இறந்தவரின் ஆவிகள் உயிருள்ள மனிதன் மீது மேலாடுமா?

இறந்தவரின் ஆவிகள் உயிருள்ள மனிதன் மீது மேலாடுமா?

அனிஷா

றந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்; இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள்’ என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

இந்த நம்பிக்கை குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானது.  பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றைஅவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

இந்த வசனத்தைச் சிந்தித்தால் இறந்தவரின் ஆவி பேயாக வரும் என்ற நம்பிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். 

இறந்து விட்ட மனிதர்களின் உயிர்களை அதாவது ஆவிகளை இறைவன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.  இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99, 100

நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்கிறான். ஆனால் அது ஒரு போதும் நடக்காது.  அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் ஒரு திரை போடப்படும் என்று இந்த வசனம் கூறுகின்றது.  நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதனை மீண்டும் அனுப்புவதில்லை என்றால், மற்ற மனிதர்களின் மேல் பேய் பிடித்து தொல்லை தருவதற்காக ஆவிகள் எப்படி திரும்ப அனுப்பப்படும் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்பதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري
1379   حدثنا  إسماعيل ، قال : حدثني  مالك ، عن  نافع ، عن  عبد الله بن عمر  رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال :  إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي، إن كان من أهل الجنة فمن أهل الجنة، وإن كان من أهل النار فمن أهل النار، فيقال : هذا مقعدك. حتى يبعثك الله يوم القيامة. 

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும் மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும்.  சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும்.  நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும்.  கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 1290, 3001, 6034

سنن الترمذي
1071   حدثنا  أبو سلمة يحيى بن خلف البصري ، قال : حدثنا  بشر بن المفضل ، عن  عبد الرحمن بن إسحاق ، عن  سعيد بن أبي سعيد المقبري ، عن  أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم :  " إذا قبر الميت – أو قال : أحدكم – أتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما : المنكر، وللآخر : النكير، فيقولان : ما كنت تقول في هذا الرجل ؟ فيقول ما كان يقول : هو عبد الله ورسوله، أشهد أن لا إله إلا الله، وأن محمدا عبده ورسوله. فيقولان : قد كنا نعلم أنك تقول هذا. ثم يفسح له في قبره سبعون ذراعا في سبعين، ثم ينور له فيه، ثم يقال له : نم. فيقول : أرجع إلى أهلي فأخبرهم ؟ فيقولان : نم كنومة العروس الذي لا يوقظه إلا أحب أهله إليه. حتى يبعثه الله من مضجعه ذلك، وإن كان منافقا قال : سمعت الناس يقولون، فقلت مثله : لا أدري، فيقولان : قد كنا نعلم أنك تقول ذلك. فيقال للأرض : التئمي عليه. فتلتئم عليه، فتختلف فيها أضلاعه، فلا يزال فيها معذبا، حتى يبعثه الله من مضجعه ذلك ".  وفي الباب عن علي، وزيد بن ثابت، وابن عباس، والبراء بن عازب، وأبي أيوب، وأنس، وجابر، وعائشة، وأبي سعيد كلهم رووا عن النبي صلى الله عليه وسلم في عذاب القبر. حديث أبي هريرة حديث حسن غريب. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள்.  (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) "இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?'' என்று கேட்பார்கள்.  "அவர் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்'' என்று அந்த மனிதர் கூறுவார்.  "உலகில் வாழும் போதே இவ்வாறு நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று அம்மலக்குகள் கூறுவார்கள்.  பின்னர் அவரது மண்ணறை விசாலமாக்கப் பட்டு ஒளிமயமாக்கப்படும்.  பின்னர் அவரை நோக்கி, "உறங்குவீராக'' என்று கூறப்படும். நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறி விட்டு வருகின்றேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், "நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு உறங்கும் புது மாப்பிள்ளை போல் இந்த இடத்திலிருந்து இறைவன் உன்னை எழுப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், "இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறுவான்.  அதற்கு அவ்வானவர்கள், "நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவார்கள்.  அதன் பின்னர் பூமியை நோக்கி, "இவனை நெருக்குவாயாக'' என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும்.  இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ 991

இறந்தவர்கள் நல்லவர்களானாலும், கெட்டவர்களானாலும் கியாமத் நாள் வரை இந்த உலகத்திற்குத் திரும்பி வர வாய்ப்பே இல்லை என்பதை இந்த ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன.  எனவே இறந்தவரின் ஆவி உலகத்திற்கு வந்து பேயாக நடமாடுகின்றது என்று யாரேனும் நம்பினால் அவர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கின்றார் என்று தான் பொருள்.

பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனிப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply