத்தேயு 6:24

இரண்டு எஜமானர்களுக்கே ஊழியஞ் செய்ய முடியாது என்று இயேசு கூறியிருக்க கிறித்தவர்கள் இரண்டு அல்லது மூன்று கடவுள்களுக்கு உழியஞ் செய்ய முடியும் என்று நம்பலாமா?

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருகாலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால் நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்கிறவன் எவனோ அவனே கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின் படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதின போது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

மத்தேயு 7:21-27

பாமரர்களுக்கும் விளங்கும் வகையில் இயேசு செய்த இந்த போதனையைக் கிறித்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இயேசுவே என்றழைத்து பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க இயலாமல் போவதைத் தான் அவர்கள் விரும்புகிறார்களா? குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர் கேட்கிறார்கள் என்று கூறி இயேசுவைக் கடவுளாக்குவோர் அக்கிரமக்காரர், ஏமாற்றுக்காரர் என்று இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருப்பதை அவர்கள் உணர மாட்டார்களா?

ஒரே கடவுளாகிய கர்த்தரை – கர்த்தரை மட்டுமே – வணங்கி, வழிபட்டு கற்பாறையின் மீது தங்கள் கட்டிடத்தை எழுப்ப வேண்டாமா? ஆண்டவரே! என்று இயேசுவை அழைத்து மணல் மீது வீடு கட்டுவது மதியீனமாக அவர்களுக்குத் தோன்றவில்லையா?

பெற்றோர்களும், மதகுருமார்களும் இயேசுவைப் பற்றியும், அவர் போதித்த இலட்சியம் பற்றியும் தவறாகத் தங்களுக்குப் போதித்துத் திசை திருப்பி விட்டனர் என்பது இந்த வசனங்களிலிருந்து கிறித்தவர்களுக்கு உண்மையாகவே தெரியவில்லையா? சிந்தித்துப் பாருங்கள்.

மதபோதகர்கள் குறித்து இயேசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றிருக்கிறார். அந்த எச்சரிக்கைகளை கிறித்தவர்கள் விளங்கினால் குருட்டுப் பக்தியிலிருந்து விடுபடுவார்கள்.

கீழ்க்காணும் வசனங்கள் கிறித்தவ மத குருமார்கள் நம்பிக்கைக்கு உரியவர்களலல்லர் என்பதை ஐயத்திற்கிடமின்றி விளக்கும்.

மாயக்கார வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும் படி சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:15

நற்செய்தி கூட்டங்கள் நடத்துவோரைக் குறித்த எச்சரிக்கையாக இது கிறித்தவர்களுக்குத் தோன்றவில்லையா?

மாயக்கார வேதபாரகரரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாத படி பரலோக ராஜ்ஜியத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள். நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை. பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.

மத்தேயு 23:13

ஆண்டவரே! என்று இயேசுவை அழைப்பவருக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் இடமில்லை என்று இயேசு கூறிய பிறகும் இயேசுவைக் கடவுளாக்கும் கிறித்தவ மதகுருமார்கள் பரலோக ராஜ்ஜியத்தைப் பூட்டிப் போடுகிறார்களா? இல்லையா? என்பதைச் சிந்தியுங்கள்!

தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காண வேண்டுமென்று செய்கிறார்கள். தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கி தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ ரபீ என்று அழைக்கப்படுவதை விரும்புகிறீர்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள். கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலேகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

மத்தேயு 23:5-10

யாரையும் தந்தை என்று அழைக்கக் கூடாது என்று இயேசு தடுத்திருந்தும் மதகுருமார்கள் ஃபாதர் (தந்தை) என்று தாங்கள் அழைக்கப்படும் நிலையை உருவாக்கி விட்டார்களே! அவர்களையா கிறித்தவர்கள் நம்புகிறீர்கள்?

நீண்ட வஸ்திரங்களை அணிந்து, தங்களுக்குத் தனி மரியாதையை விரும்பக் கூடாது என்று இயேசு கட்டளையிட்டிருந்தும் அதைப் பகிரங்கமாக மீறித் தனி மரியாதையை எதிர்பார்ப்பவர்களையா கிறித்தவர்கள் நம்புகிறீர்கள்?

மதகுருமார்கள் இயேசுவின் போதனைகளுக்கு மாற்றமான வழியைக் கிறித்தவர்கள் மீது திணித்து விட்டனர் என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா என்ன?

இந்த மத குருமார்களின் வழிகாட்டுதலை ஒதுக்கித் தள்ளிவிட்டு இயேசுவின் போதனைகளின் பால் கிறித்தவர்கள் மனம் திரும்பட்டும்!

இயேசு கூறுவதை இன்னும் கேளுங்கள்!

அந்த நாளையும், அந்த நாழிகைகயையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலிருக்கிற தூதர்களும் அறியார்கள். குமாரனும் கூட அறியார்.

மத்தேயு 26:36

ஒரே கடவுளாகிய கர்த்தரையே வழிபட வேண்டுமென்று இயேசுவின் இந்தக் கூற்று உங்களைத் தூண்டவில்லையா?

போதகரே! நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை.

மத்தேயு 22:36-38

இந்தப் பிரதானமான கொள்கை கிறித்தவர்களிடம் இன்றைக்கு இருக்கிறதா? பிரதானமான இந்தக் கொள்கையைக் கைவிட்டு விட்டு எந்த அடிப்படையில் தங்களைக் கிறித்தவர்கள் என்கிறார்கள்?

அப்பொழுது செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு, உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:20-23

ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்று மக்களுக்குப் போதிக்கவே இயேசு வந்திருக்கிறார். தம்மைக் கடவுள் என்று வாதிட வரவில்லை. சர்வ அதிகாரமும் ஏக இரட்சகனாகிய கர்த்தருக்கு மட்டுமே உரியது என்று போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதை இந்த வசனங்களிலிருந்து அறியலாம்.

இவ்வளவு தெளிவான போதனைகளுக்குப் பிறகு கிறித்தவர்கள் எங்கே போகிறார்கள்?

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

மத்தேயு 27:46

மரணிக்கும்(?) நேரத்தில் கூட இயேசு கடவுளை அழைத்திருக்கிறார் என்பது எதைக் காட்டுகிறது. இயேசு கூட தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாது; அது கடவுளுக்கு மட்டுமே உரிய தனியகதிகாரம் என்பதைக் காட்டவில்லையா?

மத்தேயுவின் சுவிசேஷத்தில் காணப்படும் இயேசுவின் சில போதனைகளை இது வரை கண்டோம்.

ஏனைய சுவிசேஷங்களிலும் இயேசு இந்தக் கொள்கையைப் போதித்ததாகக் காணப்படுகின்றது. அவற்றையும் பாருங்கள்.

பிரதானமான கற்பனை எதுவென்று இயேசுவிடம் கேட்கப்பட்ட போது முழு ஆத்மாவுடன் கர்த்தரிடம் அன்பு கூர வேண்டும்

(மார்க்கு 12:29,30)

இயேசு மரணிக்கும் போது என் கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கூறிய விபரம் மார்க்கு 15:34-லிலும் கூறப்படுகிறது.

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதாவைத் தவிர யாரும் அறிய முடியாது என்று இயேசு கூறிய விபரம் மார்க்கு 13:32-லிலும் கூறப்பட்டுள்ளது.

என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்கிறேன் என்றார்.

(யோவான் 8:26)

நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

யோவான் 8:28

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால் அவனை நான் நியாயந் தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன்.

யோவான் 12:47

இவை யாவும் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களும் கூறும் உண்மை. இவற்றுக்கு முரணாக முக்கடவுள் கொள்கையை உருவாக்கியவர் பவுல் என்பதை அனைவரும் அறிவர். அவர் கூட தன்னையுமறியாமல் அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

பவுல் கூறுவது

ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக் கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக் கூடாதவருமாயிருக்கிறார்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமேன்.

தீமோத்தேயு 6:16

இயேசு கடவுளோ, கடவுளின் குமாரரோ இல்லை என்பதற்கு இதை விட சான்றுகள் தேவையில்லை. பைபிளை நம்பும் மக்கள் இயேசு கடவுளின் குமாரன் என்ற கொள்கையை ஒருக்காலும் நம்ப மாட்டார்கள். பைபிளைத் தூக்கி எறிந்து விட்டுத் தான் அதை நம்ப முடியும்.

கிறித்தவர்கள் பைபிளையும், கர்த்தரின் வார்த்தைகளையும், இயேசுவின் போதனைகளையும் தூக்கி எறிந்து விட்டு முக்கடவுள் கொள்கையில் இருக்கப் போகிறார்களா? முக்கடவுள் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு கர்த்தரின் கூற்றுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மதிப்பளிக்கப் போகிறார்களா?

எந்த முடிவுக்கு வரப் போகிறார்கள்?

இயேசு தம்மைக் கடவுள் தன்மை பெற்றவர் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கூறியதில்லை. மாறாகக் கடவுளுக்கு அஞ்சி நடந்த சிறந்த மனிதராகவும் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்தோதும் தூதராகவும் இருந்தார் என்பதைப் பைபிளின் வசனங்களை மேற்கோள்காட்டி நாம் நிரூபித்தோம்.

பகுதி நான்கு

இயேசுவைப் பற்றி திருக்குர்ஆன்

கிறித்தவ நண்பர்களே! இயேசு எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தாரோ அந்த ஓரிறைக் கொள்கை உங்கள் மத குருமார்களின் தவறான வழிகாட்டுதலின் காரணமாக, முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவக் கொள்கைக்கும் எந்த விதச் சம்மந்தமுமில்லாத அளவுக்கு இயேசுவும் புறக்கணிக்கப்பட்டு விட்டார். நாம் இது வரை எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்களிலிருந்தே இதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அப்படியானால் இயேசு போதித்த அந்தக் கொள்கையை எங்கே தேடுவது? எப்படிப் பின்பற்றுவது?

கிறித்தவ மார்க்கத்தின் எந்தப் பிரிவினரிடமும் இயேசு வலியுறுத்திப் பிரச்சாரம் செய்த ஓரிறைக் கொள்கையை நிச்சயமாக நீங்கள் காண முடியாது.

 ஏலீ ஏலீ லாமா சபக்தானி – என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?  என்று இயேசு இறுதிக் கட்டத்தில் சப்தமிட்டதாகப் பைபிள் கூறுகிறது.

அதை உறுதியாக நீங்கள் நம்புகிறீர்கள்.

 நான் தேவனல்லன்  என்றும்  என்னால் என்னைக் காத்துக் கொள்ள இயலாது  என்றும்

என்னைப் படைத்த தேவனின் சித்தப்படியே யாவும் நடக்கும்  என்றும் இந்த வாக்கு மூலத்தின் மூலம் இயேசு தெளிவுபடுத்தி விட்டார்.

(உங்கள் நம்பிக்கைப்படி) இயேசுவின் கடைசி மூச்சு அடங்கிய நேரத்திலும் இயேசு வலியுறுத்திய இந்தக் கொள்கையை நீங்கள் காற்றில் பறக்க விட்டு விட்டீர்கள்.

இயேசுவின் உயிர் மூச்சாகத் திகழ்ந்த இந்த ஓரிறைக் கொள்கையை அவர் போதித்த அதே வடிவில் நீங்கள் பின்பற்ற விரும்பினால் இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

ஆம்! இஸ்லாத்தின் வேத நூலாகிய திருக்குர்ஆன் இயேசு போதித்த அதே கொள்கையை மிகத் தெளிவாக வழிமொழிகின்றது. யூதர்கள் இயேசுவின் மீதும், அவரது தாயார் மேரியின் மீதும் சுமத்திய களங்கத்தைக் குர்ஆன் முழுமையாகத் துடைத்தெறிகின்றது.

இயேசுவுக்குக் கடவுள் தன்மை இருக்கவில்லை என்பதைக் கூறும் அதே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புக்களையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

முஹம்மத் நபியவர்கள் எப்படி தேவனின் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க வந்த தூதராக இருந்தார்களோ அது போலவே இயேசுவும் தூதராக இருந்தார் என்பதையும் திருக்குர்ஆன் விளக்குகின்றது.

கிறித்தவ நண்பர்களே! உங்கள் சிந்தனையைத் தூண்டும் வகையில் இயேசுவைக் குறித்த திருக்குர்ஆனின் வசனங்கள் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறோம்.

அன்னை மேரியைப் பற்றி

அவர்கள் (யூதர்கள்) தமது உடன்படிக்கையை முறித்ததாலும், இறைவனின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி தூதர்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது இறைவன் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர். அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மேரியின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும்,  அல்லாஹ்வின் தூதரான மேரியின் மகன் கிறிஸ்து எனும் இயேசுவை நாங்களே கொன்றோம்  என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.)

திருக்குர்ஆன் 4:155-156

திருக்குர்ஆன், அன்னை மேரியின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கி உரிய முறையில் கண்ணியப்படுத்துகின்றது.

தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம். அவரையும், அவரது புதல்வரையும் அகிலத்தாருக்கு சான்றாக்கினோம்.

திருகுர்ஆன் 21:91

மேரியின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம். செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம்.

திருக்குர்ஆன் 23:50

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மேரியையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 66:11, 12

இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்  என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! அவர் ஈன்றெடுத்த போது,  என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே  எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான்.  ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மேரி என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்  எனவும் அவர் கூறினார். அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு,  மேரியே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?  என்று கேட்டார்.  இது இறைவனிடமிருந்து கிடைத்தது. இறைவன் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறார்  என்று (மேரி) கூறினார்.

திருக்குர்ஆன் 3:35 36, 37

மேரியே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!  மேரியே! உனது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!  (என்றும் வானவர்கள் கூறினர்.)

திருக்குர்ஆன் 3:42, 43

இயேசுவைப் பற்றி

அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

திருக்குர்ஆன் 4:155-159

யூதர்களால் இயேசு கொல்லப்படாமல் இறைவனளவில் உயர்த்திக் கொள்ளப்பட்டார் என்பதைக் கூறி, திருக்குர்ஆன் அவரை உரிய முறையில் கண்ணியப்படுத்துகின்றது.

இயேசு தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது  ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே இறைவனை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!  எனக் கூறினார்.  அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர்வழி (என்றும் கூறினார்.)

திருக்குர்ஆன் 43:63, 64

மேரியே! (மேரியே!) இறைவன் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மேரியின் மகனான இயேசு எனும் கிறிஸ்து என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்  என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!  அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார்  (என்றும் கூறினர்)  இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை ஏற்படும்?  என்று அவர் கேட்டார்.  தான் நாடியதை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் ஆகு என்பான். உடனே அது ஆகி விடும்  என்று இறைவன் கூறினான். அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக் கொடுப்பான். இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.)  உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; இறைவனின் அனுமதியுடன் அது பறவையாக ஆகும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது  (என்றார்) எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே இறைவனை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்  (எனவும் கூறினார்). அவர்களிடம் (இறை) மறுப்பை இயேசு உணர்ந்த போது  இறைவனுக்காக எனக்கு உதவுவோர் யார்?  என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள்,  நாங்கள் இறைவனின் உதவியாளர்கள். இறைவனை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்!  என்றனர். எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!  (எனவும் கூறினர்) (இயேசுவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். இறைவனும் சூழ்ச்சி செய்தான். இறைவன் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.

இயேசுவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும், என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை கியாமத் நாள் வரை (என்னை) மறுப்போரை விட மேல் நிலையில் வைப்பவனாகவும் இருக்கிறேன்  என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக! பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். (என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.

திருக்குர்ஆன் 3:45-56

அல்லாஹ்விடம் இயேசுவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து ஆகு  என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

திருக்குர்ஆன் 3:59

மேரியின் மகன் இயேசுவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?  என்று சீடர்கள் கூறிய போது,  நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!  என்று அவர் கூறினார். அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, இதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்  என்று அவர்கள் கூறினர்.  எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் அது இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்  என்று மேரியின் மகன் இயேசு கூறினார்.  உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்  என்று அல்லாஹ் கூறினான்.

திருக்குர்ஆன் 5:112-115

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்  என்று மேரியின் மகன் இயேசு கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது  இது தெளிவான சூனியம்  எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 61:6

நம்பிக்கை கொண்டோரே! மேரியின் மகன் இயேசு சீடர்களிடம்  அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்?  எனக் கேட்ட போது  நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்  என்று சீடர்கள் கூறினர். அது போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்! இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டனர். மற்றொரு பிரிவினர் (நம்மை) மறுத்தனர். நம்பிக்கை கொண்டோரை அவர்களுடைய எதிரிகள் விஷயத்தில் பலப்படுத்தினோம். எனவே அவர்கள் வெற்றி பெற்றனர்.

திருக்குர்ஆன் 61:14

இவ்வேதத்தில் மேரியை பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.  நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று (மேரி) கூறினார்.  நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்  என்று அவர் கூறினார்.  எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?  என்று (மேரி) கேட்டார்.  அப்படித் தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளையாகும் என உமது இறைவன் கூறுகிறான்  என்று அவர் கூறினார். பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது.  நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா? என்று அவர் கூறினார்.  கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்  என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.  பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்  (என்றார்) நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால்  நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்  என்று கூறுவாயாக! (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார்.  மேரியே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?  என்று அவர்கள் கேட்டனர்.  ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை  (என்றனர்) அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்!  தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?  என்று அவர்கள் கேட்டார்கள். உடனே அவர் (அக்குழந்தை)  நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை தூதராக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது (என்றார்) இவரே மேரியின் மகன் இயேசு. அவர்கள் சந்தேகம் கொண்டிருந்த உண்மைச் செய்தி இதுவே. எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு  என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.  அல்லாஹ்வே எனது இறைவனும் உங்கள் இறைவனுமாவார். எனவே அவரையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி (என்று கூறுவீராக!)

திருக்குர்ஆன் 19:16-36

இறைவனுக்குப் பிள்ளை இல்லை

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:101

உஸைர் அல்லாஹ்வின் மகன்  என்று யூதர்கள் கூறுகின்றனர்.  கிறிஸ்து அல்லஹ்வின் மகன்  என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மேரியின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

திருக்குர்ஆன் 9:30, 31

அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?  அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுவோர் வெற்றி பெற மாட்டார்கள்  என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:68, 69

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்  என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை.வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:88-93

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:02

கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.

திருக்குர்ஆன் 37:151, 152

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்  என (முஹம்மதே!) கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின் இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.

திருக்குர்ஆன் 43:81, 82

அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

திருக்குர்ஆன் 2:116

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:3, 4

கிறித்தவ நண்பர்களே! பிதாவின் தேவ வார்த்தையால் இயேசு உண்டானார் என்று நீங்கள் கூறுவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. அதே சமயம் அதன் காரணத்தால் இயேசு தேவனாகவோ, தேவ குமாரனாகவோ ஆக முடியாது என்பதையும் இஸ்லாம் அழுத்தமாகக் கூறி விடுகின்றது.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மேரியின் மகன் இயேசு எனும் கிறிஸ்து அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மேரியிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவரது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான். நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 4:171-173

இயேசு சிறந்த மனிதர் என்பதையும், அதே சமயம் அவர் கடவுள் தன்மை பெற்றவர் அல்லர் என்பதையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மேரியின் (மேரியின்) மகன் கிறிஸ்து தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை  என்றே கிறிஸ்து கூறினார். மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன். மேரியின் மகன் கிறிஸ்து தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன் 5:72-75

இயேசுவுக்குப் பல சிறப்புக்கள் வழங்கப்பட்டிருந்ததையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இதனால் அவர் கடவுளாக முடியாது என்பதையும் திருக்குர்ஆன் கூறுகின்றது.

இயேசு எதைப் பிரச்சாரம் செய்ததாக பைபிளிலிருந்து நாம் நிரூபித்துக் காட்டினோமோ அந்த உண்மையை – கிறித்தவ உலகம் கை கழுவிவிட்ட அந்த உண்மையை – திருக்குர்ஆன் தான் நிலை நிறுத்துகின்றது என்பதற்கு இந்த வசனங்களே சான்று.

இயேசுவுக்கும் இன்னும் பல தீர்க்கதரிசிகளுக்கும் எவ்வளவு தான் சிறப்புக்கள் வழங்கப்பட்டாலும் அவர்களில் யாரும் மனிதன் என்ற நிலையிலிருந்து விடுபட்டுக் கடவுள் என்ற நிலைக்கு உயர முடியாது என்பதை – இயேசுவே பிரச்சாரம் செய்த இந்தக் கொள்கையை – இஸ்லாம் இன்றளவும் பேணிக் காத்து வருகின்றது.

மேரியுடைய மகன் கிறிஸ்து தான் அல்லாஹ்  என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர்.  மேரியின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவரிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?  என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 5:17

இயேசுவையும், அவரது தாயாரையும் இறைவன் அழித்துவிடுவான் என்பது இதன் பொருளன்று. மாறாக, இயேசுவாகட்டும், அவருக்கு முன் சென்ற தீர்க்கதரிசியாகட்டும், அவருக்குப் பின் வந்த முஹம்மது நபியாகட்டும்! இவர்கள் அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம்.

இறைவனுடைய எந்தக் காரியத்தையும் இவர்களில் எவருமே செய்ய முடியாது. இவர்கள் அனைவரையும் சேர்த்து இறைவன் அழிக்க நாடினால் அதைத் தடுத்து நிறுத்தவோ, தட்டிக் கேட்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை; ஆற்றலும் இல்லை என்பதே இந்த வசனங்களின் கருத்து.

இயேசுவுடைய கொள்கையை – அவரது பிரச்சாரத்தைக் – கூட்டாமல், குறைக்காமல், சிதைக்காமல் அதே உயிரோட்டத்துடன் திருக்குர்ஆன் இங்கே எடுத்துரைக்கின்றது.

கிறித்தவ நண்பர்களே! பரலோக ராஜ்ஜியத்தில் நீங்கள் நிறுத்தப்படும் போது இயேசு உங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் நண்பர்களே!  

என்னை நோக்கிக் காப்பாற்றுமாறு அலறுபவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது. என் பிதாவை நோக்கி இவ்வாறு அழைப்பவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்  என்று இயேசு கூறியதை பைபிளிலிருந்து முன்னர் எடுத்துக் காட்டினோம்.

இதே உண்மையைத் திருக்குர்ஆனும் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

மேரியின் மகன் இயேசுவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?  என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது,  நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார்.  நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!  என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்  (எனவும் அவர் கூறுவார்)

திருக்குர்ஆன் 5:116-118

கிறித்தவ நண்பர்களே! பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய உங்களுக்கு விருப்பமிருந்தால்….

இயேசுவைச் சிறந்த மனிதராகவும், இறைவனின் தீர்க்கதரிசியாகவும் ஏற்றுக் கொள்ளுங்கள்! அவரைக் கடவுள் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறாதீர்கள்!

இயேசுவின் போதனையைத் தூய வடிவில் கூறி, பதினான்கு நூற்றாண்டுகளாக அதை நிலைநிறுத்தி வரும் தூய இஸ்லாத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! ஜெயம் பெறுங்கள்!

இதனால் இயேசுவை மறந்தவர்களாக, அவரை அலட்சியப்படுத்தியவர்களாக நீங்கள் ஆக மாட்டீர்கள்! மாறாக இஸ்லாத்தில் நீங்கள் இணைவதன் மூலம் இயேசுவை உரிய முறையில் மதிப்பவர்களாகவும், அவரது போதனைகளைத் தூய வடிவில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் ஆவீர்கள். பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய இறைவன் அருள் புரியட்டும்! ஆமீன்!

25.11.2009. 9:56 AM

Leave a Reply